இன்றைய கிரிக்கெட் உலகில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு சிறந்த, உலகத்தரமான பேட்ஸ்மேன். அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் 12000 ரன்கள் பக்கம் எடுத்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக தன் கரியரில் இதுவரை 20,000 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 55.30 என்றும், ஒருநாள் கிரிக்கெட்டில் 87 என்றும் டி20 கிரிக்கெட்டில் 131 என்றும் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
இவரிடமும் கோலியிடமும் மிகப்பிரமாதமான ஒரு விஷயம் என்னவெனில் டெஸ்ட், ஒருநாள், டி20 என்பதற்காக அவர்கள் ஆடும் பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், ஒருபந்து ஆஃப் சைடில் ஆஃப் வாலி என்றால் அது விராட் கோலியின் ராஜ கவர்ட்ரைவ் ஷாட்டாகவே இருக்கும் ஸ்மித்தாக இருந்தால் எக்ஸ்ட்ரா கவரில் பறக்கலாம். ஆனால் அனாயாச மட்டைச்சுழற்றிகள்தான் அந்தப் பந்தை மிட்விக்கெட் மேல் தூக்கி அடிக்கப்போய் அவுட் ஆவார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்கத்தில் இறங்குகிறார், இது நல்ல விஷயம்தான், ஆனால் கடைசி வரை நின்று மற்ற வீரர்களை வழிநடத்த வேண்டுமே தவிர சுனில் நரைன் போல் மட்டையைச் சுழற்றி அசிங்கமாக ஆட்டமிழந்து வருவது உலகத்தரம் வாய்ந்த வீரர்களிடத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டமல்ல.
இந்த ஐபிஎல் தொடரில் பவர் ப்ளேயில் ஸ்மித் அப்படி அனாயாச மட்டைச் சுழற்றி போல் ஆடுகிறார். 3 போட்டிகளில் தொடர்ச்சியாக எந்த ஒரு பயனுமற்ற, இலக்கற்ற மட்டை சுழற்றலில் ஈடுபட்டு தேவையில்லாமல் தன் பொன்னான விக்கெட்டை தாரை வார்த்திருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பாட் கமின்ஸ் பந்தை விளாசுகிறேன்பேர்வழி என்று இலக்கற்ற ஒரு ஷாட்டில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஆட்டமிழந்தார். ராயல் சாலஞ்சர்ஸ் பவுலர் இசுரு உதனா என்ற ஒரு சாதாரண பவுலர் வீசிய ஆஃப்ஸ்டம்புக்கு வெளியே தள்ளிச் சென்ற பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார். நேற்று பிரமாதமாக வீசிவந்த பும்ராவுக்கு உரிய மரியாதையை அளிக்காமல் டெய்ல் எண்டர்கள் போல், சுனில் நரைன் போல் ஒரு அனாயாச மட்டைச் சுழற்றலில் மட்டை உள்விளிம்பில் பட்டு டி காக் கேட்ச் எடுத்தார், இந்த ஷாட்களிலெல்லாம் கால்கள் அவருக்கு நகரவேயில்லை.
ஒருவேளை பட்லரை கடைசி வரை நிற்கச் சொல்லி விட்டு ஸ்மித் பவுலர்களை அடித்து ஆடும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை, ஆனால் இந்த உத்தி கைகொடுக்காது, இதுவரை கைக்கொடுக்கவில்லை. 3 தோல்விகளில் ஸ்மித்தின் இந்த அணுகுமுறை அவரது பேட்டிங்கை எதிர்காலத்தில் காலி செய்து விடும்.
பவுலர்களால் எளிதில் வீழ்த்த முடியாத ஸ்மித், எளிதில் வீழ்த்தக்கூடிய வீரர் ஆகி விடுவார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு உலக கிரிக்கெட்டுக்குமே நல்லதல்ல.
விராட் கோலி தன் ஆட்டத்தை எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டார், பந்துக்குரிய ஷாட்டை ஆடுவாரே தவிர இலக்கற்ற அனாயாச மட்டை சுழற்றலை அவர் செய்ய மாட்டார்.
டி20 கிரிக்கெட் என்பது ஒன்றும் பெரிய திட்டமிடலுக்கான தேவையற்றது, 11 பேரில் 6 பேர் 20 பந்துகளைச் சந்தித்து தலைக்கு 30 ரன்கள் சேர்க்க வேண்டும், இதில் ஓரிருவர் தோல்வி அடையும் போது மற்றவர் பெரிய இன்னிங்சைக் கட்டமைத்து 180 ரன்கள் என்பதை மையமாக வைத்து ஆட வேண்டும். அதன் பிறகு பவுலிங்கில் நல்ல களவியூகம், ஸ்மார்ட் கேப்டன்சி, கொஞ்சம் யோசனை
கொஞ்சம் வேகம் இருந்தால் போதும் வெற்றி கிடைத்து விடும், இல்லையெனில் தோல்வியை மோசமானதாக இல்லாமல் சவால் அளித்து தோற்பதாக இருக்கலாம். அப்படி இருந்தால் அடுத்தடுத்த போட்டிகளில் எழுச்சி பெற முடியும்.
அதை விடுத்து பவர் ப்ளே என்று பதற்றமடைந்து ஸ்மித் போன்ற ஒரு பிரமாதமான உலகத்தரம் வாய்ந்த வீரரை ஸ்லாக் செய்யச் சொல்வது அவர் இருந்தும் இழப்பதற்குச் சமமே.
ராஜஸ்தான் ராயல்ஸ் யோசிக்க வேண்டும், குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் யோசிக்க வேண்டும், தான் ஸ்மித் தானா? ஸ்மித் போல் ஆடப்போகிறோமா அல்லது சுனில் நரைன் போல் இலக்கற்று ஆடி சோர்வில் முடியப்போகிறோமா என்பதை ராஜஸ்தான் அணி நிர்வாகவும் ஸ்டீவ் ஸ்மித்தும் யோசித்து விரைவில் முடிவெடுத்தால்தான் அந்த அணி வரும் போட்டிகளில் வெற்றியடைய முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago