சென்னை லீக் கால்பந்து: கடைசி நிமிடத்தில் ஏஜிஒ வெற்றியைப் பறித்தார் சிட்டி போலீஸ் சிவா

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் கடைசி நிமிடத்தில் கோலடித்து தலைமைக் கணக்காளர் மனமகிழ் மன்ற (ஏஜிஓஆர்சி) அணியின் வெற்றியைப் பறித்தார் சிட்டி போலீஸ் மிட்பீல்டர் சிவா. இதனால் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் ஏஜிஓ அணி ஆடிய மோசமான ஆட்டத்திற்கு சரியான பாடம் புகட்டினார் சிவா.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஏஜிஓவும், சென்னை சிட்டி போலீஸும் மோதின.

முதல் பாதியில் ஏஜிஓ அபாரம்

ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஏஜிஓ அணி 5-வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தது. ஸ்டிரைக்கர் சுதாகர் கொடுத்த ‘பாஸ்’ லெப்ட் விங்கர் விக்ரம் பாட்டீலிடம் செல்ல, வேகமாக முன்னேறிய அவர், சிட்டி போலீஸ் கோல் கீப்பர் தனசேகரன் மற்றும் பின்கள வீரர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கோலடித்தார். ஆனால் இந்த முன்னிலை 3 நிமிடங்கள் மட்டுமே நீடித்தன. 8-வது நிமிடத்தில் ஏஜிஓ அணிக்கு பதிலடி கொடுத்தார் சிட்டி போலீஸ் ரைட் விங்கர் உதயகுமார். ஸ்டிரைக்கர் பாரத்கிங்ஸ்லே இடதுபுறத்தில் இருந்து கொடுத்த கிராஸில் உதயகுமார் இந்த கோலை அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

ஆனால் இந்த சமநிலையும் 3 நிமிடங்கள்தான் நீடித்தது. சரியாக 11-வது நிமிடத்தில் மூர்த்தியிடம் பந்து செல்ல, அவர் அதை ஸ்டிரைக்கர் பியூட்டனுக்கு பாஸ் செய்தார். பந்தை சரியாகக் கேட்ச் செய்த பியூட்டன் கோலடிக்க, ஏஜிஓ 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனிடையே சிட்டி போலீஸ் ஸ்டிரைக்கர் தேவராஜ் இடதுபுறத்தில் இருந்து நல்ல கிராஸ் ஒன்றைக் கொடுக்க, அதை எடுக்க அந்த அணியின் மிட்பீல்டர்கள் யாரும் முன்னேறி வரவில்லை. இதனால் நல்ல கோல் வாய்ப்பு வீணானது. தொடர்ந்து வேகம் காட்டிய ஏஜிஓ அணி 17-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தது. இந்த கோலை சுதாகர் அடித்தார்.

இதைத்தொடர்ந்து சிட்டி போலீஸ் அணிக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பில் ஸ்டிரைக்கர் பாரத்கிங்ஸ்லே தலையால் முட்டி பந்தை கோல் கம்பத்துக்கு திருப்பினார். ஆனால் ஏஜிஓ கோல் கீப்பர் அலெக்சாண்டர் இடதுபுறம் அற்புதமாக பாய்ந்து பந்தைத் தடுக்க, சிட்டி போலீஸின் கோல் வாய்ப்பு நூலிழையில் நழுவியது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் ஏஜிஓ அணி முன்னிலை பெற்றிருந்தது.

யுவராஜுக்கு ரெட் கார்டு

2-வது பாதி ஆட்டத்தில் ஏஜிஓ அணி மேலும் சில கோல்களை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ஆட்டம் மிக சொதப்பலாக அமைந்தது. அதேநேரத்தில் சென்னை சிட்டி போலீஸ் அணி சற்று ஆக்ரோஷமாக ஆட ஆரம்பித்தது.

56-வது நிமிடத்தில் சென்னை சிட்டி போலீஸ் பின்கள வீரர் யுவராஜ், படுவேகமாக ஏஜிஓ ஸ்டிரைக்கர் பியூட்டனை கீழே தள்ள, அவருடைய கண்ணருகே காயம் ஏற்பட்டது. இதையடுத்து யுவராஜுக்கு நடுவர் ரெட் கார்டு கொடுக்கவே, அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பை ஏஜிஓ அணி தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி அதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

10 பேருடன் கலக்கிய போலீஸ்

அதேநேரத்தில் போலீஸ் அணியினர் அபாரமாக ஆடினர். பெரும்பாலான நேரம் பந்து அவர்கள் வசமே இருந்தது. அவர்களின் சிறப்பான ஆட்டத்துக்கு 62-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. இடது பின்கள வீரர் சசிக்குமார் கொடுத்த பாஸில் லெப்ட் விங்கர் ஜெரால்டு பேப்லஸ் கோலடித்தார். இந்த முறை கீப்பர் அலெக்சாண்டர் போராடியும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது.

அசத்திய சிவா

2-வது பாதி ஆட்டத்தில் ஏஜிஓ அணிக்கு ஒரு சில கோல் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அதை அவர்கள் கோட்டைவிட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் (90+2) சிட்டி அணியின் சிவா மிட்பீல்டில் இருந்து பந்தை தேவராஜுக்கு பாஸ் செய்துவிட்டு கோல் ஏரியாவுக்கு விரைந்தார்.

அதற்குள் தேவராஜ் பந்தை கிராஸ் செய்ய, அதை மிட்பீல்டர் உதயகுமார் கோல் கம்பத்துக்கு திருப்பினார். அதை ஏஜிஓ கோல் கீப்பர் “சேவ்” செய்தார். ஆனால் பந்து அவர் கையில் இருந்து நழுவியது. அப்போது மின்னல் வேகத்தில் கோலடித்தார் சிவா. இதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஏஜிஓ அணி வென்றிருக்க வேண்டிய ஆட்டம் இது. ஆனால் அவர்கள் 2-வது பாதியில் ஆடிய மோசமான ஆட்டம் அவர்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டது.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஏஜிஓ அணி 11 புள்ளிகளுடன் ஐசிஎப்புடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சிட்டி போலீஸ் 3 ஆட்டங்களில் விளையாடிய ஒரு தோல்வி, 2 டிராவுடன் 2 புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

முதல் டிவிசன் லீக் போட்டியில் ஸ்போர்ட்டிங் ஸ்டார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சேலஞ்சர்ஸ் யூனியன் அணியைத் தோற்கடித்தது.

இன்றைய ஆட்டங்கள்

முதல் டிவிசன்

மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனிட்-எஸ்.சி.ஸ்டெட்ஸ்

நேரம்: பிற்பகல் 2.15

சீனியர் டிவிசன்

சாய்-சென்னை சுங்கத்துறை

நேரம்: மாலை 4.15

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்