13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறாவிட்டாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அடுத்த சீசனுக்குத் தயாராகிவிட்டது.
பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் தொடரவும், பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவைத் தொடர வைக்கவும் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், அணியில் இந்த சீசனில் மோசமாகச் செயல்பட்ட ஆஸ்திேரலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல், மே.இ.தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல் ஆகியோர் கழற்றிவிடப்படுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
கே.எல். ராகுல் தலைமையில் பஞ்சாப் அணி 13-வது ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் பல போட்டிகளில் வெற்றிகளைக் கோட்டைவிட்டாலும், 2-வது பாதியில் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று அனைவரையும் வியக்க வைத்தது.
அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இரு சூப்பர் ஓவர்களைக் கொண்டு வந்து அதில் பஞ்சாப் அணி வென்ற ஆட்டத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கென தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அந்த அளவுக்கு அணியில் வீரர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது.
பஞ்சாப் அணியின் போட்டி என்றாலே, எந்த நேரத்திலும் ஆட்டம் திசை மாறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் போட்டியைப் பார்த்தனர். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 127 ரன்கள் அடித்து, அதற்குள் அந்த அணியைச் சுருட்டி பஞ்சாப் அணி வென்ற ஆட்டம் திருப்புமுனையின் உச்சம்.
அடுத்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், இப்போது இருந்தே அணி வீரர்களைத் தேர்வு செய்வது, கழித்துக் கட்டுவது ஆகிய பணிகளில் பஞ்சாப் அணி நிர்வாகம் இறங்கிவிட்டது.
இந்த முறை ஐபிஎல் தொடரில் ராகுலின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது, அணி நிர்வாகத்துக்கு மனநிறைவு அளித்துள்ளது. விக்கெட் கீப்பிங், கேப்டன்ஷிப், பேட்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் ராகுல் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பேட்டிங்கில் 670 ரன்கள் குவித்து சராசரி 55.83 வைத்த ராகுல் ஆரஞ்சு நிற தொப்பி வென்றார். இதில் ஒரு சதம் அடங்கும்.
ஆதலால், இந்த முறை இல்லாவிட்டாலும் நிச்சயம் அடுத்தமுறை பஞ்சாப் அணிக்கு கோப்பையை ராகுல் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நிர்வாகம் தூக்க விரும்பவில்லை. அதேபோல அனில் கும்ப்ளே, ஜான்டி ரோட்ஸ் ஆகியோரின் பயிற்சி மெச்சும் அளவுக்கு இருப்பதால், இவர்கள் கூட்டணி தொடர்கிறது.
அதேசமயம், அணியின் முக்கிய வீரர்களான மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், முகம்மது ஷமி, கெயில், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங் ஆகியோரைத் தொடர்ந்து தக்கவைக்கவும் பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நடுவரிசை பேட்டிங்கிற்கும், பந்துவீச்சுக்கும் தகுதியான வீரர்கள் இல்லாமல் அணி தடுமாறுவதால் அதை நிரப்ப மட்டும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதில் இந்த சீசனில் மோசமாகப் பந்துவீசிய மே.இ.தீவுகள் வீரர் ஷெல்டன் காட்ரெல், ஆஸி. வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் அணியிலிருந்து கழற்றிவிடப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இந்த சீசனில் காட்ரெல் 6 போட்டிகளில் பந்துவீசி 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மேக்ஸ்வெல் 13 ஆட்டங்களில் 108 ரன்கள் எடுத்துள்ளார். 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
மிகச்சிறந்த மேட்ச் வின்னர் என்ற அடிப்படையில் மேக்ஸ்வெல்லை ரூ.10.17 கோடிக்கு விலைக்கு வாங்கியது பஞ்சாப் அணி நிர்வாகம். அதேபோல காட்ரெலை ரூ.8.05 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். ஆனால், இருவரும் மோசமாகச் செயல்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அணி நிர்வாகிகள் பஞ்சாப் அணி வீரர்கள் செயல்பாட்டில் மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக ராகுலின் பேட்டிங் கேப்டன்ஷிப் 2-வதுபாதியில் சிறப்பாகச் செயல்பட்டதைப் பாராட்டுகிறார்கள். முதல் போட்டியில் டெல்லி அணியிடம் ஒரு ரன்னில் தோற்றதால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாமல் போனது.
உண்மையான அணி அடையாளம் காணப்பட்டுள்ளது. அணியில் இருக்கும் சிறிய பின்னடைவுகள் விரைவில் களையப்படும். நடுவரிசைக்கும், பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அணிக்குத் தேவை அதில் கவனம் செலுத்தப்படும்.
இதில் காட்ரெல், மேக்ஸ்வெல் எதிர்காலத்தில் அணியில் தொடர்வது சந்தேகம். அவர்கள் குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago