வெளியேறியது சிஎஸ்கே: முதல் போட்டியில் தோற்றதற்கு மும்பை இப்படியா பழிதீர்ப்பது! : முதல்முறையாக ப்ளே ஆஃப் செல்லாமல் திரும்பும் தோனி படை

By க.போத்திராஜ்

கடந்த சில போட்டிகளுக்கு முன் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருந்தார், “ சிஎஸ்கே எனும் கப்பலில் பல ஓட்டைகள் இருக்கின்றன. ஒன்றை அடைப்பதற்குள் அடுத்த ஓட்டை உருவாகிறது” என தெரிவித்திருந்தார்.

உண்மைதான், அந்த ஓட்டைகளை, சிஎஸ்கே கேப்டன் தோனியால்கூட அடைக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளார், சிஎஸ்கே கப்பலும் மூழ்குகிறது. சிஎஸ்கே வெளியேற்றத்தினால் ஒரே நன்மை என்னவெனில் ஹர்பஜன், இம்ரான் தாஹிர் பஞ்ச் டயலாக் ’தமிழ்’ ட்வீட்களிலிருந்து தப்பித்ததை தவிர வேறொன்றும் இல்லை.

டிரன்ட் போல்ட், பும்ரா ஆகியோரின் துல்லியமான வேகப்பந்துவீச்சு, ராகுல் சாஹரின் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்படியா பழிதீர்ப்பது

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது. 115 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆகச்சிறந்த வெற்்றியைப் பெற்றது.

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியதற்கு, நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை இப்படியா மும்பை அணி தோற்கடிப்பது... இந்த கொடுமையைப் பார்க்க வேண்டாம் என்றுதான் ரோஹித் சர்மா நேற்று விளையாடவில்லையோ என்னவோ?

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன், சிறந்த ரன் ரேட்டுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. மும்பை 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் உள்ளது.

அதேசமயம், சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 3 வெற்றி 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் மோசமான ரன்ரேட்டில் இருக்கிறது. அடுத்துவரும் 3 போட்டிகளையும் நல்ல ரன்ரேட்டில் வென்றாலும் சிஎஸ்கே அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது என்பதால், ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறுகிறது.

முதல்முறையாக

3 முறை சாம்பியன் 6 முறை 2-வது இடம் ஒருமுறை 4-வது இடம் என சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் இருந்ததே இல்லை. ஆனால், முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் சிஎஸ்கே பரிதாபமாக வெளியேறுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி முதல் முறையாக ஓர் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

ஆட்டநாயகன்

சிஎஸ்கே அணியின் சரிவுக்கு காரணமாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து 4 வி்க்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

போல்ட்டுக்கு துணையாக இருந்த பும்ரா துல்லியமான பந்துவீச்சால் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த 3 பந்துவீச்சாளர்களுமே சிஎஸ்கே அணியின் முதுகெலும்பை உடைக்க காரணமாக அமைந்தனர்.

மானம் காத்த கரன்

அதிலும் சிஎஸ்கே அணியின் சாம்கரன்(52) மட்டும் போராட்டக் குணத்துடன் ரன் சேர்க்காமல் இருந்திருந்தால் சிஎஸ்கேயின் நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும். ஏற்கெனவே சிஎஸ்கேயின் மானத்தைக் காப்பாற்றிய ஆபத்பாந்தவர் சாம்கரன்.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை இந்த தொடர் தொடங்கியதிலிருந்து பல்வேறு குழப்பங்கள், வீரர்கள் சரியாக அமையாதது, பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாதது, புதிய வீரர்கள் இல்லாதது போன்ற பிரச்சினைகளுடன் தொடங்கி, தோல்விகளுடனே வெளியேறுகிறது.

சிஎஸ்கே அணிக்கும், ஆர்வத்துடன் சிஎஸ்கேயின் ஆட்டத்தையும், தோனியின் வருகையையும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கும் இந்த தொடர் நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் தரும்.

வல்லவனுக்கு தோல்வியும் தேவை

சிஎஸ்கே என்பது வல்லவன் அணி. வல்லவனுக்கு தன்நிலைபற்றி அறிந்து கொள்ள சில தோல்விகளும் அவசியம். அதுபோலத்தான் இந்த முறை சிஎஸ்கே அணிக்கு இந்த தொடர் அமைந்திருக்கிறது என வைத்துக்கொள்ளலாம். வடிவேலுவின் ஒரு ஜோக்கில் வருவது போல், ‘வல்லவன் ஒருவன் நான்தாண்டா’ என்று இந்தத் தொடரில் பயிற்சி இல்லாமலும் ‘ஓவர் கான்பிடன்ஸ்’ என்ற செருக்குடனும் களமிறங்கியதன் பலனை சிஎஸ்கே அனுபவித்தது. இது என்ன 30 நாளில் இந்தி போல 5 நாள் பயிற்சியில் கிரிக்கெட்டா?

ஆனால், அடுத்த தொடரில் சிஎஸ்கே இப்போது இருக்கும் நிலையைவிட இன்னும் வேகமாக, துடிப்புடன் களம் காணும் என நம்புவோம். எப்போதெல்லாம் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு ஏற்படுகிறதோ, அதன்பின் அதிகமான வேகத்தில், உற்சாகத்தில் தோனி தலைமையில் மேலே எழும்பும், அதுபோல் அடுத்த தொடரும் இருக்கட்டும்.

ஷார்ஜா மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரி. இதில் நேற்று சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் வரிசையாக வி்க்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறியது ஏன் எனத் தெரியவில்லை. தொடர் தோல்விகளால் வீரர்கள் மத்தியில் ஒருவித மனச்சோர்வு அடைந்துவிட்டதையே காட்டுகிறது.

ஜெகதீஸன், கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு போதாது

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி சொன்னது உண்மையாகிவிட்டது என்று கெய்க்வாட், ஜெகதீஸன் வெளியேறியதை வைத்து கூறு முடியாது. இருவருக்குமே இது 2-வது வாய்ப்புதான். அதிலும் அந்த வாய்ப்புகளையும் தொடர்ச்சியாக வழங்கவில்லை.

பல போட்டிகளுக்குப்பின்புதான் இந்த வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது. அதிலும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியான சூழலில் அணிக்குள் இருவரையும் கொண்டுவந்து சர்வதேச அளவில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களான டிரன்ட் போல்ட், பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ளச் செய்வது நியாயமல்ல.

கேதார் ஜாதவிடமே "ஸ்பார்க்" இருக்கும்போது, நிச்சயம் இரு வீரர்களிடம் இல்லாமலா போயிருக்கும்.

போராட்ட குணம் தேவை

சிஎஸ்கே அணியின் லோகோவில் சிங்கத்தின் வரைபடத்தைப் வைத்துக் கொண்டு சாம் கரனைத் தவிர ஒரு வீரர் கூட போராட்டக் குணத்துடன் களத்தில் இல்லாதது வேதனை.

கடைசிவரை, கடைசிப்பந்து வரை போராட வேண்டும் என்பதற்கு சாம் கரன் சிறந்த உதாரணம். சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த மூத்த வீரர்களுக்கே பாடம் எடுக்கும் வகையில் சாம் கரன் விளையாடினார்.
சிஎஸ்கே அணி கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது. அதுவும் இம்ரான் தாஹிரை வைத்துக்கொண்டு சாம் கரன் போராடி இந்த ரன்களைச் சேர்த்தார்

. ஐபிஎல் வரலாற்றிலேயே 9-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அஸ்வின், தோனி ஜோடி 41 ரன்கள் சேர்த்ததே 9-வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக இருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ஒட்டுமொத்தமாக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் அனைத்திலும் மந்தமாக, உற்சாகமின்றி, மனச்சோர்வுடன் செயல்பட்டு சிஎஸ்கே அணி பெற்ற தோல்வியை விமர்சிப்பது என்பது உயிற்ற பாம்பை அடிப்பது போன்றதாகும்.

அடுத்து வரும் 3 போட்டிகளிலும் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கலாம்.

ஏன் தோனி கூட அடுத்துவரும் 3 போட்டிகளில் ஒதுங்கிக்கொண்டு ஜெகதீஸனுக்கு கீப்பிங் செய்ய வாய்ப்பு அளிக்கலாம், கேப்டன் பொறுப்பை டூப்பிளஸியிடம் கொடுத்து அவர் செய்யும் விதத்தை பார்க்கலாம், தோனி சாதாரண வீரராக தொடக்க வீரராக களமிறங்கி மிரட்டலாம். இதுபோல் பல பரிசோதனைகளை அடுத்த 3 போட்டிகளில் செய்து பார்க்கலாம்.

அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி "டாடிஸ் ஆர்மியாக" இல்லாமல் இளம் வீரர்களுடன், உற்சாக எண்ணங்கள், போராட்ட குணம் நிரம்பிய துடிப்பான வீரர்களுடன், புதுரத்தம் பாய்ச்சப்பட்ட தெம்புடன் களத்துக்கு வர வேண்டும். இதைத்தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

புதுகேப்டன், இளம் வீரர்கள், என புதுப்பொலிவுடன் சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு களமிறங்க வேண்டும்.

அபாரமான பந்துவீச்சு

மும்பை அணியைப் பொறுத்தவரை கிளினிக்கல் ஃபெர்பார்மென்ஸ் என்று சொல்வார்களே அதுபோல் இருந்தது. சிஎஸ்கே அணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கியதுபோல் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு வீரரின் பலவீனத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதிலும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பொலார்ட் தனது அணுபவத்தை கேப்டன்ஷிப்பில் வெளிப்படுத்தினார். பும்ரா, போல்ட், ராகுல் சாஹர் மூவரும் சேர்ந்து சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையும் சிதைத்துவிட்டனர்.

பேட்டிங்கில் இஷான் கிஷன், டீகாக் இருவருமே சேர்ந்து மற்ற வீரர்களுக்கு வேலையில்லை தாங்களே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது, நடப்பு சாம்பியன் என்பதை மும்பை இந்தியன்ஸ் அணி நிரூபித்துவிட்டது.

அதிரடி பேட்டிங்

115 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் டீகாக், இஷான் கிஷன் களமிறங்கினர். சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்காத ஆடுகளம், இவர்கள் இருவருக்கும் எவ்வாறு ஒத்துழைத்தது எனத் தெரியவில்லை.

சிஎஸ்கே பந்துவீச்சை இஷான் கிஷன் நொறுக்கி அள்ளினார். ஏற்கெனவே சிஎஸ்கே வீரர்கள் நொந்துபோயுள்ளனர், அவர்களிடம் சிறிதுகூட ஈவு இரக்கம் பார்க்காமல், சிக்ஸர், பவுண்டரி அடித்து இஷான்கிஷன் இரக்கமின்றி பேட் செய்தார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை மும்பை அணி சேர்த்தது.

அதிரடியாக பேட் செய்த இஷான் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் 68 ரன்களுடன் (37பந்துகள்,5சிக்ஸர்,6பவுண்டரி), டீ காக் 44 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 12.2ஓவர்களில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

போல்ட், பும்ரா வேகம்

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொலார்ட் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கெய்க்வாட், டூப்பிளசிஸ் களமிறங்கினர். ஸ்விங் பந்துவச்சில் மிரட்டிய போல்டின் முதல் ஓவரின் 5-வது பந்தில் கெய்க்வாட் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

அடுத்துவந்த ராயுடு 2 ரன்னில் பும்ராவின் பவுன்ஸரில் டீக்காகிடம் கேட்ச் கொடுத்து வி்க்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஜெகதீஸன் வந்தவேகத்தில் பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப்பில் யாதவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

போல்ட் வீசிய 3-வது ஓவரில் டூப்பிளிசிஸ் ஒரு ரன்னில் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க சிஎஸ்கே அணியின் முதுகெலும்பே முறிந்ததுவிட்டது.

விக்கெட் சரிவு

3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 50 ரன்களைத் தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. தோனி, ஜடேஜா ஜோடி நிலைத்து ஆடத்தொடங்கினர். ஆனால், மீண்டும் போல்ட் பந்துவீச வந்து ஜடேஜா(7) விக்கெட்டைச் சாய்த்தார். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே அணி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ராகுல் சாஹர் வீசிய 7-வது ஓவரில் அதிரடியாக சிக்ஸர் அடித்த தோனி(16), அடுத்த பந்தில் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். தீபக் சாஹல் டக்அவுட்டில் ராகுல் சாஹர்பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் சாம் கரன் மட்டும் தனது போராட்டக் குணத்தை கைவிடாமல் கிடைக்கும் பந்துகளில் பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்து அணிக்கு நம்பி்க்கையளித்தார். தாக்கூர்(11) ரன்னில் வெளியேறினார்.

ஆறுதல் ஜோடி

9-வது விக்கெட்டுக்கு வந்த இம்ரான் தாஹிரை வைத்துக்கொண்டு, ஸ்ட்ரைக்கை மாற்றி கடைசி 5 ஓவர்களில் 43 ரன்களை சாம்கரன் சேர்்த்தார். பொறுமையாக ஆடிய சாம்கரன் 46 பந்துகளில் அரைசதம் அடித்து, 52 ரன்னில் போல்ட் பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார். தாஹிர் 13 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது

மும்பை அணித் தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்