புஜாரா ஏமாற்றம்: வாரியத் தலைவர் அணி 296 ரன்களுக்குச் சுருண்டது

By இரா.முத்துக்குமார்

மும்பையில் நடைபெறும் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாரியத் தலைவர் அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்துள்ளது.

மோர்னி மோர்கெல் 5 ஓவர்கள் வீசி 5-ம் மெய்டன் ஆனது குறிப்பிடத்தக்கது. ரபாதா அவ்வப்போது அச்சுறுத்தினாலும் விக்கெட் எடுக்கவில்லை. ஸ்டெய்ன் 3 விக்கெட்டுகளையும், ஹார்மர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மும்பை பிரபர்ண் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற புஜாரா முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். ஆனால் முதல் ஓவரிலேயே ஏமாற்றம் காத்திருந்தது உன்முக்த் சந்த் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெய்ன் பந்தை வழக்கமான எட்ஜ் செய்து முதல் ஸ்லிப்பில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய புஜாரா, 15 பந்துகள் விளையாடினார். ஆனால் திருப்திகரமாக அவர் ஆட முடியவில்லை. பிலாண்டர் தொடர்ந்து இவரது மட்டை விளிம்பை அச்சுறுத்தினார். ஒரு பவுண்டரியுடன் அவர் 5 ரன்கள் எடுத்து பிலாண்டர் பந்தில் எட்ஜ் எடுக்க வான் ஸில்லிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். வளரும் நட்சத்திரம் ஷ்ரேயஸ் ஐயர் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்த்து. ஆனால் அவர் தடுமாற்றமில்லாமல் ஆடினாலும் 12 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து ஸ்டெய்ன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

10 ஓவர்களுக்குள் இந்திய வாரியத் தலைவர் அணி 27/3 என்று தடுமாறியது.

ஆனால் அதன் பிறகு டெஸ்ட் வீரர் கே.எல்.ராகுல், கருண் நாயர் இணைந்து அணியை நிலைப்படுத்தினர். ராகுல், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் ஆஃப் ஸ்டம்பை ஒட்டிய பந்து வீச்சுக்கு மட்டையை கொண்டு செல்லவில்லை. கருண் நாயர் சில நல்ல பவுண்டரிகளை அடித்து 9 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார், ராகுல், நாயர் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 105 ரன்களை சேர்த்தனர். ஆனால் நாயர், பிலாண்டர் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அரைசதம் கடந்த ராகுல் 132 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து சைமன் ஹார்மர் என்ற ஆஃப் பிரேக் பவுலரிடம் வீழ்ந்தார். ராகுல் தனது 72 ரன்களில் 13 பவுண்டரிகளை அடித்தார். தேவையில்லாமல் ரன் விகிதத்தை உயர்த்தும் நோக்கத்துடன் ஆஃப் ஸ்பின் பந்தை பிளிக் செய்து ஷார்ட் பைன் லெக்கில் டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நம்பிக்கை அளித்த நமன் ஓஜா, ஹர்திக் பாண்டியா

ஆனால் நமன் ஓஜா இன்னிங்ஸ் நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது. அவர் இறங்கி தன்னம்பிக்கையுடன் விளையாடினார், ஜாக்சனுடனான 53 ரன்கள் 6-வது விக்கெட்டுக்கான கூட்டணியில் நமன் ஓஜாவின் பங்களிப்பே அதிகம் இருந்தது, ஜாக்சன் 15 ரன்களையே எடுத்தார். ஓஜா, 80 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஸ்டெய்ன் பந்தில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இவரைப்போலவே இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவும் பயமற்ற அணுகுமுறை மேற்கொண்டார். அவர் 55 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்தார். யாதவ் 22 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவருமே ஆஃப் ஸ்பின்னர் ஹார்மரிடம் ஆட்டமிழந்தனர். 79-வது ஓவரின் 5-வது பந்தில் வாரியத் தலைவர் அணி 296 ரன்களுக்குச் சுருண்டது.

ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 46/2 என்று இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் தாக்கூர் சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்