இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் சுலபமானதல்ல: கிரேம் ஸ்மித்

இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுவது பற்றி தனக்கு பதட்டம் அதிகரிப்பதாக முன்னாள் கேப்டனும், தொடக்க வீரருமான கிரேம் ஸ்மித் தெரிவித்தார்.

பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “நான் சற்று பதட்டமாகவே இருக்கிறேன். நிச்சயம் எங்களுக்கு இது ஒரு கடினமான தொடரே. இந்த இந்திய தொடர் மற்றும் ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து தொடர் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய சவால். இந்தக் காலக்கட்டம் தென் ஆப்பிரிக்க அணிக்கு முக்கியத்துவம் பெறும் காலக்கட்டமாகும்.

இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் சுலபமானதல்ல, குறிப்பாக நிறைய தூரம் பிரயாணம் செய்ய வேண்டி வரும். பிட்ச் ஸ்பின் பவுலிங்குக்கு சாதகமாக இருக்கும்.

அனைத்தும் நன்றாக நடைபெறும் என்றே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த இந்திய தொடர், தென் ஆப்பிரிக்க அணிக்கு நல்ல முறையில் அமைந்து விட்டால் பிறகு இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக விளையாடுவோம் என்றே கருதுகிறேன்.

2006-க்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் ஆடி வருவது எங்கள் அணியின் மிகப்பெரிய சாதனையாகவே கருதுகிறேன். நம்பர் 1 இடத்தை தக்கவைப்பதைத் தவிர வேறு வழியில்லை” இவ்வாறு கூறினார் ஸ்மித்.

2008 மற்றும் 2009 டெஸ்ட் தொடர்களில் ஸ்மித் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி இங்கு பயணம் மேற்கொண்டு தொடரை டிரா செய்துவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE