சபாஷ் பஞ்சாப்: பூரன், ஷமி அசத்தல்; தோல்விக்குப் பின் மீண்டெழுந்த ராகுல் தலைமை ‘ஹாட்ரிக் வெற்றி’; பலமான டெல்லியைச் சாய்த்தது: தவணின் வரலாற்றுச் சதம் வீண்

By க.போத்திராஜ்

பூரன், கெயிலின் அதிரடி ஆட்டம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஹாட்ரிக் வெற்றி

வெற்றிக்கு அருகே வரை சென்று தொடர் தோல்விகளைச் சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஹாட்ரிக் வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணியின் கடந்த 3 வெற்றிகளும் புள்ளிப்பட்டியலில் இருக்கும் டாப்-3 அணிகளுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதியில் மோசமான தோல்விகளைப் பெற்று 2-வது பாதியில் மீண்டெழுவது சிறப்பு. இதன் மூலம் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி,6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டெல்லி அணி 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இதுநாள்வரை ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையை ஷிகர் தவண் செய்தார். சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த தவண், தொடர்ந்து 2-வது சதத்தை இந்தப் போட்டியிலும் நிறைவு செய்தார்.

தவண் வரலாற்றுச் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர், தொடர்ந்து இரு போட்டிகளில் சதம் அடிப்பது வரலாற்றுச் சாதனையாகும். ஷிகர் தவண் 61 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து (12 பவுண்டரி, 3 சிக்ஸ்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சபாஷ் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை மிகச்சிறந்த சபாஷ் தெரிவிக்கலாம். ஏற்கெனவே நடந்த முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வெல்லும் தறுவாயில் ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவர் சென்றது.

அதில் டெல்லி அணி வென்றது. ஆனால், அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் ஜோர்டான் 2-வது ரன்னை சரியாக ஓடவில்லை என்று நடுவர் தெரிவித்ததால்தான் ஆட்டம் டிரா ஆனது. ஆனால் டி ரீப்ளேயில் ஜோர்டன் சரியாகத்தான் கிரீஸில் பேட்டை வைத்து ஓடியது தெரிந்தது.

இந்தப் போட்டியிலும் பஞ்சாப் வெற்றி பெற வேண்டியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தோற்றது. ஆனால், அனைத்துக்கும் சேர்த்து நேற்று பதிலடி கொடுத்தது.

மற்ற அணிகளில் இல்லாத சிறப்பு கிங்ஸ் லெவன் அணியிடம் இருப்பது என்னவென்றால், அனைத்துப் போட்டிகளிலும் கடைசிவரை, கடைசிப்பந்து வரை போரிடும் குணம் பார்வையாளர்களை அமர்ந்து போட்டியை பார்க்க வைக்கிறது. இந்தப் போராட்டக் குணம் 3 முறை சாம்பியன் பெற்ற அணியிடம் கூட இல்லை.

கெயில் வருகை

அதுமட்டுமல்லாமல் 2-வது பாதியில் கெயில் அணிக்குள் திரும்பியதிலிருந்து அணியில் புதுரத்தம் பாய்ச்சியது போன்றும், மிகப்பெரிய பலம் இருப்பதாகவும் அணியினர் நம்புகிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் முதல் பாதியில் மோசமான தொடர் தோல்விகளைச் சந்தித்த ஓர் அணி மீண்டு எழுந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருவது மிகவும் அரிதானது. அதை பஞ்சாப் அணி நிகழ்த்தி வருகிறது.

இளம்வீரர்கள் பிஸ்னோய், முருகன் அஸ்வின் இருவரும் சிறப்பாகப் பந்துவீசுகின்றனர். இதுதவிர ஷமியின் யார்க்கர், துல்லியம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு எதிரணிகளுக்கு அவரின் 4 ஓவர்களும் சவால்.
இந்த ஆட்டத்திலும் பஞ்சாப் வீரர்களின் கட்டுக்கோப்பான பந்தவீச்சால் கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி 47 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆட்டநாயகன் ஷமி?

அதிலும் ஷமி 18, 20-வது ஓவர்களில் யார்க்கர், மேல் யார்க்கர் வீசி டெல்லி பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டு ஹெட்மயர், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகளையும் சாய்த்தார். சிறப்பாகப் பந்துவீசிய ஷமி 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். உண்மையில் ஷமிக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்.

பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ராகுல் இருவரும் விரைவாக ஆட்டமிழந்தபின் பஞ்சாப் அணி நிலைகுலைந்துவிடுமோ என அஞ்சப்பட்டது. ஐபிஎல் தொடரில் கலக்கிவரும் இருவரும் நேற்று நிலைத்திருந்தால் ஆட்டம் இன்னும் வேறுவிதமாக மாறியிருக்கும்.

ஆனால், கெயில் புயல் துஷார்பாண்டேவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து ரன் ரேட்டை 10க்கு உயர்த்தி பதற்றத்தைக் குறைத்தார்.

ப்ளே ஆஃப்பில் பஞ்சாப்?

அடுத்துவந்த பூரன் - மேக்ஸ்வெல் ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. அதிலும் பூரன் அருமையான இன்னிங்ஸை நேற்று விளையாடினார். அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது அவரின் நிதானமான ஆட்டம் தேர்ந்த பேட்ஸ்மேன் போல் நேர்த்தியாக அமைந்தது.

ஒட்டுமொத்தத்தில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நாங்களும் இருக்கிறோம் என்று சவால்விட்டு நாற்காலியில் அமர்ந்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பேட்டிங் சொதப்பல்

டெல்லி அணியைப் பொறுத்தவரை 164 ரன்கள் என்பது கிங்ஸ் லெவன் அணியை வெற்றிகொள்ளப் போதுமான ஸ்கோர் அல்ல. இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

ஷிகர் தவண் மட்டும்தான் நேற்று பேட் செய்தார், மற்ற பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஸ்டாய்னிஷ், ஹெட்மயர் ஆகிய 5 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 59 பந்துகளில் 54 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். டி20 போட்டியில் வலிமையான டெல்லி அணியில் பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்ம்.

வள்ளல் பாண்டே

அதிலும் துஷார்பாண்டேவின் அனுபவமற்ற பந்துவீச்சு டெல்லி அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். பஞ்சாப் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்களில் 25 சதவீதம் ரன்களை துஷார்பாண்டே வெறும் 2 ஓவர்களில் கொடுத்துள்ளார்.

துஷாப் பாண்டேவுக்கு நடுப்பகுதியில் ஓவர் அளித்ததற்குப் பதிலாக ரபாடாவுக்கு கொடுத்திருந்தால், மேக்ஸ்வெல், பூரன் ஜோடியைப் பிரித்திருப்பார். ஆனால், பாண்டேவுக்குக் கொடுத்தால், அவரின் ஓவரை பூரன் பிரித்து எடுத்துவிட்டார். ஒட்டுமொத்தத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் வந்த தோல்வியாகும்.

விக்கெட் சரிவு

165 ரன்கள் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அகர்வால், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். ராகுல் 15 ரன்களில் அக்ஸர் படேல் ஓவரில் ஆட்டமிழந்தார், அகர்வால் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். கெயில் 13 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார். 10 முறை அஸ்வின் பந்துவீச்சை ஐபிஎல் தொடரில் சந்தித்த கெயில் 4-வது முறையாக ஆட்டமிழந்தார். 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது.

ஆனால், துஷார்பாண்டே ஓவரில் கெயில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்ததால் ரன் ரேட் 10க்குக் குறையாமல் இருந்தது. பவர் ப்ளேயில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி.
இதைப் பயன்படுத்தி 4-வது விக்கெட்டுக்கு பூரன், மேக்ஸ்வெல் ஜோடி நங்கூரமிட்டனர்.

மீட்ட ஜோடி

பூரன் அதிரடியைக் கையில் எடுத்தவுடன் மேக்ஸ்வெல் நிதானம் காட்டினார். டெல்லி அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாஸ பூரன் விளாசித் தள்ளி 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது.

ரபாடா வீசிய 13-வது ஓவரில் பூரன் 53 ரன்கள் (28 பந்துகள் 3 சிக்ஸ், 6 பவுண்டரி) சேர்த்த நிலையில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரபாடா வீசிய 16-வது ஓவரில் மேக்ஸ்வெல் 32 ரன்களில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

வின்னிங்ஷாட் சிக்ஸர்

கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. ஹூடா, நீஷம் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். நீஷம் அதிரடியாக வின்னிங் ஷாட் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

ஹூடா 15 ரன்களிலும், நீஷம் 10 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

டெல்லி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தவண் மட்டுமே பேட்டிங்

முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது. பிரித்வி ஷா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். பிரித்வி ஷா இந்த முறையும் சொதப்பினார். கடந்த 3 ஆட்டங்களில் 0,4,0 என்ற மோசமாக ஆடிய நிலையில் இந்த முறையும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ஸ்ரேயாஸ் அய்யர்(14), ரிஷப் பந்த்(14), ஸ்டாய்னிஷ்(9), ஹெட்மயர் (10) என ஒருவரும் நிலைக்கவில்லை. விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தவண் சளைக்காமல் தனது அதிரடியால் ரன்களைக் குவித்தார். 28 பந்துகளில் அரை சதம் அடித்த தவண் 57 பந்துகளில் சதம் அடித்தார். டி20 தொடரில் தொடர்ச்சியாக 2-வது சதத்தை நிறைவு செய்தார். ஷிகர் தவண் 106 ரன்களுடன் (12 பவுண்டரி, 3 சிக்ஸ்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. பஞ்சாப் தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்