தவண், ஸ்டாய்னிஸ், ஹெட்மையர் அபாரம்: கேன் வில்லியம்சனின் ‘பிரில்லியன்ஸ்’வீண்:  இறுதிப் போட்டியில் டெல்லி

By இரா.முத்துக்குமார்

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 2வது எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதிப்போட்டியில் மும்பையைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. இதன் மூலம் முதன் முதலாக ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களை எடுக்க விரட்டிய ஹைதராபாத் அணி டெல்லிக்கு நெருக்கடி கொடுத்து 172 ரன்கள் வரை வந்து தோல்வி தழுவியது.

டெல்லி அணியில் ஸ்டாய்னிஸை தொடக்க வீரராக களமிறக்கியது பலன் அளித்தது. பாண்டிங்கின் ஒரு அருமையான மூவ் இது. இதனால் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்கள் விளாசிய ஸ்டாய்னிஸ் பிறகு 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

தன் கடைசி 4 போட்டிகளில் வென்று கிங்ஸ் லெவன், கொல்கத்தா, ஆர்சிபி போன்ற நல்ல அணிகளை வெளியேற்றிய சன் ரைசர்ஸ் நேற்று பவுலிங், பீல்டிங்கில் சொதப்பினர் 4 கேட்ச்களை விட்டனர். டெல்லி அணி ஸ்டாய்னிஸை தொடக்க வீரராக இறக்கியது மாஸ்டர் ஸ்ட்ரோக், அதே போல் ஷிம்ரன் ஹெட்மையரை அணியில் கொண்டு வந்தது அவர் 22 பந்துகளில் 48 ரன்கள் எடுக்கவில்லையெனில் நிச்சயம் டெல்லி தோற்றிருக்கும். இதோடு ஸ்டாய்னிஸ் 5வது ஓவரில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தும் பிற்பாடு முக்கியக் கட்டத்தில் இன்னொரு விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார்.

ஷிகர் தவண், ஸ்டாய்னிஸ், ஹெட்மையர் அபாரம்:

ஹைதரபாத் பவுலர்கள் சந்தீப் சர்மா, ஹோல்டர் இருவரும் முதல் 2 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்துக் கட்டுப்படுத்தினர். இதனால் 3வது ஓவரில் சந்தீப் வீசிய பந்தை ஸ்டாய்னிஸ் தூக்கி அடிக்க முயல வெகு அருகில் ஷார்ட் மிட் ஆனில் ஹோல்டர் இதற்காகவே நிறுத்தப்பட்டிருந்தார் ஆனால் ஹோல்டர் கேட்சை கோட்டை விட்டார்.

இந்தக் கேட்சை விட்ட வாய்ப்பைப் பயன்படுத்திய ஸ்டாய்னிஸ் சந்தீச் ஷர்மாவை 2 பவுண்டர்களும், ஹோல்டரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசினார். தவணும் பிறகு அதிரடியில் இணைய, 3 பவுண்டரிகளை விளாசினார் பிறகு ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடிக்க பவர் ப்ளேயில் டெல்லி அணி 65/0 என்று எழுச்சித் தொடக்கம் கண்டது.

இந்த ஐபிஎல் முழுதுமே பவர் ப்ளேயில் வீசாத ஹைதராபாத்தின் சிறந்த பவுலர் ரஷீத் கான், பவர் ப்ளே முடிந்தவுடன் வந்தார்... வென்றார். ஸ்டாய்னிஸுக்கு (38) அருமையான ஒரு லெக் பிரேக்கை வீச அதைத் தவறான லைனில் ஸ்டாய்னிஸ் ஆட ஆஃப் ஸ்டம்ப் தொந்தரவானது. தொடர்ந்து ரஷீத் கானை ஒன்றும் செய்ய முடியவில்லை, அவர் என்ன வீசுகிறார் என்பது ஷிகர் தவண் உட்பட யாருக்கும் புரியவில்லை. இதனால் 4 ஓவர் 26 ரன்கள் ஒரு விக்கெட் என்று சிக்கனம் காட்டினார் ரஷீத் கான்.

ஷிகர் தவண் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார், டெல்லி அணி 100 ரன்களைக் கடந்தது. ஒரு கட்டத்தில் 7 ஓவர்கள் 77 ரன்கள் என்றும், 11 ரன்களுக்கு அருகிலேயே ரன் விகிதம் இருந்தது, ஆனால் நடராஜன், ரஷீத் கான் போன்றோராலும் ஷ்ரேயஸ் அய்யர் 20 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் என்று சொதப்பவும் ரன் விகிதம் மெல்ல 9 ரன்கள் என்று குறைந்தது. 4 ஓவர்களில் 24 ரன்களையே ஹைதராபாத் கொடுத்தது. இதன் மூலம் அய்யருக்கு நெருக்கடி கொடுத்து ஹோல்டரிடம் அவர் ஆட்டமிழந்தார்.

ஷாபாஸ் நதிமுக்கு இந்தப் போட்டி சரியாக அமையவில்லை, ஷிகர் தவணிடம் சிக்கி சின்னாப்பின்னமானார் இவரை மட்டும் ஷிகர் தவண் 14 பந்துகளில் 29 ரன்கள் விளாச, அவர் 4 ஓவர் 48 ரன்கள் என்று முடிந்தார்.

ஷிகர் தவணும் இடையே கொஞ்சம் ஸ்லோ ஆக, ஷிம்ரன் ஹெட்மையர் வந்தார். 16 ஓவர்கள் முடிவில் 145/2 என்ற நிலையில் ஷிம்ரன் ஹெட்மையர் சாத்துமுறையைத் தொடங்க நடராஜன், ஹோல்டர் சொதப்ப 17 மற்றும் 18வது ஓவர்களில் தவண், ஹெட்மையர் இணைந்து 31 ரன்களை விளாசினர், இதுதான் உண்மையில் திருப்பு முனையாகி விட்டது. இந்த ஓவர்களில் ஹெட்மையர் அல்லது தவணை வெளியேற்றியிருந்தால் யாருக்குத் தெரியும் இறுதிக்குள் சன் ரைசர்ஸ் நுழைந்திருக்கலாம். ஹெட்மையர் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார்.. ஆனால் கடைசி 2 ஓவர்களில் சந்தீப் சர்மா, நடராஜன் அற்புதமாக வீசினர். அதுவும் நடராஜன் கடைசி ஓவரில் 6 பந்துகளுமே யார்க்கராக வீச கடைசி 2 ஓவர்களில் 13 ரன்களே வந்தது. முதல் 10 ஓவர்களில் 102 ரன்கள் விளாசிய டெல்லி, கடைசி 10 ஓவர்களில் 87 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஷிகர் தவண் 50 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்தார். ஹெட்மையர் 22 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 42 நாட் அவுட். டெல்லி 189/3.

கேன் வில்லியம்சன் அபாரம், பிரியம் கார்க், சமத் ஸ்பார்க், ஸ்டாய்னிஸ், ரபாடா பிரமாதம்:

190 ரன்கள் இலக்கை விரட்டும் போது டேவிட் வார்னர் எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ரபாடா ஒரு ஃபுல் யார்க்கரில் வார்னர் ஸ்டம்புகளைப் பெயர்க்க அதிர்ச்சியடைந்தது ஹைதராபாத்.

ஆனால் மணீஷ் பாண்டே, பிரியம் கார்க் மிக அற்புதமாக ஆடினர், அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே பிரியம் கார்க் ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடிக்க அந்த ஓவரில் 11 ரன்கள் வர அஸ்வின் கட் செய்யப்பட்டார். நார்ட்யே வீசிய 148 கிமீ வேக பவுன்சரை பிரியம் கார்க் மிக அற்புதமாக ஹூக் ஆடி சிக்சருக்கு அனுப்பினார். இப்படிப்பட்ட ஷாட்டை பார்ப்பதே இப்போதெல்லாம் அரிது. மொஹீந்தர் அமர்நாத், ரிச்சர்ட்ஸ் ரக ஹூக் ஷாட் ஆகும் அது. பாண்டே மிகப்பிரமாதமாகத் தொடங்கி 3 பவுண்டரிகளை விளாசினார். இருவரும் சேர்ந்து ஸ்கோரை 5வது ஓவரில் 43 ரன்களுக்குக் கொண்டு வந்தனர்.

ஆனால் அங்குதான் ஸ்டாய்னிஸ் நிற்கிறார். 12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் அபாயகரமாக ஆடிய பிரியம் கார்க் விக்கெட்டை ஸ்டாய்னிஸ் பவுல்டு மூலம் காலி செய்தார். அது ஒரு ஆஃப் வாலி பந்து, நிச்சயம் கார்க் ஏமாற்றமடைந்திருப்பார், பந்து இன்ஸ்விங்கர் அதை தவறான லைனில் ஆடினார் கார்க். 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த மணீஷ் பாண்டேவும் இதே ஓவரில் இன்கட்டரில் மிட் ஆனில் கேட்ச் ஆனார்.

கேன் வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர் இணைந்தனர், கேன் வில்லியம்சனின் பிரில்லியன்ஸ் உண்மையில் நம்மை அசரவைப்பதாகும், சர்வ சாதாரணமாக களவியூகத்தில் அவரால் இடைவெளியைக் கண்டுபிடிக்க முடிகிறது இறங்கி வந்து சிக்சர்கள் அடிக்க முடிகிறது, பிறகு பந்தை அருமையாக ஒரு டச் செய்து தேர்ட் மேனில் பவுண்டரி அடிக்க முடிகிறது. ரபாடாவை ஒரு மிட்விக்கெட் சிக்ஸ், பிரவீன் துபே, அக்சர் படேலை நேர் சிக்ஸ் என்று அபாயகரமாக ஆடினார். ஸ்டாய்னிஸை ஒரு அற்புதமான ஷாட்டில் ஸ்கொயர் லெக் பவுண்டரி விளாசினார்.

ஹோல்டர் இந்த 46 ரன்கள் கூட்டணியில் 11 ரன்களை மட்டுமே எடுத்து அக்சர் படேலின் ஒரே விக்கெட்டாக வெளியேறினார். ஹைதராபாத் வெற்றி பெற 50 பந்துகளில் 100 ரன்கள் தேவை, வில்லியம்சனுடன் காஷ்மீரின் அப்துல் சமத் சேர்ந்தார். சமத் ஒரு வலுவான வீரர். ஆரம்ப கால தோனியை நினைவூட்டும் ஒரு ஸ்பார்க் இவரிடம் காண முடிந்தது. நார்ட்யே ஒரு ஷார்ட் பிட்ச் பவுன்சர் முயற்சி மேற்கொள்ள சமத் அதை மிகப்பிரமாதமாக சீ.. போ என்பது போல் மிட்விக்கெட் மேல் பயங்கரமான சிக்ஸரை அடித்தார், பிரியம் கார்க், சமத் ஆடிய ஷாட்களையெல்லாம் கோலியே ஆட முடியாது. மேலும் 2 பவுண்டரிகளை சமத் விளாச அஸ்வின் தன் ஓவரில் 10 ரன்களை கொடுக்க ஹைதராபாத் வெற்றிச் சமன்பாடு 4 ஓவர்களில் 51 என்று ஆனது.

மீண்டும் ஸ்டாய்னிஸ் வந்தார். 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் டெல்லிக்கும் வெற்றிக்கும் இடையூறாக இருந்த வில்லியன்சனை வீழ்த்தினார். அது ஒரு வைடு ஆஃப் வாலி பந்து ,அதை ஆடாமல் விட்டிருந்தால் அது வைடு, ஆனால் வில்லியம்சன் இருந்த மூடுக்கு அடித்தார் கவரில் கேட்ச் ஆனது. ஆனால் இதோடு ஆட்டம் முடிந்து விடவில்லை ரஷீத் கான் இறங்கி அஸ்வினை ஒரு மிகபெரிய லாங் ஆன் சிக்ஸ் மற்றும் ஒரு நான்கை விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் என்று ஹைதராபாத்துக்கும் ஒரு வாய்பு உண்டு என்பது போல் இருந்தது, ஏனெனில் பிக் ஹிட்டர் சமத் இருக்கிறார்.

ரபாடாவின் புல்டாஸை சமத் ஒரு சிக்ஸ் அடித்து அசத்தினார். யார்க்கர் சரியாக உட்கார சம்த் நேராக அதை கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் என்று பிரமாதமான ஸ்பார்க் காட்டினார். அடுத்த பந்தே ரஷீத் கான் 11 ரன்களில் படேலிடம் கேட்ச் ஆனார். ஹாட்ரிக் பந்து வைடு ஆனது, ஆனால் அடுத்த பந்தே ஷ்ரீவஸ்த் கோஸ்வாமியையும் ரபாடா வெளியேற்றி ஒரே ஒவரில் மூன்று விக்கெட்டுகளுடன் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் கேப்பை பும்ராவிடமிருந்து தட்டிப்பறித்தார். 172/8 என்று ஹைதராபாத் முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்