‘அடுத்த சீசனுக்கும் இப்படியே வந்துடாதீங்க தோனி’ - குமார் சங்ககாரா அறிவுரை

By செய்திப்பிரிவு

2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் விளையாட வந்துவிட வேண்டாம். உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி பேட்டிங் பயிற்சி எடுங்கள் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதியில் இந்திய அணி தோற்றது. அந்தப் போட்டிதான் தோனி கடைசியாக ஆடிய சர்வதேசப் போட்டியாகும். அதன்பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவிதமான போட்டியிலும் களமிறங்கி எந்த பேட்டிங் பயிற்சியும் தோனி எடுக்கவில்லை.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், இந்தக் குறுகிய கால பயிற்சியே தனக்குப் போதுமானது என்று எண்ணிய தோனி, அதீதமான நம்பிக்கையில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். ஆனால், ஒரு போட்டியில் கூட தோனியால் நினைத்த ஷாட்களை ஆட முடியவில்லை, நிலைத்து நின்று பேட் செய்ய முடியவில்லை.

ஒரு கேப்டனாக கடந்த 13 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்குக் குறிப்பிடத்தக்க அளவு பேட்டிங் மூலம் எந்தப் பங்களிப்பும் தோனி செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். கிரிக்கெட்டில் கிரேட் ஃபினிஷர் என்று அறியப்பட்ட தோனி, இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்யவும், போட்டியை ஃபினிஷ் செய்யவும் எவ்வாறு சிரமப்பட்டார் என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்.

தோனிக்குப் போதுமான அளவு பேட்டிங் பயிற்சியின்மையும், தன்னால் முடியும் என்ற அசட்டுத்தனமான தன்னம்பிக்கையும்தான் சிஎஸ்கே அணிக்குத் தோனியால் பேட்டிங்கில் பங்களிப்புச் செய்ய முடியாததற்குக் காரணமாகும்.

ஒரு சிறிய புள்ளிவிவரம்.

இதுவரை 13 ஐபிஎல் சீசன்களில் தோனி ஒரு தொடரில் கூட அரை சதம் அடிக்காமல் இருந்ததில்லை. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை தோனியின் ரன் குவிப்பில் அரை சதம் இல்லாமல் இருந்தது இல்லை.

ஆனால், இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய தோனி, ஒட்டு மொத்தமாக 200 ரன்கள்தான் சேர்த்துள்ளார். அதிகபட்சம் 47 ரன்கள்தான். இன்னும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தோனியின் மிகக்குறைவான ஒட்டுமொத்த ஸ்கோரும் இதுவாகத்தான் இருக்கும்.

இதைவிட தோனியின் மோசமான பேட்டிங் ஃபார்மை விளக்கும் புள்ளிவிவரம் தேவையில்லை.

தோனியின் பேட்டிங் ஃபார்மைக் குறிப்பிட்டு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா அறிவுரை கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சங்ககாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஐபிஎல் என்பது உலகின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் விளையாடும் போட்டித் தொடர். இதில் பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சி இல்லாமல் விளையாடுவது முறையல்ல.

ஆதலால், தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு வரும்போது நன்றாக பேட்டிங் பயிற்சி எடுத்துவிடுவார் என நம்புகிறேன். இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் நடக்கும் அதிகமான உள்ளூர் போட்டிகளில் தோனி தொடர்ந்து விளையாடி பேட்டிங் பயிற்சி எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டும் இதேபோன்று தோனி வரமாட்டார் என நம்புகிறேன்.

தோனியின் பேட்டிங் ஃபார்மும், அவரின் பேட்டிங் திறமையும் அணியின் வெற்றி, தோல்வியில் எதிரொலிக்கும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். இந்தத் தொடரில் பேட்டிங்கில் என்ன தவறு நடந்தது, எவ்வாறு நடந்தது, என்பதை தோனி ஆய்வு செய்ய வேண்டும்.

தொடர்ந்து விளையாட வேண்டும், சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்ற ஆசையுள்ள வீரர் தோனி என்பதை நான் அறிவேன். தான் ஒரு அரை சதம் அடிப்பதைவிட, அணியின் வெற்றிதான் முக்கியம் என்பதை உணர்ந்தவர் தோனி.

அந்த அடிப்படையில்தான் சிஎஸ்கே அணியை தோனி கட்டமைத்தார். அப்படித்தான் தோனி நினைத்தார். அணிக்காக எந்த வகையிலும் ஏதாவது பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் தோனி. தன்னால் முடிந்தால் 10 ரன்களையாவது அடித்துவிட்டாலும் அதை நினைத்து மகிழ்ச்சியடைவார்.

அப்படி இருக்கும் தோனி இந்த சீசனில் தன்னுடைய மோசமான ஃபார்ம் குறித்து நிச்சயம் வருத்தப்படுவார். இன்னும் 2 போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் எந்த விதத்திலும் தோனியின் பேட்டிங்கை மேம்படுத்துவது சாத்தியமில்லை. போட்டிகளில் வேண்டுமானால் சிஎஸ்கே வெல்ல முடியும். ஆதலால், அடுத்த ஆண்டு சீசனில் தோனி களத்துக்கு வரும்போது போதுமான அளவு பேட்டிங் பயிற்சியோடு வரவேண்டும் என விரும்புகிறேன்''.

இவ்வாறு குமார் சங்ககாரா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்