துபாயில் ஞாயிறன்று நடைபெற்ற மதியப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியை 20 ஓவர்களில் 145/5 என்று மட்டுப்படுத்திய தோனி தலைமை சிஎஸ்கே, பிறகு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாடின் ‘ஸ்பார்க்ளிங்’ அரைசதம் (65 நாட் அவுட்) மூலம் 18.4 ஓவர்களில் 150/2 என்று அபார வெற்றி பெற்றது.
இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்றார் தோனி, வாய்ப்பு கொடுத்தால்தானே ஸ்பார்க் இருக்கிறதா இல்லையா என்று தெரியும். இவர் ஏதோ உடம்புக்குள் புகுந்து பார்த்தது போல் ஸ்பார்க் இல்லை என்றார், ஆனால் இன்று தொடக்கத்தில் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுத்துள்ளார்.
51 பந்துகளில் அவர் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, எம்.எஸ். தோனி 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ருதுராஜ் ஸ்பார்க் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத்தந்தது, காரணம் பீல்டிங்கிலும் ஸ்பார்க் காட்டி இரண்டு கேட்ச்களை எடுத்தார்.
டி20 கிரிக்கெட்டில் ஸ்மார்ட் கேப்டன்சி, அணிச்சேர்க்கை, கொஞ்சம் வழக்கத்துக்கு விரோதமான முயற்சிகள், அதைக்களத்தில் திறம்பட பயன்படுத்துதல் திறமைகளை வெளிக்கொணருதல் ஆகியவை முக்கியம். இதைத்தான் தோனி புரோசஸ் புரோசஸ் என்று கதைக்கிறார். ஆனால் புரோசஸ் என்பது அவர் கூறுவது போல் வெற்றி அழுத்தம் இருந்தால் நடக்காது என்பதல்ல, வெற்றியை நோக்கியே புரோசஸ். இல்லையெனில் புரோசஸுக்கு என்ன பயன் இருக்கிறது. அப்படி என்ன புரோசஸ் செய்து சிஎஸ்கே அணியிலிருந்து இந்திய அணிக்கு இளம் வீரர்கள் வந்து விட்டனர்? ஆகவே புரோசஸ், ரிசல்ட் என்பது எதிர்ப்பதங்கள் அல்ல, ஒன்றையொன்று சார்ந்திருக்கும், உடன்வினையாக இருப்பதாகும்.
இந்தப் பிட்ச் முதலில் மகா மட்டமாக விளையாடியது, பந்துகள் வரவேயில்லை. வேகமாக ஓடி வந்து பொய் பவுலிங் போட்டால்தான் இங்கு கட்டுப்படுத்த முடியும், ஆனால் ஆர்சிபியில் மோரிஸ், சைனி இருவருமே வேகம் வீசக்கூடியவர்கள், அதுதான் பிரச்சினை என்றும் கோலி தெரிவித்தார். சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் சாம் கரண் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தக் காரணம் இவர்களது பந்துகள் மட்டைக்கு வரவேயில்லை. பொய் பவுலிங் போல் வந்தது, அதனால் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்ற கிளாஸ் பேட்ஸ்மென்களுக்குக் கூட டைமிங் பெரிய பிரச்சினையாக இருந்தது. சாண்ட்னரும் 4 ஒவர்களில் 23 ரன்கள் என்று இறுக்கினார். பொய் பவுலிங் என்றால் பவுலிங் அல்ல என்று அர்த்தமல்ல, ஒடி வந்து ஓடி வந்து மெதுவாக வீசுவது. அதைத்தான் சிஎஸ்கே செய்தது. ஆர்சிபி செய்யத் தவறியது. இந்தத் தோல்வி மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளது, சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
ஆர்சிபி அணியினால் ஸ்கோர் ரேட்டை எகிறச் செய்ய முடியவில்லை:
முன்னதாக டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இசுரு உதனாவுக்குப் பதில் மொயின் அலியைக் கொண்டு வந்தார். சிஎஸ்கே அணியில் மோனுகுமாரும், மிட்செல் சாண்ட்னரும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏரோன் பின்ச், தீபக் சாஹர் வீசிய முதல் ஒவரிலேயே இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 2வது ஓவரில் மோனுகுமார் சிங்கை இன்னொரு பவுண்டரியும் அடித்தார் பிஞ்ச். தேவ்தத் படிக்கல் 3வது ஓவரில் சிக்ஸ் விளாச சிஎஸ்கே 26/0 என்று நல்ல தொடக்கம் கண்டது.
4வது ஓவர் வந்த சாம் கரண், பிஞ்ச் (15) விக்கெட்டைக் கைப்பற்றினார். பவர் ப்ளேயில் 46/1 என்று வந்த ஆர்சிபி அடுத்த ஓவரில் 2வது விக்கெட்டை இழந்தது. 22 ரன்கள் எடுத்த படிக்கல் லாங் ஆன் பவுண்டரியில் மிக அருமையான டுபிளெசிஸ், ருதுராஜ் ரிலே கேட்சில் வெளியேறினார்.
அப்போதுதான் உலகின் அபாயகரமான இருபெரும் தூண்கள் விராட் கோலி-ஏ.பி.டிவில்லியர்ஸ் ஜோடி களத்தில் இணைந்தனர்.
இருவராலும் எதிர்பார்த்த அளவுக்கு அளிக்க முடியவில்லை காரணம் பந்துகள் வேகமாக வரவில்லை, பிட்ச் ஆகி மந்தமாக வந்தன, சிஎஸ்கே பவுலர்கள் வேண்டுமென்றே மெதுவாகவே வீசினர். அதனால் டிவில்லியர்ஸ் சில பந்துகள் கழித்தே முதல் பவுண்டரியை அடிக்க முடிந்தது, ஆனால் விராட் கோலியினால் நீண்ட நேரத்துக்கு பவுண்டரியே அடிக்க முடியவில்லை என்பதே உண்மை. மொத்தமே 11 பவுண்டரி 2 சிக்சர்கள்தான் ஆர்சிபி இன்னிங்சில் வந்தது. இருவரும் சேர்ந்து 14வது ஓவரில் 50 ரன் கூட்டணியை நிறைவு செய்தனர்.
விராட் கோலி ஒருவழியாக ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து அரைசதம் அடித்தார். இதற்கு அவருக்கு 43 பந்துகள் தேவைப்பட்டது. டிவில்லியர்ஸால் அடிக்க முடியவில்லை, அவர் 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இருவரும் 68 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தனர். தீபக் சாஹரிடம் லாங் ஆனில் கேட்ச் ஆகி டிவில்லியர்ஸ் வெளியேறினார்.
விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் தன் 200வது சிக்சரை அடித்து இந்த சீசனின் 3வது அரைசதம் எடுத்து இவரும் மொயின் அலியும் 19வது ஓவரில் வெளியேறினர். கரண் ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோரிஸை சாஹர் பவுல்டு செய்ய ஆர்சிபி 145/6 என்று ஆனது.
ருதுராஜ் அபார பேட்டிங் சென்னைக்கு கிடைத்த அரிய வெற்றி:
146 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பயணித்த சிஎஸ்கே அணி ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெசி மூலம் பளீர் தொடக்கம் கண்டது. 2வது ஓவரில் டுபிளெசி, கிறிஸ் மோரிஸின் ஒவர் பிட்ச் பந்தை மிக அழகாக லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார். ஒரு பவுண்டரியும் அடித்தார். வாஷிங்டன் சுந்தரின் அடுத்த ஓவரில் கெய்வாட் மிகப்பிரமாதமாக இறங்கி வந்து இன்சைட் அவுட் முறையில் லாங் ஆஃபில் ஒரு டெஸ்ட் கிளாஸ் சிக்ஸ் விளாசினார்.
கடந்த போட்டியில் 2 மெய்டன்கள் வீசி அசத்திய சிராஜ், இம்முறை சாத்து வாங்கினார். ருதுராஜ், டுபிளெசி இணைந்து 2 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்தனர். 5 ஓவர்கள் முடிவில் இருவரும் 46/0 என்று கொண்டு சென்றனர். ஆனால் டுபிளெசி 13 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 25 ரன்களில் சிராஜ் கேட்சுக்கு மோரிஸிடம் வீழ்ந்தார்.
கெய்க்வாடுடன் ராயுடு இணைந்தார், இருவரும் ஸ்கோரை தளர விடாமல் அருமையாகக் கொண்டு சென்றனர், ஆர்சிபி பவுலிங்கில் வெரைட்டி இல்லை, ஸ்லோ பந்துகள் இல்லை. 9 மற்றும் 10வது ஓவரில் ராயுடு 2 பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்தார். கெய்க்வாட் இன்னொரு அற்புத சிக்ஸ் அடிக்க ஸ்கொர் 80 ரன்களைக் கடந்தது. 2 ஒவர்கள் சென்ற பிறகு இருவரும் 50 ரன் கூட்டணியை நிறைவு செய்ய ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. ருதுராஜ் தன் முதல் ஐபிஎல் அரைசதத்தை எடுத்தார், இவரிடம் ஒரு ஸ்பார்க் இருப்பதோடு கிளாஸும் உள்ளது.
ராயுடு 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்து சாஹலிடம் வீழ்ந்தார். தோனி இறங்கி தான் எதிர்கொண்ட முதல் 7 பந்துகளில் 2 பவுண்டரிகள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் சிக்சருடன் மேட்சை வெற்றி பெறச் செய்தார். மோரிஸை மிக அருமையாக லாங் லெக்கில் சிக்ஸ் அடித்தார், காரணம் மோரிஸின் வேகம். சிஎஸ்கே 150/2 என்று வெற்றி பெற்றது. ருதுராஜ் ஆட்ட நாயகன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago