அனுபவமற்ற, இளம்வீர்கள் பிரியம் கார்க், அபிஷேக் சர்மா ஆகியோரின் ஆகச்சிறந்த பேட்டிங், ரஷித் கானின் திணறடிக்கும் பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கடைசி இடம்
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து சந்திக்கும் மூன்றாவது தோல்வியாகும். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டது. இந்த வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
» ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மா புதிய மைல்கல்: கோலி, ரெய்னாவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்தார்
ஆட்டநாயகன் கார்க்
சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இளம் வீரர் பிரியம் கார்க், அபிஷேக் சர்மா கூட்டணிதான். அனுபவமற்ற இரு வீரர்களும் போட்டியை கட்டி இழுத்துச் செல்வார்களா என தோனி கூடநினைத்திருக்கமாட்டார்.
ஆனால், கவனக்குறைவாகவும், தவறாகக் கணித்தும் பந்துவீசித்தான் சிஎஸ்கே அணி கார்கிடம் தோற்றுள்ளது. அதிரடியாக ஆடி 26 பந்துகளில் அரைசதம் அடித்த பிரியம் கார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வார்னரின் தலைமைக்குப் பாராட்டு
உண்மையில் சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னரின் கேப்டன்ஷிப்புக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். 165 ரன்கள் என்பது சிஎஸ்கே போன்ற வலிமையான அணிக்கும், மிரட்டும் பேட்ஸ்மேன்கள் கொண்ட அணிக்கு எளிதாக சேஸிங் செய்யக்கூடிய இலக்குதான்.
ஆனால், புவனேஷ், ரசித் கான் தவிர்த்து மற்ற அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு, வலிமையான சிஎஸ்கே அணியை சுருட்டியது வார்னரின் ஸமார்ட்டான கேப்டன்ஷிப்பைத்தான் காட்டுகிறது.
அதிலும் கடைசி ஓவரை அனுபவமற்ற அப்துல் சமத் மீது நம்பிக்கை வைத்து வார்னர் அளித்ததற்கு மிகப்பெரிய துணிச்சல் தேவை. ஆனால், இளம்வீரர்களை நம்பி வார்னர் எடுத்த முயற்சி 100 சதவீதம் பலன் அளித்தது.
சொத்து ரஷித்கான்
சன்ரைசர்ஸ் சொத்தாகத் திகழும் ரஷித்கான் மீண்டும் ஒருமுறை அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள்மட்டுமே கொடுத்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை கதறவிட்டார்.
அனுபவ வீரர் புனேஷ் குமார், அப்துல் சமத், நடராஜன்,கலீல் அகமது என அனைவரும் சிஎஸ்கே அணி்க்கு மிரட்டலாகவே பந்துவீசினார்கள். ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டார்கள்.
சிஎஸ்கே தலைகீழ்
ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்கு தலைகீழாக செயல்பட்டது சிஎஸ்கே அணி. அதனால்தான் எளிதாக வெற்றி பெற வேண்டியபோட்டியில் வெற்றியைக் கோட்டைவிட்டுள்ளது.
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை 6 நாட்கள் இடைவெளிக்குப்பின் பிராவோ, ராயுடு, சர்துல் தாக்கூர் என மாற்றங்களுடன் திரும்பியும் எந்த மாற்றமும் இல்லை. வயதானால் என்ன மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்…..
கேதார் எதற்கு
சிஎஸ்கே அணியில் ஏறக்குறைய வாட்ஸன் முதல் தாக்கூர் வரை 9 பேட்ஸ்மேன்கள் வரை இருந்தும் 165 ரன்களை சேஸிங் செய்ய முடியாததை என்னவென்று சொல்வது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வாட்ஸன் ஏதாவது ஒரு போட்டியில்தான் விளையாடுகிறார். எத்தனை போட்டிக்குத்தான் என்னை நம்புவிங்க என்று டூப்பிளசிஸ் இந்த முறை ஏமாற்றிவி்ட்டார். ராயுடுவும் சோபிக்கவில்லை.
கேதார் ஜாதவை ஏன் அணியில் தோனி வைத்திருக்கிறார் என்ற கேள்வி ஒவ்வொரு போட்டியிலும் எழுகிறது. ஏதாவது பெரிய நெருக்கடியின் காரணமாக ஜாதவ் அணியில் வைத்திருக்கிறாரா தோனி என்பதும் தெரியவில்லை.
நன்றாக அடித்து ஆடக்கூடிய சாம்கரனை ஏன் ஜாதவ் களமிறங்கிய இடத்தில் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஆனால், இ்ந்த முறை தோனி தனது வரிசையை மாற்றி களமிறங்கியதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்தாலும், அது வெற்றியாக முடியவில்லை.
பந்துவீச்சு பலவீனம்
பந்தவீச்சிலும் அனுபவமுள்ளை வீரர்களை வைத்திருந்தும் சிஎஸ்கே அணியினர் அபிஷே சர்மா, கார்க் விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறினர். சன்ரைசர்ஸ் அணி 69 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற இக்கட்டான நிலையை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த தவறிவிட்டார்கள்.
கார்க், அபிஷேக் இருவரையும் குறைத்துமதிப்பிட்டு கட்டுக்கோப்பாகப் பந்துவீசததற்கு தண்டனையாக தோல்வி பரிசாகக் கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் சராசரியாக 7 ரன்ரேட் வீதத்தில் வாரி வழங்கியதன் விளைவுதான் தோல்வியாக முடிந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே அணி பொறுப்பற்ற பந்துவீச்சு, சொதப்பலான, சொத்தையான பேட்டிங் வெற்றியை தாரைவார்த்துவிட்டது.
டாப் ஆர்டர் ஏமாற்றம்
165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. வாட்ஸன், டூப்பிளஸிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரில் அவுட்ஸ்விங், இன்கட்டர் வீசி சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை திணறவிட்டார்.
புவனேஷ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் வார்ட்ஸன் க்ளீன் போல்டாகி ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்துவந்த ராயுடு 8ரன்னில் தமிழக வீரர் நடராஜன் வீசிய 6-வது ஓவரில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். 22ரன்கள் சேர்த்த நிலையில் டூப்பிளசிஸ் ரன் அவுட் ஆகி பெவிலியன் சென்றார். . பந்துகளை வீணடித்த ஜாதவ் 3 ரன்னில் அப்துல் சமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா , தோனி ஜோடி பொறுப்பு
5-வது விக்கெட்டுக்கு தோனி, ஜடேஜா ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். இருவரும் ஆமை வேகத்தில் ரன்கள் சேர்த்ததால், என்னமோ வெற்றிக்குத் தேவைப்படும் ரன்கள் அதிகரித்துக்கொண்டே வந்தது.
கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்த ஜடேஜா டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை 35 பந்துகளில் பதிவு செய்தார். ஆனால் 4-வது பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு சமதிடம் கேட்ச் கொடுத்து 50 ரன்னில் ஜடேஜா வெளியேறினார்.
தோனி, ஜடேஜா கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
போரட்டம் வீண்
அடுத்து சாம்கரன் வந்தார். நடராஜன் வீசிய 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை கரன் தொடங்கினார். கடைசி இரு ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். ஒருபந்துவீசிய நிலையில் காலில் தசைப்பிடிப்பு ஏற்படவே தொடர்ந்து பந்துவீச முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கலீல் அகமது பந்துவீசினார். தோனிக்கும் லேசான சோர்வு ஏற்பட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. அனுபவமில்லாத சுழற் பந்துவீச்சாளர் அப்துல் சமது பந்துவீசினார். இந்த ஓவரில் தோனி, கரன் இருவரும் சேர்ந்து 20 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
கடைசி 4 ஓவர்களில் சிஎக்கே அணி 78 ரன்கள் சேர்த்தும் வெற்றிக்கு அருகே வந்தும் கோட்டைவிட்டது.
20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 7 ரன்னில் தோல்வி அடைந்தது. தோனி 36 பந்துகளில் 47 ரன்களுடனும், சாம் கரன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்
முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர்.
முதல் ஓவர் வீசிய தீபக் சாஹர் தொடக்கத்திலிருந்தே கட்டுக்கோப்பாக, நெருக்கடியாகப் பந்துவீசினார். தீபக் சாஹர் வீசிய 4-வது பந்து இன்கட்டராக வந்து ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்டது, பேர்ஸ்டோ டக்அவுட்டில் வெளியேறினார்.
அடுத்து வந்த மணிஷ் பாண்டே, வார்னருடன் சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை சேர்த்திருந்தது. சர்துல் தாக்கூர் வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தில் மிட்ஆஃப் திசையில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்கள் சேர்த்து பாண்டே வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன் வந்தார். வார்னர், வில்லியம்ஸன் இருவரும் பொறுமையாகவே விளையாடினர்.
டூப்பிளஸின் சிறந்த கேட்ச்
பியூஷ் சாவ்லா வீசிய 11-வது ஓவரின் 5-வது பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று வார்னர் தூக்கி அடித்தார். எல்லைக் கோட்டில் நின்றிருந்த டூப்பிளசிஸ் லாவகமாகப் பிடித்தார். ஆனால், நிலைதடுமாறி எல்லைக் கோட்டுக்கு வெளியே செல்லும்நிைலயில் வந்தபோது மேலே தூக்கிப்போட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து டூப்பிளசிஸ் அருமையாக கேட்ச் பிடித்தார். வார்னர் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து பிரியம் கார்க் களமிறங்கி வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். ஆனால், அடுத்த பந்தில் வில்லியம்ஸன் ரன் ஓடிவர கார்க் வரவில்லை. இதனால் வில்லியம்ஸன் 9 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இளம் கூட்டணி
11 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்திருந்தது. டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களான வார்னர், பேர்ஸ்டோ, பாண்டே, வில்லியம்ஸன் ஆகியோர் ஆட்டமிழக்கவே இனிமேல் சன்ரைசர்ஸ் ஆட்டம் அவ்வளவுதான். நடுவரிசைக்கு எந்த பேட்ஸ்மேன் இருக்கிறார்கள் என ரசிகர்கள் நினைத்தனர். அனுபவமற்ற கார்க், அபிஷேக் என்ன செய்துவிடப்போகிறார்கள் என கணித்தனர்.
ஆனால், 5-வது விக்கெட்டுக்கு கார்க்குடன்,அபிஷேக் சர்மா ஆகிய இரு இளம், அனுபவமற்ற வீரர்கள் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து, பின்னர் தங்களை நிலைப்படுத்தினர்.
பாடம் நடத்திய கார்க்
அதிலும் இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டன் பிரியம் கார்க அவ்வப்போது சில அருமையான ஷாட்களில் பவுண்டரி அடித்து சிஎஸ்கே பந்துவீச்சை பழுதாக்கினார்.
இரு இளம் வீரர்கள் அணியை நகர்த்தி கொண்டு செல்வது சன்ரைசர்ஸ் மூத்த வீரர்களுக்கே வியப்பாக இருந்தது. மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இருந்த அழுத்தம், ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடி ஆகியவற்றை தாங்கி இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை லாவகமாக சமாளித்து ரன்களைச் சேர்த்தனர்.
இருவரின் பாட்னர்ஷிப்பும் வலுவாக மாறியது. இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை தோனி பயன்படுத்தியும் பலனில்லை.
தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரில் அபிஷேக் சர்மாவுக்கு ஜடேஜா ஒரு கேட்சையும், தாக்கூர் ஒரு கேட்சையும் கோட்டைவிட்டனர். ஆனால் அதே ஓவரின் கடைசிப்பந்தில் சர்மா 31 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு அபிஷேக், கார்க் இருவரும் சேர்ந்து 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து அப்துல் சமது களமிறங்கி, கார்குடன் சேர்ந்தார். கார்க் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. கார்க் 26 பந்துகளில் 51 ரன்களுடனும்(ஒரு சிக்ஸர்,6பவுண்டரி), சமது 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிஎஸ்கே தரப்பில் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், தாக்கூர், சாவ்லா தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago