நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 35வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளின் ஸ்கோரும் 163 ரன்கள் என்று ‘டை’ ஆக சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது. இதில் கேகேஆர் முதலில் பவுலிங் செய்தது. ரியல் டைம் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய லாக்கி பெர்கூசன் சூப்பர் ஓவரையும் வீசினார். டேவிட் வார்னரை முதல் பந்திலேயே வெளியேற்றிய இவர், 3வது பந்தில் அப்துல் சமதின் ஸ்டம்பை பெயர்க்க சன் ரைசர்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சன் ரைசர்ஸ் அணியில் ரஷீத் கான் சூப்பர் ஓவரை வீசினார். 2 டாட்பால்களை வீசினார், ஆனால் கொல்கத்தா லெக் பை ரன்களில் போட்டியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் எடுத்து 4ம் இடத்தில் உள்ளது, சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன், சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் சமமாக 6 புள்ளிகள் பெற்றாலும் சன் ரைசர்ஸ் 5ம் இடத்தில் உள்ளது.
ரியல் டைம் ஆட்டத்தில் திக் திக் கடைசி ஓவர்:
கொல்கத்தாவின் 163/5 என்ற இலக்கை விரட்டிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டன. வார்னர் கிரீசில் இருந்தார். ஆந்த்ரே ரஸல் கடைசி ஓவரை வீசினார். ரஸல் நோ-பாலுடன் தொடங்கினார். ஆனால் அடுத்த மூன்று பந்துகளில் வார்னர் அபாரமான 3 பவுண்டரிகளை அடிக்க 2 பந்துகளில் 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலைக்கு வந்தது. 5வது பந்தில் லாங் ஆனில் அடித்து விட்டு வார்னர் படுவேகமாக 2 ரன்களை ஓடினார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரஸல் வார்னரின் பேடுக்கு பந்தை வீச ஒரு ரன் லெக் பை தான் வார்னர் ஓட முடிந்தது ஸ்கோர்கள் டை ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது, இதில் லாக்கி பெர்கூசன் கலக்க சன் ரைசர்ஸ் தோல்வி கண்டது. வார்னர்33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தும் வெற்றி சாத்தியமாகவில்லை, குறைந்த பட்சம் டை ஆனது.
தொடக்கத்தில் மாற்றம், வார்னர் 4ம் நிலையில் இறக்கம்:
முன்னதாக 164 ரன்கள் வெற்றி இலக்கின் போது ஹைதராபாத் களமிறங்கிய போது ஜானி பேர்ஸ்டோவுடன் கேன் வில்லியம்சன் களமிறக்கப்பட்டார். இது நகர்த்தல் நன்றாக கை கொடுத்தது இருவரும் பவர் ப்ளேயில் 57 ரன்களைச் சேர்த்து பிரமாதத் தொடக்கத்தை அளித்தனர். முதல் 3 ஓவர்களில் இருவரும் 4 பவுண்டரிகளை அடித்தனர், பிறகு 4வது ஓவரில் மேலும் 3 பவுண்டரிகள் விளாசினர். பேர்ஸ்டோ அதிரடியாக ஆட வில்லியன்சன் தன் ‘டச்’, எலிகண்ட் ஷாட்களை ஆடினார். இருவரும் 50 ரன்கள் கூட்டணியை வில்லியம்சனின் சிக்ஸ் மற்றும் பவுண்டரி மூலம் எட்டினர்.
ஆனால் லாக்கி பெர்கூசன் ஏற்படுத்திய திருப்பு முனை ஹைதராபாத்துக்கு ஆணியறைந்தது. வந்தவுடன் 19 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்திருந்த தன் நியூஸி. கேப்டன் வில்லியம்சனை அப்பர் கட் ஷாட்டில் தேர்ட் மேன் கேட்சுக்கு வீழ்த்தினார் பெர்கூசன். பிறகு லாக்கி பெர்கூசன், பிரியன் கார்க் (4) விக்கெட்டை ஸ்லோ பந்தில் பவுல்டு முறையில் வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி பேர்ஸ்டோவை 9வது ஓவரில் வெளியேற்றினார். முனை மாற்றப்பட்டு பெர்கூசன் மீண்டும் கொண்டு வரப்பட்ட போது மணீஷ் பாண்டேயை துல்லிய யார்க்கரில் காலி செய்தார்.
4ம் நிலையில் களமிறங்கிய கேப்டன் வார்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை எடுத்த 4வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
வார்னரும், விஜய் சங்கரும் (7) ஸ்கோரை 100 ரன்களைக் கடக்கச் செய்தனர். விஜய் சங்கர் புல் ஷாட்டில் பாட் கமின்ஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பிறகு அப்துல் சமத் (23 ரன், 15 பந்து 2 நான்கு, ஒரு ஆறு), வார்னருடன் இணைந்து 37 ரன்களை சேர்த்தனர். ஆனால் பவுண்டரியில் பெர்கூசன், கில் ஆகியோரின் ரிலே கேட்சுக்கு அப்துல்சமது வெளியேறினார். இது 19வது ஓவரில் நடக்க, 20வது ஓவரில்தான் வார்னர் 3 பவுண்டரிகளை அடித்தாலும் போதவில்லை, ஆட்டம் டை ஆனது. பெர்கூசன் 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
தினேஷ் கார்த்திக், மோர்கனின் கடைசி அதிரடி- வெற்றிக்கு முக்கியக் காரணம்
முன்னதாக டாஸ் வென்று ஹைதராபாத் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததால் கொல்கத்தா முதலில் பேட் செய்தது, ஷுப்மன் கில்லுக்கு ரஷீத் கான் கேட்சை விட்டார், அப்போது கில் 1 ரன்னில் இருந்தார். முதல் 3 ஒவர்களில் சன் ரைசர்ஸ் கிடுக்கிப்பிடி போட 15 ரன்களே வந்தது, ஆனால் அதன் பிறகு டி.நடராஜன் ஓவரில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். பாஸில் தம்பி வீசிய ஓவரில் ஷுப்மன் கில் 3 பவுண்டரிகளை தொடர்ந்து அடித்தார். ஆனால் டி.நடராஜன். ராகுல் திரிபாதி (23) யை பவுல்டு செய்தார்.
ஷுப்மன் கில்லும் ராணாவும் இணைந்து மேலும் 39 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஷுப்மன் கில் 36 ரன்களில் ரஷீத் கான் பவுலிங்கிலும் ராணா 29 ரன்களில் விஜய் சங்கர் பவுலிங்கிலும் பிரியம் கார்கின் அட்டகாசமான கேட்சுக்கு வெளியேறினர். கொல்கத்தா 15வது ஓவரில்தான் 100 ரன்களை எட்டியது. ரஸல் மீண்டும் சொதப்பி 9 ரன்களில் டி.நடராஜனின் 2வது விக்கெட்டாக வீழ்ந்தார். 5 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் கொல்கத்தா 105/4 என்று இருந்தனர்.
அப்போது முன்னாள் கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் தற்போதைய கேப்டன் இயன் மோர்கனும் இணைந்து வெளுத்துக் கட்டினர். 16வது ஓவரில் 6 ரன்களே வந்தது, 17வது ஓவரில் கார்த்திக், மோர்கன் தலா ஒரு பவுண்டரி விளாசினர். 18வது ஓவரில் கார்த்திக் டீப் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது. கார்த்திக் மேலும் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து 19 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் மோர்கன் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க மோர்கன் 34 ரன்களை எடுகக் இருவரும் 5 ஓவர்களில் 58 ரன்கள் கூட்டணி அமைக்க ஸ்கோர் 163/6 என்று உயர்ந்தது, இந்த இன்னிங்ஸ்கள்தான் கேகேஆர் வெற்றிக்கு பெரிய காரணமே. ஹைதராபாத் அணியில் விஜய் சங்கர் 4 ஒவர் 20 ரன் 1 விக்கெட். நடராஜன் 4 ஓவர் 40 ரன் 2 விக்கெட். ரஷீத் கான் 4 ஒவர் 28 ரன்1 விக்கெட். ஆட்ட நாயகன் கொல்கத்தாவின் லாக்கி பெர்கூசன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago