பட்லரின் அதிரடி ஆட்டம், ஆர்ச்சரின் மின்னல் வேகப்பந்துவீச்சு, கோபால், திவேஷியாவின் திணறவைக்கும் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வென்றது.
ஆட்டநாயகன் ஜோஸ்
» ஐபிஎல் 2020: டெல்லி கேபிடல்ஸ் அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக கர்நாடக லெக் ஸ்பின்னர் சேர்ப்பு
ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, சிறிதுகூட அசராமல் தனது ஸ்டைலிஷான பேட்டிங்காலும், அதிரடியாலும் பட்லர் பேட் செய்து, உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்தார். இதில் டூப்பிளசிஸுக்கும், சாம் கரனுக்கும் அருமையான கேட்ச்சுகளையும் பட்லர் பிடித்து அசத்தினார். 70 ரன்களுடன் (48 பந்துகள் 7 பவுண்டரி, 2 சிக்ஸ்) ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் ஆட்டநாயகன் விருது வெற்றார்.
இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு இருப்பதால் அதிகபட்சமாக 14 புள்ளிகளுக்கு மேல் பெற முடியாது.
நிலைமை மோசம்
ஆனால், ராஜஸ்தானைவிட மோசமான நிலைமை சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று முறை சாம்பியன், 6 முறை 2-வது இடம், ஒருமுறை 4-வது இடம் என சூப்பர் லீக் சுற்றுக்குள் செல்லாமல் ஒருமுறைகூட ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறியது இல்லை.
ஆனால், 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத துக்க ஆண்டாகவே அமையலாம். சிஎஸ்கேவின் நிலைமையை நினைத்து அதன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனைப்படுவதையும், வெட்கப்படுவதையும், கோபப்படுவதையும் காண முடிகிறது.
இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் 4 ஆட்டங்களையும் சிஎஸ்கே வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் சிஎஸ்கேவையும் பாதிக்கும் என்பதால், சிஎஸ்கேவின் சூப்பர் லீக் சுற்று ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.
ஆறுதல்
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக இருப்பது, தோனி ஐபிஎல் போட்டியில் 200-வது ஆட்டத்தை ஆடியதும், சிஎஸ்கே அணிக்காக 4 ஆயிரம் ரன்கள் சேர்த்ததுமாகும். மற்றவகையில் ஆறுதல் பட்டுக்கொள்ள எந்த விஷயமும் சிஎஸ்கேவிடம் இல்லை.
இந்த ஐபிஎல் தொடரில் முதலில் பேட் செய்து மிகவும் மோசமான, குறைந்த ஸ்கோரை எடுத்த “பெருமையை” சிஎஸ்கே அணி நேற்று பெற்றது. சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை வெற்றி பெற வேண்டும் என்கிற உள்ளுணர்வே இல்லாமல் கேப்டன் முதல் அனைவரும் விளையாடினர் என்றுதான் செல்ல வேண்டும். ஒருவேளை தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம் எனத் தெரிந்துவிட்டதால் விளையாடினார்களா எனத் தெரியவி்ல்லை.
51 டாட் பந்துகள்
பேட்டிங்கில் படுமந்தமாகச் செயல்பட்டு 51 டாட் பந்துகளை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விட்டனர். டி20 போட்டியில் 51 டாட் பந்துகளை ஓர் அணி அடிக்காமல் விட்டால் என்ன ஸ்கோர் செய்துவிட முடியும். கடைசி 15 ஓவர்களில் வெறும் 6 பவுண்டரிகள் மட்டுமே சிஎஸ்கே அணி அடித்தால், டி20 போட்டி விளையாடுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?
வீரர்களின் வயது, உடல் தகுதி, மனநிலை, உள்ளுணர்வு, தன்னம்பிக்கை அனைத்தும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருக்குத் தேவை. பல வீரர்கள் 40 வயதாகியும் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டும் கிரிக்கெட் விளையாட முடியாது. உடலை வேண்டுமானால் தகுதியாக வைக்கலாம். கிரிக்கெட் விளையாடுவதற்கென களத்தகுதி, மனத்தகுதி அவை இல்லாமல் விளையாடி பலன் இல்லை.
தோல்வி சகஜம்
விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்புதான். ஆனால், போராடித் தோற்றால் அதில் வெற்றியாளருக்கு ஈடான பெருமை தோற்ற அணிக்கும் இருக்கும். கிங்ஸ் லெவன் அணி பல போட்டிகளில் தோற்றாலும் அந்த அணி விளையாடும்போது போட்டியைப் பார்க்க வேண்டும் எனும் ஆர்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. காரணம், வெற்றி பெற வேண்டும் எனும் வெறி, ஆர்வம், உள்ளுணர்வு, போராட்டக் குணம் அனைத்து வீரர்களிடமும் இருக்கிறது. கடைசி வரை போராடுகிறார்கள்.
ஆனால், சிஎஸ்கே அணியின் போட்டியை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் அவர்களே வெறுக்கும் வகையில் ஆட்டம் அமைந்துவிட்டது. “என்னா தல..ஜெயிக்கிற போட்டியகூட தோக்கவெச்சுருவியே”..என்று வெறுப்புடன் சிஎஸ்கே ரசிகர்கள் உச்சரிப்பதைக் காண முடிகிறது.
சிஎஸ்கே அணியின் ஆட்டத்தில் வெல்ல வேண்டும் எனும் வெறி, துடிப்பு, உற்சாகம், போராட்டக் குணம் ஏதும் இல்லை.
பேட்டிங் பயிற்சியே இல்லை
அதிலும் கேப்டன் தோனி கடந்த ஓராண்டாக பேட்டிங் பயிற்சியே இல்லாமல் ஐபிஎல் தொடரில் ஓர் அணிக்கு கேப்டனாக எந்த துணிச்சலில் வந்தார் என்பது தெரியவில்லை. அப்படியென்றால், கடந்த ஓராண்டாக முறையாக கிரிக்கெட் பயிற்சி எடுத்த வீரர்களுக்கும், சர்வதேசப் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் ஈடாக ஓராண்டுப் பயிற்சி எடுக்காமலும் விளையாட முடியும் என்று தோனி நம்புகிறாரா?
கடந்த ஓராண்டாக பேட்டைத் தொடாமல் இருந்ததன் விளைவுதான் தோனியால் நினைத்த எந்த ஷாட்டையும் துல்லியமாக ஆட முடியவில்லை. முன்புபோல பேட்டிங்கிலும் முறையாக ஈடுபட முடியவில்லை. துல்லியமான வேகப்பந்துவீச்சு, இளம் வீரர்களின் வித்தியாசமான, பலவகையான சுழற்பந்துவீச்சை ஆடுவதில் தோனி தடுமாறுகிறார். வர்ணனையில் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டது போல் ‘தொசுக்கு தொசுக்கென்று தொசுக்குகிறார்’ தோனி.
ஏன் மறுக்கிறார்?
முக்கியமானது சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தோனி பிடிவாதமாக மறுத்து வருவது ஏன் எனத் தெரியவில்லை. கெய்க்வாட், ஜெகதீஸன் போன்றோர் இருந்தும் அவர்களை தோனி பயன்படுத்தவில்லை. கேதார் ஜாதவைவிட ஜெகதீஸன் சிறப்பாக விளையாடினார், ஆனால், கேதார் ஜாதவைத்தான் எடுப்பேன் என்று மீண்டும் தோனி பிடிவாதத் தேர்வு செய்வதன் ரகசியம் புரியவில்லை.
ராஜஸ்தான் அணிக்கு 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்தபோதே ஜடேஜாவை பந்துவீச அழைத்திருக்க வேண்டும். ஆனால் பியூஷ் சாவ்லா நம்பும் தோனி ஜடேஜாவைப் பயன்படுத்தவில்லை. சாவ்லாவைவிட ஜடேஜா விக்கெட் எடுப்பதில் திறமையானவர்.
ஒட்டுமொத்தத்தில் கேப்டன் தோனியின் கப்பலில் அடைக்க முடியாத அளவுக்கு பெரிய ஓட்டை விழுந்துவிட்டது.
பந்துவீச்சு அற்புதம்
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பினர். ஆர்ச்சர் பந்து மின்னல் வேகத்தில் இருக்கிறது. இங்கிலாந்து வலைப்பயிற்சியில் ஆர்ச்சரில் பந்துகளை எதிர்கொண்ட சாம்கரனால்கூட அடிக்கமுடியவில்லை, ஆனால் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்ப்பது கடினம். சிஎஸ்கே வீரர்களுக்கு நிற்கவைத்துப் படம் காட்டினார் ஆர்ச்சர்.
சுழற்பந்துவீச்சில் கோபால், திவேஷியா இருவரும் அருமையாகப் பந்துவீசினர். சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்குப் பாடம் எடுக்கும் வகையில் பந்துகளின் வகைகளை மாற்றி வீசி, திணறவைத்தனர். ஆர்ச்சர், திவேஷியா, கோபாலின் பந்துவீச்சு அபாரம்.
உத்தப்பா, சாம்ஸன் இருவரும் ஆட்டமிழந்த விதம் தேவையற்றது. ஆனால் சூழலை அறிந்து ஸ்மித், பட்லர் பேட் செய்தவிதம் அற்புதம். சூப்பர் லீக் செல்ல முடியாவிட்டாலும், இழந்த நம்பிக்கையை இந்த வெற்றி மூலம் பெற்றுள்ளது ராஜஸ்தான்.
விக்கெட் சரிவு
126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிதான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பென் ஸ்டோக்ஸ் தான் சந்தித்த 2-வது பந்திலேயே பவுண்டரி அடித்து விரைவாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். ரன் ரேட்டும் உயரத் தொடங்கியது. ஆனால், உத்தப்பாவுக்கு ஆட்டம் கூடவில்லை, பந்தும் பேட்டிற்கு சரியாக மீட் ஆகவில்லை.
தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களில் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து உத்தப்பா (4) தேவையில்லாமல் ஏதோ வித்தியாசமாக ஷாட் அடிக்க முயன்று ஹேசல்வுட் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சாம்ஸன் டக் அவுட் ஆகி இந்த முறையும் சொதப்பினார்.
மீட்ட ஜோடி
28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. இனிமேலாவது நல்ல வழி பிறக்காதா என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே அணியினர் உற்சாகமடைந்தனர். பவர் ப்ளேயில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி. 4-வது விக்கெட்டுக்கு பட்லர், ஸ்மித் ஜோடி சேர்ந்தனர்.
நிதானமாக ஸ்மித் விளையாட, பட்லர் தனக்கே உரிய ஸ்டையில் அதிரடிஆட்டத்தை வெளிப்படுத்தியபோது சிஎஸ்கே அணியின் நம்பிக்கை கனவு தகர்ந்தது. சிஎஸ்கே வீரர்கள் யார் பந்துவீசினாலும் பவுண்டரிகளாக பட்லர் வெளுத்து வாங்கினார்.
பட்லரைக் கட்டுப்படுத்த பல பந்துவீச்சாளர்களை தோனி மாற்றிப் பார்த்தும் பயனில்லை. பட்லர் அடித்து ஆடத் தொடங்கியதும், ஸ்மித் ஸ்ட்ரைக்கை அவருக்கு வழங்கி நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கினார்.
அதிரடியாக ஆடிய பட்லர் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். வெற்றியை நெருங்கிய நிலையில் ஸ்மித்தும் தனது பங்கிற்கு பவுண்டரியை விளாச எளிதாக ராஜஸ்தான் அணி வென்றது.
17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களுடன் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்), ஸ்மித் 26 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆர்ச்சர் மின்னல் வேகம்
முன்னதாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சாம் கரன், டூப்பிளசிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்தத் தொடர் முழுவதும் அனல் பறக்கும் வேகத்தில் பந்து வீசிவரும் ஆர்ச்சர் இந்தப் போட்டியிலும் சாம் கரனை க்ரீஸில் நிற்கவைத்துப் படம் காட்டினார். ஆர்ச்சர் பந்துவீச்சை டூப்பிளசிஸ், சாம் கரனால் தொடக்கூட முடியவில்லை. பவுன்ஸராக எழுப்பி இருவரையும் ஆர்ச்சர் திணறடித்தார்.
ஆர்ச்சர் வீசிய 3-வது ஓவரில் “ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில்” பட்லரிடம் கேட்ச் கொடுத்து டூப்பிளசிஸ் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வாட்ஸன், கரனுடன் சேர்ந்தார்.
கார்த்திக் தியாகி ஓவரில் 2 பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கி வாட்ஸன் 8 ரன்களில் திவேஷியாவிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வந்த ராயுடு, கரனுடன் சேர்ந்தார். பவர் ப்ளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 43 ரன்கள் சேர்த்தது.
திணறல்
சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்ரேயாஸ் கோபால், திவேஷியா பந்துவீச வந்தபின் சிஎஸ்கே ரன் ரேட் சர்ரென கீழே இறங்கியது. சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகரித்தது. கோபால் வீசிய 9-வது ஓவரில் சாம் கரன் 22 ரன்கள் சேர்த்த நிலையில் லாங்-ஆஃபில் தூக்கி அடித்து பட்லரிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அடுத்து வந்த தோனி, ராயுடுவுடன் சேர்ந்தார். ஏதோ கடமைக்கு விளையாடுவதுபோல் பேட் செய்த ராயுடு 13 ரன்கள் சேர்த்த நிலையில் திவேஷியா பந்துவீச்சில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பவுண்டரிகளே இல்லை
5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா களமிறங்கி தோனியுடன் சேர்ந்தார். தோனி, ஜடேஜா இருவரையும் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். கடந்த ஓராண்டாக பேட்டிங் பயிற்சியே எடுக்காத தோனிக்கு பேட்டிங் எப்படி வரும். கோபால், திவேஷியா பந்துகளைக் கூட ஆடமுடியாமல் சொதப்பினார்.
5-வது ஓவரில் பவுண்டரி அடித்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அடுத்த 8 ஓவர்களாக பவுண்டரியே அடிக்கவில்லை.
கார்த்திக் வீசிய 14-வது ஓவரில் தோனி ஒரு பவுண்டரி அடித்தார். ஏறக்குறைய 8 ஓவர்களாக சிஎஸ்கே அணி ஒரு ரன், 2 ரன் எடுத்து திணறிவந்தது. கார்த்திக் ஓவரில் ஜடேஜாவும் 2 பவுண்டரிகள் தன் பங்கிற்கு அடித்தார். அதன்பின் அடுத்த 3 ஓவர்களுக்கு பவுண்டரி ஏதும் தோனி, ஜடேஜா அடிக்கவில்லை.
தோனி ரன் அவுட்
18-வது ஓவரில் ஆர்ச்சரால் ரன் அவுட் செய்யப்பட்டு தோனி 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தோனி, ஜடேஜா கூட்டணி 51 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. அடுத்துவந்த கேதார் ஜாதவ் ரன்கள் சேர்க்க கடுமையாக முயன்றார். ஆனால் பேட்டில் பந்து மீட் ஆகவில்லை. ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 2 பவுண்டரிகளை விளாசினார்.
20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 35 ரன்களுடனும், ஜாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், கோபால், திவேஷியா மூவரும் அருமையாகப் பந்துவீசி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago