கெய்க்வாட்டின் ஹாட்ரிக் அரைசதம், இங்கிடியின் பந்துவீச்சு ஆகியவற்றால் அபு தாபியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 53-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
62 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயன் விருது பெற்றார்.
வெற்றியுடன் வெளியேறியது
இந்த வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இதுவரை 14 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி அதில் 6 வெற்றி, 8 தோல்வி என 12 புள்ளிகளுடன் 8-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு முன்னேறி தொடரை முடித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே மட்டும் தனியாகச் செல்லாமல், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ்லெவன் அணியையும் சேர்த்து அழைத்துச் சென்றது. “உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுவிட்டோம்” என்ற ரீதியில் பஞ்சாப் அணியையும் வெளியேற்றிவிட்டது சிஎஸ்கே அணி.
குழப்பம்
பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஒருவேளை வென்றிருந்தால், ஓரளவுக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகளை ஊகிக்க முடியும். ஆனால், பஞ்சாப் அணியை வெளியேற்றி, ஐபிஎல் குட்டையை நன்கு குழப்பிவிட்டுள்ளது சிஎஸ்கே அணி. இதனால், கடைசி லீக் ஆட்டம் வரை ப்ளே ஆஃப் செல்லும் அணிகளை அடையாளம் காண காத்திருக்க வேண்டும்.
ப்ளே ஆஃப் கனவில் இருந்த பஞ்சாப் அணிக்கு இந்த தோல்வியால் ஐபிஎல் கனவு முடிவுக்கு வந்துள்ளது. 14 போட்டிகளில் ஆடிய பஞ்சாப் அணி 8 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி வெளியேறியது ஏறக்குறைய 3 அணிகளுக்கு ப்ளே ஆஃப் வழி திறக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் தங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெறும்பட்சத்தில் ப்ளே ஆஃப் வாய்ப்பு பெறலாம்.
அதேசமயம், நாளை நடக்கும் ஆர்சிபி, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் முக்கியமானது.
இதில் வெல்லும் அணி 2-வது இடத்துக்கு முன்னேறும். தோற்கும் அணி தொடரிலிருந்து எளிதாக வெளியேறாது.
கடைசியாக நடக்கும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் போட்டியில் ஒரு வேளை சன்ரைசர்ஸ் தோற்றுவிட்டால், ரன்ரேட் அடிப்படையில் நாளை தோற்கும் அணி 4-வது இடத்துக்கு வருவதற்கும் வாய்ப்புள்ளது. ஆதலால், இன்னும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணியை கணிப்பதில் குழப்பம் நீடிக்கிறது.
தவறு செய்த பஞ்சாப்
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை மேக்ஸ்வெல்லை இந்த போட்டியில் அமரவைத்தது மிகப்பெரிய தவறாகும். மேக்ஸ்வெல் ஒரு மேட்ச் வின்னர், இந்தத் தொடரில் சரியாக விளையாடாமல் இருந்திருக்கலாம், நல்ல ஆல்ரவுண்டரை அமரவைத்திருக்ககூடாது. அதற்குபதிலாக மன்தீப் சிங்கை அமர வைத்து மேக்ஸ்வெலை ஆடவைத்திருக்கலாம்.
மேலும், கெயில் தனது வழக்கமான அதிரடி பாணியை கைவிட்டு, விக்கெட் இழப்பைப் பார்த்து நிதானத்தை கையாண்டது மிகப்பெரிய தவறாகும் வழக்கம்போல் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்களை நொறுக்கிஇருந்தால், பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு கோட்டைவிட்டிருப்பார்கள்.
ஆனால் எந்த நெருக்கடியும் பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் நிச்சயம் போதுதாது, இன்னும் கூடுதலாக 30 முதல் 40 ரன்களைச் சேர்த்திருந்தால், பஞ்சாப் அணி நெருக்கடி கொடுத்திருக்கலாம்.
ராகுல் அருமை
மற்றவகையில் கே.எல்.ராகுல் இப்படிஅருமையாக கேப்டன்ஷிப் செய்யக்கூடியவரா என தொடக்கத்தில் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஒவ்வொரு போட்டியிலும் கடைசிப்பந்துவரை பஞ்சாப் அணி வெற்றிக்காகப் போராடினார்கள்.
பஞ்சாப் அணி தனது முதல் போட்டியிலேயே வெல்ல வேண்டியது ஆனால், நடுவரின் தவறான தீர்ப்பால் டெல்லி அணிக்கு அந்த வெற்றி கைமாறியது. இல்லாவி்ட்டால் பஞ்சாப் அணி பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சென்றிருக்கும்.
ரசிகர்களின் அன்பைப் பெற்ற அணி
ஐபிஎல் தொடரிலேயே பஞ்சாப் அணி மோதும் போட்டி என்றால் த்ரில்லாக இருக்கும் எந்த நேரத்தில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும் எனத் தெரியாது என்று ரசிகர்களை பார்க்க வைத்த பெருமை ராகுலுக்கும் அவரின் அணிக்கும் சேரும். பஞ்சாப் அணி தோற்ற எந்தப் போட்டியிலும் வெற்றியை எளிதாக எதிரணிக்கு தாரை வார்த்துவிடவில்லை.
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 சூப்பர் ஓவர்கள் வரை சென்று வென்ற அந்த ஒருபோட்டியே பஞ்சாப் வீரர்களின் துணிச்சலுக்கும், விடாமுயற்சிக்கும் சான்று.
கெயில் வந்தபின் மாற்றம்
பஞ்சாப் அணிக்குள் கிறிஸ் கெயில் வந்தபின்புதான் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கத் தொடங்கியது. கெயிலை முதல் போட்டியிலிருந்தே ஆட வைத்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.
முதல்பாதியில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து துவண்ட பஞ்சாப் அணி 2-வதுபாதியில் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. அவர்களின் வெற்றிக்கு ராஜஸ்தான் அணி முதல் பிரேக் போட்டநிலையில், இன்று சிஎஸ்கே அணி ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
குறிப்பாக பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல், கேப்டன் பொறுப்பு, விக்கெட் கீப்பிங், பேட்ஸ்மேன் என மூன்று பணிகளிலும் தன்னை யாரும் குறைகூற முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடினார். இப்போது வரை தொடரில் ஆரஞ்சு தொப்பியை வைத்திருப்பவர் ராகுல் மட்டுமே என்பதை மறந்துவிடக்கூடாது. இந்தியய அணிக்கு அடுத்த கேப்டன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருஷ்டியாக இருக்கட்டும்
சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது. தன்னுடைய இத்தனை ஆண்டு சாதனைக்கு இந்த சீசன் திருஷ்டியாக இருந்துவிட்டு போகட்டும்.
நிலைத்தன்மையில்லாத ஆட்டம், ஃபார்மில் இல்லாத வீரர்கள், அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இளம் வீரர்கள் புறக்கணிப்பு, ரெய்னா, ஹர்பஜன் இல்லாதது போன்ற பல காரணங்கள் சிஎஸ்கே தோல்விகளுக்கு காரணமாகக்கூறலாம்.
இளம் வீரர்களுக்கான வெற்றி
கடந்த சில போட்டிகளில் பெற்ற வெற்றிகளை தொடக்கத்தில் பெற்றிருந்தால் நிச்சயம், சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கும். இந்த கடைசி 3 வெற்றிகளுமே இளம் வீரர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தபின் அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததால் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது.
இளம் வீரர் கெய்க்வாட் தன்னைத் தேர்வு செய்தது சரி என்பதை நிரூபித்துவிட்டார். தொடர்ந்து 3 போட்டிகளில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து கெய்க்வாட் புதிய சாதனை படைத்துவிட்டார். இதுவரை சிஎஸ்கே அணியில் எந்த வீரரும் தொடர்ந்து ஹாட்ரிக் அரைசதம் அடித்தது இல்லை, முதல் முறையாக கெய்க்வாட் அடித்துள்ளார். நிச்சயம் தோனி எதிர்பார்த்த “ஸ்பார்க்” கெய்க்வாட்டிடம் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருப்பார்.
அடையாளம்;தோனி வருவார்
இந்த தொடரிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறினாலும் வெற்றியுடன் விடைபெறுகிறது மகிழ்ச்சி.அதைவிட அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என்று தோனி கூறியதும், சிஎஸ்கே அணிக்கு இரு இளம் வீரர்கள் ஜெகதீஸன், கெய்க்வாட் அடையாளம் காணப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
இருவருமே தோனியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் புதிய வார்ப்புடன் அடுத்த ஆண்டு வருவாகும் சிஎஸ்கே அணியில் இருவருக்கும் இடம் கிடைக்கும் என நம்பலாம்.
அடுத்த ஆண்டு உருவாகும் சிஎஸ்கே அணியில் கேதார் ஜாதவே தேர்வு செய்ய தோனி பரிந்துரைப்பாரா என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழக வீரர் மீது பாராமுகம்
அனைத்து வீரர்களுக்கும் சுழற்ச்சி முறையில் வாய்ப்புக் கொடுத்த தோனி, தமிழக வீரர் சாய் கிஷோருக்கு மட்டும் கடைசிவரை வாய்ப்புக் கொடுக்கவில்லை. டிஎன்பிஎல் தொடரில் பந்துவீச்சில் 5.30 எக்கானமி வைத்துள்ள சாய் கிஷோருக்கு இந்தப் போட்டியிலாவது தோனி வாய்ப்பளித்திருக்காலம்.
நல்ல தொடக்கம்
154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. கெய்க்வாட், டூப்பிளசிஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். இருவரையும் பிரிக்க பஞ்சாப் அணி முயன்றும் நீண்டநேரமாக முடியவில்லை. டூப்பிளசிஸ் 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.
ஹாட்ரிக் அரைசதம்
அடுத்துவந்த ராயுடு, கெய்க்வாட்டுக்கு ஒத்துழைத்து பேட் செய்தார். நிதானமாகவும், ேதவையான ஷாட்களை மட்டும் ஆடிய கெய்க்வாட் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராயுடு, கெய்க்வாட் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
கெய்க்டாவாட் 62 ரன்களுடனும்(42பந்து, ஒருசிக்ஸ,6பவுண்டரி), ராயுடு 30 ரன்களுடனும் இறுதிவரைஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.5 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
விக்கெட் சரிவு
முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே அணி சேஸிங் செய்தது. ராகுல், மயங்க் அகர்வால் அதிரடியாகத் தொடங்கி நல்ல ரன்ரேட்டில் அணியைக் கொண்டு சென்றனர். ஆனால், இங்கிடி வீசிய 6-வது ஓவரில் அகர்வால் 26 ரன்னில் போல்டாகி அதிர்ச்சியளித்தார்.
அடுத்து வந்த கெயில், ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிவந்த நிலையில் ராகுல் 29 ரன்னில் இங்கிடி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் விக்ெகட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. பூரன்(2),கெயில்(12) ரன்னில் தாஹிர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
விக்கெட்டுகள் விழுவதைப் பார்த்து கெயில் மெதுவாக ஆடத்தொடங்கியதே அவர் ஆட்டமிழக்கக் காரணம். கெயில் வழக்கமான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். மன்தீப் சிங்(14), நீஷம்(2) ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஹூடா ஆறுதல்
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் தீபக் ஹூடா 62 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தீபக் ஹூடா குறி்த்த வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், அவரின் 50 ஐபிஎல் இன்னிங்ஸில் 6-வது முறையாக இந்தப் போட்டியில் 20 பந்துகளுக்கு மேல் பேட்டிங் செய்து, தனது 2-வது அரைசதத்தை பதிவு செய்தார். ஹூடா 62 ரன்னிலும்(3பவுண்டரி, 4 சிக்ஸ்), ஜோர்டன் 4 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் இங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago