டிவில்லியர்ஸின் மிரட்டல் காட்டடி, சாஹல், வாஷிங்டன் சுந்தரின் மாய ஜாலப் பந்துவீச்சு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் சேர்த்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
3-வது இடம்
» ஆ! என்ன மாதிரியான சிக்ஸ்!- ரபாடா பந்தில் சூர்யகுமார் யாதவ் அடித்தது பற்றி ஆகாஷ் சோப்ரா ஆச்சரியம்
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 2 தோல்வி, 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கொல்கத்தா அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
அடியா அது......
360 டிகிரி பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸின் மற்றொரு ஆகச்சிறந்த ஆட்டத்தை நேற்று ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப்பின் கண்டனர்.
அடியா அது.. டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸரில் மைதானத்தைக் கடந்து பந்து வெளியே சென்று, சாலையில் சென்ற கார்களே சில வினாடிகள் நின்றது.
மெதுவாகத் தொடங்கிய டிவில்லியர்ஸ் முதல் 11 பந்துகளில் 10 ரன்களே சேர்த்திருந்தார். ஆனால், அடுத்த 22 பந்துளில் 63 ரன்களை டிவில்லியர்ஸ் தனது அதிரடியால் குவித்தார். 46 பந்துகளில் கோலி, டிவில்லியர்ஸ் கூட்டணி 100 ரன்கள் குவித்தனர்.
160 ரன்களுக்கு மேல்ஆர்சிபி தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க டிவில்லியர்ஸ் முக்கியக் காரணம். மிகப்பெரிய இலக்கு இருந்ததால்தான் பந்துவீச்சாளர்கள் துணிச்சலாக, நம்பிக்கையுடன் பந்துவீச முடிந்து வெற்றி தேடித்தர முடிந்தது.
காட்டடி அடித்த டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள்(6சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
சவாலாக மாறும் ஆர்சிபி
ஆர்சிபி அணியைப் பொருத்தவரை ஷார்ஜா ஆடுகளத்தை நன்கு கணித்து ஆடினர். ஆடுகளத்தில் பந்து மெதுவாக வந்தது, அதற்கு ஏற்றார்போல் பேட் செய்ய வேண்டும் என்று தெரிந்து விளையாடினர். கடந்த போட்டிகளில் இருந்ததைப் போன்று ஷார்ஜா ஆடுகளம் இல்லை. பேட்ஸ்மேனை நோக்கி பந்து நின்று மெதுவாக வந்தது.
சரியாகக் கணித்த டிவில்லியர்ஸ் கடைசி 4 ஓவர்களில் சரவெடியாக வெடித்து வெளுத்து வாங்கிவிட்டார். இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடர்களில் ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ் மட்டுமே விளையாடுவார்கள், மற்ற வீரர்கள் பங்களிப்பு பெரிதாக இருக்காது.
ஆனால், இந்த முறை ஆர்சிபி அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுத்தது போன்று அமைந்துவிட்டார்கள். ஒவ்வொரு வீரரும் தன்னுடைய பங்களிப்பை சரியாகச் செய்து கோலியை உச்சி குளிரச் செய்து வருகிறார்கள். இந்த முறை பந்துவீச்சு, பேட்டிங்கில் ஒருவர் சோபிக்காவிட்டால் மற்றொருவர் நான் இருக்கிறேன் என கலக்கி வருகின்றனர். ஆபத்தான அணியாக ஆர்சிபி மாறிவருகிறது. இதேபோக்கில் சென்றால், மும்பை அணிக்கு கடும் சவாலாக மாறுவார்கள்.
ஆடுகளத்தில் பந்து மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி செல்வதை புரிந்து சாஹல், சுந்தர் இருவரும் மிக்சிறப்பாகப் பந்துவீசினர். இருவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு வெற்றிக்கு முக்கியக் காரணம்.
அதிலும் கேப்டன் கோலி, சுந்தர் பந்துவீச்சு மீது அசராத நம்பிக்கை வைத்துள்ளார். எப்படியும் பவர்ப்ளேயில் விக்கெட்டை வீழ்த்திவிடுவார் என்று கோலி வைக்கும் நம்பிக்கையை சுந்தரும் காப்பாற்றி வருகிறார்.
சஹல் 4 ஓவர்கள் 12 ரன்கள் ஒருவிக்கெட், சுந்தர் 4 ஓவர்கள் 20 ரன்கள் 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர்.
இதேபோல வேகப்பந்துவீச்சிலும் சைனி, உடானா, மோரிஸ், சிராஜ் என 4 பேரும் தங்களின் துல்லியமான பந்துவீச்சால் வி்க்கெட்டையும் வீழ்த்தி, ரன்களையும் கட்டுப்படுத்தினர்.
ஒட்டுமொத்தத்தில் டிவில்லியர்ஸ் கட்டி எழுப்பிய கோட்டையை பந்துவீச்சாளர்கள் காப்பாற்றிவிட்டனர்.
நரைன் இல்லாதது பலவீனம்
கொல்கத்தா அணி இந்த தொடரில் சந்தித்த 3 தோல்விகளில் மோசான தோல்வி இதுவாகத்தான் இருக்க முடியும். சுனில் நரைன் என்ற மிகப்பெரிய பிரம்மாஸ்திரம் இல்லாத காரணத்தால், டிவில்லியர்ஸ் எனும் ரன் மெஷினைக் கடைசிவரை கொல்கத்தா அணி பந்துவீச்சால் கட்டுப்படுத்த முடியவில்லை.
நரைன் இல்லாததே கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலவீனம். நரைனுக்கு பதிலாக கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை இறக்கி இருக்கலாம் ஆனால், பேட்ஸ்மேன் பாண்டனை இறக்கி சோதித்து தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து வெற்றிகளை ருசித்துவந்த கொல்கத்தா அணிக்கு இந்த தோல்வி சிறிய தடை போட்டிருக்கிறது.
8 பேட்ஸ்மேன்களி்ல யாரேனும் இருவர் நிலைத்து விளையாடி இருக்கலாம். இப்படி “சடன் கொலாப்ஸ்” ஆவதற்கு என்ன காரணம். அதிலும் ஷார்ஜா போன்ற ஆடுகளங்களில் இதுபோன்று சீட்டுக்கட்டு சரிவதுபோல் சரிய காரணத்தை ஆய்வு செய்வது அடுத்த போட்டியின் வெற்றிக்கு உதவும்.
பொதுவாக 200 ரன்களுக்கு அருகே, அல்லது அதற்கு மேல் இலக்கு வைத்துவிட்டாலே சேஸிங் செய்யும் பேட்ஸ்மேன்களுக்கு மனரீதியான அழுத்தம் வந்துவிடுகிறது. அதிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிவிட்டால் அடுத்து களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு சுமை அதிகரித்து விக்கெட்டை இழக்க நேரிடுகிறது.
இதுபோன்ற பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும் போது என்ன செய்யப்போகிறோம், எப்படி ஆட்டத்தை நகர்த்தப்போகிறோம் எனச் சரியானத் திட்டமிடல் தேவை. ஆனால், திட்டம்போட்டு பேசிவிட்டு, களத்தில் சொதப்பினால், இதுபோன்ற தோல்விகள் ஏற்படும்.
விக்கெட் வீழ்ச்சி
195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணிகளமிறங்கியது. ஷார்ஜா மைதானத்தில் ராஜா போன்று சேஸிங்கில் ரேஸ் போன்று இருப்பார்கள் கொல்கத்தா அணியினர் என எதிர்பார்த்தால் அனைத்தும் புஸ்வானமாகியது.
என்ன ஆச்சு கொல்கத்தாவுக்கு என்று கேட்கும்வகையில், யாரும் எதிர்பாராத வகையில் விக்கெட்டுகளை மளமளவென கொல்கத்தா அணியினர் இழந்தனர்.
கொல்கத்தா அணியில் 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களைச் சேர்த்தனர். மற்ற 6 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியது அதிர்ச்சி. சுப்மான் கில்(34),ரஸல்(16), திரிபாதி(16) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பாண்டன்(8),ராணா(9), மோர்கன்(8), கார்த்திக்(1)கம்மின்ஸ்(1),நாகர்கோட்டி(4) என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். ஏறக்குறைய கம்மின்ஸ் வரை கொல்கத்தா அணியில் 8 பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடக்கூடிய நிலையில் இருந்தும் ஒருவர் கூட நிலைத்து நிற்காதது வேதனையாகும்.
51 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 48 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது “டோட்டல் கொலாப்ஸ்” என்றுதான் கூற முடியும்.
ஷார்ஜா ஆடுகளம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரி என்று சொல்லப்பட்ட நிலையிலும் 7 பிக் ஹி்ட்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இருந்தும் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது வேதனை.
20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே சேர்த்து 82 ரன்களில் தோல்வி அடைந்தது. வருண் கார்த்திக் 7ரன்னிலும், பிரசித் 2 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆர்சிபி தரப்பில் மோரிஸ், சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும், சைனி, சிராஜ், சாஹல், உடானா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
நல்ல தொடக்கம்
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆரோன் பின்ஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கி, பின்னர் அதிரடிக்கு மாறினர். முதல் விக்ெகட்டுக்கு இருவரும் 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். படிக்கல் 32 (23பந்துகள், 4பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ரஸல் பந்துவீச்சில் போல்டாகினார்.
அடுத்து கேப்டன் கோலி களமிறங்கி, பின்ஞ்சுடன் சேர்ந்தார். அரைசதத்தை நெருங்கிய பின்ஞ்ச் 47ரன்னில்(4பவுண்டரி,ஒருசிக்ஸ்)பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு கோலி, டிவில்லியர்ஸ் கூட்டணி சேர்ந்தனர்.
டிவில்லியர்ஸ் காட்டடி
இருவரும் நிதான ஆடி பின்னர் அதிரடிக்கு மாறினர். சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்அவுட் ஆகிய டிவில்லியர்ஸ் அனைத்துக்கும் சேர்த்து ஆடினார். 14 ஓவரில் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது. 6 ஓவர்கள் மீதம் இருந்தநிலையில் கூடுதலாக 60 ரன்கள் அடிக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், 16-வது ஓவரிலிருந்து டிவில்லியர்ஸ் டாப்கியரில் தனது ஆட்டத்தை நகர்த்தினார். டிவில்லியர்ஸ் விளாசலில் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன. டிவில்லியர்ஸ் வெளுத்துவாங்க, கோலி, அவருக்கு ஸ்ட்ரைக்கே மாற்றிக்கொடுத்து நன்கு ஒத்துழைத்தார்.
நாகர்கோட்டி வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்,ஒருபவுண்டரி உள்பட 18ரன்களை டிவில்லியர்ஸ் சேர்த்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி உள்பட 19 ரன்களை டிவில்லியர்ஸ் அதிரடியாக சேர்த்தார். ரஸல் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார் டிவில்லியர்ஸ் இந்த ஓவரில் 18 ரன்கள் சேரக்கப்பட்டது. டிவில்லியர்ஸ் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பிரசித் கிருஷ்ணா வீசிய 19-வது ஓவரில் 12 ரன்கள், ரஸல் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. டிவில்லியர்ஸ் 33பந்துகளில் 73ரன்கள்(6சிக்ஸர்,5பவுண்டரி), கோலி, 33ரன்களுடன் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago