ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தரமான, மிரட்டலான பந்துவீச்சால் அடிலெய்டில் நடந்த இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
போட்டி முடிவதற்கு இன்னும் இரண்டரை நாள் இருக்கும்போதே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் ஆஸி. அணி 30 புள்ளிகளைப் பெற்றது.
இந்திய அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஆட்டத்தையும், மிகக்குறைந்த ஸ்கோரையும் எடுத்து 36 ரன்களில் 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. ஷமி காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகினார்.
கோலி படையில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. உதிரிகளாவது இரட்டை இலக்கைத்தை தொட்டு மானத்தைக் காப்பாற்றுமா என ஸ்கோர் போர்டை தேடிப்பார்த்தபோது, ஆஸி. வீரர்கள் உதிரிகள் வழங்கவே இல்லை. என்ன கொடுமை இது?
இந்திய பேட்ஸ்மேன்கள்
ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், 4, 9, 2, 0, 4, 0, 8, 4, 0, 4 என்ற ஒற்றை ரன்னில் வெளியேறி 36 ரன்களுக்குள் 2-வது இன்னிங்ஸ் முடிந்தது. ஒரு அணியில் 11 வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இதுதான் முதல் முறை.
கறுப்புப் பக்கம்
உலகக் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்ற ஸ்கோர் 7-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைவான ஸ்கோர் என்பது இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 1974-ல் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதுதான் "சம்மர்-42" என்று கிரிக்கெட் உலகில் இந்திய அணிக்குக் கறுப்புப் பக்கமாக அமைந்திருந்தது. ஆனால், அதைவிட மோசமாக "சம்மர்-36" என்ற கணக்கைப் புதிதாக கோலிப்படை எழுதிவிட்டது.
மானத்தைக் காப்பாற்றிய விஹாரி
ஒரு கட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எனும் அதிமோசமான நிலையில் இருந்தது. ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி மிகக்குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி எனும் அவப்பெயரைப் பெற்றுவிடுமோ என ரசிகர்கள் அச்சப்பட்டனர்.
ஏனென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே இங்கிலாந்துக்கு எதிராக 26 ரன்களில் நியூஸிலாந்து அணி ஆட்டமிழந்ததே மிகக்குறைவான ஸ்கோராகும். அதை இந்திய அணி சமன்செய்துவிடுவார்களோ என்று எண்ணப்பட்டது. ஆனால், ஹனுமா விஹாரி ஒரு பவுண்டரி அடித்து மானத்தைக் காப்பாற்றினார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்களுக்கும், ஆஸி. அணி 191 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதையடுத்து, இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 21.2 ஓவர்களில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.
இதையடுத்து 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எந்தவிதமான சிரமமும் இன்றி 21 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
மேத்யூ வேட் (33), லாபுஷேன்(6) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோ பர்ன்ஸ் 51 ரன்களுடனும், ஸ்மித் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து ஆஸி. அணிைய வெற்றி பெற வைத்தனர்.
இதுதான் இந்திய அணி
சொத்தையான, பேட்டிங்கிற்கு மட்டும் சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி, சாம்பியன்ஷிப்பிற்கு வசதியாக புள்ளிகளை இந்திய அணி பெற்று வந்தது. ஆனால், இந்திய அணி வீரர்களின் பேட்டிங் ஆஸ்திரேலியாவின் அதிவேகமான ஆடுகளங்களில் இன்று முழுவதுமாக வெளிப்பட்டுவிட்டது.
கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் போன்றோரின் தரமான, துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் முன் இந்திய வீரர்களின் பேட்டிங் தரம் என்னவென்று தெரிந்துவிட்டது.
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பெறும் 3-வது தோல்வியாகும். இதற்கு முன் நியூஸிலாந்து அணியிடம் 2 தோல்விகளைப் பெற்றிருந்தது.
கேப்டன் விராட் கோலி அணியில் இருந்தபோதே இந்திய அணிக்கு இந்த நிலைமை என்றால், பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி கோலி இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது. அப்போது என்ன பாடுபடப்போகிறதோ தெரியவில்லை.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களைத் தெறிக்கவிட்ட கம்மின்ஸ் 10.4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹேசல்வுட் 5 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் எடுத்து 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்தில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அனேகமாக எலும்பு முறிவாக இருக்கும் என்பதால், அடுத்த சில டெஸ்ட் போட்டிகளுக்கு ஷமியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாகும்.
ஆஸ்திரேலிய அணியின் அதிவேகமான, தரமான, வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய அணி பேட்டிங் வலிமை என்னவென்று வெளிப்பட்டுவிட்டது.
2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் சேர்த்திருந்தது. அகர்வால் 4 ரன்களுடனும், பும்ராவும் ஆட்டத்தை இன்று தொடங்கினர். நைட் வாட்ச்மேனாக பும்ராவை இறக்கியது மிகப்பெரிய தவறாகும்.
இந்த தவறைச் செய்யலாமா?
ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி 191 ரன்களில் ஆட்டமிழந்து ஆக்ரோஷமாக பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டி வரும் நிலையில், இந்திய அணிக்கு முக்கியத் துருப்புச்சீட்டாக பும்ரா இருக்கிறார் என்பதை பும்ராவுக்குக் காயத்தை ஏற்படுத்தி இருந்தால், இந்திய அணியின் நிலைமை என்னாவது? இதுபோன்ற நேரங்களில் நைட் வாட்ச்மேனாக, விக்கெட் கீப்பரை இறக்குவதுதான் வழக்கம். அது தெரியவில்லையா கோலிக்கு.
விக்கெட் வீழ்ச்சி
இன்றைய நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு இப்படியா இருக்க வேண்டும் எனும் அளவுக்கு மோசமாக இருந்தது. ஆட்டம் தொடங்கி 2-வது ஓவரில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பும்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் "ராணுவத்தில் மார்ச் ஃபாஸ்ட்" நடத்துவதுபோன்று, இந்திய பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வருவதும், திடீரென வெளியேறுவதும் என வந்து சென்றார்கள். புஜாரா (0), அகர்வால் (9), ரஹானே (0) என ஆட்டமிழந்தனர்.
ஹேசல்வுட் வீசிய 13-வது ஓவரில் அகர்வால், ரஹானே இருவரும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கோலி (4), சாஹா (4),அஸ்வின் (0), விஹாரி (8), ஷமி (1) நாட் அவுட் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெறும் 15 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 27 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸி.தரப்பில் ஹேசல்வுட் 5 ஓவர்கள் வீசி 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரின் எக்கானமி 1.60 ரன்களாகும். கம்மின்ஸ் 10.2 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பிரித்வி ஷா தேவையா?
பிரித்வி ஷா இனிமேலும் இந்திய அணியில் தொடரவேண்டுமா என்று யோசிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. பேட்டிங்கில் தொழில்நுட்பரீதியாக பிரித்வி ஷா தவறு செய்கிறார். ஆதலால், முறையான பயிற்சியின்றி இனிமேல் அவரை சர்வதேசப் போட்டிகளில் களமிறக்குவது சரியல்ல.
மயங்க் அகர்வால் எக்ஸ்ட்ரா பவுன்ஸர் வீசினால் திணறுகிறார், விக்கெட்டை இழக்கிறார் என ஆஸி. வீரர்கள் அறிந்து கொண்டார்கள். ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் அதற்குப் பயிற்சியை அகர்வால் எடுக்க வேண்டும்.
புஜாரிவின் டிபென்ஸ் ஆட்டம் கடந்த 2018-ம் ஆண்டு எடுபட்டது. ஆனால், இந்த முறை புஜாரா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவே திணறுகிறார். அனுபவமில்லாத விஹாரி, சாஹா பேட்டிங் பயிற்சி எடுக்க வேண்டும்.
டீ குடிப்பதற்குள் இப்படியா?
ஒரு டெஸ்ட் போட்டி தொடங்கி ஒரு மணிநேரத்துக்குள் இப்படி மாறும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஒரு டீ குடிக்கும் நேரத்துக்குள் இந்திய அணியின் நிலைமை மாறிக்கொண்டே இருந்து, காலையில் தொலைக்காட்சியைப் பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
வரும் 26-ம் தேதி தொடங்கும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி ரஹானேவின் தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். கோலி இருந்தபோதே இந்திய அணிக்கு இந்த நிலை, கோலி இல்லாமல் என்ன ஆகுமோ?
இதற்கு முன் மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்க அணியிடம் கூட இந்திய அணி இதுபோன்று மோசமான அடி வாங்கியதில்லை. ஆனால், ஆஸியிடம் அடிலெய்டில் வாங்கிய படுதோல்வி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் கறுப்புப் பக்கத்தில் எழுதப்பட்டுவிட்டது.
Highlights of India 36 runs vs australia ...
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago