ஜேஸன் ஹோல்டர், ரஷித் கான், சந்தீப் சர்மா ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. 121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன்
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் பெரும் சரிவுக்கு காரணமாகிய சந்தீப் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய சந்தீப் சர்மா 20 ரன்கள் கொடுத்து கோலி, படிக்கல் ஆகிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பரபரப்பு ப்ளே ஆஃப்
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் போட்டி கடுமையாகியுள்ளது. முதலிடத்தில் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்டது. கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி வெளியேறிவிட்டது.
மீதமுள்ள 6 அணிகளுக்கும் இடையே 3 இடங்களைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் இரு போட்டிகள் நாளை, செவ்வாய்கிழமை நடக்கும் போட்டிகள்தான் ப்ளே ஆஃப் செல்லும் அணியைத் தீர்மானிக்கும் ஆட்டங்களாக மாறும்.
முன்னேற்றம்
இந்த வெற்றியின் மூலம் சன்சைர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7 தோல்வி பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளைவிட சிறப்பாக 0.555 என்று இருப்பதால், 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இன்னும் பிரகாசப்படுத்தியுள்ளது.
மறுபுறம் இந்தத் தோல்வியால் ஆர்சிபி அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் இருந்தாலும், ரன்ரேட்டில் மைனஸ் -0.145 என்ற கணக்கில் இருக்கிறது.
வாழ்வா சாவா
ஆர்சிபி அணியும், டெல்லி அணியும் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாகும் இதில் வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றில் 2-வது இடத்தைப் பிடிக்கும். தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.
ஏனென்றால் தோல்வி அடையும் போது ரன்ரேட் மேலும் மோசமாகும் போது 14 புள்ளிகளுடன் இருந்தாலும் தோற்கும் அணி 6-வது இடத்துக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. ஆதலால், 2, 3, 4 இடங்களை பிடிக்கும் அணிகள் யார் என்று உறுதியாகக் கூற முடியாத வகையில் போட்டித் தொடர் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
பஞ்சாப்புக்கு ஒரு வெற்றிபோதும்
சில கணக்குகள் அடிப்படையில் பார்த்தால் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றாலே பஞ்சாப் அணி போதுமானது. நல்ல ரன்ரேட்டில் 4-வது இடத்தைப் பிடிக்க முடியும்.
ஒருவேளை ஒரு ரன்னில் சிஎஸ்கே அணியை பஞ்சாப் அணி வென்றால்கூட, இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றால்தான் ப்ளே ஆப் சுற்று கிடைக்கும். ஆதலால் இன்று இரவு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ரன்ரேட்டை பற்றிக் கவலைப்படாமல் சிஎஸ்கே அணியை வென்றாலே பஞ்சாப் அணிக்கு போதுமானது.
யாருக்கு வாய்ப்பு
டெல்லி-ஆர்சிபி அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் ஆட்டத்தில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணி தொடரிலிருந்து வெளிேயறும். வெற்றி பெறும் அணி 2-வது இடத்தைப் பிடிக்கும். சிஎஸ்கே அணியை வீழ்த்தினால் பஞ்சாப் அணி 3-வது இடத்தைப் பிடிக்கும். 4-வது இடத்துக்கு ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் இடையே கடும் போட்டி இருக்கும்.
திட்மிட்ட பந்துவீச்சு
சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை ஷார்ஜா ஆடுகளத்தை துல்லியமாகக் கணித்து டாஸ்வென்றபோதும் சேஸிங் செய்தனர். பனி முக்கியமான காரணியாக இரவுமாறும் என்பதால், வார்னர் சேஸிங் செய்தார். பந்துவீச்சிலும் திட்டமிட்டு காய்களை நகர்த்தினர்.
அதற்கு ஏற்றார்போல் சந்தீப்சர்மா தனது ஸ்விங் பந்துவீச்சில் தேவ்தத் படிக்கல்(7), விராட் கோலி(7) விக்கெட்டுகளை வீழ்த்தி நன்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அதைப்பின்பற்றி, ரஷித்கான், ஹோல்டர், நடராஜன் ஆகியோர் பந்துவீசி ஆர்சிபி அணியை நெருக்கடியில் தள்ளினர்.
அதிலும் குறிப்பாக ரஷித்கான் பந்துவீச்சில் டிவில்லியர்ஸ் திணறியது வேடிக்கையாக இருந்தது. 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ்க்கு பலபந்துகளை பீட்டன் செய்து, படம் காட்டினார் ரஷித் கான். தமிழக வீரர் நடராஜன் தனது துல்லியமான யார்கர், லென்த் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ஹோல்டர் அசத்தல்
பஞ்சாப் அணிக்கு கெயில் வந்தபின் அணிக்குள் புதுரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதோ அதுபோன்று ஹோல்டர் வந்தபின் சன்ரைசர்ஸ் அணிக்கு கூடுதல் பலம் உற்சாகம் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் உண்டாகியுள்ளது.
பந்துவீச்சில் அசத்திய ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்டிங்கிலும் இக்கட்டான நேரத்தில் களமிறங்கி 10பந்துகளில் 3 சிக்ஸர், ஒருபவுண்டரி என 26 ரன்களுடன்அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
சன்ரைசர்ஸ் அணியில் பந்துவீசிய அனைத்துப் பந்துவீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தினர். சரியான வீரர்கள் கலவை தெரியாமல் வார்னர் திணறிய நிலையில் கடைசி நேரத்தில் அந்தச் சரியான கலவை அமைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சாளர்களுக்கு கிைடத்த வெற்றியாகும்.
சொதப்பல் பேட்டிங்
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை சிறிய மைதானம், பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான ஷார்ஜாவில் இவ்வளவு குறைவான ஸ்கோரை எடுத்தது பொறுப்பற்ற பேட்டிங் என்றுதான் கூற முடியும். 120 ரன்களை அடித்துக்கொண்டு சன்ரைசர்ஸ் அணியை சுருட்ட முடியும் என்று ஆர்சிபி கேப்டன் கோலி நினைத்தது சாத்தியமில்லாதது.
சன்ரைசர்ஸ் அணி 127 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்துள்ளது என்பதால், அதே தவறை மீண்டும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அறியாமை.
2 வீரர்களை நம்பியே ஆர்சிபி
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் கோலி படை கோட்டைவிட்டுள்ளது. அணியில் பிலிப்(32), டிவில்லியர்ஸ்(24) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். ஆர்சிபி அணி இன்னும் கோலி, டிவில்லியர்ஸ் இருவரின் பேட்டிங்கையே முழுமையாகச் சார்ந்துள்ளது.
இருவரும் சோபிக்காத பலபோட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது, அதில் இந்த ஆட்டமும் ஒன்று. இதுபோன்று இரு வீரர்களை மட்டும் நம்பி களமிறங்குவது அணிக்கு மிகவும் ஆபத்தான போக்காகும்.
டெல்லி அணியுடனான அடுத்தப் போட்டி வாழ்வா சாவா போட்டியாகும். அந்தப் போட்டியில் வென்றால் 4 ஆண்டுகளுக்குப்பின் ஆர்சிப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும். இல்லாவி்ட்டால், 5-வது முறையாக ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் போட்டியிலிருந்து வெளியேறும்.
ராசியில்லாத ராஜாவா
“நான் ஒரு ராசியில்லாத ராஜா” என்று கோலி மீண்டும் பாட வேண்டியதுதான். இந்திய அணிக்குக் கேப்டனாக இருக்கும கோலியால் ஆர்சிபி அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட 5 ஆண்டுகளில் ஒருமுறைகூட அழைத்துச் செல்ல முடியவில்லை நிலைதான் ஏற்படும்.
மணிஷ் பாண்டே அதிரடி
121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. சாஹால், வார்னர் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். வாஷிங்டன் சுந்தரின் முதல் ஓவலில் ஒரு சிக்ஸர் அடித்த வார்னர் அடுத்த பந்தில் உடானாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த மணிஷ் பாண்டே, சாஹாவுடன் சேர்ந்தார்.
சாஹா நிதானமாக பேட் செய்ய, மணிஷ் பாண்டே அதிரடியாகரன்களைச் சேர்த்தார். 10 ரன்ரேட்டில் சன்ரைசர்ஸ் அணி சென்றது. சாஹல் வீசிய7-வது ஓவரில் மணிஷ் பாண்டே 26 ரன்னில் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்த சிறிது நேரத்தில் சாஹா 39 ரன்னில் சாஹல் பந்துவீ்ச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். வில்லியம்ஸன் 8 ரன்னில் உடானா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
60 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 27 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. அபிஷேக் சர்மா, ஹோல்டர் ஜோடி ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். அபிஷேக் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹோல்டர் காட்டடி
ஆனால் அதிரடியாக பேட் செய்த ஹோல்டர் 3 சிக்ஸர்கள், பவுண்டரி என விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். ஹோல்டர் 26 ரன்னிலும், சமத் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர். 14.1 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 5விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள்ச ேசர்த்து வெற்றி பெற்றது.
ஆர்சிபி தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விக்கெட் சரிவு
முன்னதாக ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. பவர்ப்ளே ஓவருக்குள் படிக்கல்(5), கோலி(7) விக்கெட்டுகளை எடுத்து அதிர்ச்சியளித்தார் சந்தீப்சர்மா. அதன்பின் பிலிப், டிவில்லியர்ஸ் ஜோடி ஓரளவுக்கு விக்கெட்டை நிலைப்படுத்தும் வகையில் பேட் செய்தனர்.
டிவ்லிலயர்ஸ்24 ரன்னில் நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பிலிப் 32 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
கடைசிவரிசை வீரர்களான சுந்தர்(21), மோரிஸ்(5), உடானா(0) என யாரும் நிலைத்து பேட் செய்யவில்லை. குர்கீரத் 15, சிராஜ் 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித்கான், நடராஜன், நதீம் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago