நன்றாக ஆடாத போது நூறு காரணங்கள் இருக்கும், வரும் 3 போட்டிகள் அடுத்த ஐபிஎல் தொடருக்கான தயாரிப்பு: வேதனையில் தோனி 

By இரா.முத்துக்குமார்

ஐபிஎல் 2020-ல் முதல் அணியாக சிஎஸ்கே நேற்று வெளியேறியது, படுமோசமான பேட்டிங், ஒன்றுமேயில்லாத பவுலிங்கை மும்பை இந்தியன்ஸ் துவம்சம் செய்தது.

11 போட்டிகளில் 8வது தோல்வியைச் சந்தித்து வெளியேறியதை அடுத்து தோனியையும் சிஎஸ்கேவையும் கடும் கிண்டல் செய்து வீடியோக்களும் மீம்களும் சமூக ஊடகங்களில் வளையவரத் தொடங்கி விட்டன.

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறிவிட்டு, வாய்ப்பே கொடுக்காமல் திடீரென உலகின் தலைசிறந்த வீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட், பும்ராவுக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் போன்றோரை இறக்கலாமா? இப்படித்தான் முன்பு இந்திய அணியில் செய்வார்கள். டி.இ.ஸ்ரீநிவாசன் என்ற பிரமாதமான வீரருக்கு நியூசிலாந்தின் பயங்கர ஸ்விங் நிலைமைகளில் ரிச்சர்ட் ஹேட்லி என்ற மேதைக்கு எதிராக அறிமுகப் போட்டியை கொடுத்தார்கள். டபிள்யு.வி.ராமன், பிரவீண் ஆம்ரே உள்ளிட்ட நல்ல திறமைகளுக்கெல்லாம் கடினமான அறிமுகத் தொடர்தான். எல்லோரும் சச்சின் டெண்டுல்கர் ஆகிவிட முடியுமா?

அதே போல்தான் திருமலை அனந்தன்பிள்ளை சேகர் என்ற டி.ஏ.சேகர் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு ஆடிய ஒரு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர், நல்ல எதிர்காலம் இருக்கும் என்று பல வல்லுநர்களும் பாராட்டிய டி.ஏ.சேகருக்குப் பாகிஸ்தானின் மட்டைப் பிட்ச்களில் அறிமுகம் கொடுத்தனர். ஜனவரி 23, 1983-ல் லாகூரில் அறிமுகமான இவரது கிரிக்கெட் கரியர் அதே தொடரில் பிப்.4ம் தேதி கராச்சி டெஸ்ட்டுடன் முடிவுக்கு வந்தது. 80களின் தொடக்கத்தில் இந்தியாவில் அதிக வேகம் வீசக்கூடிய பவுலர் என்றால் அது டி.ஏ.சேகர்தான். பயங்கரமாக வீசினார், ஆனால் அதிர்ஷ்டம் இல்லை. அதைவிடக் கொடுமை அதன் பிறகு அவருக்கு வாய்ப்பே வழங்கவில்லை என்ற கொடுமைதான். இப்படி.. இப்படி ஆயிரம் கதைகள் இந்திய கிரிக்கெட் எனும் நோட்டுப்புத்தகத்தின் மார்ஜினில் எழுதாமல் இருக்கின்றன. இப்படித்தான் இளைஞர்களுக்கு ஒரு சவுகரியமான தொடக்கம் கொடுத்து கடினங்களை மெதுவாக எதிர்கொள்ள அவர்களை பழக்க வேண்டும். ஆனால் தோனி செய்ததோ மாற்றுமுறை.

தோல்விக்குப் பிறகு இன்று தோனி ‘காயப்படுத்துகிறது’ என்று வேதனையுடன் தெரிவித்தால் என்ன செய்வது? அவர்தான் காரணம்.

தோனி கூறியதாவது:

ஆம்! உண்மையில் இது காயப்படுத்துகிறது. என்னெல்லாம் தவறாகிப் போனது என்பதைப் பார்க்க வேண்டி உள்ளது. இந்த ஆண்டு எங்கள் ஆண்டு அல்ல. ஒன்றிரண்டு போட்டிகளில் அனைத்தையும் சரியாகச் செய்தோம் அவ்வளவே.

கடைசியில் தோல்வி தோல்விதான் 8 விக்கெட்டுகளில் தோற்றால் என்ன 10 விக்கெட்டுகளில் தோற்றால் என்ன? (தோல்வி பெரிதல்ல எப்படித் தோற்கிறோம், போராட்டம் இல்லாமல் சரணடைவதா என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்களே அவர்களுக்குப் பதில்)

இந்தத் தொடரில் எங்கு இருக்கிறோம்? நிச்சயம் இது வேதனைதான், அனைத்து வீரர்களுமே தோல்வியினால் மனமுடைந்திருப்பார்கள். வீரர்கள் அவர்களால் முடிந்த முயற்சிகளைச் செய்தனர். எப்போதும் எல்லாம் நமக்குச் சாதகமாகவே அமையாது. அடுத்த 3 ஆட்டங்களில் நாங்கள் எங்களது கடைசி ஆட்டங்களைக் காட்ட முயற்சி செய்வோம்.

எங்கு தவறு செய்தோம் என்பதைப் பார்க்க வேண்டும், 2வது போட்டியில் (ராஜஸ்தானுக்கு எதிராக) பவுலிங் கைவிட்டது. அதன் பிறகு பேட்டிங் சரியாக அமையவில்லை, ராயுடு காயமடைந்தார். வாய்ப்பு கிடைத்த மற்றவீரர்கள் 200% பங்களிப்பு செய்யவில்லை. அல்லது அவர்களால் ஆட முடியவில்லை. எப்போதெல்லாம் நல்ல தொடக்கம் இல்லையோ அப்போதெல்லாம் பேட்டிங் ஆர்டர் தொடர்ந்து நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. மிடில் ஆர்டருக்கு மேன் மேலும் கடினமே.

கடினமான கட்டத்தில் அணி இருக்கும் போது, நமக்குச் சாதகமான விஷயங்கள் நடக்க கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். இந்தத்தொடரில் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லை.

எந்தப் போட்டியிலெல்லாம் முதலில் பேட் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அங்கெல்லாம் டாஸில் தோற்றோம். இலக்கை விரட்டும் போது பிட்ச் ஒன்று ஸ்லோ ஆகி விடுகிறது. அல்லது பனிப்பொழிவு இருக்கிறது. சரி முதலில் பேட் செய்தோம் என்றால் உடனேஎங்கிருந்துதான் பனிப்பொழிவு வருமோ! இவற்றையெல்லாம் ஆராய்ந்து வீரர்கள் சிறப்பாக ஆட நாம் என்ன வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது.

எப்போதெல்லாம் சரியாக ஆடவில்லையோ நூறு காரணங்கள் இருக்கும். அதுவும் உட்கார்ந்து யோசித்தால் காரணங்கள் மட்டுமே தெரியும். ஆனால் ஒரு கேள்வி என்னவெனில் என்ன மாதிரியான சூழல், பிட்ச் இருக்கட்டும், நம் திறமைக்கேற்ப ஆற்றல்களுக்கு ஏற்ப ஆடினோமா என்பதுதான் கேள்வி. காகிதத்தில் நல்ல அணியாக உள்ளது, ஆனால் காகிதத்தில் உள்ள புள்ளிவிவரங்களை களத்தில் காண்கிறோமா? இல்லை. 3-4 பேட்ஸ்மென்கள் சரியாக ஆடாவிட்டால் என்ன செய்ய முடியும்?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தெளிவான சித்திரம் ஒன்று வேண்டும். ஆனால் நிறைய கேள்விகளும் ஐயங்களும் உள்ளன. அடுத்த ஏலத்தை எதிர்நோக்குகிறோம். எங்கு ஆடப்போகிறோம் என்பது போன்ற விஷயங்கள் இருக்கின்றன.

வரும் போட்டிகளில் இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வாய்ப்புகளை வழங்கி அவர்களுக்கான நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும். எனவே வரும் 3 போட்டிகளை ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கிறேன். இதனை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டுக்கான தயாரிப்பாக இருக்கும்.

இவ்வாறு பெரிய உரையே ஆற்றிவிட்டார் தோனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்