ஒருநாள் தொடரை வென்றது ஆஸி; ஸ்மித் தொடர்ந்து 2-வது சதம்; இந்திய அணிக்குத் தொடர்ச்சியாக 7-வது தோல்வி: 2-வது தொடர் இழப்பு

By க.போத்திராஜ்

ஸ்டீவ் ஸ்மித்தின் தொடர்ச்சியான 2-வது சதம், வார்னர், பிஞ்ச், லாபுஷேன், மேக்ஸ்வெல் ஆகியோரின் அபாரமான பேட்டிங் ஆகியவற்றால் சிட்னியில் இன்று பகலிரவாக நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திேரலிய அணி.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது. 390 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்து 51 ரன்களில் தோல்வி அடைந்தது.

7-வது தோல்வி

இந்திய அணி 9 மாதங்களுக்குப் பின் சர்வதேச அரங்கில் காலடி வைத்துள்ள நிலையில், மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. 2020-ம் ஆண்டில் தொடர்ச்சியாக இந்திய அணி 2-வது ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் நியூஸிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி. அதுமட்டுமல்லாமல் கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

5-வது சதம்

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2-வது போட்டியிலும் சதம் அடித்து மிரட்டிய ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றார். இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் அடிக்கும் 5-வது சதம் இதுவாகும்.

அதிரடியாக ஆடிய ஸ்மித் 62 பந்துகளில் சதம் அடித்து, 64 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள்,14 பவுண்டரிகள் அடங்கும்.

பேட்ஸ்மேன்களுக்கான போட்டி

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இரு போட்டிகளுமே பேட்டிஸ்மேன்களுக்கான போட்டி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 5 பேரும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்துள்ளனர். கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுபோன்று டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 5 பேர் அரை சதம் அடிப்பது 2-வது சம்பவம்.

முதல் போட்டியில் 374 ரன்கள் சேர்த்த ஆஸி அணி, இந்த ஆட்டத்தில் 389 ரன்கள் சேர்த்தது. இரு இலக்குகளும் எளிதில் எட்ட முடியாதவை என்பதில் சந்தேகமில்லை. இரு மிகப்பெரிய இலக்குகளை ஆஸ்திரேலிய அணி அடித்தபோதே, போட்டியின் வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு தார்மீகமாக எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், வார்னர், ஸ்மித், லாபுஷேன் என அனைவருமே தங்களின் பங்களிப்பை மிதமிஞ்சிய அளவில் அளித்துள்ளனர். அதனால்தான் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.

பந்துவீச்சு சுமார்

பந்துவீச்சில் இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளுமே சுமார் ரகமாகத்தான் இருந்தன. இந்திய அணியைவிடச் சற்று முன்னேற்றமாக ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அமைந்துள்ளது. மற்ற வகையில் மிட்ஷெல் ஸ்டார்க் இந்தப் போட்டியில் மிகவும் மோசமாகத்தான் பந்துவீசியுள்ளார். கம்மின்ஸ், ஹேசல்வுட் இருவரும் சராசரியாக 6 ரன்களுக்கு மேல்தான் விட்டுக் கொடுத்துள்ளனர். ஆதலால், பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி பிரமாதம் என்று சொல்வதற்கில்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியை ஒப்பிடும்போது 2-வது போட்டியில் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். விராட் கோலி (89), கே.எல்.ராகுல் (79) ஆகியோர் பேட்டிங்கில் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்தனர். மற்ற வீரர்களான தவண், அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர், பாண்டியா, ஜடேஜா என எதிர்பார்க்கப்பட்டபோதும் சோபிக்கவில்லை.

பந்துவீச்சில் இந்திய அணி இரு போட்டிகளிலும் மிகவும் மோசமாகவே செயல்பட்டுள்ளது. பும்ரா, ஷைனி, ஷமி என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தபோதும், ஆஸ்திரேலிய ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம்

சாஹலின் பந்துவீச்சை இரு போட்டிகளிலும் ஆஸி.பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். ஷைனி கடந்த இரு போட்டிகளிலும் 17 ஓவர்கள் வீசி 153 ரன்களை வாரி வழங்கியுள்ளார். பும்ராவின் வேகம், ஸ்விங், ஷமியின் துல்லியம் என எதுவுமே இந்த ஆடுகளத்தில் எடுபடவில்லை.

பேட்டிங்கிற்குச் சாதகமான, ரசிகர்களுக்கு ரன் விருந்தளிக்க உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் மிகுந்த சிரமப்பட்டே விக்கெட் எடுக்க முடியும்.

மலைப்பான இலக்கு

390 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. மிகப்பெரிய இலக்கை விரட்டும் அழுத்தம், நெருக்கடியால் தொடக்கத்திலேயே தவண் (30), அகர்வால் (28) விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இருவரும் அதிரடியாக சில பவுண்டரிகளை அடித்து 6 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டினாலும், விக்கெட்டுகளைத் தக்கவைக்க முடியவில்லை.

கோலி, ராகுல் நம்பிக்கை

நடுவரிசையில் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடியது. 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். விராட் கோலி இருக்கும் வரை இந்திய அணி ஓவருக்கு 10 ரன் ரேட் சென்றதால் ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்ரேயாஸ் (38) ரன்களில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு வந்த ராகுல், கோலியுடன் சேர்ந்து நன்கு ஒத்துழைத்து ஆடினார். இருவரும் சேர்ந்து அணியை நம்பிக்கையை நோக்கி நகர்த்தினர். கோலி 53 பந்துகளிலும், ராகுல் 52 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர். கோலி 89 ரன்கள் (2 சிக்ஸர்கள், 7 பவுண்டரி) சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் ஸ்மித்தால் அருமையாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கே.எல்.ராகுல் 76 ரன்களில் (66 பந்துகள், 5 சிக்ஸர், 4 பவுண்டரி) ஸம்ப்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா 28, ஜடேஜா 24 ரன்கள் சேர்த்தனர். ஷமி 1 ரன்னிலும், பும்ரா டக் அவுட்டிலும் வெளியேறினர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்து 51 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆஸி. தரப்பில் ஸம்ப்பா, ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வலுவான தொடக்கம்

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. ஆரோன் பிஞ்ச், வார்னர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்துப் பிரிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆரோன் பிஞ்ச் தொடர்ச்சியாக 2-வது அரை சதம் அடித்து 60 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வார்னர் 83 ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யரால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித், லாபுஷேன் அணியை மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்மித், 38 பந்துகளில் அரை சதத்தையும், 62 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் அடிக்கும் 5-வது சதம், தொடர்ந்து அடிக்கும் 2-வது சதமாகும். லாபுஷேன் 46 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

5-வது சதம்

ஸ்மித் 104 ரன்கள்(14 பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 4-வது விக்கெட்டுக்கு வந்த மேக்ஸ்வெல், லாபுஷேனுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடிய இந்திய வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். மேக்ஸ்வெல் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

லாபுஷேன் 70 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மேக்ஸ்வெல் 63 (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்ஸர்) ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் ஷமி, பும்ரா, பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்