மேத்யூ வேட், மேக்ஸ்வெல்லின் பேட்டிங், ஸ்வீப்ஸனின் பந்துவீச்சு ஆகியவற்றால் சிட்னியில் இன்று நடந்த இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தபோதிலும் டி20 தொடரை வென்றுள்ளது. இந்திய அணி டி20 போட்டிகளில் தொடர்ந்து 10 வெற்றிகளைக் குவித்தநிலையில் இந்தத் தோல்வி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்வீப்ஸனுக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கும் வழங்கப்பட்டது.
ஆனால், ஹர்திக் பாண்டியாவோ, “ஆட்டநாயகன் விருதுக்குத் தகுதியானவர் நடராஜன்தான். இந்தத் தொடரில் கடினமான நேரத்தில் அவரின் பங்களிப்பு மகத்தானது. அறிமுகத் தொடரில் அசத்திவிட்டார். என்னைப் பொறுத்தவரை நடராஜனுக்குத்தான் தொடர் நாயகன் விருது” எனப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
இந்தத் தொடர் முழுவதும் நடராஜனின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. கடந்த 3 போட்டிகளில் நடராஜன் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த 3 போட்டிகளிலும் நடராஜனின் எக்கானமி சராசரியாக 5 என்ற வீதத்திலேயே இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி போன்ற வலிமையான டி20 அணிக்கு எதிராக எக்கானமி ரேட்டை 5 என்ற வீதத்தில் பராமரிப்பது என்பது மிகவும் அரிதானது. அதை நடராஜன் கச்சிதமாகச் செய்துள்ளார். அதிலும் அவரின் வழக்கமான டிரேட்மார்க்கான யார்க்கரை வீசி விக்கெட் வீழ்த்தத் தவறுவதில்லை. இந்தப் போட்டியில் மேக்ஸ்வெலை யார்க்கர் மூலம் க்ளீன்போல்டாக்கி வெளியேற்றினார்.
மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்த 3 போட்டிகளிலும் சிறப்பாகப் பந்துவீசினாலும் கடந்த இரு போட்டிகளில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மொத்தத்தில் இரு தமிழக வீரர்களும் ஆஸ்திரேலியத் தொடரில் கலக்கலாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ராகுல் (0), சாம்ஸன் (10), ஸ்ரேயாஸ் அய்யர் (0) விரைவாக ஆட்டமிழந்ததால், ஒட்டுமொத்தச் சுமையும் கேப்டன் கோலி மீது விழுந்தது. கோலிக்கு உறுதியாக ஆட ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தால்கூட ஆட்டம் திசை மாறியிருக்கும்.
கேப்டன் கோலி இறுதிவரை நிலைத்தும் பயனில்லை. சிறப்பாக ஆடிய கோலி 61 பந்துகளில் 85 ரன்கள் (3 சிக்ஸர், 4 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் கோலி அடிக்கும் 3-வது அரை சதம் இதுவாகும்.
ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து சாம்ஸனுக்கு வாய்ப்பு கொடுத்துத் தேர்வாளர்கள் கையைச் சுட்டுக் கொண்டனர். அடுத்த தொடரில் சாம்ஸனுக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாக அமையலாம்.
சாம்ஸன் இன்னும் அவசரப்பட்டு ஷாட்களை அடிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார். விக்கெட்டை நிலைப்படுத்திக்கொண்ட பேட் செய்வதில் ஆர்வமில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் இந்தத் தொடரில் இரு போட்டிகளில் களமிறங்கினாலும் இரண்டிலும் சொதப்பிவிட்டார்.
கடந்த போட்டியில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஹர்திக் பாண்டியா, இந்தப் போட்டியில், 20 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமாகும்.
பந்துவீச்சில் சாஹல், சாஹர், நடராஜன் மூவருமே ஓரளவு ரகத்தில்தான் இன்று பந்துவீசினர். மற்றவர்களான சுந்தர், தாக்கூர் இருவரும் ஓவருக்கு 10 ரன்கள் வீதத்தில் வழங்கிவிட்டனர். அதிலும் 13-வது ஓவர் முதல் 18-வது ஓவர்கள் வரை 68 ரன்களை இந்திய அணி வாரி வழங்கியுள்ளது.
நடராஜன் வீசிய கடைசி ஓவரிலும் 11 ரன்கள் சென்றதும் ஆஸி. அணி ஸ்கோர் உயர முக்கியக் காரணம். இன்னும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 30 ரன்கள் குறைத்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்
20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
முன்னதாக டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். மேத்யூ வேட், பின்ச் களமிறங்கினர்.
தொடக்கத்திலேயே பின்ச் டக்அவுட்டில் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த ஸ்மித், மேத்யூவுடன் சேர்ந்தார். ஸ்மித் நிதானமாக பேட் செய்ய மேத்யூ வேட் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிவிட்டார்.
சுந்தர், சாஹர், தாக்கூர் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது ஆஸி அணி. 2-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 24 ரன்களில் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், மேத்யூ ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். அதிரடியாக பேட் செய்த மேத்யூ வேட் 34 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார்.
இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். மேக்ஸ்வெல் 31 பந்துகளில் அரை சதம் அடித்தார். மேத்யூ வேட் சதத்தை நெருங்கிய நிலையில் தாக்கூர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். மேத்யூ 80 ரன்களில் (53 பந்துகள்,7 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் மேக்ஸ்வெல் 54 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் போல்டாகினார்.
20 ஓவர்களில் ஆஸி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், நடராஜன், தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago