சேவாக் எனும் ரன் எந்திரம்: டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சராசரி; மேலும் சில புள்ளி விவரங்கள்

By இரா.முத்துக்குமார்

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள், டி20 என்ற பேதமில்லாமல் பந்து விழும் லெந்துக்கு அடி என்ற வகையில் கிரிக்கெட்டின் அர்த்தத்தை மாற்றி அமைத்த அற்புதன் சேவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இனி ஐபிஎல் கிரிக்கெட்டிலும் அவரது ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பில்லை.

அவரது சாதனை துளிகள் பலவற்றில் ஒரு சிலவற்றை தருகிறோம்:

104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்கள். அதிக பட்ச ஸ்கோர் சென்னையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்த 319 ரன்கள். டெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட் 82.23 தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஸ்ட்ரைக் ரேட்டுக்கு அருகில் கூட ஒருவரும் இல்லை. 8,586 ரன்களில் 1,233 பவுண்டரிகள் 91 சிக்சர்கள். ஆக மொத்தம் 5,378 ரன்களை பவுண்டரிகள், சிக்சர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார் சேவாக்.

அதே போல் ஒருநாள் போட்டிகளில் 251 ஆட்டங்களில் 8,273 ரன்களை 35.05 என்ற சராசரியில் 104.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 15 சதங்கள், 38 அரைசதங்களுடன் எடுத்துள்ளார் சேவாக். இதில் 1,132 பவுண்டரிகள் 136 சிக்சர்கள். இதில் 5,344 ரன்கள் பவுண்டரிகள் சிக்சர்களிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பவுண்டரிகள் சிக்சர்கள் விகிதம் வேறு எந்த வீரருக்காவது உள்ளதா என்பதை புள்ளி விவரங்களில் பயணித்து பார்க்க வேண்டும்.

இதே கதைதான் டி20 கிரிக்கெட்டிலும். 19 டி20 போட்டிகளில் 394 ரன்களை 21.88 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 43 பவுண்டரிகள் 16 சிக்சர்கள் அதாவது 268 ரன்கள் பவுண்டரிகள் சிக்சர்களில்.

டெஸ்ட் போட்டி சாதனைத் துளிகள்:

8586 ரன்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 போட்டிகளில் 1821 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 2004 தொடரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்பர்னில் அடித்த 195 அதிரடி ரன்களாகும். சராசரி 41; 3 சதங்கள். சிறந்த பந்து வீச்சு 5/104. இதில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் 11 ஆட்டங்களில் 1031 ரன்கள்.

இங்கிலாந்துக்கு எதிராக 17 டெஸ்ட் போட்டிகளில் 821 ரன்கள்; அதிகபட்ச ஸ்கோர் 117, சராசரி 29.32; 2 சதங்கள். இதில் இங்கிலாந்தில் 6 போட்டிகளில் 278 ரன்களையே எடுத்தார். சராசரி 27.80 ஒரேயொரு சதம். இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே சேவாக் சரியாக ஆடவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 15 டெஸ்ட் போட்டிகளில் 1306 ரன்கள், அதிகபட்சம் 319. சராசரி 50.23 (5000 ரன்கள் அடித்த எந்த வீரரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும்) இதில் 5 சதங்கள். இதில் தென் ஆப்பிரிக்காவில் அறிமுக டெஸ்ட் சதத்துக்குப் பிறகு சரியாக சோபிக்கவில்லை, அங்கு 8 போட்டிகளில் 382 ரன்களை 25.46 என்ற சராசரியில்தான் எடுத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக 12 டெஸ்ட்களில் 883 ரன்களை 44.15 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் இதில் 2 சதங்கள் அடங்கும் அதிகபட்ச ஸ்கோர் 173.

பாகிஸ்தானுக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் 1276 ரன்கள். அதிகபட்ச ஸ்கோர் முல்டானில் புரட்டி எடுத்த 309 ரன்கள், சராசரி 91.14. இதில் 4 சதங்கள். இதில் பாகிஸ்தானில்தான் அதிகம் ஆடியுள்ளார், அங்கு 6 டெஸ்ட்களில் 732 ரன்கள். சராசரி 91.50. 2 சதங்கள். ஒரு 309 மற்றொன்று 254.

இலங்கைக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் 1239 ரன்கள்; அதிகபட்சம் 293 ரன்கள். சராசரி 72.88 5 சதங்கள். இதில் இலங்கையில் 6 போட்டிகளில் 692 ரன்கள். சராசரி 69. அதிகபட்ச ஸ்கோர் 201 நாட் அவுட். இந்த இன்னிங்ஸ் டெஸ்ட் போட்டிகளின் மிக அரிதான இன்னிங்ஸ். அஜந்தா மெண்டிஸ் இந்தியாவின் ராகுல் திராவிட், சச்சின், லஷ்மண், உள்ளிட்டோரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நேரம் அப்போது ஒரு முனையில் அடித்துக் கொண்டேயிருந்தார் சேவாக். தொடக்கத்தில் களமிறங்கி 231 பந்துகளில் 201 நாட் அவுட். கேரி த்ரூ என்ற சாதனையை நிகழ்த்தினார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக 10 போட்டிகளில் 888 ரன்கள். அதிகபட்ச ஸ்கோர் 180; சராசரி 52.23. 2 சதங்கள். இந்த 180 ரன்களும் விசேடமானது, அன்று உணவு இடைவேளைக்கு முன்னரே சதம் அடித்திருக்க வேண்டியது ஆனால் 99 ரன்களில் அவர் உணவு இடைவேளைக்காக் பெவிலியன் திரும்பினார், காரணம் அவருக்கு உணவு இடைவேளைக்கு முன் சதம் எடுப்பது ஒரு சாதனை என்பது பற்றி தனக்கு தெரியவில்லை என்றார்.

இந்திய மண்ணில் 52 டெஸ்ட் போட்டிகளில் 4656 ரன்கள்; சராசரி 54.13; 13 சதங்கள்.

அயல் மண்ணில் 52 டெஸ்ட் போட்டிகள் 3,930 ரன்கள் சராசரி 44.65; 10 சதங்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை முச்சதம் கண்ட 4 பேட்ஸ்மென்களில் சேவாக் ஒருவர், பிராட்மேன், லாரா, கிறிஸ் கெயில் ஆகியோர் மற்ற மூவராவர். 3 முச்சதங்கள் கண்ட ஒரே டெஸ்ட் வீரர் என்ற உலக சாதனைக்கு மிக அருகில் வந்து இலங்கைக்கு எதிராக 293 ரன்களில் அவுட் ஆகி சாதனையை நூலிழையில் இழந்தார்.

இந்திய பேட்ஸ்மென்களில் 3 அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை தன் வசம் வைத்திருப்பவர் சேவாக் மட்டுமே. 309, 319, 293.

சென்னையில் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்து அடித்த முச்சதம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேக முச்சதம் ஆகும். 278 பந்துகளில் முச்சதம் கண்டார் சேவாக்.

4 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 250+ ஸ்கோர்களை எட்டியவர். இவருக்கு முன்னதாக உள்ள ஒரே வீரர் டான் பிராட்மேன் இவர் 5 முறை 250+ ஸ்கோர் எடுத்துள்ளார்.

22 டெஸ்ட் சதங்களை தொடக்க வீரராகக் களமிறங்கி எடுத்துள்ளார். டெஸ்ட் தொடக்க வீரராக அதிக சதங்களில் 5-வது வீரராகத் திகழ்கிறார் சேவாக்.

டெஸ்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 82.23. 2000 ரன்களுக்கும் மேல் அடித்துள்ள பேட்ஸ்மென்களில் இதுவே தலை சிறந்த ஸ்ட்ரைக் ரேட்.

தொடர்ந்து 11 டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்கள் கண்டு ஒரு சாதனையை வைத்துள்ளார்.

இன்னொரு முக்கியத் தகவல் ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் அதிகபட்சமாக எடுத்த 219 ரன்கள் இன்னிங்ஸ் போது இவர் கேப்டனாக இருந்ததால், ஒரு கேப்டனாக அதிகபட்ச இன்னிங்ஸ் ரன் என்ற சாதனைக்கும் சொந்தக் காரராக உள்ளார்.

இவ்வாறாக அரிய சாதனைகளின் தொகுப்பாக சேவாகின் கிரிக்கெட் வாழ்க்கை இருந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்