கொல்கத்தா 'த்ரில்' வெற்றி: 2 இன்ச்சில் வெற்றியைக் கோட்டைவிட்ட பஞ்சாப்; நரேன், பிரஷித் கிருஷ்ணா பிரமாதமான பந்துவீச்சு

By க.போத்திராஜ்

சுனில் நரேன், பிரஷித் கிருஷ்ணாவின் அபாரமான பந்துவீ்ச்சு, தினேஷ் கார்த்திக், கில்லின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் அபுதாபியில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்வி, 2 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்குப் பின்தங்கியது.

கார்த்திக்-மோர்கன் கூட்டணி

உண்மையில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப், இக்கட்டான நேரத்தில் ஆபத்பாந்தவனாக ஐடியாக்கள் தரும் மோர்கன் இருவரையும் பாராட்ட வேண்டும். சிஎஸ்கேவுக்கு எதிரான கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று குறைந்த ஸ்கோரை அடித்துக் கடைசிவரை நெருக்கடியாக எடுத்துச் சென்று ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் தலைமை வென்றது.

அந்தப் போட்டியிலும் கார்த்திக்கிற்கு மோர்கன் பக்கபலமாக இருந்தார். அதேபோன்ற த்ரில் வெற்றியை இந்தப் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் தலைமை வெல்ல மோர்கன் காரணமாகியுள்ளார்.

நீண்டநாட்களுக்குப் பின் சூப்பர் இன்னிங்ஸை தினேஷ் கார்த்திக் இந்த ஆட்டத்தில் ஆடினார். 29 பந்துகளில் 58 ரன்கள் (2 சிக்ஸர்,8 பவுண்டரி) சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு அருமையான பங்களிப்பு செய்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஓப்பனிங் ஓகே! ஃபினிஷிங்?

கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் மிரட்டிவிட்டனர். குறிப்பாக பிரஷித் கிருஷ்ணா, நரேன் வீசிய கடைசி இரு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டன.

கொல்கத்தா அணி சேர்த்த 164 ரன்களை எளிதாக பஞ்சாப் அணி சேஸிங் செய்துவிடுவார்கள் என்றுதான் ரசிகர்கள் எண்ணினர். “ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங் சரியில்லேயாப்பா” என்பது போல் நன்றாகத் தொடங்கிய பஞ்சாப் அணியினர் கடைசியில் வெற்றியைக் கோட்டை விட்டனர். ஆட்டமும் தொடக்கத்திலிருந்து பஞ்சாப் பக்கம் சென்று, முடிவு கொல்கத்தா பக்கம் சென்றது அனைவருக்குமே அதிர்ச்சி.

“யானை தனது தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டதுபோல்” கடைசி இரு ஓவரில் பஞ்சாப் அணியினரே தோல்விக்குக் காரணமாகி ஆட்டத்தைத் தலைகீழாகத் திருப்பிவிட்டனர்.

நல்ல தொடக்கம்

165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ராகுல், அகர்வால் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை அளித்ததால் ஆட்டமும் பஞ்சாப் பக்கமே நகர்ந்தது. இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டத்தை இருவருமே வென்றுகொடுத்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் கருதினர்.

அகர்வால் 33 பந்துகளிலும், ராகுல் 42 பந்துகளில் அரை சதம் அடித்தனர். 12.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களைக் கடந்தது. இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

ஆனால், பிரஷித் கிருஷ்ணா வீசிய 15-வது ஓவரில் அகர்வால் 39 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்த நிலையில் (ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி) கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பூரன் அடித்து ஆடினார்.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கு அருகே பஞ்சாப் அணி வந்துவிட்டது என்று நினைத்தபோது, 18-வது ஓவரிலிருந்து ஆட்டம் மாறத் தொடங்கியது.

சிம்ரன் வீண்

பிரஷித் கிருஷ்ணா வீசிய 19-வது ஓவரில் பிரப் சிம்ரன், ராகுல் ஆட்டமிழந்தபின் ஆட்டம் பஞ்சாப் கையைவிட்டுச் செல்லத் தொடங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை நரேன் வீசனார். பூரன் 16 ரன்னில் நரேன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

அனுபவமில்லாத சிம்ரனை களமிறக்கி அந்த ஓவரை அவர் வீணாக்கியதால் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
19-வது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசினார்.

பரபரப்பான 2 ஓவர்கள்

கடைசி 2 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் சிம்ரன் (7) ரன்களில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நெருக்கடி அதிகரிக்க பதற்றத்துடன் இருந்த ராகுல் அடித்த கடைசிப் பந்து பேட்டில் பந்துபட்டு க்ளீன் போல்டாக ஆட்டம் திசை திரும்பியது. ராகுல் 58 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

கடைசி ஓவரை அனுபவம் மிகுந்த சுனில் நரேன் பந்துவீசினார். பஞ்சாப் வெற்றிக்கு 6 பந்துகளி்ல 14 ரன்கள் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல், மன்தீப் சிங் களத்தில் இருந்தனர்.

முதல் பந்தில் இரு ரன், அடுத்த பந்தில் ரன் இல்லை, 3-வது பந்தில் பவுண்டரி, 4-வது பந்தில் லெக்பை, 5-வது பந்தில் மன்தீப் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றுவிடும்.

கடைசி ஓவர்

நரேன் வீசிய அந்த பந்தில் மேக்ஸ்வெல் தூக்கி அடித்தார். பவுண்டரி எல்லைக்கு 2 இன்ச் முன்பாக பந்து பிட்ச் ஆனதால் பவுண்டரியோடு பஞ்சாப்பின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 2 இன்ச் தள்ளி பந்து பிட்ச் ஆகி இருந்தால் சிக்ஸர் சென்றிருக்கும். ஆட்டமும் சூப்பர் ஓவர் சென்றிருக்கும். 2 இன்ச்சில் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், நரேன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். திரிபாதி, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கமே மோசமாக அமைந்து திரிபாதி 4 ரன்னில் ஷமி பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராணா 2 ரன்னில் ரன் அவுட் ஆகினார்.

மோர்கன் 24 ரன்களில் வெளியேறினார். 10 ஓவர்களில் 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறியது.

ஆனால், 4-வது விக்கெட்டுக்கு கில், தினேஷ் கார்த்திக் கூட்டணி அணியை மீட்டெடுத்தனர். நீண்ட நாட்களுக்குப்பின் தினேஷ் கார்த்திக் ஆகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார்.

அருமையான சில ஷாட்கள், ஸ்கோரை உயர்த்த சிக்ஸர், பவுண்டரி என சிறந்த ஆட்டத்தை தினேஷ் வெளிப்படுத்தினார். இருவரும் ரன்களைச் சேர்ப்பதிலும் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுப்பதிலும் சுறுசுறுப்பாக இருந்தனர். கார்த்திக் வந்தபின் ஆட்டத்தில் வேகமெடுத்தது.

15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. கில் 42 பந்துகளில் அரை சதமும், தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரை சதமும் அடித்தார். சிறப்பாக ஆடிய கில் 57 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த ரஸல் 5 ரன்களில் இந்த முறையும் ஏமாற்றினார். இறுதிவரை அதிரடியாக ஆடிய கார்த்திக் 20 ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆகினார். கார்த்திக் 29 பந்துகளில் 58 ரன்கள் (2 சிக்ஸர், 8 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 5 ரன்களில் இறுதிவரைஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி 2 ஓவர்கள் மட்டுமே பஞ்சாப் அணியின் ஜோர்டன், அர்ஸ்தீப் சிங் ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக வீசி 18 ரன்கள் கொடுத்தனர். ஆனால் அதற்கு முந்தைய 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 71 ரன்கள் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் தரப்பில் ஷமி, அர்ஷ்தீப், பிஸ்னோய் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்