'ஒரு கேட்ச்சைத் தவறவிட்டதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம்'- விராட் கோலி வேதனை

By பிடிஐ

சன்ரைசர்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்ஸனுக்கு ஒரு கேட்ச்சைத் தவறவிட்டதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம். அந்த கேட்ச்சை மட்டும் பிடித்திருந்தால் நிச்சயம் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வேதனையுடன் தெரிவித்தார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது.

132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில், 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி, ஐபிஎல் தொடரிலிருந்து 4-வது இடத்துடன் வெளியேறியது. ஆர்சிபி அணி தொடர்ந்து 5-வது தோல்வியைச் சந்தித்தது. அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து 4-வது வெற்றியைப் பெற்றது.

இந்த ஆட்டத்தில் முக்கியத் திருப்பமாக சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷைனி வீசிய 18 ஓவரில் 2-வது பந்தை வில்லியம்ஸன் டீப் ஸ்கொயர் திசையில் தூக்கி அடித்தார். அந்தப் பந்தை படிக்கல்லும் கேட்ச் பிடித்தார்.

ஆனால், நிலைதடுமாறி எல்லைக் கோட்டைத் தாண்டி விழும்போது, படிக்கல் பந்தைத் தூக்கி மைதானத்துக்குள் வீசிவிட்டார். இதனால் 6 ரன்கள் சேமிக்கப்பட்டாலும், வில்லியம்ஸன் விக்கெட் எடுப்பது தவறவிடப்பட்டது. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய வில்லியம்ஸன் அரை சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்தத் தோல்விக்குப் பின் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

"இந்த ஆட்டம் மதில் மேல் பூனை என்பதுபோலத்தான் இருந்தது. வில்லியம்ஸனுக்கு நாங்கள் கேட்ச்சைத் தவறவிட்டதற்கான விலையாக வெற்றியை இழந்துவிட்டோம். அந்த கேட்ச்சை நாங்கள் தவறவிடாமல் இருந்திருந்தால், ஆட்டம் திசைமாறியிருக்கும்.

முதல் இன்னிங்ஸைப் பற்றிப் பேசினால், நாங்கள் வெற்றியைத் தக்கவைக்கும் அளவுக்குப் போதுமான ரன்கள் குவிக்கவில்லை. ஆனால், 2-வது பாதியில் நாங்கள் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினோம். அதை நோக்கித்தான் நகர்ந்தோம்.

முதல் இன்னிங்ஸில் ஏராளமான அழுத்தங்கள் நெருக்கடிகளை சன்ரைசர்ஸ் அணியினர் எங்களுக்குக் கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் விரைவாக நாங்கள் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம். போதுமான ரன்கள் அடிக்காமல் இருந்ததும் தோல்விக்கான காரணமாக அமைந்தது.

நாக்அவுட் போட்டி என்பதால் பதற்றமாகவும், ஒருவிதமான அச்சத்தாலும் பேட்ஸ்மேன்கள் இருந்திருக்கலாம். இருப்பினும் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு போதுமான அளவு அழுத்தங்களையும் நாங்கள் கொடுக்கவில்லை. கடந்த 4 முதல் 5 போட்டிகளாகவே ஒருவிதமான பதற்றத்துடன் அணி வீரர்கள் ஆடுவதைக் காண முடிந்தது.

ஆனால், கடந்த 3 போட்டிகளாக எங்கள் பேட்ஸ்மேன்கள் நல்ல ஷாட்களை ஆடினார்கள், ரன்கள் குவித்தார்கள். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. இந்தத் தொடரில் சாதகமான விஷயம் என்னவென்றால் தேவ்தத் படிக்கல் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். முதல் தொடரிலேயே 400 ரன்களுக்கு மேல் குவித்து, சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்து திறமையை நிரூபித்துள்ளார். அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

அதேபோல முகமது சிராஜ் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சாஹல், டிவில்லியர்ஸ் இருவரிடம் இருந்தும் எப்போதும் சிறப்பான பங்களிப்பைக் காண முடியும்.

உள்நாட்டில் ஐபிஎல் போட்டி நடக்காமல் வெளிநாட்டில் நடந்ததால்தான் இந்த அளவுக்குக் கடும் போட்டியாக மாறியுள்ளது. ஐபிஎல் அணிகளின் வலிமையையும் இந்தத் தொடர் எடுத்துக் காட்டியுள்ளது. ஒவ்வொரு அணியிலும் வலிமையான, திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எந்தப் போட்டியும் யாருக்கும் சாதகமாக இல்லாமல், கடும் சவாலாகவே இருந்தது.

மொத்தம் 3 இடங்களில் மட்டுமே தொடர்ந்து போட்டி நடந்தது மட்டும் குறை. ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான சூழல் இருந்ததால் போட்டித் தொடர் முழுமையும் விறுவிறுப்பாக அமையக் காரணம்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்