ஸ்டோக்ஸின் மின்னல் வேக அரைசதம், சாம்ஸனின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ப்ளே ஆஃப் ரேஸில் ராஜஸ்தான்
» "1001"- டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்கள் அடித்த அபூர்வ கிறிஸ் கெய்ல்- வரலாறு படைத்தார்
» ‘அடுத்த சீசனுக்கும் இப்படியே வந்துடாதீங்க தோனி’ - குமார் சங்ககாரா அறிவுரை
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளது. 13 போட்டிகளில் 6 வெற்றி 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 5-வது இடத்தில் நிகர ரன்ரேட் மைனஸ் 0.377 என்ற கணக்கில் இருக்கிறது. இன்னும் கொல்கத்தா அணியுடன் ஒரு போட்டி மட்டும் ராஜஸ்தான் அணிக்கு இருக்கிறது.
இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாகும். ஏனென்றால் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருக்கிறார்கள். கொல்கத்தாவை நல்ல ரன்ரேட்டில் வென்றால் ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு நிகர ரன்ரேட் அடிப்படையில் கிடைக்கலாம்.
சூடுபிடித்த ஐபிஎல்
அதேசமயம், கொல்கத்தா அணி வென்று, மறுபுறம் பஞ்சாப் அணி சிஎஸ்ேக அணியை வென்றுவிட்டால் கொல்கத்தாவுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால் நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா மிகக் குறைவாக இருக்கிறது.
இந்தத் தோல்வி மூலம் பஞ்சாப் அணி 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.133 என்ற கணக்கில் உயர்வாகவே இருக்கிறது. தொடர்ந்து 5 போட்டிகளாக வென்று வந்த நிலையில் அந்த வெற்றிக்கு ராஜஸ்தான் அணி தடை போட்டுள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிராக வரும் போட்டி பஞ்சாப் அணிக்கு மிக முக்கியமானது. இந்தப் போட்டியில் தோற்று, ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை வென்றாலே ராஜஸ்தானுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு சென்றுவிடும். ஆதலால், பஞ்சாப் அணி சிஎஸ்கே அணியை நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
யாருக்கு இடம்
அதேசமயம் சன்ரைசர்ஸ் அணிக்கும், ஆர்சிபி அணிக்கும் இன்று நடக்கும் ஆட்டம் முக்கியமானது. சன்ரைசர்ஸ் அணி தோற்றுவிட்டால் ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு அந்த அணிக்கு முடிந்துவிடும்.
ஆனால் வெற்றி பெற்றுவிட்டால், 12 புள்ளிகளுடன் இருக்கும், கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுவிட்டால் சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறலாம்.
ஆனால், ஆர்சிபி, மும்பை அணியை சன்ரைசர்ஸ் வெல்வது என்பது எளிதானது அல்ல. அதேசமயம், ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் அணியை கட்டாயமாக வீழ்த்த வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஏனென்றால் ஆர்சிபிஅணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வலிமையான டெல்லி அணியுடன் மோதவுள்ளதால், அது சவாலாக இருக்கும். ஒருவேளை சன்ரைசர்ஸ் அணியுடனும், டெல்லி அணியுடனும் தோற்றுவிட்டால், ஆர்பிசி 3-வது இடம் வருவதே கடினமாகிவிடும்.
ஆகவே, ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றில் 2-ம், 3-ம் 4-ம் இடத்துக்கான போட்டி கடுமையாகியுள்ளது. அடுத்த இரு நாட்களில் எந்த அணி எங்கு அமர்வார்கள் என்பது தெரிந்துவிடும்.
ஆட்டநாயகன்
இந்த ஆட்டத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து ஸ்டோக்ஸ் அசத்தினார். பேட்டிங்கிலும் தொடக்க வீரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 50 ரன்கள்(3சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
5 பேட்ஸ்மேன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில்முதல் 5 வீரர்கள் நேற்று சிறப்பான பங்களிப்புச் செய்தனர். அதனால்தான் 185 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்கையும் 18 ஓவர்களுக்குள் சேஸிங் செய்ய முடிந்தது. அதிலும் ஸ்டோக்ஸ் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்து வந்த சாம்ஸன் 48 ரன்கள் (25பந்துகள் 4பவுண்டரி,3சிக்ஸ்) நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.
சாம்ஸன் ஆட்டமிழந்தவுடன், கேப்டன் ஸ்மித், பட்லர் சேர்ந்து சூழலை அறிந்து அதிரடி ஆட்டத்தைக் கையாண்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
உத்தப்பா, ஸ்டோக்ஸ், சாம்ஸன், ஸ்மித், பட்லர் ஆகிய 5 வீரர்களும் ஒரே நேரத்தில் ஃபயர் ஆகினால் என்ன நடக்கும் என்பதை இந்த ஆட்டத்தில் காணமுடிந்தது. பஞ்சாப் அணி நிர்ணயித்த இலக்கை குறைந்த ஓவரில் சேஸிங் செய்ய வேண்டும், நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்று நன்கு திட்டமி்ட்டு, அதை சிறப்பாகவும் ராஜஸ்தான் அணி செயல்படுத்தியது.
ஸ்டோக்ஸ் கடந்த 2 போட்டிகளாக அனாயசமாக விளையாடி வருகிறார். கடந்த ஆட்டத்தில் சதம்அடித்த ஸ்டோக்ஸ், இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்துள்ளார். அதேபோல, சாம்ஸனும் பொறுமையில்லாமல் பேட் செய்து பலபோட்டிகளில் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் கடந்த இரு ஆட்டங்களாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடி விக்கெட்டை நிலைப்படுத்தி வலிமை சேர்த்தார்.
ஆர்ச்சர் மிரட்டல்
பந்துவீச்சில் ஆர்ச்சரின் பந்துவீச்சை எந்தபேட்ஸ்மேனாலும் தொட முடியாத வகையில் மிரட்டலாக இருந்து வருகிறது. ஸ்டோக்ஸ், திவேத்தியா இருவரும் நடுப்பகுதியில் பந்துவீசி ரன் அதிகமாகச் செல்லவிடாமல் தடுத்தது சிறப்பு.
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுபடவில்லை. ஷமி, அஸ்வின், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர்.
கெயில் ராகுல் ஆறுதல்
பேட்டிங்கிலும் கெயில், ராகுலைத் தவிர்த்து ஒருவரும் சிறப்பாக ஆடவில்லை. கிறிஸ் கெயில் தனி பேட்ஸ்மேனாகப் போராடி 99 ரன்கள் சேர்த்ததும் வீணாகியது
கெயிலின் சதம் அடிக்கும் முயற்சி கடைசியில் ஆர்ச்சரால் தோற்கடிக்கப்பட்டது வேதனை. ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டுவிட்டோம் எனும் ஆத்திரத்தில் பேட்டை வீசி எறிந்து தனது நிதானத்தை இழந்தார் கெயில். கெயிலின் செயலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதமும் விதித்துள்ளது.
கெயில் சாதனை
டி20 போட்டிகளில் கெயில் தனது ஆயிரமாவது சிக்ஸரை அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் பதிவு செய்தார். டி20 போட்டிகளில் பல சாதனைகளை வைத்துள்ள கெயிலுக்கு இதுவும் மகுடமாக அமையும்.
தொடர்ந்து 5 போட்டிகளாக வெற்றி நடைபோட்டுவந்த பஞ்சாப் அணிக்கு இந்த தோல்வி பின்னடைவுதான், இருந்தாலும் நீண்டகாலத்துக்குபின் கெயிலின் மிரட்டலான ஆட்டத்தைக் காண முடிந்தது.
கெயில், ராகுல் ஜோடி நல்ல 120 ரன்கள் சேர்த்தாலும், நடுப்பகுதியில் ஸ்கோரை சற்று வேகப்படுத்த தவறிவிட்டனர். இல்லாவிட்டால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் நிச்சயம் 200 ரன்களைக் கடந்திருக்கும்.
186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. உத்தப்பா, ஸ்டோக்ஸ் களமிறங்கினர். ஸ்டோக்ஸ் தொடக்கத்திலிருந்தே காட்டடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்டோக்ஸ் அதிரடி
ஷமி, அர்ஷ்தீப் சிங், அஸ்வின் ஆகியோரின் பந்துவீச்சை ஸ்டோக்ஸ் நொறுக்கி அள்ளினார். 4.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது. ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து ஜோர்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் சேர்த்தது.
அடுத்துவந்த சாம்ஸன், உத்தப்பா ஜோடி சேர்ந்தனர். உத்தப்பா நிதானமாக பேட் செய்ய சாம்ஸன் மறுபுறம் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார். 9.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டி, திட்டமிட்ட பாதையில் சீராகச் சென்றது.
சாம்ஸன் காட்டடி
அஸ்வின் வீசிய 11 ஓவரில் உத்தப்பா 30ரன்னில் பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஸ்மித் , சாம்ஸனுடன் சேர்ந்தார். சாம்ஸன் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 48 ரன்னில் ரன் அவுட் ஆகினார். 4-வது விக்கெட்டுக்கு பட்லர் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். இருவரின் அதிரடியால் வெற்றி நெருங்கி வந்தது.
வழக்கமாக பதற்றத்துடன் ஆடும் ஸ்மித் இந்த போட்டியில் தீர்மானத்துடன் அதிரடியை கையாண்டார். இருவரின் கடைசிநேர அதிரடி பேட்டிங்கால் 17.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வென்றது. ஸ்மித் 31 ரன்னிலும், பட்லர் 22 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வலுவான கூட்டணி
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சேஸிங் செய்ய தீர்மானித்தது. ராகுல், மன்தீப்சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே மன்தீப் சிங் டக்அவுட்டில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ராகுல், கெயில் ஜோடி அணியை கட்டமைத்தனர். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் அதிரடிக்கு மாறினர். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தது. கெயில் வழக்கம்போல் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சதத்தை தவறவிட்ட கெயில்
நிதானமாக ஆடிவந்த ராகுல் 46 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் திவேஷியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கெயில், ராகுல் கூட்டணி 120 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த பூரன் 22 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் கெயில் சதத்தை நோக்கி நகர்ந்தார்.
ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்
ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரின் 4-வது பந்தில் கால்காப்பில் பட்டு கெயில் 99ரன்னில் போல்டாகினார். சதத்தை நோக்கி நகர்ந்த கெயிலுக்கு அவுட் ஆகியது பெருத்த ஏமாற்றத்தை அளித்ததால், பேட்டை களத்தில் வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்.இருப்பினும் வெளியே செல்லும்போது, ஆர்ச்சருக்கு கைகுலுக்கி தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்த கெயில் தவறவில்லை. கெயில் 63 பந்துகளில் 99 ரன்கள் (8சிக்ஸர், 6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
மேக்ஸ்வெல் 6ரன்னிலும், ஹூடா ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago