வார்னர், சஹா, ரஷீத் கான் அட்டகாசம்: போட்டியின்றி டெல்லி சரண்; தொடரில் உயிர்ப்புடன் ஹைதராபாத்

By இரா.முத்துக்குமார்

துபாயில் நேற்று நடைபெற்ற ட்ரீம் லெவன் ஐபிஎல் 2020-ன் 47-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்தத் தொடரில் இன்னும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

டாஸ் வென்ற டெல்லியினால் முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்ட சன் ரைசர்ஸ் அணி வார்னர் (66), விருத்திமான் சஹா(87) மூலம் 58 பந்துகளில் 107 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கண்டு பிறகு மணீஷ் பாண்டே 44, கேன் வில்லியம்சன் 11 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒருவர் கூட அரைசதம் எடுக்க முடியாமல் ரஷீத் கான் (3/7) பந்து வீச்சில் சரணடைந்து 131 ரன்களுக்கு சுருணடு படுதோல்வி கண்டது.

இந்தப் போட்டிக்குள் சன் ரைசர்ஸ் நுழையும் போது பிளே ஆஃப் வாய்ப்பு பொட்டு வெளிச்சமாக இருக்கும் நிலையில் நுழைந்தது.

வார்னர், சஹா ருத்ர தாண்டவம்... காட்டடி

சஹாவை ஏன் டி20 கிரிக்கெட்டில் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்ற கேள்வியே எழுந்தது. பிரமாதமாக ஆடுகிறார். ஏன் இத்தனைப் போட்டிகளாக இல்லை. சன் ரைசர்ஸ் ஏதோ இதில் தவறு செய்தது தெரிந்தது.

வார்னரும் அவரும் இணைந்து அதிவேகப் பவுலிங் கூட்டணியான நார்ட்யே, ரபாடாவையே பதம் பார்த்தனர், அஸ்வின், அக்சர் ஒன்றும் செய்ய முடியவில்லை. பவர் ப்ளேயில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 77 ரன்கள் விளாசப்பட்டது. குறிப்பாக சஹா ஆதிக்கம் செலுத்தியதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. வார்னருக்குப் போட்டியாக இவரும் பவுண்டரி மேல் பவுண்டரியாக விளாசித்தள்ள இருவரும் சேர்ந்து 58 பந்துகளில் 107 ரன்கல் என்ற தீப்பொறி தொடக்கம் கொடுத்தனர்.

முதல் 3 ஓவர்களில் 33 ரன்கள் விளாசப்பட்டது. 28 பந்துகளில் 50 ரன்கள் வந்தது. கேகிசோ ரபாடாவை வார்னர் விட்டு வைக்கவில்லைஅவரது பந்து வீச்சில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசி வார்னர் 25 பந்துகளில் அரைசதம் கண்டார். பவர் ப்ளே முடிவில் 77 ரன்களுக்கு விக்கெட் இல்லை. மேலும் இவர்கள் இருவரையும் வீழ்த்த முடியாமல் டெல்லி திணற 52 பந்துகளில் இருவரும் சதக்கூட்டணி அமைத்தனர். ஒருவழியாக 10வது ஓவரில் வார்னரை அஸ்வின் வீழ்த்தினார். லெக் சைடில் ஆட நினைத்தார் வார்னர் ஆனால் பந்து திரும்பியதால் எட்ஜ் ஆகி எக்ஸ்ட்ராகவரில் கேட்ச் ஆகி 8 பவுண்டரி 2 சிக்சருடன் 34 பந்துகளில் 66 ரன்கள் என்று வெளியேறினார்.

வார்னரை வீழ்த்தியது கூட டெல்லிக்கு திருப்பு முனை ஏற்படுத்தவில்லை, காரணம் சஹா வெளுத்துக் கட்டி 27 பந்துகளில் அரைசதம் கண்டார். பவர் ப்ளே முடிந்தவுடன் கூட கள வீயூகம் பரவலாக்கப்பட்ட பின்பும் சஹாவினால் பவுண்டரி அடிக்க முடிந்த்து. மொத்த இன்னிங்ஸில் 3 ஓவர்கள் மட்டுமே பவுண்டரி இல்லாத ஓவராக இருந்தது. 12வது ஓவரில் அக்சர் படேலை ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார் சஹா. ரபாடாவையும் விட்டு வைக்காமல் ஒரு சிக்ஸ் அடித்தார் சஹா. மணீஷ் பாண்டே முதல் 7 பந்துகளில் 11 ரன்களை எடுத்தாலும் பிறகு 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து சஹாவுடன் அரைசதக் கூட்டணி அமைக்க சன் ரைசர்ஸ் 13வது ஓவரிலேயே 150 ரன்களைத் தொட்டது.

சஹா 45 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 87 ரன்கள் விளாசி நார்ட்யே பந்தில் நடையைக் கட்டினார். கேன் வில்லியம்சன் மணீஷ் பாண்டே கூட்டணி 49 ரன்களைச் சேர்க்க ஹைதராபாத் 219/2 என்று முடிந்தது.

ரஷீத் அபாரம்: போட்டியின்றி டெல்லி சரண்!

ஆப்கான் அனுபவ ஐபிஎல் பவுலர், லெக் ஸ்பின்னர் 140-50 ரன்களையே தடுக்கக் கூடியவர், 219 ரன்களை இவரை வைத்து வெற்றி பெற முடியாமல் இருக்க முடியுமா?

ஷிகர் தவண் 4 அரைசதங்களை தொடர்ச்சியாக எடுத்தவர், இதில் அடுத்தடுத்து இரண்டு சதங்களையும் எடுத்தவர். தன் முன்னாள் அணியான சன் ரைசர்ஸை பதம் பார்ப்பார் என்று பார்த்தால் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ஸ்டாய்னிஸை 3ம் நிலையில் இறக்கினாலும் ஹெட்மையரை 4ம் நிலையில் இறக்கினாலும் இருவரையும் முறையே நதீம் மற்றும் ரஷீத் ஸ்பின் விழுங்கியது. ரஹானே 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ரஷீத் கானின் கூக்ளிக்கு இரையானார்.

ரஷீத் கான் தன் 3வது விக்கெட்டை எடுக்கும் போது டெல்லி அணி 13வது ஓவரில் 86/6 என்று அனைத்தும் முடிந்த நிலையில் இருந்தது. அதன் பிறகு ரபாடா, அஸ்வின், நார்ட்யே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க துஷார் தேஷ் பாண்டே 20 ரன்கள் எடுக்க டெல்லி 131 ரன்களுக்கு மடிந்தது. ஷ்ரேயஸ் அய்யர் (7) விக்கெட்டை விஜய் சங்கர் காலி செய்ய, டெல்லியில் அதிக ஸ்கோரான 36 ரன்களை எடுத்த ரிஷப் பந்த் சந்தீப் சர்மாவிடம் காலியானார். ஆனால் ரிஷப் பந்த்திடம் பழைய பளீர் இன்னிங்ஸ் காணாமல் போய்விட்டது. 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, தமிழக வீரர் நடராஜன் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சந்தீப்சர்மா 27 ரன்களுக்க்கு 2 விக்கெட்டுகளையும், விஜய் சங்கர் 11 ரன்களுக்கு பெரிய மீனான ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்