13-வது ஐபிஎல் சீசன் முடிந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியைப் பற்றியும், வீரர்கள் குறித்தும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள், செயல்பாடுகள், நிறைகள், குறைகள் ஆகியவற்றை கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் ஆகியோர் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக், இந்த ஐபிஎல் சீசனில் கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டும், பேட்டிங்கில் சொதப்பிய 5 சர்வதேச வீரர்களைப் பட்டியலிட்டுள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்புக்குரிய இந்த 5 வீரர்களும் தாங்கள் சார்ந்திருக்கும் அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தால் நிச்சயம் ப்ளே ஆஃப் சென்றிருக்கும். ஆனால், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அந்த 5 வீரர்களும் மெச்சும்படி எந்தவிதமான பங்களிப்பும் அளிக்கவில்லை.
சேவாக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, இந்த 5 வீரர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஆரோன் பிஞ்ச்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் ராயல்ஸ் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக இந்த சீசனில் விளையாடினார். ஐபிஎல் ஏலத்தில் ரூ.4.40 கோடி கொடுத்து டெல்லி அணியுடன் போட்டி போட்டு ஆர்சிபி அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கையில் ஏலம் எடுத்துக் கையைச் சுட்டுக்கொண்டது ஆர்சிபி அணி.
12 போட்டிகளில் விளையாடிய ஆரோன் பிஞ்ச் ஒரு அரை சதம் உள்பட 268 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதாவது சராசரி 22.33 ரன்கள் மட்டும்தான். ஆர்சிபி அணிக்குப் பல போட்டிகளில் தொடக்க வீரராகவும், நடுவரிசையிலும் களமிறக்கியும் விக்கெட் நிலைக்கும் வகையில் ஒரு ஆட்டத்தில் கூட பிஞ்ச் ஆடவில்லை. ஆரோன் பிஞ்ச் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடாதது ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வந்தும் தோல்வி அடையக் காரணம்.
ரஸலின் மசுல் வேலை செய்யவில்லை
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரரும், ஐபிஎல் தொடரில் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவராக இருப்பவர் ஆண்ட்ரூ ரஸல். ஆனால், இந்த சீசனில் ஆண்ட்ரூ ரஸலின் ‘மசுல்’ சிறப்பாகச் செயல்படவில்லை. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஸலின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.
கொல்கத்தா அணிக்காகப் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒரு போட்டியில்கூட ரஸலின் மெச்சும்படியான பங்களிப்பு எந்த ஆட்டத்திலும் இல்லை என்பது குறை. ஆண்ட்ரூ ரஸலின் சோம்பேறித்தனமான ஆட்டம், கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவைக் கலைத்துவிட்டது. 10 ஆட்டங்களில் ஆடிய ரஸல், 117 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேக்ஸ்வெலின் ஓய்வு நாட்கள்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்து ஒரு காலத்தில் கலக்கிய மேக்ஸ்வெல் இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெலை ரூ.10.75 கோடிக்குப் பஞ்சாப் அணி போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்தது. சிறந்த ஆல்ரவுண்டர், மேட்ச் வின்னர் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய திறமையான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்டாலும் களத்தில் மேக்ஸ்வெலின் பேட்டிங் புஸ்வானமானது.
13 ஆட்டங்களில் ஆடிய மேக்ஸ்வெல் 108 ரன்கள் மட்டுமே குவித்தார். பேட்டிங்கில்தான் சொதப்புகிறார் என்று கேப்டன் ராகுல் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசச்செய்து உழைக்க வைத்தார். ஆனால், பந்துவீச்சிலும் மேக்ஸ்வெல் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் பணமும் கொடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓய்வு எடுத்துச் செல்லவா மேக்ஸ்வெல் வந்துள்ளார் என்று பஞ்சாப் அணியின் பயிற்சியாளர், சகவீரர்கள் ஆகியோர் விமர்சிக்கத் தொடங்கினர். ஆனால், இந்த ஆண்டின் தோல்வியின் உருவமாக மேக்ஸ்வெல் பஞ்சாப் அணிக்கு இருந்தார்.
ஐபிஎல் முதல் பாதி ஆட்டங்களில் பஞ்சாப் அணி பல ஆட்டங்களில் வெற்றியின் தறுவாயில் வந்து தோற்றது. அந்தப் போட்டிகளில் மேக்ஸ்வெல் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தால் நிச்சயம் ப்ளே ஆஃப் சென்றிருக்கும். ஒட்டுமொத்தத்தில் அதிகமான சம்பளத்தில் மேக்ஸ்வெலுக்குக் கிடைத்த ஓய்வு நாட்கள் ஐபிஎல் தொடர்.
டீஸல் இன்ஜின் ஸ்டார்ட் ஆகவில்லை
சிஎஸ்கே அணியின் பவர் ஹிட்டர், நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஷேன் வாட்ஸன். ஆனால், இந்தத் தொடரில் சிஎஸ்கே அணியின் தோல்வி, தன்னுடைய திறமையை மெருகேற்றவில்லை என்று தெரிந்ததும் கிரிக்கெட்டிலிருந்தே வாட்ஸன் ஓய்வு அறிவித்துவிட்டார்.
சிஎஸ்கே அணியின் “டீஸல் இன்ஜின்” என்று அழைக்கப்படும் வாட்ஸன் மீது அதிகமான நம்பிக்கையை ரசிகர்கள் வைத்திருந்தும், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. பல போட்டிகளில் வாட்ஸனுக்கு எதிர்பார்த்த ஸ்டார்ட் கிடைக்கவில்லை என்பதே அவரின் தோல்விக்குக் காரணம். சிஎஸ்கே அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய வாட்ஸன் 2 அரை சதம் உள்பட 299 ரன்கள் மட்டுமே குவித்தார்.
கடந்த இரு சீசன்களாக சிஎஸ்கே அணிக்காக ஆடிவந்த வாட்ஸன் பல்வேறு முக்கியப் போட்டிகளில் அணி வெற்றி பெறக் காரணமாக இருந்தார். ஆனால், இந்த முறை வாட்ஸன் மீதான எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே அளித்தன.
துப்பாக்கி தோட்டா - பைப் துப்பாக்கி
ஆர்சிபி அணியால் ஏலத்தில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டவர் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின். காலம்போன கடைசியில் இவருக்கு ரூ.2 கோடி தேவையா என்று விமர்சிக்கப்பட்டது கடைசியில் சரியானது.
ஒரு காலத்தில் 22 யார்ட் மைதானத்தில் பந்துவீச்சில் ராஜா, பந்துவீசினாலே “துப்பாக்கியில் தோட்டா” சீறிப் பாய்வது போல் வேகமாக வரும் என்று ஸ்டெயினின் பந்துவீச்சு வர்ணிக்கப்பட்டதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட காயத்தால் பந்துவீச்சில் ஃபார்ம் என்பதே இல்லை. இப்போது இவரின் பந்துவீச்சு சிறு குழந்தைகள் விளையாடும் பைப் துப்பாக்கியில் வரும் தோட்டா போல் அமைந்துவிட்டது.
ஃபார்மில் இல்லாத ஸ்டெயினை விலைக்கு வாங்கி ஆர்சிபி அணி அதிகமாகக் கையைச் சுட்டுக்கொண்டது. ஸ்டெயினின் பந்துவீச்சைக் கத்துக்குட்டி பேட்ஸ்மேன்கள் கூட வெளுத்து வாங்கியதைப் பார்த்தபோது மனசு வலித்தது. இனிமேல் ஸ்டெயினை வாங்குவதற்கு ஐபிஎல் அணியில் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்க அணியைக் கைகழுவிவிட்ட ஒரு வேகப்பந்துவீச்சாளரை ஆர்சிபி அணி வாங்கியது ஏன் எனத் தெரியவில்லை. 3 போட்டிகளில் பந்துவீசிய ஸ்டெயின் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் எந்தவிதமான ஐபிஎல் தொடரிலும் அதிகபட்சமாக 3 ஆட்டங்களுக்கு மேல் ஸ்டெயின் விளையாடியதில்லை. திடீரென ஏற்படும் காயத்தால் தொடரிலிருந்து ஸ்டெயின் விலகிவிடுவார்.
2017, 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ஸ்டெயின் கடந்த ஆண்டு சொதப்பியதைப் போல், இந்த ஆண்டும் சிறப்பாகச் சொதப்பினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago