ஜோர்டான், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் பரபரப்பான 43-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்இழப்புக்கு 12 6ரன்கள் சேர்த்தது. 127 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
சோக்கர்ஸ்
ஆங்கிலத்தில் சோக்கர்ஸ்(chokers) என்று சொல்வார்கள். கிரிக்கெட்டில் வெற்றி பெறும் தருணத்தில் சென்று போட்டியை இழப்பவர்களை, கடைசிநேர நெருக்கடியை, பதற்றத்தை எதிர்கொள்ள முடியாத துணிச்சல் இல்லாத வீரர்களை சோக்கர்ஸ் என்று அழைப்பர். தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த புனைப் பெயர் வைக்கப்பட்டிருந்தது.அதுபோல் நேற்று சன்ரைசர்ஸ் அணி செயல்பட்டனர்.
இந்த வெற்றி மூலம் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறி, ப்ளேஆஃப் சுற்றை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதுவரை பஞ்சாப் அணி 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது.
அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் உள்ளது. இன்னும் சன்ரைசர்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறவில்லை, ப்ளே ஆஃப் சுற்றுக்கான ரேஸிலும் வெளியேறவில்லை.
அடுத்துவரும் 3 போட்டிகளையும் வென்றால் சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அடுத்துவரும் 3 போட்டிகளும் டாப்-3 இடங்களில் உள்ள அணிகளுக்கு எதிரானது என்பதால், முடிவுகள் எப்படி வரும் அனைவருக்கும் தெரியும்.
ராகுல் தலைமை அருமை
126 ரன்கள் எனும் குறைவான இலக்கை வைத்துக்கொண்டு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கடைசிவரை போராடியதையும், வீரர்கள் விடாமுயற்சியுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டதையும் பாராட்ட வேண்டும்.
58 ரன்களுக்கு 10 விக்கெட்
சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோ நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். 56 ரன்கள் வரை ஒரு விக்கெட்டையும் இழக்காமல் பயணித்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 58 ரன்களுக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தது பரிதாபமான, மோசமான தோல்வி.
அதிலும் கடைசி 14 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது, கடைசி 13 பந்துகளில் 6 விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது ஆட்டத்தின் போக்கே மாறியது.
விஜய் சங்கர், மணிஷ் பாண்டே களத்தில் இருக்கும்வரை சன்ரைசர்ஸ் வென்றுவிடும் என நம்பிக்கை இருந்தது. மணிஷ் பாண்டே ஆட்டமிழக்கும்போது 100 ரன்களுக்கு 4 விக்கெட் எனும் வலுவான நிலையில்தான் சன்ரைசர்ஸ் அணி இருந்தது. ஆனால், அடுத்த 3 ஓவர்களில் ஆட்டம் மொத்தமும் தலைகீழாக மாறியது.
கடைசி 3 ஓவர்கள்
கடைசி 3 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங், ஜோர்டன் இருவரும் கலக்கினர். அதிலும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜோர்டான் அருமையாகப் பந்துவீசினார். 4 ஓவர்களை வீசிய ஜோர்டான் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மணிஷ்பாண்டே ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தின் திருப்பமுனை. அதன்பின் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. அர்ஷ்தீப் சிங் வீசிய 18 ஓவரில் விஜய்சங்கர்(26) ஆட்டமிழந்தார்.
19-வது ஓவரை ஜோர்டான் வீசினார். ஜோர்டான் வீசிய ஓவரின் 3-வது பந்தில் ஹோல்டரும், 4-வது பந்தில் ரஷித்கானும் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் 2-பந்தில் சந்தீப் சர்மா, 3-வது பந்தில் பிரியம் கர்க், 5-வது பந்தில் கலீல் அகமது ரன்அவுட் என ஆட்டமிழக்க பஞ்சாப் பரபரப்பான வெற்றியைப் பெற்றது.
போராட்டக் குணம்
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் ஒவ்வொரு போட்டியிலும் கடைசிவரை போராடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த போராட்டக் குணம்தான் தோல்விகளால் துவண்ட அந்த அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கிறது.
அந்த அணிக்கு தொடர்ந்து வெற்றிகளை, வெல்ல முடியாத இதுபோன்ற போட்டிகளில்கூட வெற்றியைப் பெற்றுத் தருகிறது.
பஞ்சாப்அணியின் போட்டி என்றாலே நிச்சயம் ஸ்வாரஸ்யமாக ஏதாவது நடக்கும் என்று ரசிகர்களை டிவி முன் அமரவைக்க இந்த போராட்டக் குணம்தான் காரணம்.
126 ரன்களை அடித்துக்கொண்டு எதிரணியைச் சுருட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் அதையும் எங்களால் செய்து காட்ட முடியும், என்ற பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை, கேப்டனின் ராகுலின் ஸ்மார்ட்டான கேப்டன்ஷிப் நம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.
பந்துவீச்சு கலக்கல்
பஞ்சாப் அணியில் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் ஒருவரும் நேற்று சோபிக்கவில்லை. ஆனால், பந்துவீச்சில் அனைத்து வீரர்களும் பட்டையக் கிளப்பிவிட்டனர். அதிலும் முகமது ஷமியின் ஓவரை ராகுல் தொடக்கத்திலேயே வீசச் செய்து முடித்துவி்ட்டார்.
ஆனால், லெக் ஸ்பின்னர்கள் ரவி பிஸ்னோய், தமிழக வீரர் முருகன் அஸ்வின் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை ரன் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்தினர்.
தங்களுக்கான நேரம் எதுவென பஞ்சாப் வீரர்கள் காத்திருந்தனர். மணிஷ் பாண்டே ஆட்டமிழந்த அந்த அருமையான தருணத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வெற்றிப்படிக்கட்டில் ஏறத் தொடங்கினர்.
பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் அளித்த தொடர் நெருக்கடியைத் தாங்க முடியாமல் சன்ரைசர்ஸ் வீழ்ந்தது. மொத்தத்தில் பந்துவீச்சாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
மோசமான பேட்டிங்
சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை மிகக்குறைந்த இலக்கைக் கூட சேஸிங் செய்ய முடியாத அளவுக்கு பேட்டிங் மோசாக இருந்தது. மணிஷ் பாண்டே தனது வழக்கமான அடித்து ஆடும் ஆட்டத்தை கைவிட்டு, விக்கெட்டை நிலைப்படுத்த பந்துகளை வீணடித்தது முதல் தவறு.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைப் போல் இந்த போட்டியிலும் மணிஷ் பாண்டேஆடியிருந்தால் போட்டி 15 ஓவர்களில் முடிந்திருக்கும். ஆனால், தேவையில்லாமல் நிதானமாக பேட் செய்கிறேன் என்று வெற்றியைப் பறிகொடுத்து விட்டனர்.
சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களின் பணிைய 100 சதவீதம் சிறப்பாகச் செய்து 126 ரன்களில் பஞ்சாப் அணியை சுருட்டினர். ஆனால், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
56 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழக்காமல் சென்ற சன்ரைசர்ஸ் அணி அடுத்த 58 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்தபோதே பேட்ஸ்மேன்களின் ஒட்டுமொத்த மெத்தனம் தெரிகிறது.
நடுவரிசையில் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் ஒருவருவரும் இல்லை என்பதை ஒவ்வொரு போட்டியிலும் சன்ரைசர்ஸ் எதிரணிகளுக்கு உணர்த்தி வருகிறது. அடுத்துவரும் 3 போட்டிகளும் சன்ரைசர்ஸ் அணிக்கு கடும் சவாலாக இருக்கும் இதில் தேறுவது கடினம்தான்.
நல்ல தொடக்கம்
127 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வார்னர், பேர்ஸ்டோ கூட்டணி நன்கு அடித்து ஆடி நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்து சன்ரைசர்ஸ் வலுவாக இருந்தது.
பிஸ்னோய் வீசிய 7-வது ஓவரில் வார்னர்(35) ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து அஸ்வின் வீசிய 8-வது ஓவரில் பேர்ஸ்டோ(19)ரன்னில் போல்டாகினார். 3-வது விக்கெட்டுக்கு சமத்(7) ரன்னில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
விக்கெட் சரிவு
4-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே, விஜய் சங்கர் கூட்டணி நிதானமாக அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். பாண்டே(15) ரன்னில் ஜோர்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 100 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணி 4-வது விக்கெட்டை இழந்தது. வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தது.
அதன்பின் சன்ரைசர்ஸ் அணி விக்கெட்டுகளை மளமளவென இழக்கத் தொடங்கியது. நிதானமாக ஆடிய விஜய் சங்கர்(26)அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார்.
இ்ந்த விக்கெட்டுக்குப்பின் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஜோர்டன், அர்ஷ்தீப் சிங் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். கடைசி வரிசையில் வந்த ஹோல்டர்(5),கர்க்(3), ரஷித்கான்(0), சந்திப் சர்மா(0), கலீல் அகமது(0) என வரிசையாக கடைசி 14 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளையும் இழந்து சன்ரைசர்ஸ் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் தரப்பில் ஜோர்டான், அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
முன்னதாக டாஸ்வென்ற டேவிட் வார்னர் சேஸிங் செய்ய முடிவு செய்தார். மயங்க் அகர்வால் இல்லாத நிலையில் மன்தீப் சிங் பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டார். மன்தீப் சிங், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். மன்தீப் சிங்(17) ரன்னில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே சிறப்பாகப் பந்துவீசினர். நடராஜன், சந்தீப் சர்மா, ரஷித்கான், கலீல் அகமது என அனைவருமே கட்டுக்கோப்புடன் பந்துவீசியதால் பஞ்சாப் பேட்ஸ்ேமன்களால் ரன் சேர்ப்பது கடினமாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் ஆடுகளமும் மந்தமாகவும், பந்துகள் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வந்ததால், எதிர்பார்த்த ஷாட்களை பேட்ஸ்மேன்களால் ஆட முடியவி்ல்லை.
அதிரடியாக பேட் செய்யும் ராகுல் 27 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன்போல்டாகி ஆட்டமிழந்தார். கெயில் 20 ரன்னில் ஜோர்டான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த எந்த பேட்ஸ்மேன்களும் குறிப்பிடத்தகுந்த அளவு ரன்களைச் சேர்க்கவில்லை.
மேக்ஸ்வெல்(12), ஹூடா(0), ஜோர்டான்(7), அஸ்வின்(4) ரன்களில் ஆட்டமிழந்தனர். பூரன் 32ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி சேர்த்தது.
சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித் கான், ஹோல்டர், சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago