‘ரேஸுக்குள் வந்த சன்ரைசர்ஸ்’: பாண்டே, தமிழக வீரர் விஜய் சங்கர் பிரமாதம்: 2-வதுமுறையாக தவறு செய்து வெற்றியை பறிகொடுத்த ஸ்மித்

By க.போத்திராஜ்


மணிஷ் பாண்டே, தமிழக வீரர் விஜய் சங்கரின் ஆகியோரின் அபாரமான அரைசதங்கள், ஹோல்டர், ரஷித் கானின் நெருக்கடி பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களி்ல் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் இருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் ராயலஸ் அணி 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் ரன்ரேட் மோசமடைந்ததால் 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த வெற்றி நிச்சயம் ஊக்கத்தைத் தரும். மணிஷ்பாண்டே, விஜய் சங்கரின் ஆட்டத்தால் ப்ளேஆப் சுற்றுக்கான ரேஸில் வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணி தக்கவைத்துள்ளது. இந்த சீஸனில் சேஸிங் செய்யும் முயற்சியில் 5 முறை சன்ரைசர்ஸ் அணி ஈடுபட்டு அதில் முதல்முறையாக வென்றுள்ளது.

மீட்ட ஜோடி

சன்ரைசர்ஸ் அணியின் இரு தூண்களாக விளங்கும் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின் சன்ரைசர்ஸ் கதை முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கும் விதத்தில் மணிஷ் பாண்டே, விஜய் சங்கர் கூட்டணி களத்தில் நங்கூரமிட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இருவரின் பேட்டிங்கும் ஆகச்சிறந்ததாக அமைந்தது. 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 146 ரன்கள் சேர்த்தனர்.

47 பந்துகளில் 83 ரன்கள்(8சிக்ஸர், 4பவுண்டரி)சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணிஷ் பாண்டே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மணிஷ் பாண்டே தொடக்கத்தில் சற்று திணறினாலும் அதன்பின் ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

நானும் சளைத்தவன் இல்லை

மணிஷ் பாண்டேவுக்கு சிறிது சளைத்தவர் இல்லை என்பதுபோல் விஜய் சிங்கரின்(52) பேட்டிங்கும், பந்துவீச்சும் நேற்று நேர்த்தியாக இருந்தது. 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஆர்ச்சரின் பந்துவீச்சை தொடுவதற்கு பல சர்வதேச பேட்ஸ்மேன்கள் அஞ்சும் போது, விஜய் சங்கர் அனாயாசமாக ஹாட்ரிக் பவுண்டரி அடித்து தன்னை நிரூபித்துவிட்டார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற விஜய் சங்கர் இதுவரை பேட்டிங்கிலும் சரியாக செயல்படவில்லை என்ற வருத்தம் இருந்த நிலையில் அதை நேற்று சரி செய்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். பந்துவீச்சிலும் விஜய் சங்கர் நேற்று 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டார். விஜய் சங்கருக்கும் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் நேற்று மிகவும் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டனர். தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியும், ரன்களை அதிகமாக விட்டுக்கொடுக்காமல் ராஜஸ்தான் அணிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர்.

ஹோல்டரின் அனுபவம்
வில்லியம்ஸனுக்கு பதிலாக மே.இ.தீவுகள் வீரர் ஜேஸன் ஹோல்டர் கொண்டுவரப்பட்டது நல்ல தேர்வாக அமைந்தது. ஹோல்டரை சில ஆட்டங்களுக்கு முன்பே வார்னர் கொண்டு வந்திருந்தால், நிச்சயம் பல வெற்றிகளை சன்ரைசர்ஸ் கோட்டைவிட்டிருக்காது.

தனது அனுபவத்தால் அருமையாக பந்துவீசிய ஹோல்டர் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வழக்கம் போல் ரஷித் கான் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

அடித்து ஆடக்கூடிய ஸ்டோக்ஸ், சாம்ஸன், பட்லர் அனைவரையும் அடக்கி ஸ்கோரையும் கட்டுப்படுத்தியது சன்சைர்ஸ் அணி. கடைசி 11 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியைச் சேர்க்கவிட்டது கட்டுக்குள் வைத்தது சன்ரைசர்ஸ்.

ஸ்மித்தின் 2-வது தவறு

துபாயில் இந்த சீசனில் நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளில் மிகக்குறைவாக சேர்க்கப்பட்ட ஸ்கோர் நேற்று ராஜஸ்தான் அணி சேர்த்ததாகும். ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு இந்த ஸ்கோர் போதுமானது கிடையாது, இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால், ஆட்டம் திசை மாறியிருக்கலாம்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் கேப்டன்ஷிப்பில் 2-வது முறையாக தவறு செய்துள்ளார். கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19-வது ஓவரை உனத்கத்தை வீசச் செய்து டிவில்லியர்ஸ் நொறுக்கி அள்ளினார். ஆர்ச்சருக்கு ஒரு ஓவர் மிச்சம் இருந்த நிலையில் அவரை 19-வது ஓவரை வீசச் செய்யாமல் உனத்கத்தை வீசச் செய்தார் ஸ்மித். இதனால் ஆர்சிபி வெற்றி பெற முடியாத சூழலில் இருந்தபோது, ஸ்மித்தின் தவறான முடிவால் ஆர்சிபிக்கு வெற்றி தாரைவார்க்கப்பட்டது.

அதேபோல இந்த ஆட்டத்தில் சர்வதேச பேட்ஸ்மேன்கள் வார்னர், பேர்ஸ்டோ இருவருமே ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டனர். மீதமுள்ள இரு ஓவர்களையும் தொடர்ந்து ஆர்ச்சரை வீசச் செய்து, மணிஷ் பாண்டே, விஜய் சங்கர் விக்கெட்டை கழற்றியிருந்தால், ஆட்டம் முடிந்திருக்கும்.

ஏனென்றால் நடுவரிசையில் ஆடுவதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லை. ஹோல்டர் இருந்தாலும், ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஆடுகிறார் என்பதால், நிச்சயம் சுழற்பந்துவீச்சால் விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாம். ஆர்ச்சர் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை 2-வது முறையாக ஸ்மித் கோட்டைவிட்டுள்ளார்.

ஆர்ச்சர்-வார்னர்

டி20 போட்டிகளில் வார்னர் இதுவரை 6 போட்டிகளில் 5 முறை வீழ்த்தியுள்ளார் ஆர்ச்சர். ஆர்ச்சரின் பந்துவீச்சில்41 பந்துகளைச் சந்தித்த வார்னர் 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

வார்னர் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிவைத்து டெஸ்ட் கிரிக்கெட் போல் இரு ஸ்லிப்பை நிற்கவைத்து வார்னருக்கு படம்காட்டினார் ஆர்ச்சர். 3 பந்துகள் பீட்டன் ஆன நிலையில் ஒருபந்து பவுண்டரி, 5-வது பந்தில் தூண்டிலில் சிக்கிய மீன்போல் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வார்னர் வெளியேறினார்.

இங்கிலாந்து அணியில் வலைப்பயிற்சியில் பலமுறை ஆர்ச்சரின் பந்துவீச்சை பேர்ஸ்டோ ஆடியிருப்பார். ஆனால், பேர்ஸ்டோவே நேற்று ஆர்ச்சரின் 149 கி.மீ வேகத்தில் வந்த பந்தை ஆடமுடியவி்ல்லை. பேர்ஸ்டோவின் பேட்டுக்கும், கால்காப்புக்கும் இடையே சென்று போல்டாகியது ஆர்ச்சரின் பந்துவீச்சுக்கு அழகான உதாரணம்.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங்கிலும் ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டோக்ஸ், ஸ்மித், பட்னர், சாம்ஸன் , உத்தப்பா என இருந்தும் ஒருவர்கூட நிலைத்து விளையாடவில்லை என்பதால், ஸ்கோரும் உயரவில்லை. இதில் யாராவது ஒருவர் நின்று நிலைத்து பேட் செய்திருந்தால், ஸ்கோர் சற்று அதிகமாகி இருக்கும்.

பந்துவீச்சிலும் ஆர்ச்சர், திவேஷியாவைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளர்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் பந்துவீசவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தபின், அடுத்து ஒருவிக்கெட்டை கூட வீழ்த்த முடியாத நிலையில்தான் பந்துவீச்சு அமைந்திருந்தது, அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம்.

ஏறக்குறைய ராஜஸ்தான் அணியின் ப்ளே-ஆஃப் சுற்றுக் கனவு முடியும் தருவாயில் வந்துவிட்டதாகவே நினைக்கலாம். அடுத்துவரும் 3 போட்டிகளில் வெற்றி, நல்ல ரன்ரேட் ஆகியவை அமைந்தால் வாய்ப்புள்ளது.

நம்பிக்கை கூட்டணி

155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வார்னர்(4), பேர்ஸ்டோ(10) ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு மணிஷ்பாண்டே, விஜய் சங்கர் சேர்ந்து அணியை நிதானமாக வழிநடத்தினர்.

ஒருபுறம் விஜய் சங்கர் நிதானமாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய, மறுமுனையில் மணிஷ் பாண்டே கிடைத்த பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 58ர ன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணி. அதிரடியாக ஆடிய மணிஷ் பாண்டே 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆர்ச்சரின் பந்துவீச்சை அடிக்க முடியாத பாண்டே, மற்ற பந்துவீச்சாளர்களின் பந்தை நொறுக்கிஎடுத்தார். 13 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை எட்டியது. ஆர்ச்சரின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார் விஜய் சங்கர். இருவரும் விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

18.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு156 ரன்கள் சேர்த்து வெற்றி பெறறது. பாண்டே 83 ரன்னிலும், விஜய் சங்கர் 52 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பொறுமையில்லை
முன்னதாக டாஸ் வென்ற வார்னர் சேஸிங் செய்தார். ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. உத்தப்பா, ஸ்டோக்ஸ் களமிறங்கினர். நன்றாக விளையாடிய உத்தப்பா(19)ரன்னில் ஹோல்டலார் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த சாம்ஸன், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். சாம்ஸன்(36) ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் போல்டாகினார்.

சாம்ஸன் இன்னும் களத்தில் பொறுமையாக விளையாடாமல் அனைத்துப் பந்துகளையும் அடிக்க முற்படுவதே விக்கெட்டை விரைவாக இழக்கக் காரணமாகிறது. 2-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 56 ரன்கள் சேர்த்தனர்.

விக்கெட் சரிவு
அதன்பின், விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத்தொடங்கின. ஸ்டோக்ஸ்(30) ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் போல்டாகினார். அதைத் தொடர்ந்து வந்த பட்லர்(9) ரன்னில்விஜய் சங்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஸ்மித்(10) ரியான் பராக்(20) என விரைவாக வெளியேறினர். திவேஷியா 3, ஆர்ச்சர் 16 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154ரன்கள் சேர்த்தது.

சன்ரைசர்ஸ் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்