பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதம், சாம்ஸனின் அரை சதம் ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்டநாயகன்
உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்து அணியின் வீரர் என்பதை பென் ஸ்டோக்ஸ் நேற்று நிரூபித்துவிட்டார். வீழ்த்த முடியாத அணி என செருக்குடன் வலம்வந்த மும்பை அணியின் தலையில் தட்டிய ஸ்டோக்ஸ் அந்த அணி வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 60 பந்துகளில் 107 ரன்களுடன் (3 சிக்ஸ்,14 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார்.
அருமையான கூட்டணி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிக அதிகமாக சேஸிங் செய்து வென்ற போட்டி இதுவாகும். 3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்ஸன், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி 82 பந்துகளில் 152 ரன்கள் சேர்த்தது. இருவரும் சேர்ந்து மும்பை அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை விளாசித் தள்ளினர். அதிலும் 13 முதல் 16-வது ஓவர்கள் வரை இருவரும் சேர்த்து 65 ரன்கள் சேர்த்து மும்பை அணியைத் திணறவிட்டனர்.
டிரன்ட் போல்ட், பட்டின்ஸன், பும்ரா, சாஹர் ஆகியோரின் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் நேற்று பறந்தன. ஸ்டோக்ஸ், சாம்ஸனைக் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் பொலார்ட் திணறியதும், அவரின் முகத்தில் அதிர்ச்சி நிரம்பியதையும் காண முடிந்தது.
பரப்பரப்பான கட்டத்தில் ஐபிஎல்
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
வெல்லவே முடியாத அணியாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேற்று இந்தத் தோல்வி பெரும் அடி. மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இப்போதுள்ள சூழலில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையேயும் கடைசி 3 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையேயும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியாத நிலையில்தான் இருக்கின்றன.
ஏனென்றால், கடந்த 3 ஆட்டங்களிலும் முதல் 3 இடங்களில் இருக்கும் மும்பை, டெல்லி, ஆர்சிபி ஆகிய அணிகள் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியாமல் உள்ளன.
அதேசமயம், கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதனால் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 3 இடங்களை எந்த அணி பிடிக்கும், 4-வது இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன. இதில் கொல்கத்தா அணி தற்போது 12 புள்ளிகளுடன் இருப்பதால், அதிகபட்சமாக 3 போட்டிகளில் 6 புள்ளிகள் வரை வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம்.
அதேசமயம், பஞ்சாப் அணி 11 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 3 போட்டிகளில் அதிகபட்சமாக 6 புள்ளிகள் எடுத்தும் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம். இதில் கொல்கத்தா அணியின் அடுத்த இரு வெற்றி அல்லது தோல்விகள் பஞ்சாப் அணியின் நிலையை மாற்றி அமைக்கும்.
வெளியேறியது சிஎஸ்கே
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச ரன் ரேட்டில் பெற்ற அபாரமான வெற்றியால் , ஐபிஎல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. அடுத்துவரும் 2 போட்டிகளையும் சிஎஸ்கே வென்றாலும் அதனால் பயனில்லை. இதனால் முதல் முறையாக சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறியது.
அதிரடிக் கூட்டணி
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் இரு விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் ஆட்டம் வழக்கம் போல் மாறிவிடும். இவர்கள் எப்படி 195 ரன்களை சேஸிங் செய்யப் போகிறார்கள் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது.
ஆனால், 3-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், சாம்ஸன் கூட்டணி நிதானமாகத் தொடங்கி அதன்பின் சாத்து, சாத்து என சாத்தினர். மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்யப் போகிறோம் என்ற உணர்வுடன் இருவரும், அந்த "ரிதம்" குறையாமல் ஆட்டத்தைக் கொண்டு சென்றனர்.
ஸ்டோக்ஸ் ஒரு ஓவரில் அடித்து ஆடினால், அடுத்த ஓவரில் சாம்ஸன் வெளுத்து வாங்கினார். இருவரும் அருமையான கூட்டணி சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு நகர்த்தினர்.
28 பந்துகளில் அரை சதம் அடித்த ஸ்டோக்ஸ், அடுத்த 31 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். கடந்த பல போட்டிகளாக பேட்டிங் ஃபார்மில் இல்லாமல் இருந்து வந்த சாம்ஸன் 28 பந்துகளில் அரை சதம் அடித்து தன்னை மீண்டும் ஃபார்முக்கு கொண்டுவந்துள்ளார்.
மோசமான பந்துவீச்சு
ராஜஸ்தான் அணியில் மிகப்பெரிய குறையாக நேற்று அமைந்தது பந்துவீச்சு மட்டும்தான். கார்த்திக் தியாகி, ராஜ்புத் இருவரும் சேர்ந்து 105 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதிலும் ராஜ்புத் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களும், தியாகி 4 ஓவர்கள் வீசி 45 ரன்களும் கொடுத்தனர். இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 30 முதல் 40 ரன்களை மிச்சப்படுத்தி இருந்தால் ஆட்டம் எப்போதோ முடிந்திருக்கும்.
மற்ற வகையில் வழக்கம் போல் ஆர்ச்சரின் மின்னல் வேகப்பந்துவீச்சில் மாற்றமில்லை. திவேஷியா, ஸ்ரேயாஸ் கோபால் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினார்கள். தியாகி, ராஜ்புத் இருவரின் பந்துவீச்சுதான் மிகப்பெரிய கரும்புள்ளியாக நேற்று அமைந்தது.
மும்பை அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் எங்களை யார் வீழ்த்த முடியும் என்ற செருக்குடன் வலம்வந்தது. அனைத்துக்கும் ஸ்டோக்ஸ் ஆணி அடித்துவிட்டார். ரோஹித் சர்மா இல்லாதது அந்த அணிக்குக் குறையாக இருந்தாலும் அவர் இல்லாத குறையைத் தீர்க்கும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் இருந்தனர்.
மும்பை அணிக்கு எச்சரிக்கை மணி
இருப்பினும் மும்பை அணி 195 ரன்கள் சேர்த்தும், வெற்றியைத் தக்கவைக்க முடியவில்லை என்பது அந்த அணிக்கு எச்சரிக்கை மணிதான். ப்ளே ஆஃப் செல்லும்போது இன்னும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனும் உணர்வை இப்போட்டி ஏற்படுத்தியதால் அடுத்துவரும் போட்டிகளைக் கவனத்துடன் கையாளும். நல்ல ஸ்கோர் செய்தும் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ், சாம்ஸனை மும்பை பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆடுகளம் சேஸிங்கிற்கு சாதகமாக மாறியதால், பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் வேகமாக பேட்ஸ்மேனை நோக்கி வரத் தொடங்கியது, அடித்து ஆடுவதற்கு எளிதாக இருந்தது.
மும்பை அணியின் பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுபடவில்லை. போல்ட், பட்டின்ஸன், பும்ரா, பொலார்ட், குர்னல், சாஹர் என அனைவரும் வீசி ஸ்டோக்ஸ், சாம்ஸனிடம் வாங்கிக் கட்டிக்கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் மும்பை அணியின் பந்துவீச்சுக் கோளாறால் வெற்றியை இழந்தது.
விக்கெட் சரிவு
196 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. உத்தப்பா, ஸ்டோக்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். உத்தப்பா (13) ரன்களில் பட்டின்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஸ்மித் (11) ரன்களில் வெளியேறினார். ஆட்டம் வழக்கம் போல் தோல்வியில் முடியப்போகிறது என்ற எண்ணம் ரசிகர்களுக்குத் தோன்றியது.
அதிரடி ஆட்டம்
3-வது விக்கெட்டுக்கு சாம்ஸன், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பத் தொடங்கினர். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ரன்ரேட்டுக்கு கீழ் குறையாமல் அணியை இருவரும் கொண்டு சென்றனர். 11-வது ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. 15 ஓவரில் 150 ரன்களை ராஜஸ்தான் அணி எட்டியது.
இருவரையும் பிரிக்க மும்பை அணியின் கேப்டன் பொலார்ட் பல்வேறு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் எந்தப் பலனும் இல்லை. நிதானமாகத் தொடங்கிய சாம்ஸனும் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
2-வது சதம்
மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ் 59 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் 2-வது சதத்தை நிறைவு செய்தார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பட்டின்ஸன் வீசிய 19-வது ஓவரில் ஸ்டோக்ஸ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தார்.
பென் ஸ்டோக்ஸ் 107 ரன்களிலும் (60 பந்துகள், 3 சிக்ஸ், 14 பவுண்டரி), சாம்ஸன் 54 ரன்களிலும் (31 பந்துகள், 3 பவுண்டரி, 4 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
18.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
ஆர்ச்சர் வேகம்
முன்னதாக டாஸ்வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. டீகாக், இஷான் கிஷன் ஆட்டத்தைத் தொடங்கினர். டீ காக் (6) ரன்களில் ஆர்ச்சர் வேகத்தில் போல்டாகி வெளியேறினார். கடந்த சில போட்டிகளில் 53, 78, 53, 46 என அடித்த டீகாக் இந்த முறை ஆர்ச்சரின் 149.கி.மீ. வேகப்பந்தைச் சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினார்
சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 83 ரன்கள் சேர்த்தனர். ரன் சேர்க்க முடியாமல், ஷாட்கள் சரியாக மீட் ஆகாமல் திணறிய கிஷன் (37) ரன்களில் கார்த்திக்கின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் சூர்யகுமார் (40) ரன்களில் கோபால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொலார்ட் (6) ரன்களில் கோபால் பந்துவீச்சில் போல்டாகினார்.
ஹர்திக் காட்டடி
5-வது விக்கெட்டுக்கு சவுரவ் திவாரி, ஹர்திக் பாண்டியா கூட்டணி அதிரடியாக ஆடியது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் அரை சதம் அடித்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். திவாரி (34) ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்டியா 60 ரன்களிலும்(7 சிக்ஸ், 2 பவுண்டரி), குர்னல் பாண்டியா 3 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் . கார்த்திக் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார். கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி 79 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் கோபால், ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago