துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 19வது ஆட்டத்தில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணி விராட் கோலி தலைமை ஆர்சிபி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து தவறு செய்தார் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிரிதிவி ஷா (42), ஷிகர் தவண் (32) மூலம் எழுச்சித் தொடக்கம் கண்டு கடைசியில் ஸ்டாய்னிஸ் (53) வெளுத்து வாங்க கடைசி 51 பந்துகளில் 106 ரன்களை விளாசி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணியில் விரட்டல் மன்னன் விராட் கோலிக்கு ஸ்டாண்ட் கொடுக்க ஆளில்லை, அவரே முயற்சி செய்தார், ஆனால் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு ஓவர் எகிற கைவிட்டு விட்டார். இதனையடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்களில் முடிந்து 59 ரன்களில் தோல்வி அடைந்து டெல்லிக்கு பெரிய நெட் ரன் விகித உயர்வை அளித்தது.
வாஷிங்டன் சுந்தர் பிரமாத பவுலிங், கேட்ச்களை விட்ட ஆர்சிபி, ஷா, தவண், ஸ்டாய்னிஸ் அமர்க்களம்:
டாஸ் வென்று டெல்லியை பேட் செய்ய அழைத்தது மறைமுக ஆசீர்வாதமாக பிரிதிவி ஷா, ஷிகர் தவண் எழுச்சித் தொடக்கம் கொடுத்தனர். இந்த சீசனில் சிறந்த பவர் ப்ளே ஸ்கோரான 63 ரன்களை 6 ஒவர்களில் எட்டினர். இசுரு உதானா வீசிய முதல் ஒவரிலேயே ஷா பாய்ந்தார், 3 பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் வைட் ஆஃப் த கிரீஸிலிருந்து கடினமான கோணங்களிலும் ரவுன்ட் த விக்கெட்டிலும் வீசி நெருக்கினார்.
ஆனால் அடுத்த ஓவரை சைனி வீச, தவண் ஒரு பவுண்டரியையும் பிறகு 3 ரன்களையும் எடுக்க பிரிதிவி ஷா ஸ்ட்ரைக்குக்கு வந்தவர் எக்ஸ்ட்ரா கவர் மீது அனாயசமான சிக்ஸ் ஒன்றை அடித்தார். டெல்லி கேப்பிடல்ஸ் 30 ரன்களை சடுதியில் கடந்தது. இந்த சீசனில் இதுவரை மிகச்சிறப்பாக வீசிய லெக் ஸ்பின்னர் சாஹல் நேற்று ஷா, தவணிடம் சிக்கி ஒரே ஓவரில் 18 ரன்களைக் கொடுத்தார். தவன் ஒரு பவுண்டரி அடிக்க, ஷா ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார், டெல்லி அணி 50 ரன்களை கடந்தது.
பவர் ப்ளேயின் கடைசி ஓவரை சுந்தர் வீச 10 ரன்கள் வந்தது ஸ்கோர் 63 ஆனது, ஆனால் வாஷிங்டன் சுந்தர் பவர் ப்ளேயில் 3 ஓவர்களை டைட்டாக வீசினார், 4 ஓவர்களில் 20 ரன்களையே விட்டுக்கொடுத்தார், விக்கெட் இல்லை.
பவர் ப்ளேவுக்குப் பிறகு டெல்லி இன்னிங்ஸ் பிசுபிசுத்தது. களவியூகம் பரவலானவுடன் பவுண்டரிகள் வரவில்லை. ஷா 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து மொகமட் சிராஜின் முதல் விக்கெட்டாக வெளியேறினார். தவண் உடனேயே 32 ரன்களில் லாங் ஆனில் கேட்ச் ஆனார். ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் டீப் மிட்விக்கெட்டில் படிக்காலின் அபார கேட்சுக்கு வெளியேறினார். வெளியே சென்று பிறகு உள்ளே வந்து பிடித்த கேட்ச் அது. 12 ஓவர்களில் 90/3 என்ற நிலையில் ரிஷப் பந்த், ஸ்டாய்னிஸ் இணைந்தனர்.
ரிஷப் பந்த் சிறிது நேரம் பவுலர்களால் அடக்கப்பட்டிருந்தார், ஆனால் ஸ்டாய்னிஸ் வந்தவுடனேயே ஷாட்களை ஆடத் தொடங்கினார். ஆனால் 3 வாய்ப்புகள் இவருக்கு நழுவ விடப்பட்டான். 3 ரன்களில் சாஹல் தன் பவுலிங்கில் தன்னிடம் வந்த கேட்சைக் கோட்டை விட்டார். 30 ரன்களில் சைனி பவுலிங்கில் சாஹல் மீண்டும் ஒரு கேட்சை மிட்விக்கெட்டில் விட்டார். 45 ரன்களில் ஸ்டாய்னிஸ் தன்னால் ரீச் செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்ட ஒரு வாய்ப்பில் த்ரோ சரியாக இல்லாமல் ஸ்டாய்னிஸ் பிழைத்தார்.
ஆனால் ஸ்டாய்னிஸ் ஷார்ட் பிட்ச், ஃபுல் லெந்த் பந்துகளை வெளுத்துக் கட்டினார். முதல் 12 பந்துகளிலேயே ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார். சைனியின் பீமரில் கிளவ்வில் அடிவாங்கினார். ஸ்டாய்னிஸ்- பந்த் ஜோடி 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 16வது ஒவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடிக்க பந்த் ஒரு சிக்ஸ் அடித்தார். இருவரும் 89 ரன்களை வெளுத்து வாங்க முதலில் பந்த் 37 ரன்களில் சிராஜிடம் வெளியேறினார்.
ஸ்டாய்னிஸ் அதே ஓவரில் தன் அரைசதத்தை எடுத்தார். கடைசி ஓவரில் உதானா 12 ரன்கள் கொடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் 196/4 என்று முடிந்தது, ஸ்டாய்னிஸ் 26 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 53 ரன்களுடன் நாட் அவுட்டாக, ஷிம்ரன் ஹெட்மையர் ஒரு சிக்சருடன் 11 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். சிராஜ் 4 ஒவர் 34 ரன் 2 விக்கெட்.
அபார வீரர் படிக்காலை தவறு செய்ய வைத்த அஸ்வின், ரபாடா, நார்ட்டியேவிடம் வீழ்ந்த ஆர்சிபி:
ஆர்சிபி விரட்டலில் ரபாடா டெஸ்ட் கிளாஸ் பவுலிங்கை வெளிப்படுத்தினார், இதில் திக்குமுக்காடிய பிஞ்ச் முதல் ஓவரிலேயே ரபாடாட்விடம் கேட்ச் கொடுத்தார், ஆனால் எளிதான கேட்சை ரபாடா கோட்டை விட்டார். அதே ஓவரில் எட்ஜ் ஒன்று ஸ்லிப்பில் தவணுக்கு முன்னால் விழுந்தது.
இதோடு மட்டுமல்ல பிஞ்ச்சிற்கு நார்ட்யே பந்தில் ஷிகர் தவண் இன்னொரு கேட்சை விட்டார், இது எதையும் பயன்படுத்தாத பிஞ்ச் 13 ரன்களில் அக்சர் படேலிடம் வீழ்ந்தது வேறு கதை.
3வது ஓவரிலேயே அஸ்வின் கொண்டு வரப்பட்டார், அவர் ஆஃப் ஸ்பின், பிளாட்டாக வீசுவது, கேரம் பந்துகள் என்று கலந்துகட்டி வீசியதில் ஒன்றும் புரியவில்லை. படிக்கால் அனுபவமின்மையை வெளிப்படுத்தினார், அஸ்வின் பந்துக்கு மேலேறி வந்தார், இதை எதிர்பார்த்த அஸ்வின் சற்றே வைடாக வீச லாங் ஆனில் ஆட வேண்டிய ஷாட்டை மிட்விக்கெட்டில் ஆட நிர்பந்தமாகி அங்கு ஸ்டாய்னிஸிடம் கேட்ச் ஆகி 4 ரன்களில் வெளியேறினார்.
கோலி இறங்கினார், நார்ட்யே ஓவரில் ரன் அவுட் ஆகியிருப்பார், ஆனால் அஸ்வின் த்ரோ ஸ்டம்புகளில் படவில்லை. டிவில்லியர்ஸ் இறங்கினார் 2 பவுண்டரிகளை விளாசினார் ஆனால் 9 ரன்களில் அவர் நார்ட்யேவின் 150 கிமீ வேக ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று பந்து டாப் எட்ஜ் ஆக ஷிகர் தவண் இந்த முறை கேட்சை எடுத்தார். பவர் ப்ளேவுக்குள் 3 விக்கெட் என்று ஆர்சிபி ஆட்டம் கண்டது.
அக்சர் படேல் பிரமாதமாக வீசினார், எளிதான ரன்களை வழங்கவில்லை. மொயின் அலி, விராட் கோலி 33 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் 12வது ஓவரில் 11 ரன்களுடன் மொயின் அலியை அக்சர் படேல் வெளியேற்றினார். 4 ஒவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் அக்சர் படேல்.
விராட் கோலி 39 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து ரபாடா பந்தை எந்த ஒரு திசையும் நோக்கமும் இல்லாமல் அடிக்கப்போக பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு பந்த்திடம் கேட்ச் ஆனது. வாஷிங்டன் சுந்தர் 11 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். அவரும் ரபாடாவிடம் ஸ்லோ பவுன்சரில் அஸ்வினிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஷிவம் துபே 1 சிக்சருடன் 11 ரன்களில் ரபாடாவிடம் ஸ்டம்புகளை இழந்தார். இசுரு உதானாவையும் ரபாடா வீழ்த்த 24 ரன்களுக்கு 4 விக்கெட் என்று இந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் இதுவரையிலான சிறந்த வீச்சை வீசியுள்ளார். மொகமது சிராஜ், நார்ட்யே பந்தில் பவுல்டு ஆனார், சைனி 12 நாட் அவுட். சாஹல் 0 நாட் அவுட் ஆர்சிபி 137/9 என்று முடிந்தது. நார்ட்யே 4 ஓவர் 22 ரன்கள் 2 விக்கெட். அக்சர் படேல் 18 ரன்களுக்கு 2 விக்கெட். அஸ்வின் 26 ரன்களுக்கு ஒரு விக்கெட். ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago