கே.எல்.ராகுலின் அரைசதம், கெயில் புயலின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களி்ல் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பரபரப்பான 2 ஓவர்கள்
18-வது ஓவர் முடிந்தபோது பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்க வேண்டியது. கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. உடானா வீசிய 19-வது ஓவரில் கெயில், ராகுல் ஜோடி 5 ரன்களை மட்டுமே சேர்த்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.
சாஹல் வீசிய ஓவரில் இரு பந்துகளை கோட்டை விட்ட கெயில் 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல், 5-வது பந்தில் ஒரு ரன் ஓடியபோது கெயில் ஆட்டமிழந்தார். கடைசிப்பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. களமிறங்கிய பூரன் கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.
எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை கெயிலின் ஓடி ரன் எடுக்க முடியாத காரணத்தால் கடைசிக் கட்டத்தில் திக்,திக் வெற்றியைத்தான் பஞ்சாப் பெற்றது.
2 முறையும் தோல்வி
ஐபிஎல் போட்டியில் இரு லீக் ஆட்டத்திலும் ஆர்சிபி அணியை பஞ்சாப் அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2016-ம் ஆண்டு ஆர்சிபி அணியில் கே.எல்.ராகுலும், கெயிலும் இடம் பெற்ற நிலையில் இருவரும் தற்போது பஞ்சாப் அணியில் ஒன்று சேர்ந்து ஆர்சிபி அணியை வீழ்த்தியுள்ளனர்.
இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து, வெற்றி வாய்ப்புகளை நழுவவிட்டு வந்த பஞ்சாப் அணிக்கு இந்த வெற்றி நம்பிக்கை அளிக்கும்.
நம்பிக்கை வெற்றி
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றவுடன் நேற்று பஞ்சாப் அணி வீரர்கள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம். பல தருணங்களில் வெற்றிக்கு அருகே வந்து கோட்டை விட்ட நிலையில் இந்த வெற்றி பஞ்சாப் அணி்க்கு நம்பிக்கையளிக்கும், அடுத்தடுத்து வெற்றியை நோக்கி நகர ஊக்கமளிக்கும்.
பஞ்சாப் அணிக்கு இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே இருப்பதால், அடுத்துவரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றாலும் அந்த அணி சூப்பர் லீக் சுற்று செல்லுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் இந்த வெற்றி ஆறுதல் தரக்கூடியது.
பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி என 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
ஆட்டநாயகன் ராகுல்
பஞ்சாப் அணியின் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்தாலும், தன்னுடைய பேட்டிங் திறமையில் மட்டும் சிறிதும் சோடைபோகாமல், நம்பிக்கையை தளரவிடாமல் பேட்டிங் செய்துவரும் கே.எல்.ராகுலுக்குப் பாராட்டுகள். அதிகமான ரன்கள் சேர்த்தவீரர்கள் வரிசையிலும் ராகுல்தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
ராகுலின் ஆகச்சிறந்த பேட்டிங் பங்களிப்பு இந்த ஆட்டத்திலும் இருந்தது. 49 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து(5 சிக்ஸர்,ஒருபவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கெயில் ராகுல் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
ஐபிஎல் தொடரில் முதன்முதலில் களமிறங்கிய கெயில் புயல் தன்னை கடந்த போட்டிகளாக களமிறக்காதது தவறு என்பதை இந்த ஆட்டத்தில் தனது பேட்டிங் மூலம் நிரூபித்தார். தனக்கே உரிய, ஸ்டைலில் பல ஷாட்களை கெயில் ஆடினார். 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 53 ரன்களில் கெயில் ஆட்டமிழந்தார்.
அருமையான கேப்டன்ஷிப்
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நேற்று சிறப்பாகவே செயல்பட்டனர். சிறிய மைதாமான ஷார்ஜாவில் வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட ஆர்சிபி அணியை 171 ரன்களுக்குள் சுருட்டியதே மிகப்பெரிய சாதனைதான். அதிலும் ஆர்சிபி பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு சுழற்பந்து வீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தி, ராகுல் அருமையாக கேப்டன்ஷிப் செய்தார்.
முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய்,மேக்ஸ்வெல் மூவரையும் நடுப்பகுதி ஓவரில் பயன்படுத்தி, ஆர்சிபியின் ரன் வேகத்தை முற்றிலும் ராகுல் கட்டுப்படுத்தினார்.
பேட்டிங்கில் சரியாமல் ஆடாத மேக்ஸ்வெலை பந்துவீ்ச்சில் திட்டமிட்டு ராகுல் பயன்படுத்தினார். கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் முருகன் அஸ்வின் இந்த முறையும் தனது பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்ெகட்டை வீழ்த்தினார். பிஸ்னோய், மேக்ஸ்வெல் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் கட்டுக்கோப்பான பந்துவீச்சாக அமைந்தது.
கோலிக்கு என்னாச்சு
ஆர்சிபி அணியைப் பொருத்தவரை கோலியின் ஒட்டுமொத்த கேப்டன்ஷிப் தோல்வியாகவே இந்த ஆட்டத்தைப் பார்க்க முடிகிறது. இந்த ஆட்டத்தில் கோலியின் சுதந்திரமான பேட்டிங், வழக்கமான ஷாட்கள், சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆடியபோது இருந்த ஆக்ரோஷம் ஏதும் இல்லை.
39பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த கோலியின் ரன்கணக்கில் 3 பவுண்டரிகள் மட்டுமே இருந்தன. டி20 போட்டி ஆடினாரா அல்லது ஒருநாள் போட்டி ஆடினாரா என்ற கேள்வி தான் எழுகிறது.
ஷார்ஜா போன்ற சிறிய மைதானங்களில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட நிலையில் தேவையில்லாமல் ரன்களை ஓடிஎடுத்து, அணியின் ஸ்கோர் குறைந்ததற்கும் கோலி முக்கியக் காரணம். அதுமட்டுமல்லாமல் அணியில் இடது,வலது பேட்ஸ்மேன்கள் இருக்கவேண்டும் என்பதற்காக வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபேவை களமிறக்கி நடுப்பகுதியில் அதிகமான பந்துகளை வீணடிக்கவும் கோலியின் வியூகம்தான் காரணம்.
ஏபிடி ஏன் வீணடிக்கப்பட்டார்
அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடி 360 டிகரி வீரர் டிவில்லியர்ஸை 6-வது வீரராக களமிறக்கி அவரின் திறமயை கோலி வீணடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். வழக்கம்போல் டிவில்லியர்ஸ் 4-வது வீரராக அல்லது 3-வது வீரராக களமிறங்கி இருந்தால், நிச்சயம் ஆர்சிபி ஸ்கோர் 200 ரன்களைத் தொட்டிருக்கும்.
அதிலும் ஷார்ஜா போன்ற சிறிய ஆடுகளம், பஞ்சாப் அணியில் கெயில் வருகை, அகர்வால், ராகுலின் அசுரத்தனமான பேட்டிங் ஃபார்ம் ஆகியவை இருக்கும் போது 171 ரன்களுக்குள் சுருட்டுவேன் என்று கோலி கூறுவதெல்லாம் "வானில் ஏறி வைகுண்டம் போகிற" கதைதான். இதுபோன்ற ஸ்கோர் எல்லாம் ஷார்ஜாவில் வெற்றிக்கு ஒருபோதும் உதாவாது என்பதை கோலி புரிந்திருப்பார்.
நல்ல தொடக்கம்
171 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ஆபாரமான ஃபார்மில் இருக்கும் ராகுல், மயங்க் அகர்வால் மீண்டும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அகர்வால் 45 ரன்னில்(4பவுண்டரி, 3சிக்ஸர்) சாஹல் பந்தில் போல்டாகினார். அடுத்து கெயில், ராகுலுடன் சேர்ந்தார். தொடக்கத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பந்துகளை வீணாக்கினார் கெயில். ஆனால், சிறிது நேரத்தில் தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஓவரை வெளுத்து வாங்கிய கெயில் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார்.
அதிரடி கெயில்
ராகுல் 37 பந்துகளில் அரைசதத்தையும், கெயில் 36 பந்துகளில் அரைசதமும் அடித்தனர். இருவரின் அதிரடியால் 18-வது ஓவரிலேயே ஆட்டம் முடிந்திருக்க வேண்டியது. கடைசி இருஓவரில்7 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் கெயிலால் ஓடி ரன் எடுக்க முடியாத காரணத்தால் 19-வது ஓவரில் 5 ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 2 ரன் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் ஒரு ரன் சேர்த்தநிலையில் கெயில் 53 ரன்னில் ரன் அவுட் ஆகினார். கடைசிப்பந்தில் பூரன் சிக்ஸர் அடித்துஆட்டத்தை ெவற்றியுடன் முடித்தார்.
20ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட்இழப்புக்கு 177ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராகுல் 61ரன்னிலும், பூரன் 6 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மந்தமான ஆட்டம்
முன்னதாக டாஸ் வென்ற கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். படிக்கல், பிஞ்ச் கூட்டணி இந்த முறையும் ஏமாற்றினர். படிக்கல் 18 ரன்னிலும், பிஞ்ச் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மத்திய வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் சுந்தர்(13), துபே(23) என இருவரும் சோபிக்கவில்லை. விராட் கோலியும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக ஆடியதால் ஸ்கோரும் உயரவில்லை.
ஃபினிஷிங் நேரத்தில் விளையாட வேண்டிய டிவில்லியர்ஸை 6-வது வரிசையில் இறக்கி 2 ரன்னோடு அவரை வீணடித்தனர். கோலி அரைசதம் அடிக்கமுடியாமல் 48ரன்னில் வெளிேயறினார்.
மோரிஸ் 25 ரன்னிலும், உதனா 10ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 171ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago