வாவ்… என்ன மாதிரியான போட்டி... சன்ரைசர்ஸ் பக்கம் திரும்பிய ஆட்டத்தை ஒரு யூடர்ன் போட வைத்து தங்கள் பக்கம் திருப்பிய இந்திய இளம் வீரர்கள் ராகுல் திவேஷியா, ரியான் பராக்கிற்கு முதலில் பாராட்டுகள்.. வெற்றி பெற முடியாத போட்டிகளை வென்று காட்டுவதேயே ராஜஸ்தான் அணி வழக்கமாக வைத்துள்ளது. அதிலும் வெற்றி பெற்ற பின் பராக் ஆடிய டான்ஸ் உற்சாகம்...
ராகுல் திவேஷியா, ரியான் பராக்கின் பிரமாதமான ஆட்டத்தால், துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. 159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 163 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நம்பிக்கையளிக்கும் வெற்றி
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் பாலைவனத்தில் துவண்டு கிடக்கும் செடிக்குத் தண்ணீர் கிடைத்தது போன்று தொடர் தோல்விகளால் நம்பிக்கை இழந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த வெற்றி உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். உண்மையில், அடுத்த கட்டத்துக்கு அந்த அணியை நகர்த்திச் செல்ல இந்த வெற்றி ஊக்கமாக இருக்கும்.
ஆட்ட நாயகன்
வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காத நிலையில், சஞ்சு சாம்ஸன் ஏமாற்றிய நிலையில், சர்வதேசப் போட்டியில் அனுபவமில்லாத இரு இளம் வீரர்கள் ராகுல் திவேஷியா, ரியான் பராக் இருவரும் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.
ஏற்கெனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 5 சிக்ஸர்களை விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்த திவேஷியா இன்றும் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவேஷியா 28 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 4 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதும் திவேஷியாவுக்கு வழங்கப்பட்டது. உறுதுணையாக ஆடிய ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டத்தை மாற்றிய 4 ஓவர்கள்
16-வது ஓவர்கள் வரை ஆட்டத்தின் போக்கு சன்ரைசர்ஸ் பக்கம்தான் இருந்தது. வெற்றி சன்ரைசர்ஸுக்குதான் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், கடைசி 4 ஓவர்களில் இருந்து ஆட்டத்தை திவேஷியாவும், ரியான் பராக்கும் தங்கள் பக்கம் திருப்பினர். கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது.
சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் 18 ரன்கள், ரஷித் கான் வீசிய 18-வது ஓவரில் 14 ரன்கள், நடராஜன் வீசிய 19-வது ஓவரில் 14 ரன்கள், கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் என ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திவேஷியாவும், பராக்கும் திருப்பிவிட்டனர்.
சர்வதேச அரங்கில் டி20 போட்டியில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்று வர்ணிக்கப்படும் ரஷீத் கான் வீசிய 18-வது ஓவரில் திவேஷியா இரு ஸ்விட்ச் ஹிட்டுகளில் பவுண்டரி உள்பட ஹாட்ரிக் பவுண்டரி அடித்தது போட்டியை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. நடராஜன் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து திவேஷியா ஆட்டத்தை வெற்றிக்கு நகர்த்திச் சென்றார்.
பாடம் நடத்திய இளம் வீரர்கள்
எந்தப் போட்டியாக இருந்தாலும் கடைசிவரை திட்டமிட்டுப் போராடினால் வெற்றி பெற முடியும் என்பதை திவேஷியா, பராக் ஆகிய இரு இளம் வீரர்கள் நிரூபித்து, ஐபிஎல் அணியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு பாடம் நடத்திவிட்டனர்.
இளம் வீரர்களை நம்பி வாய்ப்பளித்த ராஜஸ்தான் அணிக்கு இருவரும் மிகப்பெரிய கைமாறு செய்தனர். ஆனால், இளம் வீரர்களை நம்பாமல் அனுபவம்தான் முக்கியம், என்று தொடர்ந்து சொல்லும் மூத்த வீரர்களை நம்பிக் கொண்டிருக்கும் சில அணிகளுக்கு திவேஷியா, பராக் மிகப்பெரிய உதாரணம்.
பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி கட்டுக்கோப்பாகவே வீசினர். அதிகமான ரன்களை வாரி வழங்கவி்லலை. பந்துவீசிய அனைத்துப் பந்துவீச்சாளர்களும் சராசரியாக 7 ரன்கள் மட்டுமே கொடுத்ததால்தான் 160 ரன்களுக்குள்ளாக சன்ரைசர்ஸ் அணியைக் கட்டுப்படுத்த முடிந்தது. அந்தவகையில் ஆர்ச்சர், கோபால், திவேஷியா அருமையாகப் பந்துவீசினர்.
புவனேஷ்வர் வெற்றிடம்
சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை துபாய் போன்ற பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளங்களில் இதுபோன்ற ஸ்கோர் நிச்சயம் போதாது. இன்னும் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தால் நிச்சயம் வெற்றி பறிபோகாமல் தடுத்திருக்க முடியும். ரஷித்கான், சந்தீப் சர்மா இருவரும் 16-வது ஓவருக்கு முன்புவரை நன்றாகத்தான் வீசியிருந்தார்கள்.
ஆனால், கடைசிக் கட்டத்தில் இப்படி நடக்கும் என கேப்டன் வார்னரே எதிர்பார்த்திருக்க மாட்டார். புவனேஷ்வர் குமார் இல்லாத வெற்றிடம் பந்துவீச்சில் நன்கு தெரிகிறது.
கடைசி 3 ஓவர்களில் இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் பந்துவீசியிருந்தால், சன்ரைசர்ஸ் அணி தோல்வியிலிருந்து தப்பித்திருக்கலாம். மற்ற வகையில் சன்ரைசர்ஸ் அணி எதிர்பார்த்திராத தோல்வியாகும்.
விக்கெட் சரிவு
159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்திலிருந்து கட்டுக்கோப்பாக பந்துவீசிய சன்ரைசர்ஸ் அணி நெருக்கடி கொடுத்ததால் ராஜஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த முடிந்தது.
தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து முதல் போட்டியில் அறிமுகமான ஸ்டோக்ஸ் (5),ஸ்மித் (5),பட்லர் (16) ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களும் பவர் ப்ளே ஓவருக்குள்ளாவே ஆட்டமிழந்தனர். 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உத்தப்பா (18), சாம்ஸன் (26) என நிலைத்து ஆடாமல் ஆட்டமிழந்தனர். 12 ஓவர்களில் 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ராஜஸ்தான் அணி.
பிரமாதக் கூட்டணி
6-வது விக்கெட்டுக்கு ரியான் பராக், திவேஷியா கூட்டணி சேர்ந்தனர். இருவரும் மெதுவாகவே ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர். 16-வது ஓவரில்தான் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. ஆனால், 17-வது ஓவரிலிருந்து திவேஷியா, பராக் இருவரின் பேட்டிங் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் திவேஷியா ஒரு சிக்ஸரும், பராக் இரு பவுண்டரிகள் அடித்து 17 ரன்கள் சேர்த்தனர். ரஷித் கான் வீசிய 18-வது ஓவரில் திவேஷியா ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 14 ரன்கள் சேர்த்து போட்டியை நம்பிக்கையை நோக்கி நகர்த்தினார்.
நடராஜன் வீசிய 19-வது ஓவரில் திவேஷியா சிக்ஸர், பவுண்டரி உள்பட 14 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், திவேஷியா, பராக் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், விளையாடினர்.
திக் திக் கடைசி ஓவர்
கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் பராக் முதல் பந்தில் 2 ரன், 2-வது பந்தில் ஒரு ரன், 3-வது பந்தில் திவேஷியா 2 ரன், 4-வது பந்தில் திவேஷியா ஒரு ரன் அடிக்க, கடைசி இரு பந்தில் 2 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 5-வது பந்தில் கவர் சைடில் பராக் சிக்ஸர் அடித்து அணியை அபார வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவர்களில் 163 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டில் ராஜஸ்தான் அணி வென்றது.
பராக் 42 , திவேஷியா 45 ரன்கள் சேர்த்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித் கான், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பேர்ஸ்டோ ஏமாற்றம்
முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னர், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர். பேர்ஸ்டோ 16 ரன்களில் தியாகி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே, வார்னர் கூட்டணி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 73 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
பாண்டே அரை சதம்
ஆர்ச்சர் பந்துவீச்சில் வார்னர் 48 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில்லியம்ஸன், பாண்டேவுடன் சேர்ந்து ஆடினார். மணிஷ் பாண்டே 40 பந்துகளில் அரை சதம் அடித்து 58 ரன்களில் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) உனத்கத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். வில்லியம்ஸன் 22 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்க் 15 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் அணி 158 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், தியாகி, உனத்கத் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago