ப்ளே ஆஃப் செல்லுமா?: போல்ட், பும்ரா பந்துவீச்சில் சரிந்தது டெல்லி: தொடர்ந்து 4-வது தோல்வி: மும்பை முதலிடம்

By க.போத்திராஜ்


போல்ட், பும்ராவின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்தது. 111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ்அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 111 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி முதலிடத்தை இறுக்கமாகத் தக்கவைத்துள்ளது. இதுவரை1 13 ஆட்டங்களில் 9 வெற்றி, 4 தோல்வி என 18 புள்ளிகளுடன் மும்பை முதலிடத்தில் உள்ளது.

டெல்லி பரிதாபம்

அதேசமயம், ஒரு நேரத்தில் முதலிடத்தில் இருந்து வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான 4-வது தோல்வியாகும். 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 6 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் டெல்லி அணி இருந்தாலும்,நிகர ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணிக்கு அடுத்ததாக 6-வது இடத்துக்கு சரிந்துள்ளது. அதாவது டெல்லி அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.159 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாளை நடக்கும் கடைசிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் டெல்லி அணி மோதுகிறது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாகும். இதில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் தோற்கும் அணி வெளியேறும்.

பும்ரா, போல்ட் கலக்கல்

இந்தப் போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கியக் காரணமாக அமைந்தனர். டிரன்ட் போல்ட், பும்ரா இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியின் முதுகெலும்பு உடைவதற்கு இருவரே காரணமாக அமைந்தனர்.

போல்ட், பும்ரா அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நன்கு பயன்படுத்திமற்ற பந்துவீச்சாளர்களும், தொடர்ந்து நெருக்கடி கொடுத்து டெல்லி அணியை கட்டுப்படுத்தினர்.

ஆட்டநாயகன்

எளிய இலக்கை விரட்டிச் சென்றதிலும் அரைசதம் அடித்து 72 ரன்களுடன்(47 பந்துகள், 8பவுண்டரி, 3சிக்ஸ்) ஆட்டமிழக்காமல் இருந்த இசான் கிஷன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஒட்டுமொத்தத்தில் ரோஹித் சர்மா இல்லாத நிலையிலும் அவர் இல்லாத குறை தெரியாமல் போலார்ட் திட்டமிட்டு கேப்டன்ஷிப் செய்து கலக்கி வருகிறார்.

என்ன ஆச்சு டெல்லிக்கு

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு என்ன ஆச்சு என்றுதான் கேட்க வேண்டும். வலிமையான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் மும்பை அணியுடன் போட்டிபோட்ட டெல்லி அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா என்பதே சந்தேகமாகியுள்ளது.

டெல்லி அணி 110 ரன்கள் சேர்த்தபோதே தோல்வியைபும் ஒப்புக்கொண்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். 110 ரன்களை அடித்துக் கொண்டு மும்பை அணியை பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் சுருட்டுவது என்பது சாத்தியமில்லாதது. 7 பேட்ஸ்மேன்கள் வைத்திருந்தும் அதில் ஒருவர் கூட நிலைத்து விளையாடவில்லை.

டாப்ஆர்டர் மோசம்

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருவருமே விளையாடவில்லை. ஷிகர் தவண் தொடர்ந்து 2-வது போட்டியில் டக்அவுட் ஆகினார். சில போட்டிகளாக வாய்ப்பு பெறாமல் இருந்த பிரித்வி ஷா மீண்டும் வந்தபோதிலும் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த் விக்கெட்டுகளை இழந்தவுடனே டெல்லி அணியின் கதை முடிந்தது.

டெல்லி அணிக்கு பலமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். ஆனால், கடந்த சில போட்டிகளாக டாப்ஆர்டர் சொதப்பி வருவதே தோல்வி்க்கான காரணமாகும். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியதாகவே இருந்தது. அதனால்தான் டெல்லி பந்துவீச்சை இஷான் கிஷன் வெளுத்துக்கட்டினார்.

ஆனால் டெல்லி பேட்ஸ்மேன்களைப் பொருத்தவரை ரன் சேர்க்க வேண்டும், வெல்ல வேண்டும் என்ற நோக்கம், தீவிரம் இல்லாமல் விளையாடினார்களோ என்ற சந்தேகம் எழுகிறது, அல்லது மனச்சோர்வு அடைந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

இஷான் கிஷன் அதிரடி

111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளியஇலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. டீ காக், இஷான் கிஷன் ஆட்டத்தைத் தொடங்கினர். டெல்லி அணியின் பந்துவீச்சை இஷான் கிஷன் ஒருபுறம் தொடக்கத்திலிருந்தே அடித்து நொறுக்க, டீ காக் நிதானமாக பேட் செய்தார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்தது மும்பை அணி. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

முதல் வி்க்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் டீ காக் 28 ரன்னில் ஆன்ரிச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவும், இஷான் கிஷனுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியை 14.2 ஓவர்களில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இஷான் கிஷன் 72 ரன்னிலும், சூர்யகுமார் 12 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போல்ட் துல்லியம்

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி சேஸிங் செய்தது. டெல்லி அணியில் ஷிகர் தவண், பிரித்விஷா ஆட்டத்தைத் தொடங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து தவண் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார்.

போல்ட் வீசிய 3-வது ஓவரில் பிரித்வி ஷா 10 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட் கீப்பர் டீக்காக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் மட்டுமே டெல்லி அணி சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 2-வது மிகக்குறைவான ஸ்கோராகும்.

மந்தமான ரன் சேர்ப்பு

3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த் ஜோடி சேர்ந்து விக்கெட்டை நிலைப்படுத்த முயன்றாலும் ரன் சேர்க்க முடியவில்லை. 10-வது ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டது. 10-வது ஓவரில்தான் டெல்லி அணி 50 ரன்களை எட்டியது.

ராகுல் சாஹர் வீசிய 11-வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அதன்பின் பும்ரா பந்துவீச வந்ததும் விக்கெட்டுகள் மளமளவென விழத் தொடங்கின. 4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டாய்னிஷ் 2 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார்.நிதானமாக ஆடி வந்த ரிஷப் பந்த் 21 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

ஹெட்மயர் (11),படேல்(5), அஸ்வின்(12) ரபாடா(12) என வரிசையாக வீழ்ந்தனர். 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி அடுத்த 60 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்்த்தது. மும்பை அணி்த் தரப்பில் பும்ரா, போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்