ரோஹித் சர்மாவுக்கு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை உள்ளது; ஐபிஎல் தொடருடன் முடிந்து விடுவதில்லை: பிசிசிஐ தலைவர் கங்குலி சூசகம்

ரோஹித் சர்மாவுக்கு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. ஐபிஎல் தொடருடன் அவர் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என்பதால், காயத்தின் தன்மை அறிந்து விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் நெருக்கடி, அழுத்தம் காரணமாக ரோஹித் சர்மா காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாமல் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 2 ஆட்டங்களில் விளையாடினால், காயம் பெரிதாக வாய்ப்புள்ளது. ஆதலால், போதுமான ஓய்வு தேவை என்பதை மறைமுகமாக கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு இடது தொடைப் பகுதியில் தசைநார் கிழிந்துள்ளதால், தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார்.

ரோஹித் சர்மா பேட்டிங் செய்து பயிற்சி எடுக்கும் வீடியோவை மும்பை அணி வெளியிட்டாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''ரோஹித் சர்மா இந்திய அணியின் சொத்து. அவருக்குச் சாதகமான அனைத்தையும் அணி நிர்வாகம் செய்யும். அது எங்கள் கடமை. ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது என்பதால்தான் அவரை ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்யவில்லை. மற்ற வகையில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிப்போம். எப்போது குணமடைவார் எனத் தெரியாது. காயம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை ரோஹித் சர்மா விளையாடவில்லை. சிறந்த வீரர்களை விளையாட வைப்பது பிசிசிஐயின் கடமை. ரோஹித் குணமடைந்தால் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார்.

எங்களைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா மீண்டும் காயத்தால் அவதிப்படக்கூடாது. அவருக்கு ஹேம்ஸ்ட்ரிங் தசைநார் கிழிந்துள்ளது. தொடர்ந்து அதுபோல் நடக்கவும் வாய்ப்புள்ளது. இந்தக் காயம் குணமாக நீண்டநாள் கூட தேவைப்படலாம். அதற்காகத்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் உடற்தகுதி வல்லுநர், இந்திய அணியின் உடற்தகுதி வல்லுநர் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ரோஹி்த் கிரிக்கெட் வாழ்க்கை ஐபிஎல் தொடருடன் முடிந்துவிடாது. நீண்ட காலம் கொண்டது என அவருக்கு நன்கு தெரியும். தற்போது அவர் பேட்டிங் பயிற்சி எடுக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடுவதைப் பார்த்து அவர் குணமடைந்துவிட்டார் என்று கூறமுடியாது.

பயிற்சியில் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் இருப்போம். ஆனால், களத்தில் கடும் நெருக்கடியைச் சந்திக்கும்போது, நமது தசைகள், தசைநார் வேறுவிதமாக நமது உடலில் செயல்படும். அதை அனுபவத்தால் சொல்கிறேன்.

இதில் சாதகமான அம்சம் என்னவென்றால், இசாந்த் சர்மா காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். அவருக்கான உடற்தகுதி பரிசோதனை, போதுமான பயிற்சி முடிந்தபின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார். பிசிசிஐ விதிமுறையின்படி வேகப்பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடும் முன் இரு முதல் தரப்போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் இசாந்த் விளையாட வேண்டியது இருக்கும்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு இங்கிலாந்து தொடர் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கிலாந்து அணி நிர்வாகம் இதுவரை கவலை ஏதும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தவே அதிகமாக முக்கியத்துவம் வழங்கப்படும். இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது பார்க்கலாம்''.

இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE