அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-யின் 27-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா (5) விக்கெட்டை விரைவில் இழந்தாலும் டீகாக், சூரியகுமார் யாதவ் அரைசதங்களினால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பிடித்தது.
கேள்விகளை எழுப்பும் டெல்லி அணுகுமுறை:
டெல்லி அணியில் ஷிகர் தவண் பேட்டிங் மிகவும் பாரம்பரிய அணுகுமுறை கொண்டதாக ஏன் இருந்தது என்று புரியவில்லை, அவர் 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 69 ரன்கள் என்பது பார்க்க பெரிதாகத் தெரிந்தாலும் அவர் முயற்சி எடுத்து ரன் விகிதத்தை ஏற்ற முயலாதது ஏன் என்று புரியவில்லை. நல்ல பவுலிங் அவரை கட்டுப்படுத்தியது என்ற வாதங்களை வைத்தாலும், தவணிடம் பலவிதமான ஸ்ட்ரோக்குகள் இல்லை என்றாலும் முயற்சி வேண்டுவதுதானே டி20 ஆட்டம்.
தவண் பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் இடங்களில் வீசாமல் மும்பை தவிர்த்தது ஒரு புறம் என்றாலும் அவர்கள் திட்டத்தை தவண் முறியடிக்க முயற்சி செய்யவில்லை. டீ காக், சூரியகுமார் யாதவ் கிரீஸை பிரமாதமாகப் பயன்படுத்தி ஆடினர், லெக் திசையிலும் ஆஃப் திசையிலும் நகர்ந்து நகர்ந்து பவுலர்களின் திட்டங்களை முறியடித்தனர். அது போன்று தவண் முயற்சி செய்யவில்லை. இது ஏன் என்பது தெரியவில்லை.
அதே போல் ஷ்ரேயஸ் அய்யர் சிக்சர்களுக்குப் பெயர் பெற்றவர் ஆனால் அவரோ அன்று 38 பந்துகளில் 80+ ரன்களை எடுத்தார் நேற்று 33 பந்துகளில் வெறும் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்களையே எடுத்தார். தவணும், அய்யரும், சாஹர், குருணால் பாண்டியா ஆகியோரை சிக்சர்கள் விளாசியிருக்க வேண்டும். குருணால், சாஹர் இவர்கள் இருவருக்கும் அதிகமாக வீசி இருவரும் சேர்ந்து 8 ஓவர்களில் 53 ரன்களையே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 3 பவுண்டரிகளையே விட்டுக் கொடுத்தனர், ஸ்பின்னர்களை சிக்ஸ் அடிக்க வேண்டும், குறைந்தது பவுண்டரியாவது அடிக்க வேண்டும், ஆனால் இருவரையும் அடிக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அதே போல் அக்சர் படேலுக்கு 3 ஓவர்கள் மட்டுமே கொடுத்து அவரது முழு 4 ஓவர்களை பயன்படுத்தாது ஏன் என்றும் புரியவில்லை. அக்சர் படேலின் சிக்கன விகிதம் 4.50. பவர் ப்ளேயில் அருமையாக வீசி 2 ஒவர்களில் 12 ரன்கள் கொடுத்து பெரிய மீன் ரோஹித் சர்மாவையே விழுங்கி விட்டார். 3வது ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார், ஆனால் அது மிஸ்பீல்டிங்கினால் வந்தது, 4வது ஓவரை ஏன் அவர் வீசவில்லை என்பதும் கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. மாறாக ஹர்ஷல் படேலுக்கு கொடுத்ததில் அவர் 2 ஒவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதே போல் டெல்லி அணி தங்கள் பீல்டர்களை சரியான பொசிஷனில் நிறுத்தவில்லை என்பதும் தெரிந்தது. இவற்றையெல்லாம் செய்திருந்தால் மும்பை வென்றிருப்பது கடினமாகியிருந்திருக்கும்.
டெல்லி கேப்பிடல்ஸ் இன்னிங்ஸ்:
அதிரடி தொடக்க வீரர் பிரிதிவி ஷா (4) கவர் திசையில் கேட்ச் ஆகி போல்ட்டிடம் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். ரஹானேயின் முதல் ஆட்டம் அவருக்கு சரியாக அமையவில்லை 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து குருணால் பாண்டியாவிடம் எல்.பி. ஆகி ஆட்டமிழந்தார்.
5வது ஓவரில் 24/2 என்ற நிலையில் அய்யர்-தவண் ஜோடி சேர்ந்தனர். ரிஸ்க் எடுக்காமல் ஆடினர், பவர் ப்ளேயின் கடைசி ஒவரில் 3 பவுண்டரிகள் வந்தது. பவர் ஹிட்டர்களான டெல்லி பவர் ப்ளேயில் 46 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இருவரும் மேலும் ரன்களைச் சேர்த்து அடுத்த 4 ஒவர்களில் 34 ரன்களை அடித்து அரைசதக் கூட்டணியை பூர்த்தி செய்தனர்.
10 ஓவர் முடிவில் 80 ரன்களை டெல்லி எட்டியது. இந்தக் காலக்கட்டத்தில்தான் டெல்லி கேப்பிடல்ஸ் முடக்கப்பட்டது, அல்லது முடங்கியது, அடுத்த 4 ஒவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அல்லது எடுத்தது. இந்நிலையில் மிகவும் தாமதமாக ரன் விகிதத்தை உயர்த்த முயன்ற அய்ய்ர் 42 ரன்களில் 15வது ஓவரில் குருணால் பாண்டியாவிடம் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்
ஷிகர் தவண் 39 பந்துகளில் அரைசதம் கண்டார், மார்கஸ் ஸ்டாய்னிஸ் அவருடன் இணைந்தார். 16வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினர். அபாய வீரர் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகளுடன் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து மிஸ்பீல்டுக்கு 2வது ரன் எடுக்கும் முயற்சியில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்த 2 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் 15 ரன்களையே கொடுத்தது, கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்கப்பட 162/4 என்று டெல்லி முடிந்தது. பும்ரா 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காவிட்டாலும் 26 ரன்களையே கொடுத்தார். குருணால் 26 ரன்களுக்கு 2 விக்கெட். சாஹர் 4 ஒவர் 27 ரன்கள், போல்ட் 36 ரன்களுக்கு 1 விக்கெட்.
டீ காக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் அபாரம்!
162 ரன்களை தடுக்க முடியுமா என்ற நிலையில் டெல்லி அணி முதல் 3 ஒவர்களில் மும்பையைக் கட்டுப்படுத்தியது. ஆனால் 4வது ஓவரில் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று டீ காக், அஸ்வின் பந்து வீச்சில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 5வது ஒவரில் ரோஹித் சர்மா 5 ரன்களில் அபார அக்சரின் பந்து வீச்சில் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஆனால் குவிண்டன் டீ காக், தன்னை வேகமெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிவேக பவுலர் நார்ட்யே வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர்களை அடித்து நொறுக்கினார். பவர் ப்ளேயில் 44/1 என்று டெல்லி அணியை விடவும் 2 ரன்கள் குறைவாகவே எடுத்தது மும்பை. அடுத்த 3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் 28 ரன்களை எடுக்க குவிண்டன் டீ காக் தனது அரைசதத்தை எடுத்தார். 3 போட்டிகளில் அவரது 2வது அரைசதமாகும் இது.
10வது ஓவரில் சூரியகுமார் யாதவ்வுக்கு அஸ்வின் தன் பந்து வீச்சிலேயே கேட்ச் ஒன்றை விட்டார். ஆனால் இதே ஓவரில் அபாய டீ காக் விக்கெட்டை 53 ரன்களில் அஸ்வின் வீழ்த்தினார், டீப் ஸ்கொயர்லெக்கில் ஷா கேட்ச் எடுத்தார். இஷான் கிஷன் ரன் அவுட் ஆகியிருப்பார், ஆனால் அந்த வாய்ப்பையும் டெல்லி கோட்டை விட்டது.
அடுத்த 2 ஒவர்களில் சூரிய குமார் யாதவ் 3 பவுண்டரிகளை அடிக்க மும்பை ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. 14வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீச உள்ளே புகுந்தார் இஷான் கிஷன், ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். அடுத்த ரபாடா ஓவரில் சூரிய குமார் யாதவ் தனது தொடர்ச்சியான 2வது அரைசதத்தை எட்டி 53 ரன்களில் இதே ஓவரில் ரபாடாவிடம் வெளியேறினார். 16வது ஓவரில் ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் பந்தை எட்ஜ் செய்தார்.
ஆனாலும் மும்பை வெற்றிக்குத் தேவை 18 பந்துகளில் 18 ரன்களே. இஷான் கிஷன் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிப்பதற்குப் பதிலாக பிரிதிவி ஷா சிக்சருக்குத் தள்ளிவிட்டார். பவுண்டரியில் உயரமான வீரரை நிறுத்த வேண்டும், ஷாவை கொண்டு நிறுத்தியது என்ன உத்தி என்பதும் புரியவில்லை. ஆனால் இஷான் கிஷன் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்களில் ரபாடா ஓவரில் அக்சரின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். ரபாடா இந்த ஐபிஎல்-ல் எடுக்கும் 17வது விக்கெட் ஆகும் இது.
19வது ஓவரில் இன்னொரு தென் ஆப்பிரிக்க அதிவேக வீச்சாளர் நார்ட்டியே 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். மும்பை கடைசி ஓவரில் தேவையான 7 ரன்களை எடுத்து வெற்றி பெற்று முதலிடம் சென்றது. பொலார்ட் 11, குருணால் 12 ஆட்டமிழக்காமல் முடித்து வைத்தனர். ரபாடா 4 ஓவர் 28 ரன்கள் 2 விக்கெட். நார்ட்யே 28 ரன்களுக்கு விக்கெட் இல்லை. அக்சர் படேல் 3 ஓவர் 24 ரன்கள். இன்னொரு ஓவர் கொடுத்திருக்கலாம். அஸ்வின் 35 ரன்கள் 1 விக்கெட். ஸ்டாய்னிஸ் 2.4 ஓவர் 31 ரன் 1 விக்கெட்.
ஆட்ட நாயகனாக குவிண்டன் டீ காக் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago