ரோஹித் ‘கெத்து’: ராஜஸ்தான் அணியை சிதைத்த பும்ரா, யாதவ்; ‘ஃபுல் ஃபார்மில்’ மும்பை இந்தியன்ஸ்: தோல்வியோடு ஸ்மித்துக்கு அபராதம் 

By க.போத்திராஜ்


பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு,சூர்ய குமார் யாதவின் அதிரடி பேட்டிங் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்து 57 ரன்களில் தோல்வி அடைந்தது.

ரோஹித் கெத்து

தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து கெக்தாக இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் இருந்தாலும், டெல்லி அணியைவிட நிகர ரன்ரேட்டில் சூப்பராக இருப்பதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், டெல்லி அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகள், ஒரு தோல்வி என்று 8 புள்ளிகள் பெற்றபோதிலும், நிகர ரன்ரேட்டில் குறைந்ததால், 2-வது இடத்தையே பிடித்துள்ளது.

அபராதம்

ராஜஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. புள்ளிப்பட்டியலி்ல் 5 போட்டிகளில் 2 வெற்றிகள், 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. ரன்ரேட்டும் மைனஸ்0.622 ஆக இருப்பதால், அடுத்தடுத்துவரும் போட்டிகளில் அதிக ரன்கள் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெல்வது அவசியம்.

ஏற்கெனவே தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் கேப்டன் ஸ்மித்துக்கு நேற்று ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் வேறு விதித்து. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக எடுத்துக்கொண்டதற்காக இந்த அபராதம் ஸ்மித்துக்கு விதிக்கப்பட்டது.

டாப் கிளாஸ்

நடப்பு சாம்பியன் மும்பை அணியில் அனைத்து வீரர்களும், ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் மட்டும் சரியாக விளையாடாமல் இருக்கிறார் எனும் ஆதங்கம் இருந்த நிலையில் அதை நேற்று நிவர்த்தி செய்துவிட்டார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் டாப் கிளாஸில் மும்பை அணி செயல்படுகிறது.

14 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் என்ற நிலையில் அதன்பின் மும்பை அணி 160 ரன்களைக் கடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், காட்டடி ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் அணியை 200 ரன்களுக்கு அருகே கொண்டுவந்தனர். இதில் பொலார்ட் பேட்டிங்கே செய்யவில்லை. அவரும் வந்திருந்தால், ராஜஸ்தான் நிலைமை மோசமாகியிருக்கும்.

ஆட்டநாயகன் யாதவ்

47 பந்துகளில் 79 ரன்கள் (11பவுண்டரி, 2சிக்ஸர்கள்) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரிலே சூர்யகுமார் யாதவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் தேர்ந்தெடுத்து அடித்த கவர் டிரைவ், த்தேர்ட் மேன் ஷாட், டீக் கவர், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் என அனைத்தும் அற்புதம். சிறந்த வீரராக தன்னை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் நிரூபித்துவரும் சூர்யகுமாரை ஏன் பிசிசிஐ நிர்வாகத்தின் கண்களுக்கு படவில்லை எனத் தெரியவில்லை.

மிரட்டல் மும்மூர்த்திகள்

மும்பை அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சு. பும்ரா, டிரன்ட் போல்ட், பேட்டின்ஸன் என 3 ஆபத்தான, உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களே எந்தஒரு எதிரணிக்கும் பெரும் கிலியாக இருப்பார்கள். அதிலும் நேற்றைய ஆட்டத்தில் பும்ரா வீசிய ஒவ்வொரு பந்தும் சராசரியாக 140 கி.மீ வேகத்தில் வந்து மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதை நிரூபித்தார்.

3 ஓவர்களை நிறைவு செய்யும்போது பும்ரா 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 4-வது ஓவரில் ஆர்ச்சர் அடித்ததால் அந்த ஓவரில் 12 ரன்கள் சென்றது. இருப்பினும் ஆர்ச்சர் விக்கெட்டை கழற்றிய பும்ரா 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதேபோல போல்ட் 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள், பேட்டின்ஸன் 3.1ஓவர்களில் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என மிரட்டிலாகப் பந்துவீசினர். ஒட்டுமொத்தத்தில் இந்த மூவரின் பந்துவீச்சும் சேர்ந்தே ராஜஸ்தான் அணியின் பேட்டிங் அஸ்திவாரத்தை சிதைத்துவி்ட்டது. 8 விக்கெட்டுகளை இந்த 3 பந்துவீச்சாளர்களை பகிர்ந்துகொண்டனர்.

ஃபுல் ஃபார்மில் மும்பை

ஒட்டுமொத்தத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ஃபுல் ஃபார்முக்கு திரும்பியுள்ளது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் அசுரபலத்துடன் இருக்கும் அந்த அணியை அடுத்துவரும் போட்டிகளில் எதிர்கொள்வது எதிரணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். கேப்டன் ரோஹித் சர்மா கெத்தாக இருக்கிறார்.

தோல்விக்கு காரணம்

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை தொடர்ந்து 3-வது முறையாக தோல்வியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே முடிவதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது மிகப்பெரிய தவறு, தோல்விக்கு பிரதான காரணங்களில் ஒன்று. மூன்றாவது முறையாக இதேபோன்று பவர்ப்ளே ஓவருக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஸ்மித், பட்லர், சாம்ஸன் ஆகிய 3 பேட்ஸமேன்களை தூக்கிவிட்டாலே ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை குலைந்துவிடும் என்று நன்றாகக் கணித்துவிட்டார்கள். அதை ஸ்மித் மாற்றும்வகையில் நடுவரிசையை பலப்படுத்துவது அவசியம்.

பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி சொதப்பியது. ராஜ்புத், டாம்கரன் இருவரும் 11 ரன்ரேட்டுக்கு மேல் வாரி வழங்கினர். ஆர்ச்சர், கோபால் வழக்கம் போல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர்.

ஜெய்ஸ்வால் பாவம்

194 ரன்களைச் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அதிலும் அனுபவமில்லா இளம் வீரர் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக 2-வது முறையாக களமிறக்கி கையை சுட்டுக்கொண்டது ராஜஸ்தான் அணி.

இதுபோன்ற பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும் போது அனுபவமில்லாத புதிய இளம் வீரர்கள் மீது அதிக அழுத்தம் பாயும், மேலும் புதிய பந்து, நன்றாக ஸ்விங் ஆகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு வேறு வீரர்களை இறக்கி இருக்கலாம்.

விக்கெட் சரிவு

போல்ட் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் டீக்காக்கிடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்துவந்த ஸ்மித்(6) ரன்னில் பும்ரா பந்துவீச்சிலும், போல்ட் பந்துவீச்சில் சாம்ஸன் டக்அவுட்டிலும் பெவிலியன் சென்றது பெருத்த அடி.

ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை வீரர்களான கேப்டன் ஸ்மித், சாம்ஸனும் சொதப்பியது அணியின் தோல்வியை உறுதி செய்யும்விதத்தில் இருந்தது. இருவரின் ஷாட் தேர்வும் மிகவும் மோசமாக இருந்தது. பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களே ராஜஸ்தான் சேர்த்திருந்தது.

ராஜஸ்தான் ராயஸ் அணியில் ஆறுதல் அளிக்கும் செய்தி, பட்லர் 44 பந்துகளில் 70 ரன்கள்(5 சிக்ஸர், 4பவுண்டரி) சேர்த்து இந்த சீசனில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். பட்லரும் பேட் செய்யாமல் இருந்திருந்தால் ராஜஸ்தான் நிலைமை கந்தலாகியிருக்கும். 14 ஓவரில்தான் ராஜஸ்தான் அணி 100ரன்களை எட்டியது.

நடுவரிசை பலவீனம்

அணியில் பட்லருக்கு ஈடுகொடுத்து ஆடுவதற்கு நடுவரிசையில் ஒருவீரர் ஒத்துழைக்கவில்லை என்பது வருத்தமாகும். திவேஷியா(5), லோம்ரார்(11), டாம்கரன்(15), கோபால்(1) என யாரும் நிலைக்கவில்லை.
வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்ததுதான் அணியில் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். டெய்லண்டர் பேட்ஸ்மேன் அடித்துக் கொடுத்து ஸ்கோரை உயரத்த வேண்டியநிலைக்கு வந்துவிட்டது.

3 ஓவருக்குள் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. 98 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த அணி, கடைசி 38 ரன்களில் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியில் விழுந்ததை என்னவென்று சொல்ல.

18.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்னில் ராஜ்ஸ்தான் அணி தோல்வி அடைந்தது. மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், போல்ட், பேட்டின்ஸன் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

வலுவான தொடக்கம்

முன்னதாக டாஸ்வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 200 ரன்கள் ஸ்கோரை அடித்துவிட்டால் அல்லது நெருங்கிவிட்டாலே எதிரணிக்கு நெருக்கடிகொடுக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு டீகாக், ரோஹித் இருவரும் அதிரடியாகத் தொடங்கினர்.

இருவரும் தொடக்கத்திலிருந்தே பவுண்டரி, சிஸ்கர்களைப் பறக்கவிட்டனர். அறிமுக வீரர் கார்த்திக் தியாகி வீசிய 5-வது ஓவரில் டீகாக் 23 ரன்னில் வெளியேறினார். 49 ரன்களுக்கு முதல் விக்கெட்டை மும்பை இழந்தது.

அதிரடி கூட்டணி

அடுத்துவந்த சூர்யகுமார் மெதுவாகவே ரன் கணக்கைத் தொடங்கினார். ரோஹித் சர்மா வழக்கமான அதிரடியில் இறங்கினார். பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது.

ஸ்ரோயாஸ் கோபால் வீசிய 10-வது ஓவரில் ரோஹித்சர்மா 35 ரன்னில்(3சிக்ஸர்,2பவுண்டரி) திவேஷியாவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த இஷான் கிஷன் அடுத்தப் பந்தில் ட்அவுட்டில் ஆட்டமிழந்தார். 5-வது வீரராக களமிறக்கப்பட்ட குர்னல் பாண்டியாவும் 12 ரன்களில் ஏமாற்றினார். 13.6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்திருந்து மும்பை அணி.

5-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை நகர்த்தினார். 11 பந்துகளி்ல 10 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த சூர்யகுமார் யாதவ் அதன்பின் அதிரடியைக் கையில் எடுத்தார்.

பவுண்டரிகளாக விளாசிய சூர்யகுமார் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 5 ஓவர்களில் இருவரும் சேர்ந்து 71 ரன்களைச் சேர்த்தனர். சூர்யகுமார் 79 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 30ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர்.

மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் கோபால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்