ருதுராஜ் கெய்க்வாட்டின் அரை சதம், ஜடேஜாவின் அதிரடியான ஆட்டம் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவுக்கு தடை
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணிக்கு எந்த விதமான பயனும் இல்லை. தொடரிலிருந்து சிஎஸ்கே அணி ஏற்கெனவே வெளியேற்விட்ட நிலையில், தேவையில்லாத நேரத்தில் கிடைத்த பயனற்ற வெற்றி.
இந்த ஆட்டத்தை சிஎஸ்கே அணி கடந்த 4 போட்டிகளுக்கு முன்பு விளையாடியிருந்தால் கதையே மாறியிருக்கும். 13 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி 5 வெற்றி, 8 தோல்வி என 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
சிஎஸ்கேயின் இந்த வெற்றி கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வெடி வைத்து விட்டது. இனிமேல் கொல்கத்தா அணி தனக்கு கடைசியாக இருக்கும் ஒரு போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளுக்காக காத்திருக்க வேண்டும்.
ஒரு வேளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று நடக்கும் போட்டியில் வென்று விட்டாலோ, அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றுவி்ட்டாலோ கொல்கத்தா அணியின் கதையும் ஏறக்குறைய முடிந்துவிடும். ஏனென்றால், கொல்கத்தா அணியின் நிகர ரன்ரேட் மிகவும் மோசமாக இருப்பதால், அந்த அணியால் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் நிகர ரன்ரேட் அந்த அணிக்கு பாதிப்பாக அமையும்.
யாருக்கு 4-வது இடம்
சிஎஸ்கே அணியின் இந்த வெற்றி , ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கடைசி இடத்தை எந்த அணி பிடிக்கப் போகிறது எனும் போட்டியை திறந்துவி்ட்டுள்ளது. ஆதலால், அடுத்து வரும் போட்டிகள் பஞ்சாப், ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஆகிய 3 அணிகளுக்கும் மிக முக்கியமானது. ப்ளே ஆஃப் ரேஸில் ஏறக்குறைய கொல்கத்தா அணி துரத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூறலாம்.
இந்த தோல்வி மூலம் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் 7 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.
ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பஞ்சாப்பிடம் தோற்றால், பஞ்சாப் 4-வது இடத்துக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ராஜஸ்தான் அணி இன்று நடக்கும் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தினால், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்குமே முக்கியமானதாக அமையும்.
ஆனால், இன்று நடக்கும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வென்றாலே ஏறக்குறைய 4-வது இடத்துக்கான அணி யார் என்பதை ஊகித்துவிட முடியும். ஆதலால் இன்றைய ஆட்டத்தின் முடிவு கொல்கத்தா அணிக்கு மிக மிக முக்கியம்.
கெய்க்வாட் ஆட்டநாயகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இளம் வீரர் கெய்க்வாட், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜாதான். கெய்க்வாட் தொடர்ந்து 2-வது போட்டியில் கெய்க்வாட் அரைசதம் அடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து(2சிக்ஸர், 5பவுண்டரி) கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இப்படிப்பட்ட திறமை வாய்ந்த வீரரிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி எப்படிக் கண்டுபிடித்தார் என்பது தெரியவி்ல்லை.
கடைசி இரு ஓவர்கள்தான் ஆட்டத்தை திருப்பிப்போட்டது. மீண்டும் சிஎஸ்கே அணி பழைய பாதைக்கு திரும்பிவிட்டதோ என்று ரசிகர்கள் வயிற்றுக்குள் உருவமில்லாத உருண்டை ஓடியது. ஆனால், ஜடேஜாவின் அதிரடிஆட்டமே சிஎஸ்கேயின் வெற்றியை காப்பாற்றியது.
பரபரப்பு கடைசி 2 ஓவர்கள்
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. பெர்குஷன் வீசிய 19-வதுஓவரில் 2 பவுண்டரி, நோபாலில் ஒரு சிக்ஸ் என ஜடேஜா 20 ரன்கள் விளாசினார்.
கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. நாகர்கோட்டி வீசிய 20-வது ஓவரில் முதல்பந்தை எதிர்கொண்ட சாம்கரன் 2 ரன்களும், அடுத்தபந்தில் ரன் எடுக்காமல் விட்டார். 3-வது பந்தில்ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்து ஜடேஜாவின் ஸ்ட்ரைக்காக மாறியது. 4-வது பந்தை தவறவிட்ட ஜடேஜா 5-வது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸர் விளாசினார்.
கடைசிப்பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை. வைட் லாங்ஆன் திசையில் மறுபடியும் ஜடேஜா சிக்ஸர் அடிக்க சிஎஸ்கே வெற்றி உறுதியானது.
இப்போதுதான் இளைஞர்களுக்கு வாய்ப்பா
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை இதுபோன்ற வெற்றியை கடந்த சில போட்டிகளுக்கு முன் பெற்றிருந்தால் ரசிகர்களும் மகிழ்ந்திருப்பார்கள், அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தயாராகியிருந்திருக்கும். ஆனால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும்போது கவுரவமாக வெளியேற மட்டுமே இந்த வெற்றி உதவும்.
ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறிவிட்டது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து மட்டுமே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
அவர்களும் தங்களின் திறமையை நிரூபித்து வருகிறார்கள். அதில் மிகப்பெரிய ஆறுதல், ஜெகதீஸன், கெய்க்வாட் ஆகியோர் அடுத்த முறை சிஎஸ்கே அணி புதிய வீரர்களைத் தேர்வு செய்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்பதுதான்.
தோனியின் போல்ட் ஸ்வாரஸ்யம்
முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் கேதார் ஜாதவின் மோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி தோற்றது. அந்தப் போட்டியிலும் ஜடேஜா, ஜாதவுடன் களத்தில் இருந்தும் ஏதும் செய்யமுடியாத நிலையில் இருந்தார். ஆனால், அந்த தோல்விக்கு ஜடேஜா நேற்று பழிதீர்த்துவிட்டார்.
ஆனால், இதில் முக்கியமான விஷயம், கொல்கத்தா அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டத்திலும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் சிஎஸ்கே கேப்டன் தோனி க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்துள்ளார். இந்த ஆட்டத்திலும் வருண் சக்ரவர்த்தியின் பந்தை தவறாகக் கணித்து தோனி போல்டாகி வெளியேறினார்.
பரிசோதனை முயற்சி
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் முதல்பேட்டிங் செய்யும் போதே பிரமாண்டமான ஸ்கோரை எடுத்துவிட வேண்டும்.
சேஸிங் செய்வதற்கே மலைப்பான நிலையை உருவாக்க வேண்டும். ஆனால், அதைவிடுத்து இதுபோன்ற ஸ்கோர் நிச்சயம் வெற்றிக்குஉதவாது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கேயின் விக்கெட்டுகளை சீராக வீழ்த்துவதற்கும் பந்துவீச்சாளர்கள் இல்லை.
பேட்டிங்கில் பல முன்னணி வீரர்களின் இன்னும் நிலைத்தன்மையுடன் பேட் செய்யவில்லை. முக்கியமான இந்தக் கட்டத்தில்கூட இன்னும் பேட்டிங் வரிசையை தொடர்ந்து மாற்றி கொல்கத்தா அணி பரிசோதித்து வருகிறது.
கேப்டன்ஷிப் மாற்றம்
கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்து நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது, தினேஷ் கேப்டன்ஷிப் இருக்கும் வரை 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் சிறப்பாகவே இருந்தது.
ஆனால், தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பை மாற்றியதிலிருந்து அந்த அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. இதுபோன்று நடுப்பகுதியில் கேப்டன்ஷிப்பை மாற்றுவது அணியின் வெற்றிப்போக்கை, அணி வீரர்களின் ரிதத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதற்கு கொல்கத்தா அணி உதாரணம்.
பேட்டிங்கில் நிதிஷ் ராணாவைத் தவிர முன்னணி வீரர்கள் மோர்கன், நரைன், கில் என யாரும் சோபிக்கவில்லை. திரிபாதி நன்றாக தொடக்க வரிசையில் விளையாடி வந்தார் அவரை மீண்டும் பின்வரிசையில் இறக்கி அவரை வீணடித்துவிட்டனர்.
ஒட்டுமொத்தத்தில் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மற்ற அணிகளின் கைகளில் இருக்கிறது. அடுத்த ஒரு போட்டியில் கொல்கத்தா அணிக்கு பிரமாண்ட வெற்றி அவசியம் என்பது கட்டாயமாகியுள்ளது.
நல்ல தொடக்கம்
173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. வாட்ஸன், கெய்க்வாட் நல்ல தொடக்கம் அளித்தனர். முதல்விக்ெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்ஸன் 14ரன்னில் வருண் பந்துவீச்சி்ல் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ராயுடு, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார்.
அரைசதம்
இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு நகர்த்தினர். கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் ராயுடு 38 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த தோனி ஒரு ரன்னில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். கெய்க்வாட் தேவையில்லாமல் கம்மின்ஸ் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட்டு 72 ரன்னில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
118 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை மளமள என இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு சாம்கரன், ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். ஆட்டம் பரபரப்பாகச் செல்லவே முடிவு யாருக்கு சாதகமாக அமையும் என்ற நிலை ஏற்பட்டது. கடைசி இரு ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.
ஜடேஜாஅதிரடி
பெர்குஷன் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 20 ரன்களைச் சேர்த்தார். நாகர்கோட்டி வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசிய ஜடேஜா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஜடேஜா 11பந்துகளில் 31 ரன்களுடனும், சாம்கரன்13 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.
கொல்கத்தா மந்தமான பேட்டிங்
முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே அணி சேஸிங் செய்ய முடிவு செய்தது. கில், ராணா ஆட்டத்தைத் தொடங்கினர். ராணா தொடக்கத்திலிருந்தே மெதுவாக ஆட கில் பவுண்டரிகளாக விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் கில் 26 ரன்னில் கரன்சர்மா பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நரேன்(7), ரிங்கு சிங்(11), மோர்கன்(15) என வரிசையாக வெளிேயறினர்.
நிதானமாகத் தொடங்கிய ராணா அதன்பின் அதிரடிக்குத் திரும்பினார். 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். 61 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து(4சிக்ஸர்,10பவுண்டரி) ஆட்டமிழந்தார். திரிபாதி 3 , தினேஷ் கார்த்திக் 21 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் இங்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago