முதலிடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி; ஃபார்முக்குத் திரும்பிய கோலி; படிக்கல் கலக்கல்: பந்துவீச்சு, பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 

By க.போத்திராஜ்

கோலி, படிக்கலின் அருமையான பேட்டிங், சாஹலின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 19.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2013-க்குப் பின்

கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் ஆர்சிபி அணி இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலி்ல் முதலிடத்துக்கு ஆர்சிபி அணி முன்னேறியுள்ளது.

படிக்கல் கலக்கல்

கடந்த 3 போட்டிகளாக பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த கேப்டன் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது வெற்றிக்கு முக்கியக் காரணம். இளம் வீரர் தேவ்தத் படிக்கல் மூன்றாவது அரை சதத்தைப் பதிவு செய்து வெற்றிக்குத் துணையாக இருந்தார். கோலியுடன், படிக்கல் அமைத்த பார்ட்னர்ஷிப் ராஜஸ்தான் அணிக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.

145 கி.மீ. வேகத்தில் வரும் ஆர்ச்சரின் பந்துகளை அனாசயமாக ஆடி இளம்வீரர் படிக்கல் பவுண்டரிகளாக அடித்து அசத்தினார். கோலியின் நம்பிக்கையைப் பெற்றுவரும் படிக்கல் இந்திய அணிக்குள் விரைவில் வருவார்.

ஆட்டநாயகன்

ஆர்சிபி வெற்றிக்கு மற்றொரு முக்கியத் துருப்புச் சீட்டு யஜூவேந்திர சாஹல். 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியைச் சுருட்டக் காரணமாக அமைந்தார். ஆட்டநாயகன் விருதையும் சாஹல் பெற்றார்.

ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆர்சிபி அணி இழந்த ரிதத்தை மீட்டுள்ளது. தொடர்ந்து இதை நிலையில் சென்றால், நீண்ட ஆண்டுகளுக்குப் பின் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

நடுவரிசை பலவீனம்

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஸ்மித் தொடக்க வீரராகக் களமிறங்கி கடந்த இரு முறையும் பதற்றத்தில் ஆட்டமிழந்துள்ளார். பட்லர் இதுவரை தனது பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தாமல் இருப்பது ராஜஸ்தான் அணிக்குப் பெரும் பின்னடைவாகும். பட்லர், ஸ்மித், சாம்ஸன் மூவரும் ஆட்டமிழந்துவிட்டால் நடுவரிசைக்கு நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் யாருமில்லை.

அதிர்ஷ்டத்தில் ஏதாவது பேட்ஸ்மேன் விளையாடினால் மட்டுமே நல்ல ஸ்கோர் சாத்தியம். ஸ்மித் வழக்கம் போல் நடுவரிசையைப் பலப்படுத்த வந்தால் சிறப்பாக இருக்கும்.

பந்துவீச்சில் ஆர்ச்சருக்கு இணையாக வேகப்பந்துவீச்சில் யாருமில்லை. உனத்கத், டாம் கரன் இருவரும் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கிவரும் நிலையில் மாற்றாக வேறு வீரருக்கு வாய்ப்பு அளிக்கலாம். விரைவில் அணியில் பென் ஸ்டோக்ஸ் இணையவுள்ளார். அவர் அணிக்குள் வரும்போது, டாம் கரன் நீக்கப்பட வாய்ப்புள்ளது. பீல்டிங்கிலும் இன்று ராஜஸ்தான் அணியினர் பலமுறை கோட்டை விட்டனர்.

ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் மோசமாகச் செயல்பட்டது. சிறிது கட்டுக்கோப்பாகப் பந்துவீசியிருந்தாலும், பீல்டிங்கில் 20 ரன்களைத் தடுத்திருந்தாலும், ஆட்டம் நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம்.

ராஜஸ்தான் அணி தொடக்க வரிசையையும், நடுவரிசையையும் பலப்படுத்தினால்தான் அடுத்துவரும் போட்டிகளில் வெற்றியை ருசிக்க முடியும்.

பிஞ்ச் ஏமாற்றம்

155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கைத் துரத்தி ஆர்சிபி அணி களமிறங்கியது. ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் அதிரடியாக சில பவுண்டரிகளை அடித்துத் தொடங்கினார். ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 3-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி பிஞ்ச் 8 ரன்களில் வெளியேறினார்.

வலுவான பார்ட்னர்ஷிப்

2-வது விக்கெட்டுக்கு கேப்டன் கோலி, படிக்கல் சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். இளம் வீரர் படிக்கல் மீண்டும் டாப்கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

தொடக்கத்தில் தன்னை நிலைப்படுத்த சிரமப்படுத்திய கேப்டன் கோலி, தனது வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பினார். அதன்பின் பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார் கோலி.

பவர்ப்ளே ஓவரில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய படிக்கல் 34 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஐபிஎல் போட்டியில் படிக்கல் அடிக்கும் 3-வது அரை சதமாகும். வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 41 பந்துகளில் இந்த ஐபிஎல் போட்டியின் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

அதிரடியாக ஆடிய படிக்கல் 63 ரன்கள் சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் படிக்கல் கணக்கில் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 99 ரன்கள் குவித்தனர்.

கோலி முதல் அரை சதம்

3-வது விக்கெட்டுக்கு வந்த ஏபிடி வில்லியர்ஸ், கோலியுடன் இருந்தார். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கோலி 53 பந்துகளில் 72 ரன்களுடனும் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்), டிவில்லியர்ஸ் 12 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

விக்கெட் சரிவு

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. பேர்ஸ்டோ, ஸ்மித் களமிறங்கினர். அதிரடியாகத் தொடங்கிய ஸ்மித் தொடர்ந்து 2-வது முறையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

உடானா வீசிய 3-வது ஓவரில் பேட்டில் பந்து பட்டு ஸ்டெம்பில் பட்டதில் ஸ்மித் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து சாம்ஸன் உள்ளே வந்தார். சைனி வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த படிக்கலிடம் கேட்ச் கொடுத்து பட்லர் 22 ரன்களில் வெளியேறினார்.

சாஹல் வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து சாம்ஸன் 4 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 5 ஓவர்களில் முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது.

லாம்ரோர் நம்பிக்கை

உத்தப்பா, லாம்ரோர் இருவரும் நிதானமாக பேட் செய்தனர். பவர் ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் சேர்த்தது. உத்தப்பா நிதானம் காட்ட, லாம்ரோர் அவ்வப்போது அதிரடியாக ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார்.

நிதானமாக ஆடிய உத்தப்பா 17 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் வீசிய 10-வது ஓவரில் உடானாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 5-வது விக்கெட்டுக்கு வந்த ரியான் பராக்கும் நிலைக்கவில்லை. 16 ரன்களில் பிஞ்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணியின் நெருக்கடி கொடுக்கும் வகையில் வாஷிங்டன் சுந்தர், சாஹல் சைனி என மூவரும் சிறப்பாகப் பந்துவீசினர்.

அதிரடி திவேஷியா

அரை சதத்தை நோக்கி முன்னேறிய லாம்ரோர் 47 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லாம்ரோர் கணக்கில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். ராஜஸ்தான் அணி 100 ரன்களுக்கு மேல் கடப்பது கடினம் என நினைத்திருந்த நிலையில் லாம்ரோர் அருமையான பங்களிப்பை பேட்டிங் செய்தார்.

திவேஷியா, ஆர்ச்சர் கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். திவேஷியா 3 சிக்ஸர்களை விளாசினார்.

திவேஷியா 24 ரன்களிலும், ஆர்ச்சர் 16 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஆர்சிபி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், உடானா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்