அஸ்வின், பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் அடிலெய்டில் நடந்துவரும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடத் தொடங்கியது.
தொடக்கத்திலேயே பிரித்வி ஷா 4 ரன்னில் கம்மனிஸ் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அகர்வால் 4 ரன்னுடனும், பும்ராவும் களத்தில் உள்ளனர். 62 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி ஆடி வருகிறது.
அடிலெய்ட் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும்தான் ஒத்துழைக்கும் என யார் சொன்னது, சுழற்பந்துவீச்சுக்கும் ஒழ்துழைக்க வைக்க முடியும் என்ற ரீதியில் அஸ்வினின் பந்துவீச்சு பிரமாதமாக அமைந்தது.
முதல் ஓவரிலேயே ஸ்மித்தை வெளியேற்றிய அஸ்வின் அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 18 ஓவர்களை அஸ்வின் 55 ரன்கள் கொடுத்து 4 வி்க்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஆஸ்திரேலிய தொடக்க வரிசையை காலி செய்த பூம்பூம் பும்ரா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் சரிவுக்குக் காரணமாகினர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் பைய்ன் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அச்சுறுத்தல் அளித்துவந்த லாபுஷேன் 47 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல்நாளான நேற்றை ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. 4 ஓவர்கள் மட்டுமே களத்தில் நின்ற இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதலாக 11 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தனர்.
அஸ்வின்(15) ரன்னிலும், சாஹா(9) இருவரும் நேற்றைய ஆட்டத்தை இன்று தொடங்கினர். இருவரும் கூடுதலாக எந்த ரன்னிலும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர். கம்மின்ஸ் வீசிய 2-வது ஓவரில் அஸ்வினும், ஸ்டார்க் ஓவரில் சாஹவும் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசிவரிசை பேட்ஸ்மேன்கள் முகமது ஷமி(0) உமேஷ் யாதவ்(6) இருவரையும் வெளியேற்றுவது ஸ்டார்க், கம்மின்ஸுக்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை.
93.1ஓவர்களில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் பும்ரா, ஷமி இருவரும் ஆஸி. பேட்ஸ்மேன்களை திணறவிட்டனர். பவுன்ஸர்கள், ஸ்விங் என பும்ரா, ஷமி பந்துவீச்சை அடிக்க பர்ன்ஸ், வேட் இருவரும் திணறினர்.
பும்ரா வீசிய 15-வது ஓவரில் மேத்யு வேட் 8 ரன்கள் சேர்த்து கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து வந்த லாபுஷேன், பர்ன்ஸுடன் நிதானமாக ஆடினார்.
பர்ன்ஸ் 8 ரன்கள் சேர்த்திருந்த போது பும்ரா வீசிய 17-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்தது. அடுத்து ஸ்மித் களமிறங்கி லாபுஷேனுடன் சேர்ந்தார். ஸ்மித் ரன் சேர்க்க தடுமாறிய நிலையில், லாபுஷேன் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார்.
லாபுஷேன் 12 ரன்கள் சேர்த்திருந்தபோது ஷமி வீசிய பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை பும்ரா தவறவிட்டதால் அது பவுண்டரியாக முடிந்தது. இல்லாவிட்டால் லாபுஷேன் விக்கெட்டும் வீழ்த்திருக்கும். பும்ரா வீசிய 23-வது ஓவரிலும் லாபுஷேன் அடித்த ஷாட்டை பிரித்வி ஷா கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அடுத்து அஸ்வின் 27-வதுஓவரை வீச வந்தார். அஸ்வின் பந்துவீச்சில் தொடக்கத்திலிருந்தே ஸ்மித் திணறினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் ஒரு ரன்னில் வெளியேறினார். அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்துவந்த டிராவிஸ் ஹெட் 7ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்குவந்த கேமரூன் க்ரீன் 11 ரன்கள் சேர்த்திருந்த போது, க்ரீன் மிட்விக்கெட் திசையில் அடித்த பந்தை சிறுத்தை மாதிரி பாய்ந்து சென்று கோலி கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.
79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. அணி தடுமாறியது. லாபுஷேன், கேப்டன் பைன் ஜோடி சேர்ந்து ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து 100 ரன்களுக்கு மேல் ஸ்கோரை உயர்த்தினர்.
லாபுஷேன் 47 ரன்கள் சே்ரத்திருந்தபோது, உமேஷ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கம்மின்ஸ், உமேஷ் வீசிய அதே ஓவரின் கடைசிப்பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கி ஸ்டார்க்(15) லேயான்(10) ஆகியோரை வைத்துக்கொண்டு கேப்டன் பைன் ரன்களை விரைவாகச் சேர்த்து, 68 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஸ்டார்க் 15 ரன்னில் ரன்அவுட் ஆகினார், லேயான் 10 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹேசல்வுட் 8 ரன்னில் யாதவ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
72.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் 191 ரன்களில் முடிவுக்கு வந்தது. கேப்டன் பைய்ன் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago