‘கிங்’ கோலி: சிஎஸ்கேவைச் சாய்த்தது ஆர்சிபி; ஒட்டுமொத்த பேட்டிங் சொதப்பல்; மூழ்கும் கப்பலாக மாறிய தோனி தலைமை: சுந்தர், மோரிஸ் அபாரம்

By க.போத்திராஜ்

விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங், கிறிஸ் மோரிஸ், சுந்தரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. 170 ரன்களைத் துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி இதற்கு முன் வென்றதில்லை. 37 ரன்களில் சிஎஸ்கே அணியை வென்றது ஆர்சிபியின் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 5 தோல்வி, 2 வெற்றி என மொத்தம் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

மூழ்கும் கப்பலா?

சிஎஸ்கே அணி எனும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்து மூழ்கும் கப்பலாக மாறிவிட்டது. இதை எப்படி "கூல் கேப்டன்" தோனி கரை சேர்க்கப்போகிறார் எனத் தெரியவில்லை. டாடிஸ் ஆர்மி என்று ஒரு தரப்பினர் கிண்டல் செய்தபோது, வயதுக்கும் விளையாட்டுக்கும் தொடர்பில்லை, அனுபவ வீரர்கள்தான் கோப்பையை வென்றார்கள் என்று பதிலடி கொடுத்தனர்.

இந்தியாவில் இருக்கும் சில பழக்கப்பட்ட, சொத்தையான ஆடுகளங்களில் வேண்டுமானால் சிஎஸ்கேயின் டாடிஸ் ஆர்மி விளையாட முடியும். ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் அங்குள்ள ஆடுகளங்களில் விளையாடும் போது சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனம் அம்பலமாகிவிடும். அதுதான் இப்போது நடந்து வருகிறது.

சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் நேற்று மட்டும் 42 டாட் பந்துகளை விட்டுள்ளனர். ஏறக்குறைய 7 ஓவர்கள் ரன்களே அடிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொரு பந்தும் ரன் சேர்க்க வேண்டிய டி20 போட்டியில் 42 டாட் பந்துகளை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விடுவது இமாலயத் தவறு. பேட்டிங் சொதப்பலுக்கு இதைவிட உதாரணம் வேறு தேவையா?

அதிலும் ஓராண்டாக கிரிக்கெட்டே விளையாடாமல் பயிற்சி எடுக்காமல் தோனி விளையாட வந்ததன் விளைவு, பலன் ஒவ்வொரு போட்டியிலும் கிடைக்கிறது.

சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான மோசமான தோல்விக்குத் துடிப்பில்லாத வயதான வீரர்கள் அணியில் இருப்பதும், இளம் வீரர்களைச் அணியில் சேர்க்காததும், மாற்றமில்லாத அணியை வைத்திருப்பதுமே காரணம் என சர்வதேச வர்ணனையாளர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தொடர்ந்து கூறிவரும் விமர்சனம் உண்மையாகி வருகிறது. பவர் ஹிட்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இல்லை, பேட்டிங் சரியில்லை என்று தோனியே நேற்று ஒப்புக்கொண்டுவிட்டார்.

இது நடக்குமா?

பலமுறை சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிஎஸ்கே அணிக்கு அடுத்துவரும் 7 போட்டிகளும் மிக முக்கியமானவை. குறைந்தபட்சம் 4 போட்டிகளாவது அதிகமான ரன் ரேட்டில் அல்லது குறைந்த ஓவர்களில் எதிரணியை வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்குள் சிஎஸ்கே செல்ல முடியும். அதிலும் சிஎஸ்கேயின் ரன் ரேட் அதலபாதாளத்தில் இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றிகள் இல்லாவிட்டால் சிஎஸ்கேயின் நிலைமை கவலைக்கிடம், லீக் சுற்றோடு சென்னை திரும்ப வேண்டியது இருக்கும்.

கிங் கோலி

மறுபுறம், கேப்டன் எனும் வார்த்தைக்கு அர்த்தத்தை உணர்த்திவிட்டார் கிங் கோலி. அணியை நிதானமாக வழிநடத்திச் சென்று, கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே வீரர்களின் பந்துவீச்சை விராட் கோலி துவம்சம் செய்துவிட்டார். 150 ரன்களை எட்டுவதே ஆர்சிபி கடினம் என்று நினைக்கையில் 169 ரன்களை எட்டச் செய்து மிகப்பெரிய இலக்கை வகுத்துவிட்டார்.

அதிரடியாக ஆடிய கோலி 52 பந்துகளில் 90 ரன்களுடன் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமான கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரிலும் கோலி தனது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தார்.

உண்மையில் 170 ரன்கள் எட்டக்கூடிய இலக்குதான் என்றாலும், சிஎஸ்கே அணி இப்போது இருக்கும் நிலையில் 150 ரன்களை சேஸிங் செய்வதே கடினம் என்பது அனைத்து அணிகளுக்கும் தெரிந்துவிட்டது என்பது வேறு கதை.

ஆதலால், இனிமேல் சிஎஸ்கே அணிக்கு எதிராக மற்ற அணிகள் 150 ரன்கள் வரை சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் என்ற நிலைக்கு வந்தாலும் வியப்பில்லை. ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் 170 ரன்களுக்குள் அடிக்கப்பட்ட ரன்களையே சேஸிங் செய்ய முடியாமல் சிஎஸ்கே திணறியதால் வேறு என்ன சொல்ல முடியும்.

ருத்ர தாண்டவம்

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பின்ச், டிவில்லியர்ஸ் சொதப்பினாலும் ஒன்மேன் ஆர்மியாக நின்று அணியை இழுத்துச் சென்றார் விராட் கோலி. 16-வது ஓவரில் ஆர்சிபி 100 ரன்களை எட்டியதால், பெரும்பாலும்150 ரன்களைக் கடப்பதே கடினம் என சிஎஸ்கே வீரர்கள் நினைத்திருக்கக்கூடும்.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் கோலி ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். கடைசி 6 ஓவர்களில் மட்டும் கோலி, துபே சேர்ந்து 76 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகினர். மீண்டும் கோலி ஃபுல் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது ஆர்சிபி அணி்க்கு மிகப்பெரிய அசுர பலம்.

சுந்தர், மோரிஸ் அபாரம்

பந்துவீச்சில் ஆர்சிபி அணி பட்டையைக் கிளப்பிவிட்டது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், அறிமுகப் போட்டியில் விளையாடிய மோரிஸ், உடானா, சைனி, சாஹல் என அனைவரும் தங்களின் பங்களிப்பைக் கச்சிதமாகச் செய்தனர்.

அதிலும் தமிழக வீரர் சுந்தர் வீழ்த்திய இரு விக்கெட்டுகளும் சிஎஸ்கே அணியின் அச்சாணியைப் பிடுங்கிவிட்டது போல் ஆனது. அதில் தோனி எனும் மிகப்பெரிய வீரரை சாஹல் திட்டமிட்டு கழற்றியபின், சிஎஸ்கேயின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

3 ஓவர்கள் மட்டுமே வீசிய சுந்தர் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டை வீழ்த்தினார். மோரிஸ் 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பந்துவீச்சைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் இருப்பது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

பவர் ஹிட்டர்ஸ் இல்லை

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, வெல்ல வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. எவ்வளவு குறைந்த ஸ்கோராக இருந்தாலும், அதை கடினமாகக் கொண்டு சென்று கடைசி நேரத்தில் தோற்பது அல்லது இழுத்தடித்து ரசிகர்களைப் பரபரப்புக்குக் கொண்டு சென்று வெல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது.

சீட்டுக்கட்டை குலுக்கி, குலுக்கிப் போடுவதுபோல், இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் என்னதான் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்தாலும், வெற்றி என்பது கடினமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களின் பலவீனம் வெளிப்பட்டுவிட்டது.

சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களிலும் சேஸிங் மட்டுமே செய்துள்ளது. அதில் 2 முறை மட்டுமே வென்றுள்ளது. 5 முறையும் மோசமாகத் தோல்வி அடைந்துள்ளது.

சேஸிங் செய்வதற்குமுன் அணியில் வலிமையான பேட்ஸ்மேன்கள், குறிப்பாக பவர் ஹிட்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்களா, பவர்ப்ளேயில் ரன்கள் சேர்க்க வலுவான ஆட்கள் இருக்கிறார்களா எனப் பார்ப்பது அவசியம்.

ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தி்ல் சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 3-வது குறைந்த ஸ்கோர்.

ஷேன் வாட்ஸனைத் தவிர பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன் என்று எந்த வீரரையும் சிஎஸ்கே அணியில் சொல்ல முடியாது. பவர்ப்ளேயில் வாட்ஸன் நிலைத்து நின்று அடித்து ஸ்கோரை உயர்த்தினால்தான் அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி குறையும். இல்லாவிட்டால், அடுத்துவரும் வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழக்க வேண்டியதுதான் எனும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் பவர் ஹிட்டர்ஸ் இல்லாதது மிகப்பெரிய ஓட்டை.

இளம் வீரர்கள் இல்லை

அணியில் இளம் வீரர்கள் இல்லாததும், இருக்கும் இளம் வீரர்களைப் பயன்படுத்தாததும் மிகப்பெரிய குறை. ஐபிஎல் மற்ற அணிகளில் ஏராளமான இளம் வீரர்கள், புதுமுக வீரர்கள் தூள்கிளப்பி வருகிறார்கள். அவர்களால் அணியை வெல்ல வைக்க முடியுதோ இல்லையோ தங்களி்ன் பங்களிப்பால் அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறார்கள்.

அப்படி ஏதும் சிஎஸ்கே அணியில் இல்லை. இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் புதுமுக வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்காவிட்டால், மோசமான தோல்விகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.

ஜெகதீசன் சூப்பர்

தமிழக வீரர்கள் ஜெகதீசனுக்கு எப்படியே நேற்று வாய்ப்புக் கிடைத்துவிட்டது. அந்த வாய்ப்பை ஜெகதீசன் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தன்னை நிரூபித்துவிட்டார். அதற்கு வாழ்த்துகள்.

பேட்டிங் அஸ்திவாரம் ஆட்டம்

170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வாட்ஸன் (14), டூப்பிளசிஸ் (8) விக்கெட்டை சுந்தர் விரைவாக கழற்றினார். பவர்ப்ளே முடிவதற்கு சிஎஸ்கே பேட்டிங் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.

3-வது விக்கெட்டுக்கு ஜெகதீசன், ராயுடு கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். ஜெகதீசன் 33 ரன்களில் ரன் அவுட் ஆனார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

தோனி ஏமாற்றம்

அடுத்துவந்த தோனி ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்களுடன் அவசரப்பட்டு சாஹல் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். தோனியின் விக்கெட்டை நன்கு திட்டமிட்டு எடுத்தார் சாஹல். தோனி ஆட்டமிழந்தவுடனேயே தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

ஆர்சிபி வீரர்களின் பந்துவீச்சில் பவுண்டரி அடிக்கத் திணறிய ராயுடு 42 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த சாம்கரன் (0), ஜடேஜா (7), பிராவோ (7) என வரிசையாக வெளியேறினர். 104 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்த சிஎஸ்கே அணி, அடுத்த 23 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

சாஹர் 5 ரன்களிலும், தாக்கூர் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், சுந்தர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

விக்கெட் சரிவு

முன்னதாக, டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரோன் பின்ச், படிக்கல் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கம்போல் பின்ச் (2) விரைவாக ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கோலி, படிக்கல் கூட்டணி ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். படிக்கல் 33 ரன்கள் சேர்த்த நிலையில் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த டிவில்லியர்ஸ் டக்அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு களமிறக்கப்பட்ட சுந்தர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோலி காட்டடி

5-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே, கோலி அணியின் ஸ்கோரை நம்பிக்கையளிக்கும் விதத்தில் உயர்த்தினர். அதிரடியாக ஆடிய கோலி 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். 16-வது ஓவரில்தான் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்த 4 ஓவர்களிலும் கோலி தனது ருத்ர தாண்டவத்தை காட்டினார். சிஎஸ்கே வீரர்களின் பந்துகள் சிக்ஸர், பவுண்டரிகளாகவும், விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ரன் சேர்த்தும் அணியைத் தூக்கி நிறுத்தினார்.

கோலி 52 பந்துகளில் 90 ரன்களுடனும், துபே 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் தாக்கூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்