காரசாரமில்லாத ஐபிஎல் பைனல்: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாகக் கோப்பையை வென்றது

By க.போத்திராஜ்

2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை 5-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாகும் கைப்பற்றி நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

ரோஹித் சர்மாவின் ‘மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்’, டிரன்ட் போல்ட்டின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது.

சிஎஸ்கேவுடன் இணைந்த மும்பை

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 2-வது அணி எனும் பெருமையைப் பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டதில் அதாவது தொடர்ந்து 2 முறை பட்டம் வென்ற பெருமை சிஎஸ்கே அணி மட்டும் இருந்தது. அந்தப் பெருமை இனிமேல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சாரும்.

பரிசுத் தொகை

ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.10 கோடி பரிசும் ,2-வது இடம் பிடித்த டெல்லி ணிக்கு ரூ.6.25 கோடி பரிசும் வழங்கப்பட்டது.

ரோஹித் சிறப்பு

ரோஹித் சர்மா தலைமையிலும், ஒட்டுமொத்தத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதில் சிறப்பு என்னவென்றால், ரோஹித் சர்மா ஒரு வீரராக சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றும், கேப்டனாக 5 சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ரோஹித் சர்மா இடம் பெற்றிருந்தார்.

டெல்லிக்கு வெடிவைத்த போல்ட்

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் முதுகெலும்பை உடைத்த ட்ரன்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய போல்ட் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
கடந்த சீசனில் டெல்லி அணி நிர்வாகம் டிரன்ட் போல்ட்டை கழற்றிவிட்டது. ஆனால், அவரை வளைத்துப்போட்டது மும்பை அணி. இன்று டெல்லி அணியின் வெற்றிக்கு வெடிவைப்பவராக போல்ட் இருப்பார் என அன்று கற்பனைகூட செய்திருக்கமாட்டார்கள்.

விருதுகள் …..

உப்புசப்பில்லாத போட்டி

13-வது ஐபிஎல் இறுதிப் போட்டியைப் பற்றிக் கூறுவதென்றால், உப்புச் சப்பு, காரசாரமில்லா இறுதிப் போட்டியாகவே அமைந்தது. கறிவிருந்து சாப்பிடச் சென்று சாம்பர் கிடைத்தால் எப்படி இருக்குமே அப்படித்தான் இருந்தது.

லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராத் அணிகள் மோதிய ஆட்டத்தில் இருந்த சுவாரஸ்யம்கூட இந்த ஆட்டத்தில் இல்லை. இறுதிப் போட்டி பரபரப்பு இல்லாமல் ஒருதரப்பாகவே அமைந்தது.

துடிப்பு, உத்வேகம் இல்லை

மிக வலிமையான, கடப்பாறை பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ள மும்பை அணிக்கு எதிராக 156 ரன்களை அடித்துக் கொண்டு டிஃபண்ட் செய்துவிடுவேன் என்று டெல்லி அணி கற்பனைகூட செய்யக்கூடாது.
முதல்முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் டெல்லி அணி தகுதி பெறும் போது பதற்றம் இருந்திருக்கலாம்.

ஆனால், களத்தில் விளையாடும்போது வெல்ல வேண்டும் எனும் மனதில் உள்நோக்கம், ஆக்ரோஷம், வெற்றிக்கான வெறி ஆகியவை இருக்கவேண்டும். ஆனால், டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இதெல்லாம் எங்கே போனது எனத் தெரியவில்லை.

இளம் வீரர்கள் பலரை வைத்துள்ள டெல்லி அணி பைனல்வரை வந்தது சிறப்பானது என்றாலும், லீக் ஆட்டங்களில் தொடக்கத்தில் பெற்ற வெற்றிகளை அடுத்தடுத்து தக்கவைக்க முடியாதது பின்னடைவுக்கு காரணம்.

பிரித்விஷா நீக்கம் தவறு

இந்தப் போட்டியில் பிரித்வி ஷாவை நீக்கி மிகப்பெரிய தவறு செய்துவிட்டது டெல்லி அணி. பிரித்வி ஷா நீக்கம் பற்றிக் குறிப்பிடும்போது, சேவாக் பற்றி ரவிசாஸ்திரி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.

“ சேவாக் 10 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள்தான் மேட்ச்வின்னராக இருப்பார் என்றால், அவருக்கு 10 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கித்தான் ஆக வேண்டும்” என்று ரவிசாஸ்திரி முன்பு ஒருபேட்டியில் தெரிவித்திருந்தார். அதுபோல, பிரித்வி ஷாவை பைனலில் ரஹானேவுக்கு பதிலாக இறக்கியிருந்தால், இறுதிப்போட்டியின் தீவிரம் கருதி சிறப்பாக விளையாடியிருப்பார்.

முதல் 5ஓவர் கடைசி 5 ஓவர்

டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்தபோதே ஆட்டம் கையைவிட்டு போய்விட்டது என்று எண்ணத் தோன்றியது. அதேபோலத்தான் அடித்து ஆட வேண்டிய கடைசி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்தபோது டெல்லியின் தோல்வி ஏறக்குறைய ஒப்புக்கொள்ளப்பட்டதாகவே இருந்தது.

ஏனென்றால், 157 ரன்கள் எனும் சிறிய ஸ்கோர், மும்பை அணி போன்ற கடோத்கஜன் பேட்ஸ்மேன்கள் இருக்கும் அணிக்கு நிச்சயம் போதாது. மேட்ச்வின்னர்கள், பவர் ஹிட்டர்கள், பிஞ்ச் ஹிட்டர்கள் என ரகமான வீரர்களை வைத்துள்ள அணியை இந்த ஸ்கோர் நிச்சயம் கட்டுப்படுத்தாது என்பது தெரிந்துவிட்டது.

அதனால், இறுதிஆட்டம் ஒருதரப்பானதாகவே இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் முடிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல் 157 ரன்கள் என்று தெரிந்தவுடனே மும்பை வீரர்கள் களத்திலிருந்து வெளியேறும்போதே கோப்பை நமக்குத்தான் என்று புன்முறுவலுடன் செல்லும்போதே புரிந்துவிட்டது.

பந்துவீச்சு சுமார்ரகம்

டெல்லி அணி தனது பந்துவீச்சாளர்களால் ஏதாவது மேஜிக் செய்து மும்பை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்தாதவரை வெற்றி சாத்தியமில்லை. அதுவும் கடைசிவரை சாத்தியமாகவில்லை.

ரிஷப்பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் இருக்கும் வரை டெல்லி அணியின் ஸ்கோர் 170ரன்களுக்கு மேல் செல்வதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், இருவரும் ஆட்டமிழந்தபின் 20 ரன்கள் குறைந்தவிட்டது. ஒருவேளை டெல்லி அணி இன்னும் கூடுதலாக 30 ரன்கள் சேர்த்திருந்தால், வெற்றிக்காக போராடியிருக்கலாம்.

ஒட்டுமொத்தத்தில் டெல்லி அணி இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இறுதிப்போட்டிவரை முதல்முறையாக முன்னேறியதைப் பாராட்டலாம்.

வீழ்த்த யாராவது இருக்காங்களா

மும்பை அணியைப் பொருத்தவரை அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு கட்டத்தில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியைப் பார்த்து அனைத்து அணிகளும் மிரண்டன. சிஎஸ்கே அணியை வீழ்த்த ஐபிஎல் தொடரில் ஏதாவது அணி இருக்கிறதா என்று கேட்ட காலம் இருந்தது. அதேபோன்ற காலம் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளது.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் நம்பியிருக்காமல், குழுவாகச் சிறப்பாகவேச் செயல்பட்டனர். அதனால்தான் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்தது.

வேலையே இல்லை

அதிலும் பேட்டிங்கில் நடுவரிசையில் உள்ள பலவீரர்களுக்கு வாய்ப்பே கிைடக்கவி்லலை. ஏனென்றால் பெரும்பாலான போட்டிகளி்ல் தொடக்கத்தில் உள்ள 4 வீரர்களே ஆட்டத்தை முடிப்பவர்களாகவே இருந்தனர். கிஷன், குயின்டன் டீ காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரே பெரும்பாலும் விளையாடினர். ஹர்திக் பாண்டியா, பொலார்ட் ஆகியோருக்கு பேட்டிங்கில் பெரும்பாலும் வாய்ப்புக் கிடைக்கவி்ல்லை. இந்தத் தொடரில் இருவரும் 250 ரன்களுக்குள்ளாகவே சேர்த்தனர்.

மும்பையின் தூண்கள்

பந்துவீச்சில் பும்ரா, போல்ட், இருவரும் மும்பை அணிக்குத் தூணாக அமைந்தனர். பந்துவீச்சு மூலம் எதிரணியைச் சுருட்டிய போட்டிகளில் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. அடுத்தார்போல் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் இறுதிப்போட்டியைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் துருப்புச்சீட்டாகவே மும்பை அணிக்கு இருந்தார்.

தோனிபோல் ரோஹித்
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இந்த சீசன் மோசமான சீசன் என்றுதான் சொல்ல வேண்டும்.12 போட்டிகளில் 332 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா 3 அரைசதங்கள் அடித்துள்ளார். கிங்ஸ்லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்துக்குப்பின் காயம் காரணமாக ரோஹித் விளையாடாமல் இருந்தாலும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனது மாஸ்டர்கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திவிட்டார்.

கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் தோனி ஒருபோட்டியில்கூட ஒழுங்காக ஆடவில்லை, ஆனால், பைனலில் இலங்கைக்கு எதிராக 90 ரன்களுக்கு மேல் சேர்த்து பெயரைத் தட்டிச் சென்றாரே அதுபோல இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியான அணி மும்பை அணி என்பதில் துளியும் சந்தேகமில்லை.

விக்கெட் சரிவு
டாஸ்வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பவர்ப்ளே ஓவருக்குள்ளாகவே ஸ்டாய்னிஸ்(0),ரஹானே(2), தவண்(15) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. இதில் ஐபிஎல் இறுதி ஆட்ட வரலாற்றில் முதல்ஓவர் முதல் பந்தில்இதுவரை எந்தப் பந்துவீச்சாளரும் விக்கெட் வீழ்த்தியது இல்லை. ஆனால், இந்த போட்டியி்ல் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தி போல்ட் சாதனைபடைத்தார்.

ஆறுதல் கூட்டணி

4-வது விக்கெட்டுக்கு ரிஷப்பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி நிலைத்து ஆடி 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரிஷப்பந்த் 35பந்துகளில் அரைசதம் அடித்து 56ரன்னில்(2சிக்ஸர்,4பவுண்டரி) கூல்டர் நீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் வேகமாக ரன்களைச் சேர்த்த ஸ்ரேயாஸ் பின்னர் மந்தமாக ஆடத் தொடங்கி அரைசதம் அடித்தார்.

ஹெட்மயர்(5), படேல்(9),ரபாடா(0) என கடைசி 3 ஓவர்களில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. மும்பை அணித் தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், கூல்டர் நீல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ரோஹித் அதிரடி
157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்திலிருந்தே இருவரும் அடித்து ஆடி ரன்ரேட்டை 10க்கு உயர்த்தினர். டீகாக் 20 ரன்னில் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர்.


விக்கெட் தியாகம்

அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்னில் ரோஹித் சர்மாவுக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்து ரன்அவுட்டில் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் ரோஹித் சர்மா அவ்வப்போது தனது இயல்பான ஆட்டத்தால் சிக்ஸர்,பவுண்டரிகளை விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 45 ரன்கள் சேர்த்தனர்.

ரோஹித் அரைசதம்

3-வது விக்கெட்டுக்கு வந்த இஷான் கிஷன், ரோஹித்துடன் சேர்ந்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 36 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்னில்(4சிக்ஸர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

வெற்றி
அடுத்துவந்த பொலார்ட்(9), ஹர்திக் பாண்டியா(3)ரன்னில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தனர். குர்னல் பாண்டியா ஒரு ரன்னில் வின்னிங் ஷாட் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இஷான் கிஷன் 33 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157ரன்கள் சேர்த்து மும்பை அணி வென்றது.

டெல்லி அணி தரப்பில் நார்ஜே 2 விக்கெட்டுகளையும், ரபாடா, ஸ்டாய்னிஷ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்