தோனியின் தவறான 5 முடிவுகள்: தடம் மாறிய சிஎஸ்கே அணி 

By க.போத்திராஜ்

ஐபிஎல் 13-வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன் ரேட்டும் மைனஸ் 0.463 என்று மோசமாக இருக்கிறது.

மூன்று முறை சாம்பியன், 6 முறை 2-வது இடம், ஒரு முறை 4-வது இடம் என ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் ஒருமுறைகூட ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறியது இல்லை. ஆனால், இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமலே "யெல்லோ ஆர்மி" வெளியேறி விடுமா என்ற கவலை ரசிகர்கள் மனதில் உருவாகியுள்ளது.

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது, பலமான பேட்டிங் வரிசை இல்லை, தொடர்ந்து ஒரே மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது, பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றம் எனப் பல்வேறு குறைகள் சொல்லப்பட்டாலும், கேப்டன் தோனி எடுத்த சில முக்கிய முடிவுகள் அணியின் திடீர் பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதில் முக்கியமான 5 காரணங்கள் உள்ளன.

தோனி பின்வரிசையில் களமிறங்கியது

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டங்களில் தோனி பின்வரிசையில் 7-வது வீரராகக் களமிறங்கியது தவறான முடிவாக அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால், தோனி எனும் வீரர் சிறந்த மேட்ச் ஃபினிஷராக அறியப்பட்டவர்.

அப்படிப் பெயர் பெற்ற தோனி 7-வது வரிசையில் களமிறங்கும்போது பெரும்பாலும் அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது தோனி களத்துக்கு வந்து செட்டில் ஆகவே சிறிது நேரம் ஆகும். அப்போது, ஆட்டத்தை சரியாக முடிக்க முடியாத சூழல், நெருக்கடி ஏற்பட்டு தோல்வியில் ஆட்டம் முடிந்து விடுகிறது. முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் கூட நிலைமை கைமீறிச் சென்றபின்புதான் சிஎஸ்கே வென்றது.

அதுமட்டுமல்லாமல் தோனி களத்தில் இருந்தாலே தோல்விக்கு இடமில்லை என்று அந்த அணியின் ரசிகர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் வகையில் கடைசி நேரத்தில் தோனி களமிறங்கி பந்துகளை வீணடித்தல், ஷாட் சரியாக மீட் ஆகாதது போன்ற காரணங்களால் சிஎஸ்கே அணி விரும்பத்தகாத தோல்வியைச் சந்திக்க வேண்டியுள்ளது.

கேதார் ஜாதவுக்கு அணியில் இடம்

இந்த ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைகிறதோ இல்லையோ கேதார் ஜாதவுக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமையும். மோசமான பேட்டிங் ஃபார்ம், தேவையான நேரத்தில் விளையாடாமல் பந்துகளை வீணடித்து ரசிகர்களைப் பதற்றத்தில் வைப்பது என தோல்விக்குக் காரணமாகவே ஜாதவ் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

கேதார் ஜாதவை அணியிலிருந்து நீக்கக் கோரி பல முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளர்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் வலியுறுத்தியும் தோனி மறுத்துவிட்டார்.

கேதார் ஜாதவுக்கு அளித்த வாய்ப்புகளை அணியில் உள்ள இளம் வீரர்கள் கெய்க்வாட், ஜெகதீஸன் போன்றவர்களுக்கு இருக்கலாம். அதையும் வழங்கவில்லை. அதிலும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேதார் ஜாதவின் ஆட்டம் அனைவரின் பொறுமையையும் உரசிப் பார்த்தது. 12 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே சேர்த்த ஜாதவ், ஸ்ட்ரைக்கை ஜடேஜாவிடமும் மாற்றாமல் தோல்விக்குக் காரணமானார்.

கேதார் ஜாதவுக்கு ஆதரவாக ஏன் தோனி செயல்படுகிறார், திறமையான இளம் வீரர்கள் அணியில் இருக்கும்போது ஏன் அவர்களைச் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஜெகதீஸனுக்கு வாய்ப்பு மறுப்பு

தமிழக வீரர் ஜெகதீஸனுக்கு ஒரு போட்டியில் விளையாட தோனி வாய்ப்புக் கொடுத்தாலும் அதை சரியாகப் பயன்படுத்தினார். 28 பந்துகளில் 33 ரன்களை ஜெகதீஸன் சேர்த்து கேதார் ஜாதவைவிட சிறந்த வீரர் என்பதையும் நிரூபித்தார். ஆனால், அந்த ஒரு போட்டியோடு சரி அதன்பின் ஜெகதீஸனுக்கு தோனி வாய்ப்பு வழங்கவில்லை.

இந்திய அணியில் பல இளைஞர்களைக் கொண்டு வந்து உருவாக்கி விட்ட வீரர் என்ற பெருமையைக் கொண்டவர் தோனி. ஆனால், சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் , இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறியது பெரும் அதிருப்தியாகப் பார்க்கப்படுகிறது.

பெஞ்சில் அமரவைக்கப்பட்ட இம்ரான் தாஹிர்

கடந்த 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் தொப்பி வாங்கியவர் இம்ரான் தாஹிர். ஆனால், கடந்த 10 போட்டிகளாக இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு வழங்காமல் தோனி அவரை பெஞ்சிலேயே அமரவைத்து வருவது ஏன் எனத் தெரியவில்லை. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் கூட பியூஷ் சாவ்லா, கரன் சர்மாவுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை இம்ரான் தாஹிருக்கு வழங்கவில்லை.

4 வெளிநாட்டு வீரர்கள்தான் இடம்பெற முடியும் என்ற கட்டாயம் இருப்பதை காரணமாகக் கூறினாலும், அணியில் உள்ள 4 வீரர்களுமே எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாடவில்லை. ஒரு போட்டியில் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு வழங்கி சோதித்து இருக்கலாம்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சு நன்றாக ஒத்துழைத்த நேரத்தில் கூட இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது

ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று வீரர்கள் இல்லை

ரெய்னா, ஹர்பஜன் ஆகிய இரு மிகப்பெரிய வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவுதான். ஆனால், ரெய்னா விளையாடிய பேட்டிங் வரிசையில் 3-வது இடம் மிகவும் முக்கியமான இடம். ரெய்னா இல்லாத வெற்றிடத்தை இதுவரை எந்த வீரராலும் நிரப்ப முடியவில்லை.

ஆனால், ரெய்னா சென்றபின் அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்யாமல் இருக்கின்ற வீரர்களை வைத்தே அணியை நடத்த முயல்வது இருக்கின்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியையும், அழுத்தத்தையும் அதிகப்படுத்தும்.

இதேபோலத்தான் ஹர்பஜன் சிங் இல்லாத சூழலில் அவருக்குப் பதிலாக கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர், அல்லது பேட்ஸ்மேனையாவது சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்திருக்கலாம். ஆனால், இரு வீரர்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு மாற்றாக எந்த வீரரையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தேர்வு செய்யாததே பெரும் பின்னடைவாகும்.

இந்த 5 தவறான, குழப்பமான முடிவுகளும் சிஎஸ்கே அணியின் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

6 days ago

மேலும்