சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள 4 சர்வதேச கேப்டன்கள் உதவியுடன் அந்த அணி தொடர்ந்து 4-வது வெற்றியைப் பெற்று, 2-வது தகுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளது.
நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர், ஆஸ்திேரலிய அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரின் பங்களிப்பு அணியின் கடந்த சில வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகும்.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் கேன் வில்லியம்ஸன், மே.இ.தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் ஆகிய இரு அனுபவமிக்க, சர்வதேச தரமுள்ள பேட்ஸ்மேன்களின் ஆட்டம் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
எப்போதுமே அலட்டிக் கொள்ளாமல் விளையாடும் இரு பேட்ஸ்மேன்களும், நேற்றைய ஆட்டத்திலும் கடும் நெருக்கடியான கட்டத்திலும்கூட மிகவும் அனாசயமாக சூழலைக் கையாண்டனர்.
சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 4 பந்துகளில் 8 ரன்கள் வெற்றிக்குத் தேவை. எந்தவிதமான பதற்றமும் இன்றி ஷைனியின் பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை அடித்து வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஹோல்டரின் ஆட்டம் சிறப்பானது.
அதிலும் சன்ரைசர்ஸ் அணியை கவனித்துப் பார்த்தால், ஹோல்டர் அணிக்குள் வந்தபின்புதான் அந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருகிறது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் ஹோல்டர் நேற்று கலக்கினார். 4 ஓவர்கள் வீசிய ஹோல்டர் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் முக்கியமான கோலி, படிக்கல் விக்கெட்டுகளைச் சாய்த்தது ஹோல்டர்தான்.
வில்லியம்ஸனும் நேற்றைய ஆட்டத்தில் நிதானமாகத் தொடங்கி பின்னர் மோசமான பந்துகள் வீசப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டு ரன் ரேட்டை உயர்த்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் வில்லியம்ஸன் 50 ரன்கள் சேர்த்தார். ஹோல்டர் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
அதிலும் ஹோல்டர் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தப் போட்டி மட்டுமல்லாமல், கடந்த மாதம் 31-ம் தேதி ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்திலும் ஹோல்டர் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.
வில்லியம்ஸன் 2-வது முறையாக சன்ரைசர்ஸ் அணிக்குத் தனது பேட்டிங்கால் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தி்ல 26 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வில்லியம்ஸன் காரணமானார். இந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த வில்லியம்ஸன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இது தவிர ரஷித்கான் பந்துவீச்சு சன்ரைசர்ஸ் அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்தாகும். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கலக்கும் ரஷித்கான் இந்தத் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்கள் சேர்க்கவிடாமல் தடுத்தார்.
இந்தத் தொடரில் இதுவரை சன்ரைசர்ஸ் அணி சார்பில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷித்கான் முன்னணியில் இருந்து வருகிறார். அவரின் பந்துவீச்சு எக்கானமி 5.30 என்ற அளவிலேயே இருக்கிறது.
சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஒவ்வொரு போட்டியிலும் அணியின் உற்சாகமான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணமாக இருந்து வருகிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மிக விரைவாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வார்னர் இந்த சீசனிலும் பேட்டிங்கில் கலக்கி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 546 ரன்கள் குவித்துள்ள வார்னர், கே.எல்.ராகுலைப் பிடிக்க இன்னும் 124 ரன்கள் தேவைப்படுகிறது. அடுத்த இரு போட்டிகள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டைப் போல் ஆரஞ்சு தொப்பியை வார்னர் வெல்வாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago