4 வாய்ப்புகளை கோட்டைவிட்ட சிஎஸ்கே: தவண் 'தாண்டவம்'; அக்ஸர் படேல் கடைசி ஓவர் சிக்ஸர்களில் டெல்லி வெற்றி: சூப்பர் லீக் சுற்றுக்குச் செல்லுமா சிஎஸ்கே?

By க.போத்திராஜ்

ஷிகர் தவணின் அற்புதமான டி20 முதல் சதம், அக்ஸர் படேலின் அபாரமான சிக்ஸர்கள் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த 34-வது ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து185 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 7 வெற்றி,2 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி இருந்தால், அந்த அணி சூப்பர் லீக் சுற்று உறுதியாகிவிடும்.

சூப்பர் லீக் செல்லுமா
அதேசமயம், சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் 6 தோல்வி, 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலேயே நீடிக்கிறார்கள். சூப்பர் லீக் சுற்றுக்குச் செல்ல குறைந்தபட்சம் இன்னும் 4 வெற்றிகள் கட்டாயம். அடுத்துவரும் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் கண்டிப்பாக நல்ல ரன் ரேட்ங்கில் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும். இல்லாவிட்டால் சிஎஸ்கே அணி சூப்பர் லீக் சுற்றுக்குள் செல்லாமல் சென்னை செல்ல வேண்டியிருக்கும்.

ஆட்டநாயகன்

டெல்லி அணிக்காக கடைசிவரை போராடி ஐபிஎல் மற்றும் டி20 போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த ஷிகர் தவண் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஷிகர் தவண் 58 பந்துகளில் 14 பவுண்டரி, ஒருசிக்ஸ் உள்பட 101 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டி20 போட்டியில் கடைசிப்பந்துவரை வெற்றி யாருக்கு என்று சொல்ல முடியாத சூழல் இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த ஆட்டம். அக்ஸர் படேல் ஆட்டத்தையே மாற்றி, சிஎஸ்கே ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிவி்ட்டார்.

பரபரப்பு கடைசி இரு ஓவர்கள்

கடைசி இரு ஓவர்களும் ரசிகர்கள் அனைவரையும் பதற்றத்தில் வைத்தன. 12 பந்துகளில் டெல்லி அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டபோது சாம் கரன் வீசிய 19-வது ஓவரில் அலெக்ஸ் காரே விக்கெட்டும் வீழ்ந்து 4 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. நிச்சயம் சிஎஸ்கே வென்றுவிடும் என்ற நினைப்புடன் தான் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், அக்ஸர் படேல் இந்த அடி அடிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

வழக்கமாக டெத் ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால், திடீரென ஜடேஜா வீசியது வியப்பாக இருந்தது. ஆனால், பிராவோ உடல்நலக்குறைவால் ஓய்வெடுக்கச் சென்றதால், வேறு வழியின்றி ஜடேஜா வீசினார். அதிலும் களத்தில் இரு இடதுகை ஆட்டக்கார்ரகள் இருந்ததால், ஏதோ விபரீதம் மட்டும் நடக்கப்போகிறது எனப் புரிந்துவிட்டது.

அனுபவமான ஜடேஜாவின் ஓவரில் ஒரு ரன் தட்டிவிட்டு அஸ்கர் படேலிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார் தவண். அக்ஸர் படேல், 2-வது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர், அடுத்து ஒரு சிஸ்ஸ், மீண்டும் 2 ரன்கள், 5-வது பந்தில் மீண்டும் சிக்ஸ் என ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

கை மேல் கிடைத்த வெற்றியை டெல்லி அணியிடம் தாரை வார்த்துவிட்டது சிஎஸ்கே. சர்வதேச அனுபவம் கொண்ட ஜடேஜா இப்படியா மோசமாக பந்துவீசுவார்...

4 வெற்றி சாத்தியமா

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் போட்டியில் அதன் பயணம் ஏறக்குறைய முடியும் நிலையில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இனிவரும் 5 போட்டிகளில் 4ல் கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதில் ஒரு போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆதலால் 4 போட்டிகளையும் இதேபோன்று சிஎஸ்கே விளையாடினால் வெற்றி சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.

வயசாகிப்போச்சு

சிஎஸ்கே அணி வீரர்களின் உடல் தகுதியின்மை, வயது, பீல்டிங்கில் மந்தமாகச் செயல்படுதலே தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இந்தப் போட்டியில் மட்டும் 4 வாய்ப்புகளை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டனர். தவண் 25,79 ரன்கள் சேர்த்திருந்தபோது தீபக் சஹர், ராயுடு ஒரு கேட்சையும் தோனி ஒரு கேட்சையும் கோட்டைவிட்டனர். ஒரு ரன்அவுட் வாய்ப்பும் நழுவிடப்பட்டது.

"பழையன கழிதலும் புதிய புகுதலும்" என்பார்கள். அதேபோல சிஎஸ்கேக்கு சொல்ல வேண்டுமென்றால் "முதியன கழிதலும், இளையன புகுதலும்" தேவைப்படுகிறது.

கேட்ச் வாய்ப்பு

அதிலும் அம்பதி ராயுடு, சஹர் ஆகியோர் கேட்ச் வாய்ப்புகளை கையில் எண்ணையைத் தடவிக்கொண்டு நழுவவிட்டது போல் இருந்தது. அதிலும் ராயுடு கைக்கு நேராக தவண் அடித்த கேட்ச்சை பிடிக்க முடியாமல் நழுவவிட்டு, பந்து வழுவழுப்பாக இருக்கிறது என்று துடைத்ததை என்னவென்று சொல்வது.

சிஎஸ்கே வீரர்களை "ஆடிஸ் ஆர்மி" என்று கிண்டல் செய்வது சிலருக்கு வெறுப்பாக இருந்தாலும், அவர்களால் களத்தில் உடலை வளைத்து பீல்டிங் செய்ய முடியவி்ல்லை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், அதுதான் நிதர்சனம்.

கடைசி ஓவரில் ஜடேஜாவுக்கு தோனி வழங்கியது விமர்சிக்கப்பட்டாலும், பிராவோ இல்லாத நிலையில் கரன் சர்மா, ஜடேஜா வாய்ப்பு மட்டுமே தோனிக்கு இருந்துள்ளது. இதில் அனுபவமான ஜடேஜாவை தேர்வு செய்து தோனி வாய்ப்பு வழங்கியுள்ளார். ஆனால், அதுவே தோல்வியைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டதுபோல் ஆகிவிட்டது.

தவண், படேல் அற்புதம்

டெல்லி அணியைப் பொறுத்தவரை வெற்றிக்கு முழுமையானக் காரணம் ஷிகர் தவணும், கடைசி ஓவரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேல்.

சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும், ஷிகர் தவண் தனக்கே உரிய ரிதத்தை தொடக்கத்திலேயே பிடித்துவிட்டார். கடந்த சில போட்டிகளில் மந்தாக ஆடிய தவண் கடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஃபா்முக்கு திரும்பி, இந்தப் போட்டியில் ஃபுல் ஃபார்மில் இருந்தார்.

தவணின் ஒவ்வொரு ஷாட்களும் அற்புதமாக இருந்தன. இவரை ஆட்டமிழக்க வைக்க சிஎஸ்கே வீரர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தவணே போனால் போகட்டும் என்று சில வாய்ப்பு கொடுத்தும் அதையும் சிஎஸ்கே வீரர்கள் கோட்டைவிட்டனர்.

29 பந்துகளில் அரைசதத்தை அடித்த தவண், அடுத்த 28 பந்துகளில் 50 ரன்கள் அடித்து டி20 மற்றும் ஐபிஎல் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். அக்ஸர் படேல் ஓரளவுக்கு பேட் செய்வார் என்றாலும், கடைசி ஓவரில் ஜடேஜா பந்தில் அவர் அடித்த 3 சிக்ஸர்களும் என்றென்றும் பேசப்படும்.

விக்கெட் சரிவு

180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. தீபக் சஹர் ஓவரில் பிரித்விஷா(0), ரஹானே(8) ரன்னில் வெளியேறினர். ரஹானே தன்னை பெஞ்சில் அமரவைத்தது சரி என்பதை நிரூபித்து வருகிறார். பிரித்வி ஷா மீண்டும் அவசரப்பட்டு ஆடி விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தது டெல்லி அணி.

ஸ்ரேயாஸ் அய்யர், தவண் கூட்டணி ஓரளவு நிதான பேட் செய்தனர். தவண் அடித்து ஆடுவது தெரிந்ததும் ஸ்ரேயாஸ் பொறுமையைக் கடைபிடித்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 23 ரன்னில் பிராவோ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்துவந்த ஸ்டாய்னிஸ் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால், ஸ்டாய்னிஸும் நிலைக்கவில்லை, ஸ்டாய்னிஸ் 24 ரன்ககள் சேர்த்தநிலையில் பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரேவும் சோபிக்காமல் சாம் கரன் வீசிய 19-வது ஓவரில் 4 ரன்னில் வெளியேறினார்.

திக்திக் ஓவர்

ஆனால், விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் தவண் தனது ஃபார்ம் குறையாமல் கிடைக்கும் வாய்ப்பில் பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை சீராக கொண்டுவந்தார்.

தவண் இருந்தவரை டெல்லி பக்கம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றாலும், சிஎஸ்கே 19-வது ஓவர்வரை கட்டுக்கோப்பாகவே வீசினர். அக்ஸர் படேல், தவண் ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் படேல், தவண் களத்தில் இருந்தனர். ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அக்ஸர் 3 அபாரமான சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை முடித்தார்.

ஒரு பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. சிஎஸ்கே தரப்பில் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வாட்ஸன், டூப்பிளசி கூட்டணி

டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சாம்கரன் தொடக்கத்திலேயே டக்அவுட் ஆகினார். வாட்ஸன் , டூப்பிளஸி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஆன்ரிச் பந்துவீச்சில் வாட்ஸன் 3 6ரன்களில் போல்டாகி விக்கெட்டை இழந்தார்.

39 பந்துகளில் அரைசதம் அடித்த டூப்பிளஸி 58 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். தோனி 3 ரன்னில் ஆன்ரிச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

"155 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய ஆன்ரிச் பந்தை இறங்கி வந்து தோனி அடிக்க முயன்றது ஹீரோயிஸத்தை காட்டுகிறது. மறதியாக பழைய ஆட்டத்தின் நினைவு வந்து இறங்கியிருக்கலாம்".

கடைசிநேர அதிரடி

ராயுடு, ஜடேஜா கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தனர். இருவரும் சேர்ந்து 3.3 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்தனர்.

ஜடேஜா 33 ரன்னிலும், ராயுடு 45 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே அணி. டெல்லி தரப்பில் ஆன்ரிச் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்