மீண்டும் ரோஹித் தலைமைமுதலிடம்: வீணாய்போன கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் விலகலால் சோர்வா? போராட்டமின்றி மும்பையிடம் சரணாகதி

By க.போத்திராஜ்

பும்ரா, ராகுல் சாஹரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, குயின்டன் டீ காக்கின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் அபுதாபியி்ல் நேற்று நடந்த ஐபிஎல்20 போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. 149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது போன்ற ஒருதலைபட்சமான ஆட்டங்களினால் ஐபிஎல் சுவாரசியமிழந்து விடும் என்பதை வீரர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

மீண்டும் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் 12 புள்ளிகள் பெற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் இரு வெற்றிகளை மும்பை அணி பெற்றாலே சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதியாகிவிடும்.

கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன்4-வதுஇடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்றால்தான் சூப்பர் லீக் சுற்றில் எவ்வித பிரச்சினையும் இன்றி நுழைய முடியும். இல்லாவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

ஆட்டநாயகன்

44 பந்துகளில் 78ரன்கள்(3 சிக்ஸர், 9பவுண்டரி) சேர்த்து மும்பை அணியின் வெற்றியை எளிமையாக்கிய, அதிரடி ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் ஆட்டநாயகன் விருது வெற்றார்.

ஒருதரப்பான ஆட்டம்

இந்த ஆட்டம் ஒரு தரப்பான ஆட்டம் என்றுதான் சொல்ல முடியும். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் மும்பை அணி ஒட்டுமொத்தமாக கொல்கத்தா அணியை ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் செய்வதறியாவது கொல்கத்தா அணி திகைத்து சரணாகதி அடைந்து வீணாய்போய்வி்ட்டது.

61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தபோதே ஆட்டத்தைப் பார்க்கும் ஸ்வாரஸ்யம் ரசிகர்களுக்குப் போய்விட்டது. என்ன இப்படி விளையாடுறாங்க......என்று கொட்டாவிவிடத் தொடங்கினர். வெற்றி மும்பைக்குத்தான் எனத் தெரிந்தபின் போட்டியில் என்ன விறுவிறுப்பு இருக்கும்.

கேப்டன்ஷிப் மாற்றம் காரணமா

கொல்கத்தா அணியின் "சடன் கொல்ப்ஸ்க்கு" முக்கியக் காரணம் கேப்டன்ஷிப் மாற்றமாக இருக்குமோ என்றும் சிந்திக்க வைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தினேஷ் கார்த்தில் கேப்டனாக அணிக்கு சிறப்பாகத்தான் செயல்பட்டு வந்தார். அவரின் வெற்றியும் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது.

இந்தத் தொடரிலும் தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப் மோசம் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு சிறப்பாகத்தான் இருந்தது. அதனால்தான் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு கொல்கத்தா உயர முடிந்தது.

இந்தநிலையில் திடீரென கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக்(உஷ்!கண்டுகாதிங்க) தாமாக முன்வந்து பதவி விலகினார் என்ற செய்தி சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதிலும் ஐபிஎல் தொடரின் முக்கியமான 2-ம் பகுதியில் தினேஷ் கார்த்தில் விலகல், கேப்ன்ஷிப் மாற்றம் அவசியமா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே போட்டிகளை சுனில் நரைன் வெற்றி பெற்று கொடுக்கும் சமயத்தில் அவர் த்ரோ செய்கிறார் என்று சந்தேகத்தை கிளப்பி அவரை உட்கார வைத்து விட்டனர்.

மோர்கனின் தலைமை எந்த அளவுக்கு வீரர்களுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. ஒருவேளை முதல் போட்டியிலேயே வீரர்கள் தங்களின் அதிருப்தியை, கேப்டன் மாற்றத்தின் சோர்வை வெளிப்படுத்தினார்களா என்றும் தெரியவில்லை.

இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் போன்ற வீரர் அணிக்கு கேப்டனாக இருக்கும்போது, மொழிப் பிரச்சினையின்றி வீரர்களுடன் களத்தில் செயல்பட முடியும். தமிழ், இந்தி, ஆங்கிலம் மூன்றிலும் வீரர்களிடம் பேசி கேப்டன் அணியை அரவணைத்துச் செல்ல முடியும். ஆனால், மோர்கன் எவ்வாறு செயல்படப்போகிறார் எனத் தெரியவில்லை.

இதற்குமுன் இருந்த ஷேன் வார்ன், மெக்கலம் போன்ற வெளிநாட்டு வீரர்கள் மோசமாக செயல்பட்டார்களா என்றால் இல்லை. வீரர்களுடன் களத்தில் பேசுவதில் பழகுவதில் நெருக்கம் வெளிநாட்டு வீரரைவிட, இந்தியக் கேப்டனுக்கு அதிகமாக இருக்கும்.

பேட்டிங் வரிசையில் மாற்றம்

தொடக்கத்திலிருந்தே கொல்கத்தா அணியில் பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றம் செய்து வந்தது வீரர்கள் யாரையுமே செட்டில் ஆகவிடாமல் செய்தது. ராகுல் திரிபாதி 5-வது வீரராகவும், ஒருபோட்டியில் தொடக்க வீரராகவும் களமிறக்கப்பட்டார்.

டாம் பாண்டன் வந்ததும் அவருக்கு தொடக்கவரிசை தரப்பட்டது. மோர்கன் ஒரு முறை முன்வரிசையில் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக்கும் நிலையான பேட்டிங் வரிசை இல்லை. இதுபோன்ற குழப்பமான பேட்டிங் ஆர்டர் நிச்சம் பேட்ஸ்மேன்களுக்கு தெளிவற்ற சூழலைத்தான் உண்டாக்கும்.

மோர்கன் தலைமை ஏற்று முதல் போட்டியே மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது. ஒரு போட்டியில் அவரின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. அடுத்தடுத்து வரும் போட்டிகள் நிச்சயம் அணிக்கும், அவருக்கு சவாலாக இருக்கும்.

61 ரன்களுக்கு 5 முக்கிய வி்க்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியபோதே ஆட்டம் முடிந்துவிட்டது. 100 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்று ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. அப்போதே ஆட்டத்தில் ஒரு ஸ்வாரஸ்யம் குறைந்துவிட்டது.

காப்பாற்றிய கம்மின்ஸ்

ஆனால், பாட் கம்மின்ஸ், மோர்கன் ஜோடி கடைசி நேரத்தில் தாக்குப்பிடித்து கவுரமான ஸ்கோரை அடைய உதவினர். இல்லாவிட்டால் கொல்கத்தா அணியின் நிலைமை கதை கந்தலாகி இருக்கும்.

பாட் கம்மின்ஸ் நேற்று "பேட்டிங் கம்மின்ஸ்" ஆக உருமாறினார். அருமையான ஆட்டத்தை ஆடி டி20 தொடரில் முதல் அரைசதத்தை கம்மின்ஸ் பதிவு செய்தார். கம்மின்ஸ் அடித்து ஆடுகிறார் என்று தெரிந்தவுடனே அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து மோர்கன் நிதானமாக ஆடியது அனுபவமான கேப்டனுக்குரிய சிறப்பு.

மும்பை இந்தியன்ஸ் போன்ற வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட அணி்க்கு 148 ரன்கள் இலக்கு என்பது போதாது என்று கொல்கத்தா அணிக்குத் தெரியும். இருப்பினும் தோல்வி உறுதி எனத் தெரிந்து கொண்டுதான் விளையாடியது.

ஆதிக்கம்

மும்பை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் தனது ஒட்டுமொத்த ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது, நசுக்கியது. கொல்கத்தா பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அறிந்து ஸ்கெட்ச் போட்டு வெளியேற்றியது மும்பை அணி. நடப்பு சாம்பியன் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறது.

அதிலும் பும்ராவின் பந்துவீச்சு நேற்று வெறித்தனமாக இருந்தது. பும்ரா வீசிய அந்த பவுன்ஸரை ரஸாலால் ஆட முடியாமல் அவர் பேட்டை வைத்து முகத்தை மறைத்ததே பும்ராவின் பந்துவீச்சுக்கு சாட்சி. பும்ராவின் பந்துவீச்சு நாளுக்கு நாள் மெருகேறி, மிரட்டலாகி வருகிறது.

ராகுல் சாஹர் நேற்று அடுத்தடுத்து கில், தினேஷ் கார்த்திக் விக்கெட்டை சாய்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனை. மும்பை அணிக்கு ராஹல் சாஹர் இருப்பது மிகப்பெரிய பலமாகும்.

நல்ல தொடக்கம்

148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, டீகாக் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடத்த தொடங்கினர். இதனால் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை பவர்ப்ளேயில் சேர்க்க முடிந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீகாக், 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். வலுவான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்த இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது.

ரோஹித் சர்மா 35 ரன்னில் ஷிவம் மாவி பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார். 12 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் வருண் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

டீகாக் அதிரடி

3-வது வீரராக களமிறக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, டீக்காக்குடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் கம்மின்ஸ் வீசிய 16-வது ஓவரில் ஹர்திக் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருசிக்ஸ், 2பவுண்டரி சேர்த்து வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். 16.5 ஓவர்களில் மும்பை அணி இலக்கை அடைந்தது. பாண்டியா 21 ரன்னிலும், டீகாக் 78 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

விக்கெட் சரிவு

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. திரிபாதி, கில்ஆட்டத்தைத் தொடங்கினர். போல்ட்வீசிய 3-வது ஓவரில் சூர்யகுமாரால் அருமையாக கேட்ச் பிடிக்கப்பட்டு திரிபாதி 7ரன்னில் வெளிேயறினார்.அப்போது இருந்து சரிவு தொடங்கியது.

அடுத்து வந்த ராணா(5)ரன்னில் கோல்டர் நீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் சாஹர் வீசிய 8-வது ஓவரின் 3-வது பந்தில் கில்(21), அடுத்தபந்தில் தினேஷ் கார்த்திக்(4) என்று விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ரஸல் ஏமாற்றம்

இது கொல்கத்தா அணி்க்கு மிகப்பெரிய சரிவாக அமைந்தது. நம்பிக்கையூட்ட வந்த ரஸல் இந்த முறையும் ஏமாற்றினார். கடந்த 8 போட்டிகளிலும்ஒருபோட்டியில்கூட ரஸல் இதுவரை அணிக்காக தனதுபேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை.

மீட்ட ஜோடி

இந்த முறையும் பும்ரா பந்துவீச்சில் 12 ரன்னில் ரஸல் வெளிேயறினார்.6-வது விக்கெட்டுக்கு மோர்கன், கம்மின்ஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கம்மின்ஸ் அடித்து ஆடத்தொடங்கியதும், மோர்கன் நிதானத்தைக் கடைபிடித்தார். தானும் அடித்துஆடினால் பின்வரிசையில் பேட்ஸ்மேன் இல்லை, அணியின் நிலைமோசமாகிவிடும் என்பதை உணர்ந்த மோர்கன் பொறுமையாக பேட் செய்தார்.

அதிரடியாக கம்மின்ஸ் 35பந்துகளில் முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார். இருவரும் சேர்ந்து 87ரன்கள் சேர்த்தனர். கம்மின்ஸ் 53 ரன்னிலும்(2சிக்ஸர்,5பவுண்டரி) மோர்கன் 39(2பவுண்டரி,2சிக்ஸ்) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, கூல்டர்நீல், போல்ட் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்