சன் ரைசர்ஸ் அணிக்கு முதல் வெற்றி: ஃபார்முக்கு திரும்பிய ரஷித் கான்; ஆபத்பாந்தவன் வில்லியம்யன்ஸ்: டெல்லி தோல்விக்கு காரணம் என்ன?

By க.போத்திராஜ்


ரஷித் கானின் மாயஜால சுழற்பந்துவீச்சு, வில்லியம்ஸனின் ஃபிஷினிங் கேம், பேர்ஸ்டோவின் அரைசதம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்களில் தோற்கடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன்

4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்று மீண்டும் டி20 போட்டியில் தனது வழக்கமான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

துல்லியமான கட்டுக்கோப்பான பந்துவீச்சு

கடந்த இரு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. பேட்டிங்கில் வலிமையான வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணிக்கு நேற்றைய ஸ்கோர் எளிதாக அடையக் கூடிய இலக்குதான் என்றாலும் தனது வலிமையான, துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி குறைந்த ஸ்கோரை அடித்தும் வெற்றி பெற்றதற்கு ரஷித் கான், புவனேஷ்வர் பந்துவீச்சு பிரதான காரணம். அருமையான தொடக்கத்தை அளித்த பேர்ஸ்டோ, நல்ல பினிஷிங் கொடுத்த வில்லியம்ஸன் முத்தாய்ப்பு.

நிரூபித்த வில்லியம்ஸன்

கடந்த இரு போட்டிகளிலும் வில்லியம்ஸன் தன்னை களமிறக்காமல் இருந்தது தவறு என்பதை கேப்டன் வார்னருக்கு நேற்றைய ஒரு போட்டியில் நிரூபித்துவிட்டார். 26 பந்துகளைச் சந்தித்த வில்லியம்ஸன் 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் இந்த ஸ்கோரை அடைவதே கடினமாக இருந்திருக்கும்.

நடுவரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிஷ் பாண்டே ஏமாற்றம் அளித்த பின், பேர்ஸ்டோவுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தியவர் வில்லியம்ஸன்தான். ஆதலால், சன்ரைசர்ஸ் அணியின் நடுவரிசையை பலப்படுத்த வில்லியம்ஸன் அடுத்துவரும் போட்டிகளி்ல் இடம் பெறுவது சன்ரைசர்ஸ் அணிக்குமிகப்பெரிய பலமாகும்.

புவேஷ்வர் பந்துவீச்சு

பந்துவீச்சில் கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட் இன்றி தவித்த புவனேஷ்வர் குமார் நேற்றை ஆட்டத்தில் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். சில பந்துகள் அவருக்கே உரிய ஸ்டைலில் நன்றாக ஸ்விங் ஆகின. பிரித்வி ஷா, ஹெட்மயர் ஆகிய இரு முக்கிய விக்ெகட்டுகளை புவனேஷ்வர் வீழ்த்தினார்.

திணறவிட்ட ரஷித்கான்

டி20 போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஷித் கான். கடந்த இரு போட்டிகளிலும் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்து முடியாமல் சிரமப்பட்ட ரஷித் கானுக்கு நேற்று நல்ல வாய்ப்பு கிடைத்தது.

ஆடுகளமும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், தனது மாயஜால சுழற்பந்துவீச்சால் டெல்லி வீரர்களை கட்டிப்போட்டார். 4 ஓவர்களை வீசிய ரஷித்கான் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்ெகட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணியின் விக்கெட் சரிவுக்கு ரஷித் கான் முக்கியக் காரணமாகும்.

கவனிக்கப்படுவாரா நடராஜன்

தமிழக வீரர் நடராஜன் தனது பந்துவீச்சால் நேற்று கவனிக்கவைத்துள்ளார். ஸ்டாய்னிஷ்க்கு அவர் வீசி 5 யார்கர்களும் அற்புதமானவை. தொடர்ந்து நடராஜன் இவ்வாறு பந்துவீசினால் பிசிசிஐயால் கவனிக்கப்படுவார்.

தோல்விக்கு காரணமென்ன

டெல்லி அணியைப் பொறுத்தவரை வலிமையான பேட்டிங் வரிசை, நடுவரிசையிலும் திறமையான வீரர்களை வைத்திருந்தும் நேற்று பேட்டிங்கில் கோட்டைவிட்டது. வழக்கம்போல் பிரித்வி ஷா அவசரப்பட்டு ஆடி விரைவாக ஆட்டமிழந்தார். தேவையில்லாத ஷாட்டை ஆடி தவண் வெளியேறினார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் கைக்கு கேட்சைக் கொடுத்துச் சென்றார்.

62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் ரிஷப் பந்த், ஸ்டாய்னிஷ், ஹெட்மயரும் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. மொத்தத்தில் பேட்டிங்கில் டெல்லி அணி சொதப்பிவிட்டது. டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 47 டாட்பந்துகளை விட்டுள்ளனர்.

அதாவது ஏறக்குறைய 8 ஓவர்களில் எந்தவிதான ரன்களும் அடிக்கவில்லை. இந்த மிகப்பெரிய இமாலய தவறே தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகும். டி20 போட்டிகளில் ஒவ்வொரு பந்திலும் சேர்க்க வேண்டிய நிலையில் இதுபோன்று அதிகமான டாட் பந்துகளை விடுவது பேட்டிங்கை பலவீனப்படுத்தும்.

பந்துவீச்சிலும் ரபாடா, அமித் மிஸ்ரா மட்டுமே நன்றாகப் பந்துவீசி வி்க்கெட் வீழ்த்தினர். இசாந்த் சர்மா, நார்ஜே எதிர்பார்த்த அளவுக்கு நேற்று பந்துவீசவில்லை, ரன்களையும் வாரிக் கொடுத்தனர்.

விக்கெட் சரிவு

163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பிரித்வி ஷா, தவண் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து பிரித்வி ஷா 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளே வந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ரஷித்கான் பந்துவீச்சில் 17 ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். மந்தமாக ஆடிய டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ரஷித் கான் பந்துவீச்சை தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் ஆடிய ஷிகர் தவண் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹெட்மயர், ரிஷப்பந்த் 4-வது வி்க்கெட்டுக்கு ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.

நடுவரிசையும் பலீவனம்

ரஷித் கான், நடராஜனின் பந்துவீச்சை விளையாடுவதற்கு கடினமாக இருந்ததால் ரன் சேர்க்க ஹெட்மயர், ரிஷப்பந்த் திணறினர். இருப்பினும் அவ்வப்போது அடித்த பவுண்டரிகளும், சிஸ்கர்களும் ஸ்கோரை விரைவாக உயர்த்தவில்லை. 15-வது ஓவரில்தான் டெல்லி அணி 100 ரன்களை எட்டியது.

சன்ரைசர்ஸ் அணி்க்கு ஹெட்மயர் பெரும் தலைவலியாக மாறி வந்தநிலையில் 16-வது ஓவரில் புவனேஷ்குமார் அவரின் விக்கெட்டை சாய்த்தார். ஹெட்மயர் 2 சிக்ஸ் உள்பட 21 ரன்னில் வெளியேறினார். ரிஷ்ப் பந்த், ஸ்டாய்னிஷ் ஓரளவுக்கு அடித்து ஆடத் தொடங்கினர்.

ரஷித் கான் வீசிய 17-வது ஓவரில் ரிஷ்ப்ந்த் 28 ரன்கள் சேர்த்த நிலையில் கார்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 18-வது ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன், அருமையான யார்கர்களை ஸ்டாய்னிஷ்க்கு வீசி திணறவிட்டார், அந்த ஓவரில் கால்காப்பில் வாங்கிய ஸ்டாய்னிஷ் 11 ரன்னில் வெளியேறினார்.

அடுத்துவந்த அக்ஸர் படேல் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ரபாடா 15 ரன்னிலும், நார்ஜோ 3 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்னில் தோல்வி அடைந்தது.

நல்ல தொடக்கம்

முன்னதாக சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. வார்னர், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தை அளித்தனர். வார்னர் 45 ரன்கள்சேர்த்து மிஸ்ரா பந்துவீச்சில் வெளியேறினார். முதல்விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 3 ரன்னில் மிஸ்ரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், பேர்ஸ்டோ கூட்டணி அணியை நகர்த்திச் சென்றனர். பேர்ஸ்டோ 44 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் அப்துல் சமது களமிறங்கினார்.

அதிரடி வில்லியம்ஸன்

கடைசி நேரத்தில் வில்லியம்ஸன் சில அதிரடியான ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்து 41 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார். அப்துல் சமது 12 ரன்னிலும், அபிஷேக் ஒருரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது.

டெல்லி அணி தரப்பில் மிஸ்ரா , ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்