கொல்கத்தா, மும்பை ஆட்டங்கள்: சில கேள்விகளும் சந்தேகங்களும்

By ஆர்.முத்துக்குமார்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக யூசுப் பதான் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்று 2ஆம் இடத்திலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளியது. நேற்று மும்பை இந்தியன்ஸ் சற்றும் நம்ப முடியாத அளவில் கோரி ஆண்டர்சனின் அதிரடி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்த 2 ஆட்டங்களில் பந்து வீச்சு, பீல்டிங் தரம் மிக மோசமாக இருந்ததோடு கொல்கத்தா தகுதி பெற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2வது இடத்திலிருந்து இறக்க சன் ரைசர்ஸ் அணியும் அதிக முனைப்புக் காட்டியதாகவே தெரிகிறது.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக யூசுப் பதான் களமிறங்கும்போது கொல்கத்தாவுக்கு 47 பந்துகளில் 106 ரன்கள் தேவை அதாவது சென்னையை 3வது இடத்திற்குத் தள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

ரன் எதுவும் எடுக்காத நிலையில் யூசுப் பதான் கொடுத்த கேட்ச் கோட்டை விடப்பட்டது. பிறகு அவர் 15 ரன்களில் இருந்தபோது டேல் ஸ்டெய்ன் கேட்சைக் கோட்டைவிட்டார். இரண்டுமே உயர்ந்த மட்ட கிரிக்கெட் ஆட்டங்களின் தரநிலையின் படி சுலபமான கேட்ச்களே.

கேட்சை விட்ட டேல் ஸ்டெய்ன் பந்து வீச வந்தபோது அவரது உடல் மொழி எந்த வித ஆக்ரோஷத்தையும் காட்டவில்லை. பந்து வீச்சும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் தொய்வாக இருந்தது. இல்லையெனில் உலக இருபது ஓவர் கிரிக்கெட்டில் நல்ல சிக்கன விகிதம் வைத்திருக்கும் ஒரு பவுலரை 26 ரன்கள் அடிக்க முடியுமா? என்பதே கேள்வி.

இந்த ஆட்டம் துவங்கும்போதே ஆச்சரியம் காத்திருந்தது. ஆரோன் பின்ச் அணியில் இல்லை. அதுவரை ஒருபோட்டியில் கூட ஆடாத ஜேசன் ஹோல்டர் மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இருவரது ஆட்டமும் கூட சோபிக்கவில்லை.

சன் ரைசர்ஸ் பேட்டிங் செய்தபோது வார்னர் பவுல்டு ஆனார். தவான், ஓஜா நிலைத்து ஆடியது போல் தோன்றினாலும் அவர்கள் கடுமையாக தடுமாறினர் என்பதே உண்மை. திடீரென பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்பட என்ன காரணம் இருக்க முடியும் என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

31 பந்துகளில் தவான் 29 ரன்கள் எடுத்தார். இதில் 18 பந்துகள் ரன் இல்லாத பந்துகள். ஓஜா அடித்தது 26 ரன்களே. இதில் ரன் இல்லாத பந்துகளின் எண்ணிக்கை 17.

சன் ரைசர்ஸ் அன்று ஆடியவிதம் உயர்மட்ட கிரிக்கெட்டின் தரநிலைகளை எட்டாதது என்பதோடு, ஒரு உத்வேகமில்லாமலே முழுதும் விளையாடினர். 3 தேவையில்லாத ரன் அவுட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் கொல்கத்தா அணி கேட்ச்களையும் கோட்டைவிட்டது. 47 பந்துகளில் 106 ரன்களை எடுக்க முடிகிறது என்றால் கிரிக்கெட்டின் தரம் மட்டுமல்ல வீரர்களின் உத்வேகம், எண்ணம், அணுகுமுறை ஆகியவையும் பெரும் பிரச்சனைக்குள்ளக்கப்படவேண்டியதை அறிவுறுத்துகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் நினைத்திருந்தால் மும்பை தகுதி பெற்றிருக்க முடியாது:

நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்கு 190 ரன்கள் இந்த ரன்களை அவர்கள் 14.3 ஓவர்களில் எடுத்தால் மட்டுமே பிளே ஆஃபிற்குத் தகுதி பெற முடியும்.

கோரி ஆண்டர்சன் அவ்வாறு அடிக்கக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் சிங்கிள் எடுத்துவிட்டு எதிர்முனைக்குச் செல்லும்போது பாக்னருக்கு 2 பந்துகளில் 8 ரன்களை அடிக்கவிடாமல் செய்தால் போதும் என்ற எளிதாகவே இருந்தது.

189 ரன்களில் இருந்தபோது ஃபாக்னர் ஒரு வைட் பந்தை வீசியிருந்தாலே போதும் மும்பை வென்றிருக்கும் ஆனால் நிகர ரன் விகிதம் ராயல்ஸ் அணியை விட குறைவாகவே இருந்திருக்கும். இது ஒரு பவுலருக்குத் தெரியாதா? அல்லது அவ்வாறு செய்தால் கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதிக்கப்படும் என்று நினைத்தாரா என்னவென்று தெரியவில்லை. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசியிருந்தாலும் பரவாயில்லை என்று கூறலாம் நேராக வந்து லெக்ஸ்டம்பில் ஒரு அல்வா ஃபுல்டாஸைப் போட்டுக்கொடுத்தது ஏன்?

வாட்சனுக்கு மோசமான மேட்சாக இது அமைந்தது. முதலில் பேட்டிங்கில் சொதப்பல். பிறகு பந்து வீச்சில் 2 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்தது என்று அவருக்கு மோசமான தினமாக அமைந்தது. இதுவும் ஏன் என்று புரியவில்லை. எந்த அளவுக்கு உத்வேகமில்லாமல் வீசியிருந்தால் 5.1 ஓவர்களில் 81 ரன்களை ராயுடுவும், கோரி ஆண்டர்சனும் விளாசியிருப்பார்கள்!

இவை பற்றியெல்லாம் நமக்கு இருப்பது கேள்விகளும் சந்தேகங்களும்தான். ஆனால் நம் கேள்விகளையும் சந்தேகங்களையுமே கேள்விக்குட்படுத்துமாறு அமைந்ததுதான் ராகுல் திராவிட் தோற்றவுடன் செய்த செய்கை. தாரே சிக்ஸ் அடித்தவுடன் கோபமாக எழுந்திருந்த ராகுல் திராவிட் தொப்பியை ஓங்கித் தரையில் அடித்தார்.

இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான் ராகுல் திராவிட் மிகவும் கோபப்பட்டதாக செய்திகள் உண்டு. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்றபோது அவர் மிகவும் கோபப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு. நேற்று 2வது முறையாக அவர் தன்னை மறந்து நடந்து கொண்டார்.

அவரது எதிர்வினை உண்மையில் இந்தப் போட்டி நல்ல முறையில்தான் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்தாலும், வைடு வீசியிருந்தாலே போதும் என்ற நிலையில் ஒரு லெக் ஸ்டம்ப் புல்டாஸை வீசியதை எப்படி புரிந்து கொள்வது என்று புரியவில்லை. ஆட்டம் உண்மையான கிரிக்கெட் உண்ர்வுடன் ஆடப்பட்டதா என்பதை பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் அணுகுமுறையும் கேள்விக்குட்படுத்தியது உண்மையா? அல்லது திராவிட் தோல்விக்குப் பிறகு காட்டிய கோபம் உண்மையா? இந்தப் புதிரை அவ்வளவு சுலபமாக விடுவித்து விட முடியாது என்றே தோன்றுகிறது.

நெட் ரன் விகித விளக்கம்:

மும்பை இந்தியன்ஸ் அணி 14.3 ஓவர்களில் 190 ரன்கள் எடுக்கவேண்டும். ஆனால் 189 ரன்களையே எடுத்தது. ஆகவே இலக்கு வரையே நிகர ரன் விகிதம் கணக்கிடப்படும் என்று கருதப்பட்டதால் அடுத்த பந்தை வைடு வீசினால் மும்பை வெற்றி பெற்றாலும் நிகர ரன் விகிதத்தில் மாற்றம் ஏற்படாது என்று எடுத்துக் கொள்ளப்பட்டு வைடு கோட்பாட்டை முன் வைத்தோம்.

பிறகு நிபுணர்கள் சிலரிடத்தில் ஆலோசித்தபோது வைடு வீசினால் 14.3 ஓவர்களில் 190 என்று மும்பை தகுதி பெறும் ரன் விகிதம் எட்டப்படும் என்று தெரிந்தது.

அதுமட்டுமல்ல அடுத்த பந்தில் மும்பை இந்தியன்ஸ் ஒரு ரன் எடுத்திருந்தால் 14.4 ஓவர்களில் 190 என்று ஆகிவிடும். இப்போது மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற வாய்ப்பில்லை.

2 ரன்கள் எடுத்தால் ஸ்கோர் 191 என்று ஆகும். ஆனால் 2 ரன்கள் ஓட முடியாது காரணம் ஒரு ரன் ஓடியவுடனேயே மும்பை வெற்றி பெற்றுவிடும். ஆகவே பவுண்டரிதான் ஒரே தீர்வு. இல்லையென்றாலும் 14.5 வது பந்து அல்லது 15வது ஓவர் கடைசி பந்தில் பவுண்டரி அடித்திருந்தாலும் மும்பை அணியின் நிகர ரன் விகிதம் ராஜஸ்தான் நிகர ரன் விகிதத்தைக் கடந்து விடும்.

அப்படியே 15வது ஓவரில் அந்த 3 பந்துகளில் ரன்னே எடுக்கவில்லயென்றாலும் 16வது ஓவரின் முதல் பந்தை சிக்சர் அடித்தால் மும்பை நிகர ரன் விகிதம் ராஜஸ்தான் ரன் விகிதத்தைக் கடந்து விடும். ஆனால் பிரச்சனை அதுவல்ல, ஆட்டம் ஆடப்பட்ட விதம்தான் நமது பிரச்சனை. மும்பையைத் தடுக்க எந்த வித முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன் என்பதே நமது கேள்வி.

| இக்கட்டுரை திருத்தம் செய்யப்பட்டது |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்