சூர்யகுமார் யாதவின் அற்புதமான பேட்டிங், பூம்பூம் பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்ெகட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ப்ளே ஆப் சுற்று
இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் 1.186 ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்ட மும்பை அணி முதலிடத்தைப் பெறுவது என்பது அடுத்த இரு போட்டிகளில் தெரிந்துவிடும்.
» நீங்கள் ஒரு வேஷதாரி ரவி சாஸ்திரி: நெட்டிசன்கள் பாய்ச்சல்
» ‘அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனிதான் கேப்டன்; ஒரு மோசமான தொடருக்காக அனைத்தையும் மாற்ற வேண்டியதில்லை’
ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இரு அணிகளுக்கும் இரு போட்டிகள் மீதம் இருக்கின்றன. இதில் ஒரு போட்டியில் இரு அணிகளுமே மோதுகின்றன. அதில் நிச்சயம் ஏதாவது ஒரு அணி தோல்வி அடையக்கூடும். அப்போது 16 புள்ளிகளோடு ஏதாவது ஒரு அணி நின்றுவிடும்.
நல்ல ரன்ரேட்
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்துவரும் இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலே ப்ளேஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பிடித்துவிடும். தற்போது டெல்லி, ஆர்சிபி அணியைவிட ரன்ரேட்டில் மும்பை அணி சிறப்பாக இருக்கிறது.
ஒருவேளை மும்பை அணி அடுத்த இருபோட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. ரன்ரேட் சிறப்பாக இருப்பதால், ஆர்சிபி, டெல்லி அணிகள் நல்ல ரன்ரேட் அடிப்படையில் தங்களின் அடுத்துவரும் இரு போட்டிகளில் வென்றால்தான் மும்பை அணியை முந்தி முதலிடத்துக்குச் செல்ல முடியும். ஏதாவது ஒரு வெற்றியோடு இரு அணிகளும் நின்றுவிட்டால், 2-வது இடத்தோடு நின்றுவிடும். ஆக ஒட்டுமொத்தத்தில் பாதுகாப்பான இடத்துக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.
ஆர்சிபிக்குநெருக்கடி
இந்தத் தோல்வியால் ஆர்சிபி அணி 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் உள்ளது. ஆர்சிபி அணி அடுத்து சன்ரைசர்ஸ், டெல்லி அணிகளுடன் மோதவுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கும் வாழ்வா சாவா போட்டி, டெல்லி அணிக்கும் 2-வது இடத்தை நோக்கி நகர முக்கியமான ஆட்டம் என்பதால், இரு போட்டிகளிலும் ஆர்சிபி வெல்ல கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும்.
ஆட்டநாயகன் சூர்யகுமார்
இந்தப் போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு இரு வீரர்கள் மட்டுமே உரித்தானவர்கள். பந்துவீச்சில் பும்ரா,பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ். பேட்டிங்கிற்கு சாதகமான அபு தாபி ஆடுகளத்தில் ஆர்சிபி அணி 164 ரன்களுக்குள் சுருட்டியதற்கு பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சு முக்கியக் காரணம். 4 ஓவர்கள் வீசிய பும்ரா, ஒரு மெய்டன் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை அணியில் மற்ற வீரர்கள் சராசரியாக 10 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் பும்ரா 3.50 ரன்கள் மட்டுேம கொடுத்தார்.
பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் பங்களிப்பைச் சொல்லியே ஆக வேண்டும். 43 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து(3 சிக்ஸர்,10பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஏன் தேர்வு செய்யவில்லை
மும்பை அணி ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பியது. ஆனால், நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்து போட்டி முடிவில் “நான் இருக்கேன் ஏன் வெற்றி பற்றி கவலைப்படுகிறீர்கள்” என்று அணி வீரர்களைப் பார்த்து சைகையில் சூர்யகுமார் யாதவ் கேட்டது சிறப்பு.
இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவின் ஷாட்கள் அனைத்தும் பிரமாதம் ரகம்தான் எனச் சொல்ல வேண்டும். கவர் ட்ரைவ், லாங் ஆன், மிட்ஆஃப், ஸ்வீப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்து ஷாட்களையும் தேர்ந்தெடுத்து சூர்யகுமார் ஆடினார். ஒரு சர்வதேச பேட்ஸ்மேனாக உருவாவதற்கான அனைத்து தகுதிகளும் சூர்யகுமார் யாதவுக்கு இருந்தபோதிலும் தொடர்ந்து பிசிசிஐ ஏன் பாராமுகமாக இருப்பது தெரியவில்லை.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கும் அணிக்கு எதிராகஆடி மும்பை அணியை வெற்றித் தேடிதந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கைப் பார்த்தபின்பும், இந்திய அணியின் தேர்வுக்குழுவில் கேப்டன் கோலிக்கு இருக்கும் ஆதிக்கம், செல்வாக்கு போன்றவற்றால் நிச்சயம் சூர்யகுமார் யாதவை அணிக்குள் கொண்டு செல்ல முடியும். ஆனால், கோலிக்கு தேர்வுக்குழுவில் எந்தவிதமான ஆதிக்கமும் இல்லை, தேர்வுக்குழுவில் அவரின் குரலுக்கு மதிப்பில்லை ஆதலால் யாதவை பரிந்துரைக்க முடியாது என்று யாராவது சொன்னால் அது ஏற்புடையதாக இருக்குமா.
மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கடந்த 3 ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடிக் கொடுத்துள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள், 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 480க்கும் மேற்பட்ட ரன்கள், இந்தத் தொடரலி் இதுவரை 350-க்கும் மேற்பட்ட ரன்களை சூர்யகுமார் யாதவ் சேர்த்துள்ளார்.
ஆனால், பிசிசிஐ தேர்வுக்குழு சூர்யகுமார் யாதவை இந்திய அணிக்கு ஏன் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை. தன்னைத் தேர்வு செய்யாத பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு நெத்தியடியாகவே சூர்யகுமார் யாதவின் ஆட்டம் நேற்று அமைந்திருந்தது.
இந்திய அணிக்கு தகுதியான திறமையான நடுவரிசை ஆட்டக்காரரை, தேர்வு செய்யாமல் பிசிசிஐ வீணடித்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். ஆஸ்திரேலியத் தொடருக்கு சூர்யகுமார் யாதவை தேர்வு செய்யாமல் "தவறவிட்டு, தவறு செய்துவிட்டது பிசிசிஐ"
பும்ரா பந்துவீச்சு
மும்பை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் பும்ரா சிறப்பாக வீசினார், என்றால் மற்ற பந்தவீச்சாளர்கள் பரவாயில்லை ரகத்தில்தான் வீசினர். தொடக்கத்தில் ஆர்சிபி அணியை அடிக்கவிட்ட மும்பை பந்துவீ்ச்சாளர்கள் 15 ஓவர்களுக்கு மேல் இறுக்கிப் பிடித்து ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினர். இதனால் 15 ஓவர்கள் வரை நன்றாகச் சென்ற ஆர்சிபி ரன்ரேட் அதன்பின் ஆமை வேகத்தில் சென்றது, விக்கெட்டுகளையும் இழந்தது.
பேட்டிங்கில் மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியான தொடக்கம் அளி்த்தாலும் நிலைக்கவில்லை. ஒரு கட்டத்தில் மும்பை அணி திடீரென விக்கெட்டுகளை மளமளவென இழக்கத் தொடங்கியது. ஆனால் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா கூட்டணி நின்று அணிக்கு வெற்றித் தேடித்தந்தனர். ஒட்டுமொத்தத்தில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு மும்பை அணி திரும்பியுள்ளது.
ஸ்கோர் போதாது
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை வலிமையான மும்பை அணிக்கு எதிராக ஆடும்போது இதுபோன்ற 164 ரன்கள் ஸ்கோர் எல்லாம் வெற்றிக்கு போதுமானதாக இருக்காது, எந்தவிதத்திலும் எதிரணிக்கு நெருக்கடியைத் தராது. இன்னும் குறைந்தபட்சம் 30 ரன்களாகவது அடித்திருக்க வேண்டும்.
ஆர்சிபி அணியில் தொடக்கவீரர் படிக்கல் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த எந்த பேட்ஸ்மேனும் பயன்படுத்தவில்லை. விராட் கோலி, டிவில்லியர்ஸ், துபே, மோரிஸ் என யாருமே விளையாடவில்லை.
டிவில்லியர்ஸை நம்பிதான் ஆர்சிபி
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விராட் கோலி தனதுமுழுத்திறனையும் வெளிப்படுத்தி விளையாடவில்லை . டிவில்லியர்ஸை நம்பித்தான் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை இருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
டிவில்லியர்ஸ் சிறப்பாக ஆடாத பெரும்பாலான போட்டிகளில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்துள்ளது. 7 போட்டிகளில் கிடைத்த வெற்றிக்கு டிவில்லியர்ஸ் பேட்டிங்கான் பெரும்பாலும் காரணமாக இருந்திருக்கிறது.இதை மறுக்க முடியாது.
அடுத்துவரும் போட்டிகள் ஆர்சிபி அணிக்கு முக்கியம் என்பதால் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவது அவசியம். அதிலும 145 கி.மீ வேகத்தில் வீசிய பும்ராவின் ஷாட்ர் பிட்சை கோலி நேற்று அடிக்க முயன்றது மிகப்பெரிய தவறு. அந்த தவறுக்குத்தான் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
ஆர்சிபி பந்துவீச்சில் ஷைனி இல்லாதது பெரும்பின்னடைவாகும். மோரிஸ் பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுபடவில்லை. ஸ்டெயினை தெ.ஆப்பிரிக்க அணியை ஓரம்கட்டிவிட்ட நிலையில் அவரை ஆர்சிபி அணி விளையாட வைத்தது வேடிக்கையாக இருக்கிறது. மற்றவகையில் சாஹல், சுந்தர் இருவரும்தான் ஆர்சிபி அணியின் தூண்களாக வலம்வருகிறார்கள்
அதிரடித் தொடக்கம்
165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. டீாக், இஷான் கிஷன் அதிரடியாக தொடக்கம் அளித்தனர். ஆனால், சிராஜ் வீசிய 6-வது ஓவரில் டீகாக் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யகுமார், கிஷனுடன் சேர்ந்தார். பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.
இஷான் கிஷானும் நிலைக்கவில்லை. சாஹல் வீசிய 8-வதுஓவரில் இஷான் கிஷன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த, சவுரவ் திவாரி 5, குர்னல் பாண்டியா 10 என விரைவாக ஆட்டமிழக்க, 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது.
5-வது விக்கெட்டுக்கு ஹர்திக், சூர்யகுமார் யாதவ் கூட்டணி அணியை நிதானமாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் சூர்யகுமார் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 29 பந்துகளில்அரைசதம் அடித்தார்.
ஹர்திக், சூர்யா கூட்டணி
சூர்யகுமார் அடித்து ஆட, அவருக்கு துணையாக ஸ்ட்ரைக்கை அளித்து ஹர்திக் ஒத்துழைத்தார். இரு சிக்ஸர்களுடன் 17 ரன்கள் சேர்த்தநிலையில்,ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். 5-வது விக்ெகட்டுக்கு இருவரும் 51 ரன்கள் சேர்த்தனர்.
பொலார்ட், சூர்யகுமார் இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் 79 ரன்னிலும், பொலார்ட் 4 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.1 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
ஆர்சிபி அணித் தரப்பில் சிராஜ், சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வலுவான அடித்தளம்
முன்னதாக டாஸ்வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் ேதர்வு செய்தது. ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச்சுக்கு பதிலாக பிலிப் சேர்க்கப்பட்டிருந்தார். பிலிப், படிக்கல் களமிறங்கி நல்லத் தொடக்கம் அளித்தனர். இருவரும் அதிரடியாக ஆடியதால் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி அணி.
ராகுல் சாஹர் வீசிய 8-வது ஓவரில் பிலிப் 33 ரன்னில் டீகாக்கால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
முதல்விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.அடுத்து வந்த எந்த வீரர்களும் ஒழுங்காக பேட்டிங் செய்யவில்லை.
படிக்கல் அரைசதம்
கோலி(9), டிவில்லியர்ஸ்(15), துபே(2), மோரிஸ்(4) என ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய படிக்கல் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 45 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து(ஒருசி்க்ஸ் 12 பவுண்டரி)பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 15 ஓவர்களில் 130 ரன்கள் என்று வலுவாக ஆர்சிபி அணி இருந்தது.
இதனால், நிச்சயம் ஸ்கோர் 190 ரன்கள் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 131 ரன்னிலிருந்து, 138 ரன்களுக்குள் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்தது பரிதாபமாகும்.
குர்கீரத் 14, சுந்தர் 10 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில்ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. மும்பை அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago