பந்துவீச்சில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராணா, நரைன் ஆகியோரின் பங்களிப்பு ஆகியவற்றால் அபுதாபியில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 42-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே சேர்த்து 59 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியின் மூலம் புள்ளிப்பட்டியலின் வரிசையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி தனது ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
அதேசமயம், டெல்லி அணி 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் பாதுகாப்பாக இருந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய இன்னும் ஒரு வெற்றி அவசியம்.
ராணா, நரைன் அபாரம்
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய இலக்கை வகுத்துக் கொடுத்த சுனில் நரைன், நிதிஷ் ராணா பேட்டிங்கில் காரணம் என்றால், பந்துவீச்சில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி என்று கூறலாம்.
ராணா கடந்த 6 இன்னிங்ஸில் 9,2,9,5,9,0 என்று ஆட்டமிழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் அனைத்துக்கும் சேர்த்து மொத்தமாகக் கொடுத்துவிட்டார். அதிரடியாக ஆடிய ராணா 53 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து (ஒரு சிக்ஸ்,13 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ராணாவின் மாமனார் நேற்று உயிரிழந்த நிலையில், அவருக்த்கு தான் அடித்த அரை சதத்தை அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.
இந்த சீசனிலேயே அதிகபட்சமாக 17 ரன்கள் சேர்த்திருந்த சுனில் நரைன் தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சினைகளைக் கடந்த 3 போட்டிகளாகச் சந்தித்தார். அனைத்தையும் கடந்த நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் (4 சிக்ஸ், 6 பவுண்டரி) சேர்த்து தனது பங்களிப்பைச் செய்தார். இருவரும் சேர்ந்து நடுவரிசையில் 56 பந்துகளில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்துப் பிரிந்தனர்.
அபுதாபியில் நடந்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி சேர்த்த 2-வது அதிகபட்ச ஸ்கோரான 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களைக் கொல்கத்தா அணி பதிவு செய்தது. இதற்குக் காரணமாக நரைன், ராணா இருந்தனர்.
ஆட்டநாயகன் வருண்
பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம் செய்துவிட்டார். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தனது கட்டுக்கோப்பான சுழற்பந்துவீச்சால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள வருண், டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார். 54 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி, கைவசம் 8 விக்கெட்டுகளை டெல்லி அணி வைத்திருந்தது. டெல்லி அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பு இருந்த நிலையில் ரன் சேர்க்க வேண்டிய பேட்ஸ்மேன்களுக்கான அழுத்தம் காரணமாக, மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
95 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 40 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு முக்கியக் காரணம் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சாகும்.
டெல்லி அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் கொடுத்த நிலையில், வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்திருந்த கொல்கத்தா அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய ஊக்கத்தைத் தரும். கொல்கத்தா அணி காலி என்று நினைத்த நிலையில் மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்துள்ளது
ஸ்ரேயாஸ் அய்யர் செய்த தவறு
டெல்லி அணியைப் பொறுத்தவரை சற்று மெத்தனப்போக்காக விளையாடினார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தொடக்கத்தில் ரபாடா, ஆன்ரிஜ் 3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த நிலையில் அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் அதைப் பயன்படுத்தி நரைன், ராணாவைக் கட்டுக்குள் வைக்கத் தவறினர்.
குறிப்பாக ராணாவும் சுனில் நரைனும் அஸ்வினுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார்கள். அஸ்வின் பந்துவீச்சில் இதுவரை 22 பந்துகளை எதிர்கொண்ட ராணா 53 ரன்களை விளாசியுள்ளார் அவரிடம் ஆட்டமிழந்ததே கிடையாது.
அதே போல் நரைனுக்கு 10 பந்துகள் வீசியுள்ள அஸ்வின் 28 ரன்களை விட்டுக் கொடுத்தார். நரைன் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தியது இல்லை.
இந்த நிலையில் இன்று இவர்கள் கூட்டணி அமைத்தபோது அஸ்வினைப் பந்து வீச அழைத்து ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்சியில் கோட்டை விட்டார். அஸ்வின் பந்துவீச்சை இருவரும் சேர்ந்து நொறுக்கி அள்ளிவிட்டனர்.
பவர் ப்ளே ஓவரின்போதே அஸ்வினைப் பந்துவீச ஸ்ரேயாஸ் அய்யர் அழைத்திருக்க வேண்டும். அஸ்வினைத் தவறாகப் பயன்படுத்தியதே கொல்கத்தா ஸ்கோர் உயர்ந்ததற்கு காரணமாகும்.
டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என்னதான் சிறப்பாகச் செயல்பட்டாலும் ஸ்மார்ட் கேப்டன்ஷிப் என்பது முக்கியம். அந்த ஸ்மார்ட் கேப்டன்ஷிப் பலமுறை அணிக்கு வெற்றியைத் தேடித்துள்ளது. அதற்கு முக்கிய உதாரணம் சிஎஸ்கே கேப்டன் தோனி. ஆனால், ஆராயாமல் கேப்டன்ஷிப் செய்தால் இதுபோன்ற தோல்விதான் கிடைக்கும்.
விக்கெட் சரிவு
195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன்தான் டெல்லி அணி களமிறங்கியது. ரஹானே, தவண் களமிறங்கினர். தன்னைப் பெஞ்சில் அமரவைத்தது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த முறையும் ரஹானே டக்அவுட்டில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 சதங்களை விளாசிய ஷிகர் தவண் இந்த முறை 6 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார்.
3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த் ஜோடி நிதானமாக பேட் செய்தனர். ரிஷப் பந்த் 27 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர் ஒருவர் கூட நிலைத்து பேட் செய்யவில்லை.
வருண் மாயாஜாலம்
வருண் வீசிய 14-வது ஓவரில் ஹெட்மயர் (10), ஸ்ரேயாஸ் (47) ரன்களில் இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். மீண்டும் வருண் 16-வது ஓவரை வீசியபோது, ஸ்டாய்னிஷ் (6), படேல் (9) ரன்களில் ஒரே ஓவரில் வெளியேற டெல்லி அணியின் கதை முடிந்தது.
அதன்பின் ரபாடா(9) ரன்களிலும், தேஷ்பாண்டே (1) ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அஸ்வின் 14 ரன்களிலும் நார்ஜே ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து டெல்லி அணி தோல்வி அடைந்தது.
கொல்கத்தா தரப்பில் வருண் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பிய்த்து உதறிய ராணா, சுனில் நரைன்; அஸ்வின் ஓவர்களிலும் சாத்து; கடைசி 12 ஓவர்களில் 150 ரன்கள் விளாசிய கொல்கத்தா: 194/6
அபுதாபியில் இன்று நடைபெற்ற மதியப் போட்டியான, ஐபிஎல் 2020-ன் 42-வது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.
பெரிய மைதானம் என்பதால் டெல்லி அணி இந்த இலக்கை விரட்டி வெற்றிபெறக் கடின முயற்சி தேவை.
8 ஓவர்களில் 44/3 என்று தடுமாறி வந்த கொல்கத்தா அணி கடைசி 12 ஓவர்களில் 150 ரன்களை விளாசித் தள்ளியது. இதில் சுனில் நரைன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 64 ரன்களையும், மிகப் பிரமாதமாக ஆடிய இடது கை வீரர் நிதிஷ் ராணா 13 பவுண்டரிகள் ஒரு அற்புதமான லாரா ஸ்டைல் சிக்ஸருடன் 53 பந்துகளில் 81 ரன்கள் எடுக்கவும், இருவரும் சேர்ந்து 56 பந்துகளில் 4வது விக்கெட்டுக்கு 115 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியதும் டெல்லிக்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
நிதிஷ் ராணா 38 பந்துகளில் 56 ரன்கள் வருவதற்குள் சுனில் நரைன் 30 பந்துகளில் 60 ரன்கள் என்று 200% ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.
முன்னதாக ஷுப்மன் கில் 9 ரன்களில் நார்ட்யே வேகத்துக்கு வெளியேற, திரிபாதி 148 கி.மீ. வேக நார்ட்யே யார்க்கருக்கு போல்டு ஆக, தினேஷ் கார்த்திக்கை ஒழிப்பது என்று கொல்கத்தா முடிவு கட்டிவிட்டது.
பின்னால் இறங்கி நன்றாக ஆடி வந்தவரை முன்னால் இறக்கி அவரது பேட்டிங்கைக் காலி செய்ய முடிவு கட்டி விட்டார்கள், கார்த்திக் ரபாடா வேகத்துக்கு பந்திடம் எட்ஜ் ஆகி 3 ரன்களுக்கு வெளியேற 7.2 ஓவர்களில் 42/3 என்று ஆனது கொல்கத்தா அணி.
நரைன், ராணா அதிரடி, அஸ்வின் சிக்கினார்
ராணாவும் சுனில் நரைனும் அஸ்வினுக்கு எதிராக முன்னதாக நல்ல ஸ்கோரை அடித்துள்ளனர். 22 பந்துகள் இதுவரை அஸ்வினை ஆடிய ராணா 53 ரன்களை விளாசியுள்ளார். அவரிடம் ஆட்டமிழந்ததில்லை. அதேபோல் நரைனுக்கு 10 பந்துகள் வீசியுள்ள அஸ்வின் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார், வீழ்த்தவில்லை.
இந்த நிலையில் இன்று இவர்கள் கூட்டணி அமைத்தபோது அஸ்வினைப் பந்து வீச அழைத்து ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்சியில் கோட்டை விட்டார்.
9-வது ஓவரில் அஸ்வினைக் கொண்டு வந்தார்
நரைன் லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ். பிறகு தேர்ட்மேனில் பவுண்டரி என்று அஸ்வினின் முதல் ஓவரில் 13 ரன்கள். அடுத்த துஷார் தேஷ்பாண்டே ஓவரில் நிதிஷ் ராணா ஸ்கொயர் லெக் மேல் லாரா பாணியில் ஒரு சிக்ஸ் அடித்தார். நரைன் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க 18 ரன்கள் வந்தது இந்த ஓவரில்.
அஸ்வினைக் கட் செய்து ஸ்டாய்னிஸ் வந்தார். 2 பவுண்டரிகளை ராணா விளாச இந்த ஓவரில் 11 ரன்கள். மீண்டும் முனையை மாற்றி அஸ்வினைக் கொண்டு வர ராணா அலட்சியமாக ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி விளாசினார்.
சிங்கிள் எடுத்து நரைனிடம் கொடுக்க ஷார்ட் பிட்ச் வீசிய அஸ்வினை மீண்டும் லாங் ஆன் மீது ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார். மீண்டும் ராணா மிகப்பிரமாதமாக இன்சைடு அவுட் ஷாட்டில் எக்ஸ்ட்ரா கவரில் அஸ்வினை பவுண்டரி அடித்தார்.
இந்த ஓவரில் 17 ரன்கள் வர 2 ஓவரில் 30 ரன்களை விட்டுக் கொடுத்தார், ஆனால் அஸ்வின் ஏன் லெக்ஸ்பின், கூக்ளி வீசினார் என்பதுதான் புரியாத புதிர். இடது கை பேட்ஸ்மென்களுக்கு ஆஃப் ஸ்பின் வீசுவதுதானே சரி. ராணா 35 பந்துகளில் அரை சதம் கண்டார்.
நார்ட்யே இடையில் ஒரு ஒவரில் 8 ரன்களை விட்டுக் கொடுத்தார், ஆனால் அடுத்த ஸ்டாய்னிஸ் ஓவரில் நரைன், ஒரு சிக்ஸ், பவுண்டரி அடிக்க ராணா ஒரு பவுண்டரி அடித்தார். 16 ரன்கள் 14-ம் ஓவர் முடிவில் கேகேஆர் 127/3 என்று இருந்தனர்.
15-வது ஓவரில் மீண்டும் அஸ்வின் வர நரைன் சும்மா இருப்பாரா பளார் என்று பவுண்டரி விளாசினார். பிறகு ஒரு 2 ரன், மீண்டும் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ் அடித்தார் நரைன். அந்த ஓவரில் 15 ரன்கள் வர அஸ்வின் 3 ஒவர் 45 ரன்கள் கொடுத்து சொதப்பினார். 24 பந்துகளில் அந்த ஓவரில் நரைன் அரைசதம் கண்டார்.
கடைசியில் ரபாடாவிடம் 32 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ராணா 20வது ஓவரில் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். மோர்கன் 9 பந்துகளில் ரபாடாவை ஒரு அற்புதமான சிக்ஸ் மற்றும் பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேகேஆர் 194/6 என்று நல்ல ஸ்கோரை எட்டியது.
டெல்லி தரப்பில் நார்ட்யே 27 ரன்களுக்கு 2 விக்கெட், ரபாடா 33 ரன்களுக்கு 2 விக்கெட், ஸ்டாய்னிஸ் 41 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago