ரோஹித் சர்மாவின் 150 வீண்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பரிதாப தோல்வி

By ஆர்.முத்துக்குமார்

கான்பூர் ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி கடைசியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து பரிதாபத்தோல்வி தழுவியது.

முதலில் இந்திய ‘வேக’ பந்து வீச்சாளர்களின் அசிரத்தையான இறுதி ஓவர்களால் கடைசி 4.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 65 ரன்களைக் குவித்தது. இதனால் ஒருநேரத்தில் 270 அல்லது அதிகம் போனால் 280 ரன்களையே தென் ஆப்பிரிக்கா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிவில்லியர்ஸை வீழ்த்த எந்த ஒரு உத்தியும் கடைபிடிக்கவில்லை, அஸ்வின் 4.4 ஓவர்கள் மட்டுமே வீசியதும் பின்னடைவுக்குக் காரணமாக தென் ஆப்பிரிக்கா 303 ரன்களைக் குவிக்க முடிந்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 176/1 என்று வெற்றியை நோக்கி அபாரமாகவே சென்று கொண்டிருந்தது. அப்போது வெற்றிக்கு ஒரு ஓவருக்குத் தேவை 6.6 ரன்களே. அங்கிருந்து எப்படி தோல்வியடைய முடிந்தது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தியா ரன் குவிப்பு விவரம்:

முதல் 10 ஓவர்கள் முடிவில்: 59/1

20 ஓவர்கள் முடிவில்: 116/1

30 ஓவர்கள் முடிவில்: 176/1

40 ஓவர்கள் முடிவில்: 214/3

50 ஒவர்கள் முடிவில்: 298/7

இதில் தவறு எங்கு நடந்திருக்கது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும். 30-40 ஓவர்களுக்கு இடையில் 38 ரன்களே எடுக்கப்பட்டது, அதாவது ரஹானே அவுட் ஆன பிறகு விராட் கோலி பவுண்டரியும் அடிக்காமல் சொதப்பினார், ரோஹித் அடிப்பார் என்று இவர் சிங்கிளையும் இவர் அடிப்பார் என்று ரோஹித் சர்மா சிங்கிளையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஷிகர் தவணுக்கு மோசமாக அவுட் கொடுத்த நடுவர்

தொடக்கம் ஓரளவுக்கு நம்பிக்கையாக அமைந்தது. ரபாதாவை ரோஹித், தவண் ஒவ்வொரு பவுண்டரி அடிக்க பிறகு ஸ்டெய்ன் ஓவரில் தவண் 2 பவுண்டரிகளை அடித்தார். பிறகு ரபாதாவின் ஷார்ட் பிட்ச் பந்தையும் அருமையாக புல் ஷாட் அடித்து 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அதில் 5 பவுண்டரிகளுடன் நன்றாகவே ஆடிவந்தார்.

அப்போது 8-வது ஓவரை மோர்கெல் வீச ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை ஆங்கிளாக மோர்கெல் வீச பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கோணத்துடன் உள்ளே சென்று தவண் கால்காப்பைத் தாக்கியது. பந்து ஒன்று லைனில் இல்லை, பந்து கால்காப்பைத் தாக்கும்போது பந்தின் கோணம் நிச்சயம் லெக்ஸ்டம்புக்கு வெளியே செல்வதாகத்தான் இருந்தது.

ஆனால் நடுவர் அவுட் கொடுத்தார். இது மிகவும் மோசமான தீர்ப்பு. பொதுவாக உள்ளூர் லீக் ஆட்டங்களில்தான் நடுவர் சீக்கிரம் போட்டியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக இத்தகைய அபத்த அவுட்களை கொடுப்பது வழக்கம். ஆனால், இது சர்வதேச போட்டி என்பதை மறந்து விட்டார் போலும், கையை உடனடியாக உயர்த்தினார். அவருக்கு சந்தேகமே வரவில்லை.

ரோஹித் சர்மா அஜிங்கிய ரஹானே அபாரமான ஆட்டம்:

அதன் பிறகு விராட் கோலி இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரஹானே களமிறக்கப்பட்டார். இது பெரிதும் கை கொடுத்தது. வந்தவுடன் ரபாதாவை ஒரு கவர் பவுண்டரி அடித்தார். பந்து தரையில் பட்டு கவர் பீல்டர் தலைக்கு மேல் எகிறியது என்றால் அந்த ஷாட்டின் தாக்கம் புரிந்திருக்கும். மோர்கெலை ரோஹித் 2 பவுண்டரிகள் விளாசினார். 10 ஓவர்களில் இந்தியா 59 ரன்கள்.

டுமினியை கொண்டு வந்தவுடன் ரோஹித் சர்மா முறையாக இறங்கி வந்து அவரை லாங் ஆனுக்கு மேல் சிக்சர் தூக்கினார். ஆட்டத்தின் 18-வது ஓவரில் மோர்கெல் பந்தை அழகாக காலியான் பேக்வர்ட் பாயிண்டில் தட்டி விட்டு பவுண்டரி அடித்து 48-வது பந்தில் அரைசதம் கண்டார் ரோஹித். அடுத்த பந்தை அரைசதக் கொண்டாட்டமாக மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்டினார்.

இவர் அடித்து ஆடினாலும் ரஹானே ஒரு முனையில் நிதானத்தைக் கடைபிடித்தார், ஒருவேளை கொஞ்சம் அதிகமாகவே நிதானத்தைக் கடைபிடித்தது போல் தெரிந்தது. அதனால்தான் 30 பந்துகளில் 19 ரன்களுடன் அவர் கொஞ்சம் தடுமாறினார். அதன் பிறகு கொஞ்சம் உயிர்பெற்ற ரஹானே, தாஹிர், பெஹார்டீன் ஆகியோரை 2 பவுண்டரிகள் அடித்தார். அதன் பிறகு ரோஹித் சர்மா டுமினியை தனது 2-வது சிக்சருக்கு விரட்டினார். அதுவும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை ஸ்கொயர்லெக்கில் ஸ்லாக் ஸ்வீப் செய்தார், இது மிகவும் கடினமான ஷாட், ஆனால் மைதானம் சிறிதாக இருந்ததால் சிக்சருக்குச் சென்றது.

25-30 ஓவர்களுக்கு இடையில் கொஞ்சம் ரன் விகிதம் சுணக்கம் காண்பது போல் தெரிய, 30-வது ஓவரில் இம்ரான் தாஹீரை ரோஹித் சர்மா ஒரு எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரியும், பிறகு அதே திசையில் சிக்சரையும் அடிக்க ஸ்கோர் 176/1 என்று ஆனது. இந்த நிலையில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ரஹானே 67 பந்துகளில் அரைசதம் கண்டார். இதில் 4பவுண்டரிகள். அடுத்த 3 ஓவர்களில் 14 ரன்களே வந்தன. 34-வது ஓவரில் 60 ரன்கள் எடுத்த ரஹானே ஒதுங்கிக் கொண்டு பெஹார்டீனின் சாதாரண ஒரு பந்தை அடிக்க முயன்று கவரில் கேட்ச் கொடுத்தார்.

ரஹானே-ரோஹித் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக மிக அருமையாக மேட்ச் வின்னிங் 149 ரன்களைச் சேர்த்தனர், மிகவும் திட்டமிட்ட விரட்டலாக இது இருந்தது.

கோலி சொதப்பல்:

34 ஓவர்களில் 192/2 என்ற நிலையில் விராட் கோலி களமிறங்கினார் ரோஹித் சர்மா 97 ரன்களில் சதத்தை எண்ணத் தொடங்கினார். அப்போதுதான் மோர்கெலின் ஒரு ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வந்தது. 35 ஓவர்கள் முடிவில் 194/2. 15 ஒவர்களில் தேவை 110 ரன்கள், எடுக்கக் கூடியதுதான், விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது தோற்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. 36-வது ஓவரில் பெஹார்டீனை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசி ரோஹித் சர்மா 98 பந்துகளில் அபாரமான சதம் கண்டார். 38-வது ஓவரை ஸ்டெய்ன் வீச கோலி 3 பந்துகளை சாப்பிட்டார் ரோஹித்தால் ரன் எடுக்க முடியவில்லை 3 ரன்களே அந்த ஓவரில் வந்தது.

இப்படியாக நெருக்கடி அதிகரிக்க 40-வது ஓவரில் 18 பந்துகளில் 11 ரன்களையே எடுத்த விராட் கோலி, ஸ்டெய்ன் வீசிய ஆகச் சுலபமான லெக் சைடு ஹாஃப் வாலியை ஒங்கி அடிக்காமல் அரைகுறையாக பிளிக் செய்ய ஷார்ட் பைன் லெக்கில் மோர்கெல் கேட்ச் பிடித்தார். அது நல்ல கேட்ச் என்றாலும் அந்தப் பந்தை அப்படியா ஆடுவது கோலி? இவரது ஆக்ரோஷம் குறித்த பேச்சு அந்த இடத்தில் சப்பையானது.

40-வது ஓவரில் 214/3 என்று ஆனது, 10 ஓவர்களில் 90 ரன்கள் என்று நெருக்கடி அதிகரித்தது. ரோஹித் மட்டுமே களத்தில் இருக்கிறார். தோனி இறங்கினார்.

ரோஹித் சர்மா இம்ரான் தாஹீரை ஒரு சிக்சர் அடித்தார். பிறகு ரபாதாவை ஒரு பவுண்டரி. அதன் பிறகு ரன் ஓடுவதில் நீயா நானா போட்டி போட்டு ஒன்று தோனி அவுட் ஆகியிருப்பார் அல்லது ரோஹித் அவுட் ஆகியிருப்பார், இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர், ஆனால் பாங்கிசோ த்ரோவுக்கு டிகாக் ஸ்டம்புக்கு வரவில்லை இதனால் ரோஹித் தப்பினார். பிறகும் ரோஹித் சர்மாதான் அடித்தார், ரபாதாவை ஒரு பவுண்டரியும், மோர்னி மோர்கெலின் ஒரு பந்தை ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் பிளிக் சிக்ஸ் அடித்தார், பிறகு டேல் ஸ்டெய்ன் ஷார்ட் பிட்ச் வீச அதனை அபாரமாக ஸ்கொயர்லெக்கில் சிக்சருக்குத் தூக்கினார். இதே ஓவரில்தான் ஒரு சிங்கிள் எடுத்து 132 பந்துகளில் 13 பவுண்டரி, 56 சிக்சர்களுடன் அவர் 150 ரன்களை எடுத்தார், இந்த 3-வது அரைசதம் 34 பந்துகளில் வந்தது.

46-வது ஓவரில் ஸ்கோர் 269/3. இருவருக்கும் இடையே அரைசத கூட்டணி அமைந்தாலும் தோனியின் பங்களிப்பு வெறும் 8 ரன்களே, இதற்கு அவர் 14 பந்துகளை எடுத்துக் கொண்டார். கடைசியில் 47-வது ஓவரில் ரோஹித் சர்மா இம்ரான் தாஹிரை மேலேறி வந்து அடிக்க முயன்றார் பந்து நல்ல பந்து மட்டைக்கு தோதாக வரவில்லை தொட்டு ஆடினார் அது நேராக இம்ரான் தாஹிரிடமே கேட்ச் ஆனது. அடுத்த அதிர்ச்சி அதே ஓவரில் ரெய்னா 3 ரன்களில் கூக்ளியை மிட்விக்கெட்டில் மேலேறி வந்து அடிக்க முயன்றார் அது மிஸ்-ஹிட் ஆக அது டுமினியிடம் லாங் ஆனில் மிக எளிதான கேட்ச் ஆனது. இம்ரான் தாஹிர் ஒரே ஓவரில் 2 திமிங்கிலங்களை வேட்டையாடினார்.

47- ஓவர்களில் ஸ்கோர் 273/5. இப்போது இது எப்பக்கமும் சாயும் ஆட்டமாக இருந்தது. ஆனால் தோனி பினிஷராயிற்றே முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பெரிய ஹிட்டிற்குச் செல்லாமல் நிறைய 2 ரன்களை ஓடி ஓடி எடுத்தார். மூச்சிறைக்க மூச்சிறைக்க ஓடினார். பரிதாப ஓட்டம், பந்தை இவர் அடித்து நொறுக்கினால் மைதானம் பத்தாது. ஆனால் இவர் 2 ரன்களுக்கக பேய் மாதிரி ஓடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. தான் எதிர்கொண்ட 25-வது பந்தில்தான் ஸ்டெய்ன் பந்தை ஒரு ‘தில் ஸ்கூப்’ செய்து முதல் பவுண்டரியை அடித்தார். அந்த ஓவரில் 11 ரன்கள் வர கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவை 11 ரன்கள், தோனியால் முடியாததா? என்றே ரசிகர்கள் ஆவலுடன் ஆரவாரம் செய்தனர்.

ஆனால் அவரோ ரபாதா வீசிய அந்த கடைசி ஓவரின் முதல் பந்தில் உயிரை வெறுத்து 2 ரன்கள் ஓடினார். பெஹார்டீன் பவுண்டரி அருகே பந்தை மிஸ்பீல்ட் செய்ததால் 2-வது ரன் இல்லையெனில் அது ஒரு ரன் மட்டும்தான். அடுத்த பந்து இறங்கி வந்து சுற்றினார் ரூம் கிடைக்கவில்லை 1 ரன். ஸ்டூவர்ட் பின்னி ஒரு ரன் எடுத்தார், இவரது அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. மீண்டும் தோனி ஸ்ட்ரைக்கு வந்தார் ரபாதாவை இலக்கற்ற முறையில் சுற்றினார் கொடியேற்றினார் ரபாதாவே கேட்சைப் பிடித்தார். பின்னி கிராஸ் செய்து அடுத்த பந்தை புல் செய்தாரா என்ன செய்தார் என்று தெரியவில்லை பந்து கொடியேற்றப்பட்டது ஆம்லா கேட்ச் பிடித்தார். இவையெல்லாம் 24 அடி பிட்சில் நடந்தவை. ஹேட்ரிக் பந்தை குமார் 1 ரன் எடுக்க தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

31 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்த தோனியின் ஒருமாதிரியான தடவல் இன்னிங்ஸ் வரும் காலங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பும், அதே போல் நன்றாக இருந்த ஸ்கோர் நிலவரம் 30-40 ஓவர்களில் ஏன் வெறும் 38 ரன்களாகக் குறைந்தது, இதில் விராட் கோலி என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதும் சர்ச்சைக்குரிய விஷயமாகும்.

ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தத்தில் கடைசி ஓவர்களில் இந்தியப் பந்து வீச்சு, மற்றும் விராட் கோலி, தோனி, ரெய்னா ஆகியோரின் இயலாமையும் இந்திய தோல்விக்குக் காரணமாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்